> குருத்து: இசை அல்லது இளையராஜா - பாடலாசிரியர் யுகபாரதி

November 14, 2021

இசை அல்லது இளையராஜா - பாடலாசிரியர் யுகபாரதி


இளையராஜாவைப் பற்றி ஒரு பாடலாசிரியரின் பார்வையில் தன் அனுபவங்களையும், கருத்துக்களையும் பகிர்ந்துள்ளார். அவர் சொன்ன செய்திகளில் சில அறிந்தவையாக இருந்தாலும், சில குறிப்புகள் புதிதாக இருந்தன. ஆச்சர்யம் தந்தன.


இளையராஜாவிற்கு மொழி அறிவு அதிகம். அவரே வெண்பா வடிவில் பல நூல்கள் எழுதியிருக்கிறார். அதற்காக அவர் எழுதிய பத்து நூல்களின் பட்டியலும் தருகிறார். ஆகையால் தான் மெட்டுக்கேற்ற பாடல் வரிகளை எழுதும் பொழுது, பொருத்தமான வரிகள் இல்லையெனில் பாடலாசிரியர்களோடு முரண்பட்டிருக்கிறார் என்கிறார். அதற்கு சில பாடல்களையும், தன் அனுபவத்தையும் சொல்கிறார்.


ஒரு இசையமைப்பாளருக்கு மொழி, மக்கள், நிலப்பரப்பு குறித்த அறிவு அவசியம் என்கிறார். இல்லையெனில் அதற்கு நியாயம் செய்யமுடியாது. அது இளையராஜாவிற்கு இருந்ததால் தான் மக்களின் இதயம் தொட்டிருக்கிறார் என்கிறார். சரி தான்.


அதே போல எழுதிய பாடலுக்கு இசை என்பது ஒரு வரம்புக்குள் நின்றுவிடும். அதனாலேயே மெட்டுக்கு பாடல் இசைப்பது என்பதை தொடர்ந்து இளையராஜா செய்திருக்கிறார் என்கிறார். இதைப் படித்ததும், வேறு ஒரு செய்தி நினைவுக்கு வருகிறது. எம்.எஸ்.வி ஆர்மோனியத்தில் மெட்டு சொல்ல, கண்ணதாசன் சரளமாக பாடல் சொல்வார் என சொல்வார்கள். இளையராஜா காலத்திற்கு பிறகு இப்படி பாடலாசிரியரோடு உட்கார்ந்து பணியாற்ற நேரமில்லாமல் போயிருக்கிறது. ராஜா போட்ட தான் போட்ட மெட்டை ஒரு கேசட்டில் பதிவு செய்து கொடுப்பார். அதற்கு பாடலாசிரியர்கள் எழுதி தரவேண்டும் என்பதாக நிலைமை மாறியிருக்கிறது. அதனாலேயே கண்ணாதாசனுடன் இணைந்து பணியாற்றுவது ராஜாவிற்கு மிகவும் குறைந்திருக்கிறது.. இதை திரைத்துறை சார்ந்த ஒருவர் பேட்டியில் இதைக் குறிப்பிட்டார்.


இராஜா எப்பொழுதுமே எளிய ரசிகனை எட்டக்கூடிய இசையை தந்திருக்கிறார். தன்னுடைய அபரிமிதமான இசை அறிவை எந்த இடத்திலும் உறுத்துகிறபடி காட்டியதில்லை. இசை நுட்பம் அறிந்துவர்கள் அறிந்துகொள்ள சாதுர்யமான சில இடங்களில் காட்டுவார் என்கிறார். சரிதான்.


ஒரு பாடல் வெளியீட்டு நிகழ்வில் “ஒரு நல்ல இயக்குநராக மிளிர வளரும் இயக்குநர்கள் இராஜா அவர்களுடன் பணியாற்றவேண்டும்” என மிஷ்கின் சொன்னார். அதையே நானும் சொல்கிறேன். “ஒரு நல்ல பாடலாசிரியராக நிலைபெற வேண்டுமென்றால் அவருடன் பணியாற்றவேண்டும்”. ஒவ்வொரு முறையும் அவருடன் பணியாற்றும் கற்றுக்கொள்கிறேன் என்கிறார்.


30 பக்கங்களில் நிறைய குறிப்புகளை எழுதியிருக்கிறார். அவரே சொல்வது போல இசை, மொழி, நிலப்பரப்பு, பாடும் முறை, பாடலை பாடுபவரின் உச்சரிப்பில் தென்படவேண்டிய நெளிவு சுழிவுகள் என இன்னும் பல தலைப்புகளில் எழுதவேண்டும் என்கிறார். தொடர்ந்து எழுதுங்கள் யுகபாரதி.

0 பின்னூட்டங்கள்: