ஆறு சிறு கதைகளை கோர்த்து ஒரு மாலையாக்கி இருக்கிறார்கள். எல்லோரும் உள்ளூர்காரர்களாக இருந்தால், அவ்வபொழுது குறுக்கிடுவார்கள் அல்லவா! அவ்வாறு ஒவ்வொர் வாழ்விலும் இன்னொருவர் குறுக்கிடுகிறார்கள்.
ஒரு ரவுடியின் வலதுகை. தான் விரும்பிய பெண்ணுடன் வாழ விரும்பி திருந்துகிறான். பழைய தவறுகளினால் ஏற்படும் சிக்கல்கள் அவனை அலைக்கழிக்கின்றன.
தன்னுடன் படிக்கும் ஒரு பெண்ணை ஆசை ஆசையாய் ஒருவன் காதலிக்கிறான். அவளுக்கு வேறு ஒருவருடன் திருமணம் ஆன பிறகும் அதே காதலுடன் இருக்கிறான். என்ன உதவி வேண்டுமென்றாலும் தயங்காமல் செய்கிறான்.
இருவர் சந்தித்து டேட்டிங் செய்கிறார்கள். அவளுக்கு ஆடம்பரத்தின் மீது அத்தனை காதல். ஆகையால் பிரிகிறார்கள். அவர்கள் இணைந்த சுற்றி கொண்டிருந்த காலத்தில் ரகசியமாக எடுக்கப்பட்ட ஒரு காணொளி இணையத்தில் வைரலாக உலா வருகிறது. நான்கு நாட்களில் திருமணம். அதை உடனே கண்டுப்பிடித்து அழிக்கவேண்டும்.
பரமபதம் போல எல்லா கதாப்பாத்திரங்களும் வாழ்க்கை விளையாட்டில் விளையாடுகிறார்கள். கிடைத்த சிறு ஏணியிலோ, பெரிய ஏணியிலோ ஏறுகிறார்கள். திடீரென பாம்பு கொத்தி இறங்குகிறார்கள். இறுதியில் யாரெல்லாம் வெற்றி பெற்றார்கள். யார் தோற்றார்கள் என்பதை சுவாரசியமாய் சொல்லி முடிக்கிறார்கள்.
***
படத்தில் ஏகப்பட்ட பாத்திரங்கள். . சின்ன சின்ன கதாப்பாத்திரங்கள் கூட மனதில் நிற்பது பெரிய ஆச்சர்யம். அந்த ”குடும்ப” பெண்ணின் கணவர் கோபமாய் தன் மனைவியை அடித்துவிட்டு, ”20 லட்சம் கொடுங்கள். என் மனைவி சாட்சி சொல்வாள்” என கேட்பது எதிர்பார்க்காதது. உள்ளே இருந்து அதே மனைவி 40 லட்சம் கேளுங்கள் என்பது! இறுதியில் கிடைத்த பணத்துடன் புது காதலனுடன் ஓடுவது!
படத்தின் மைய இழையாய் ஓடுவது அன்பும், புரிதலும் தான். தன் மகளுக்காய் ஏங்கும் தந்தை. பெற்றோர்களின் அருகாமைக்காக ஏந்தும் அந்த சுட்டிக் குழந்தை. திருமணம் முடித்துப் போன தன் ”காதலிக்காக” என்ன வேண்டுமென்றாலும் செய்ய தயாராக இருக்கும் காதலன். பலான காணொளியை தேடும் பயணத்தில், புரிதலில் இணையும் காதல் ஜோடி. அந்த நர்சை விரும்பும் ரவுடி.
ராஜ்குமார், அபிசேக்பச்சன், பங்கஜ் திரிபாதி, சன்யா என படத்தில் நடித்த எல்லா கதாப்பாத்திரங்களுமே
அருமையாக
பொருந்தியிருக்கிறார்கள். தொழில்நுட்பம் சார்ந்தவர்களும் நன்றாக உழைத்திருக்கிறார்கள். இயக்குநர் அனுராக் பாசினுடைய மற்ற படங்களையும் பார்க்கவேண்டும் என தூண்டியுள்ளார்.நெட்பிளிக்சில் தமிழ் டப்பிங்கிலும் கிடைக்கிறது. பாருங்கள்.
0 பின்னூட்டங்கள்:
Post a Comment