> குருத்து: ”இடமும் இருப்பும்” – மனுஷ்யபுத்திரன் கவிதைகள்

November 29, 2021

”இடமும் இருப்பும்” – மனுஷ்யபுத்திரன் கவிதைகள்


கவிதைகளின் நண்பனாய் இருந்து, சில கவிதைகளும் எழுதி ஒரு கட்டத்தில் ஒருவர் ”கவிஞரே” என அழைத்த பொழுது, பயந்து போய், கட்டுரைகளின் பக்கம் வேகவேகமாய் போய்விட்டேன். மீண்டும் பழைய நண்பனின் நினைவுக்கு வந்தது.


மனுஷ்ய புத்திரனின் கவிதைகளை வாசிக்க துவங்கினேன். மதியவேளையில் திரையரங்கின் இருட்டில் தட்டுத் தடுமாறி நடக்கும் ஒரு பார்வையாளனாய் உள்ளே நுழைகிறேன். கவிதைகளை விட்டு மிக நீண்ட தூரம் சென்றுவிட்டேன் என்பது கவிதைகளைப் படிக்கும் பொழுது உணர முடிகிறது.
இந்த நகரத்தில் தான் கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக ஓடிக்கொண்டிருக்கிறேன். நகரத்தைப் பற்றி இப்படி கவலைப்படுகிறார்.

”இந்த நகரத்தை
தூங்கவைக்கவேண்டும்
காலமும் அகாலமும்
குழம்பிய காலத்தில்
அது பிரமைகளில் நீந்துகிறது.

மிகவும் களைப்படைந்துவிட்டது
எனினும் தூங்க மறுக்கிறது.
நகரங்கள்
தூங்க மறந்து போனதால்
கனவு காணும் பழக்கத்தை
இழந்துவிட்டன!
தூக்க மாத்திரைகளின்றி
இந்த நகரத்தைத் தூங்க வைக்கவேண்டும்
புதையுண்ட நகரங்கள் போல

இதைப் படித்த பிறகு, இரவில் இத்தனை நிறுவனங்கள் இயங்குகின்றன. தூங்க வைக்கவேண்டும் என்கிறாரே! என பொருளாதார இழப்பு குறித்து தான் என் மூளை கணக்கிடுகிறது. 

தன் வீட்டில் உள்ள ”போன்சாய் காடு” குறித்த கவிதையில்.. இப்படி முடிக்கிறார்.

”போன்சாய் மனிதர்கள் தோன்றி
அவற்றிக்குள் நுழையும் வரை
அபாயம் ஏதுமில்லை”

கவிஞனின் உலகம், நாம் எதிர்கொள்ளும் உலகம் போல இல்லாமல் வேறு ஒரு பரிமாணத்தில் இருக்கிறது. புதிராக இருக்கிறது. மிக மிக உணர்வுப்பூர்வமாக இருக்கிறது. இத்தனை மனக்கொந்தளிப்புகளோடு எப்படி ஒரு கவிஞனால் இந்த உலகத்தில் வாழமுடிகிறது என நினைத்துப் பார்த்தால், நமக்கு பதட்டமாய் இருக்கிறது.

இந்த உலகத்தில் வாழ நமக்கு ஒரு பாதுகாப்பு வளையம் வேண்டும். அதனால், நாம மீண்டும் கவிதைகளின் பக்கம் எட்டிப்பார்க்காமல், கட்டுரைகளின் பக்கமே பாதுகாப்பாய் சுற்றலாம் என்றும் தோன்றுகிறது.

கவிஞர் 90களில் எழுதியது இந்த தொகுப்பில் தொகுக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் அக உலகம் சார்ந்த கவிதைகள் தான். ஒரு வேளை ”இடமும், இருப்பும்” என்ற தலைப்புக்கு தகுந்தவாறு தொகுக்கப்பட்டுள்ளன என நினைக்கிறேன்.

கடந்த இருபது ஆண்டுகளில் கவிஞரிடம் கவிதைக்கான தளங்களில், வார்த்தைகளில் படிமங்களில் என நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. என்னைப் போன்றவர்களின் நலன் கருதி அவர் மாறியிருக்கிறார் என்றே புரிந்துகொள்கிறேன்.

அடுத்து, போன புத்தக திருவிழாவின் பொழுது வாங்கிய புத்தகமான ”நீராலானது” தொகுப்பு கண்ணில்பட்டது. சில நாட்கள் கழித்து படிக்கலாம் என்ற முடிவில் இருக்கிறேன். ஒரே நேரத்தில் மனிதன் அத்தனை அழுத்தங்களை தாங்க இயலாது.

பக்கங்கள் 110
வெளியீடு : உயிர்மை வெளியீடு

0 பின்னூட்டங்கள்: