> குருத்து: The Finch (2021) Post – Apocalyptic science fiction drama

November 19, 2021

The Finch (2021) Post – Apocalyptic science fiction drama


பூமியின் ஓசோன் மண்டலம் கடுமையாக பாதிக்கப்பட்டு, பூமி மிக மோசமாக பாதிக்கப்படுகிறது. ஒரு கைவிடப்பட்ட கிரகம் போல இருக்கிறது பூமி. மக்கள் பெரும்பாலோர் இறந்துவிடுகிறார்கள். மீதி இருப்பவர்களும் தங்கள் உயிரை தக்க வைப்பதற்காக வழிப்பறியில் கொள்ளையில் ஈடுபடுகிறார்கள்.


நாயகன் ஒரு ரோபாட்டிக் என்ஜினியர் உயிர் தப்பித்து தன் ஆய்வுக்கூடத்தில் வாழ்கிறார். கிடைப்பதை வைத்துக்கொண்டு வாழ்ந்துவருகிறார். ஒரு நாய்க்குட்டியும் ஒரு குட்டி ரோபாட்டும் அவரோடு இருக்கிறது. அவருடைய உடல்நிலை வயோதிகத்தாலும், நிலவுகிற பிரச்சனையாலும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இருக்கிற வசதிகளைப் பயன்படுத்தி ஒரு ரோபோவை உருவாக்குகிறார். தன்னுடைய காலத்திற்கு பிறகு, நாயைப் பார்த்துக்கொள்ளவேண்டும் என அந்த ரோபாட்டிற்கான கட்டளைகளில் ஒன்றாக தருகிறார்.

இந்த இக்கட்டான நிலையில் ஒரு மோசமான புயல் வந்துகொண்டிருக்கிறது. அந்த இடத்தை விட்டு உடனடியாக நகரவேண்டும். நாயகன், அந்த குட்டி நாய், ஒரு சின்ன ரோபா, கொஞ்சம் சிந்திக்க கூடிய உயரமான பெரிய ரோபா அங்கிருந்து கிளம்புகிறார்கள். இவர்களுக்குள் நடக்கும் உரையாடலும், உணர்வுகளுமே மீதி கதை.
****

குறைவான காலம் தான் இருக்கிறது. நேற்று பிறந்து, இன்று நடப்பதற்கு பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கிற அந்த ரோபாட்டிற்கு பயிற்சி கொடுப்பது என்பது சவாலாக இருக்கிறது. அது எழுப்புகிற கேள்விகளும், செய்கிற சேட்டைகளும் சுவாரசியம். ஒரு மனிதன். ஒரு ரோபாட். இருவருக்குள்ளும் இருக்கும் இடைவெளி என்பது எவ்வளவு யோசித்தாலும் இடைவெளி பெரிதாகத்தான் இருக்கிறது.

மொத்தப் படத்தையும் நாயகன் Tom Hanks தாங்குகிறார். உடல் வாதையை, மக்கள் மனநிலையை வெளிப்படுத்தும் பொழுது, அருமையாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

நல்ல படம். பாருங்கள். ஆப்பிள் டிவியில் இருப்பதாக இணையம் சொல்கிறது பாருங்கள்.

0 பின்னூட்டங்கள்: