> குருத்து: கதைகளின் வழியே ஜென் - கே. ஜி. ஜவர்லால்

November 9, 2021

கதைகளின் வழியே ஜென் - கே. ஜி. ஜவர்லால்


ஜென் என்றால் என்ன? என விளக்கம் புத்தகத்தில் இல்லை. இணையத்தில் தேடிய பொழுது…

ஜென் என்றால் என்ன?"
ஒரு மாணவனிடமிருந்து கேள்வி எழுந்தது.
அவனைச் சற்று நேரம் ஆழ்ந்து பார்த்துவிட்டுச் சொன்னார்
"யாரும் அதை தெரியும் என்று சொன்னாலும் அல்லது தெரியாது என்று சொன்னாலும் அது பொய்யாகத்தான் இருக்கும்"
மாணவன் விடுவதாய் இல்லை
"அப்படியானால் சுவாமி. ஜென் என்னதான் சொல்லுகிறது?"
"zen teaches nothing. ஜென் சொல்லித்தருவது எதுவுமில்லை".
“அப்படியானால்…..” மாணவன் இழுத்தான்…
“சும்மாயிரு..” வெகு வேகமாய் குருவின் குரல். மாணவன் தெளிந்தான்.
****

இதுவும் இணையத்தில் தான் கிடைத்தது.

'ஜென் நிலை... ஜென் நிலை' எனச் சொல்கிறார்களே அப்படின்னா என்ன பாஸ்?

ஜப்பானைச் சேர்ந்த ஜென் துறவியான 'பொகூயூ' மற்றவர் ஞானிகளை விட ரொம்பவே வித்தியாசமானவர். இவருக்கு ஏராளமான சீடர்கள் உண்டு.
ஒருமுறை இவரை சந்திக்க வந்தவருக்கும் இவருக்கும் நடந்த உரையாடல் ஒன்றே போதும், ஜென் நிலை என்றால், என்ன என்பதை அழகாக விளக்கிவிடும். ஜென் தத்துவத்தை இதைவிட எளிமையாக எவரும் சொல்லவிட முடியாது என்பதைப் பறைச்சாற்றும் .
பொகூயூவுக்கும் அவரைச் சந்திக்க வந்தவருக்கும் நடந்த உரையாடலைப் பார்ப்போம்.
வந்தவர்: உங்கள் பயிற்சி என்ன?
பொகூயூ: பயிற்சி என்று எதுவும் இல்லை. பசிக்கும்போது உண்பேன். உறங்கத் தோன்றும்போது உறங்குவேன்.
வந்தவர்: நானும் இவற்றையெல்லாம் செய்கிறேன். நான் மட்டும் அல்ல. உலகிலுள்ள அனைவரும் இதைத்தான் செய்கிறார்கள். இதில் என்ன பயிற்சி இருக்கிறது?
பொகூயூ: நீங்கள் செய்யும் செயல் என்ன என்பதையே உணராமல் செயல்படுகிறீர்கள். மேலும் திட்டங்கள் போடுகிறீர்கள். என்ன சாப்பிட்டுக்கொண்டிருக்கிறோம் என்பதை அறியாமலே, வேறு ஒன்றை சிந்திக்கிறீர்கள். வேறு ஒன்றைப் பார்க்கிறீர்கள். வேறு ஒன்றைப் பற்றி பேசுகிறீர்கள். அத்துடன் உங்களை அறியாமலேயே சாப்பிட்டு முடிக்கிறீர்கள். அதாவது நீங்கள் சாப்பிடுவது உங்களுக்கே தெரியாமல் நடக்கிறது.
உறங்கும்போது பல எண்ணங்கள் குறுக்கிடுகின்றன. உருண்டு புரண்டு தூங்குகிறீர்கள். கனவு காணுகிறீர்கள், விழிக்கிறீர்கள், மீண்டும்உறங்குகிறீர்கள்.
நான் உண்ணும்போது உண்பதை மட்டும்தான் செய்கிறேன், உறங்கும் போது உறங்குவதை மட்டும்தான் செய்கிறேன். ஆனால், எல்லா செயல்களையும் முழுமையாகச் செய்கிறேன்.
(நன்றி : விகடன்)
****

ஆக ஜென்னைப் பற்றிய உங்களுக்கு நிச்சயம் புரிதல் கிடைத்திருக்காது என நம்புகிறேன். 🙂

ஆனால் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் 95 அத்தியாயங்களில் ஜென்னை கதைகளின் வழியே விளக்க முயற்சித்திருக்கிறார்.

அதில் எனக்குப் பிடித்த ஒரு கதையை உங்களுக்கு சுருக்கித் தருகிறேன்.

மனைவியின் ஆவி!

அவர்கள் அன்னியோன்யமான தம்பதி. சாகிற பொழுது “எனக்கு பின்னால், வேறு ஒருத்தியோடு வாழ்வதை என்னால் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. இன்னொரு திருமணம் செய்தால், ஆவியாய் வந்து தொல்லை கொடுப்பேன்” என்றாள்.

மூன்று மாதத்திற்கு பிறகு ஒருத்தியை காதலிக்க ஆரம்பித்தான். அன்றிரவே ஆவி வர ஆரம்பித்தது. எங்கு சந்தித்தார்கள்? என்ன பேசிக்கொண்டார்கள்? என்பதை புட்டு புட்டு வைத்தது

ஒரு ஜென் துறவியை பார்க்க ஆலோசனை தந்தார்கள். எல்லாவற்றையும் கேட்டார். “சாதுர்யமான ஆவி தான். கை நிறைய புளியங்கொட்டைகளை எடுத்துக்கொள். இன்றிரவு ஆவி வரும் பொழுது “இதில் எத்தனை புளியங்கொட்டைகள் இருக்கிறது என கேள். இதற்கு பதில் சொல்லாவிட்டால் இனி அந்த ஆவி வராது” என்றார்.

அன்றிரவும் ஆவி தவறாமல் வந்தது. ”ஜென் துறவியை எல்லாம் பார்க்கிறாய்?” என்றது நக்கலாய். “இவ்வளவு பேசுகிறாயே! எத்தனை புளியங்கொட்டைகள் இருக்கிறது என சொல்? என்றார். ஆவியிடமிருந்து பதிலில்லை. அதற்கு பிறகு வரவும் இல்லை. ஆவிகள் கணக்கில் வீக்கா?

அவனுக்கு தெரிந்திருந்த எல்லாம் ஆவிக்கும் தெரிந்திருக்கிறது. அவனுக்கு தெரியாதது ஆவிக்கும் தெரியவில்லை. அப்படி என்றால், ஆவி என்பது அவனுடைய மனப்பிராந்தி.
Iluusion.

(இப்படியே எல்லாக் கதைகளும் இருக்குமென்று நினைத்துவிடக்கூடாது)

இனி கீழே வரும் கருத்துக்கள் எல்லாம் புத்தகத்தில் ஆங்காங்கே சிதறி கிடந்தவை.

செய்யும் வேலையில் ஈடுபாடும், நிகழ்காலத்தில் வாழ்கிற பக்குவமும் இருந்தால் பொழுது போகவில்லை என்கிற பிரச்சனையே கிடையாது. பக். 72

எதுவும் சொந்தமில்லை என்ற பக்குவம் இருந்தால் தான் எந்த இடத்துக்கு போனாலும் சந்தோசமாக வாழலாம். பக். 85

விளம்பரம் இல்லாமல் நற்பணிகளை செய்கிறவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட நோக்கத்துடன் இருக்கும் பொழுது என்ன அவப்பெயர், எத்தனை அவமானம் வந்தாலும், அவர்கள் பொருட்படுத்துவதில்லை. பக். 92

“கெட்ட சிந்தனையை விட்டுவிடுவது எளிதல்ல. நல்ல சிந்தனைகளைக் கொண்டு மனத்தை நிரப்பும் பொழுது கெட்டது வழிந்தோடிவிடுகிறது” பக். 108.

“விழிப்புணர்வு என்பது நம்மைச் சுற்றி நடப்பவைகள் குறித்து அறிந்திருத்தல். அதாவது நிகழ்காலத்தில் இருத்தல்” பக். 110

“ஞானம் பெறாதவன் போதிக்கிற பொழுது அரை குறை ஞானிகளை உண்டாக்குகிறான். ஒரு முட்டாளால் விளைகிற தீமைகளை விட ஒரு புத்திசாலியால் விளைகிற தீமைகளை விட தன்னை புத்திசாலி என்று கருதிக்கொள்ளும் முட்டாள்களால் தீமைகள் அதிகம். அவனுக்குத்தான் செய்வது தப்பு என்கிற சந்தேகம் கூட எழாது. பக். 114.

எந்த ஒன்றில் முழுமை அடைந்துவிட்டதாக நாம் நிறைவடையாமல் இருக்கிறோமோ அதில் விற்பன்னராக இருக்கலாம். பக். 163

your absence must be felt
பக். 166

ஜென் யாருக்கும் புரியாமல் போனதற்கு புத்தரும் ஒரு காரணமோ? (ஆசிரியர் ) பக். 168

போதித்து புரிய வைப்பவைகளை விட முன்னுதாரணமாக இருந்து காட்டுகிற விசயங்கள் வெகு சீக்கிரம் கற்றுக்கொள்ளப்படுகின்றன. மன்னிப்பை விட பெரிய தண்டனையில்லை! பக். 182

****
மற்றபடி, ஜென் குறித்த புதிர் கதைகள் படித்துள்ளேன். சில கவிதைகள் படித்துள்ளேன். முன்பு கலீல் ஜிப்ரான் எழுதிய ஒரு பதிவு என்னை மிகவும் ஈர்த்தது.

இது ஜென்னில் வருமா என தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

வெள்ளைக் காகிதம்
ஒன்று பனிக்கட்டி போலப்
பிரகாசமாய், பரிசுத்தமாய்
இருந்தது.

அது சொன்னது,
"நான் பரிசுத்தமானதாய்ப் படைக்கப்பட்டேன்..
இறுதி வரை பரிசுத்தமானதாகவே இருப்பேன்..
இருள் என் அருகில் வர
இறுதி வரை நான் அனுமதிக்க மாட்டேன்..
சுத்தமில்லாத எதுவும்
என்னைத் தொடவும் கூடச் சம்மதிக்க மாட்டேன்..!"

கறுப்பு மைபுட்டி ஒன்று
காகிதம் சொன்னதைக் கேட்டது..
தனக்குள் சிரித்துக் கொண்டது..
ஆனாலும் காகிதத்தை நெருங்க
அதற்குத் தைரியம் வரவில்லை..!

பல வண்ண வண்ண பென்சில்களும் கூட
வெள்ளைக் காகிதம் சொன்னதைக் கேட்டன..
ஆனால் அவையும்
அதை நெருங்கத் துணியவில்லை..!

இன்று வரை
வெள்ளைக் காகிதம்
தான் விரும்பியபடி
பரிசுத்தமானதாகவே இருக்கிறது..
ஆனால்,
வெறுமையாக இருக்கிறது..!!
***

சில கதைகள் ஈர்த்தன. சில கதைகள் யோசிக்க வைத்தன. ஆசிரியருக்கு பாராட்டுகள். எழுத்தின் மீதான ஆர்வத்தில் தான் செய்த மேலாளர் பதவியை துறந்திருக்கிறார். ஆச்சர்யம்.

கதைகளை புரிய வைப்பதற்காக ஆசிரியர் சொல்லும் பல கருத்துக்கள் மேலோட்டமாக இருந்தன. ஆசிரியர் இந்தப் புத்தகத்தை எழுதுவதற்கு இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு இருக்கலாம் என்று மட்டும் எனக்குப்பட்டது.

விலை : ரூ. 200
பக்கங்கள் : 200
வெளியீடு : கிழக்கு பதிப்பகம்

#பின்குறிப்பு : ஜென் குறித்து வெறொரு சமயத்தில் விரிவாக விவாதிக்கலாம். இப்பொழுது வேறு ஒரு அவசரத்தில் இருக்கிறேன். நன்றி.

0 பின்னூட்டங்கள்: