> குருத்து: Raat Akeli Hai (இரவின் தனிமை) Hindi 2020

November 27, 2021

Raat Akeli Hai (இரவின் தனிமை) Hindi 2020



உத்திரபிரதேசத்தில் கதை நடக்கிறது. ஊருக்கு வெளியே இருட்டில் ஒரு காரில் ஓட்டுநரும், வயதான ஒரு அம்மாவும் காரில் வந்துகொண்டிருக்கிறார்கள். ஒரு லாரி வேகமாக காரை இடித்து கவிழ்க்கிறது. காரில் இருந்து அரை உயிராய் வெளியே வரும் இருவரையும் அந்த கொலைகாரன் கழுத்தை அறுத்து கொலை செய்கிறான்.


ஐந்து வருடங்கள் கழித்து, ஊரில் உள்ள பணக்கார வீடுகளில் ஒன்றான அந்த பங்களா வீடு கல்யாண களையோடு இருக்கிறது. கொல்லப்பட்ட அந்த அம்மாவின் கணவர் தனது 60 வயதில், இரண்டாவது திருமணம் செய்கிறார். அன்றிரவே அவருடைய அறையில் மர்மமான முறையில் அவர் துப்பாக்கியில் சுட்டு கொலைசெய்யப்படுகிறார்.

கொலையை விசாரிக்க ஆய்வாளர் வீட்டிற்கு வருகிறார். வீட்டில் உள்ள ஒவ்வொருவரையும் விசாரிக்க துவங்குகிறார். உள்ளூரில் ஒரு எம்.எல்.ஏ அந்த குடும்பத்துக்கு நெருக்கமாக இருக்கிறார். விசாரணைக்கு ஒத்துழைப்பதில் சிக்கல் செய்கிறார்கள். உண்மையை கண்டுபிடிக்க முயற்சி செய்யும் ஆய்வாளரையே விரட்டி விரட்டி சுடுகிறார்கள்.

பிறகு குற்றவாளியை கண்டுப்பிடித்தார்களா என்பதை திரில்லாக சொல்லியிருக்கிறார்கள்.

****

கதைக்கான பின்னணி உத்திரப்பிரதேசம் என்பதே ஒரு திரில்லருக்கான பின்னணியை கொடுத்துவிடுகிறது. அந்த எம்.எல்.ஏ உட்பட பலரும் துப்பாக்கிகளோடு தான் திருமணத்திற்கே வருகிறார்கள். விசாரணை செய்யும் ஒரு ஆய்வாளரையே ஜீப்பில் துரத்தி துரத்தி கொல்ல முயல்கிறார்கள்.

படத்தில் பெண்கள் பாலியல் சுரண்டலை தான் அடிநாதமாக பேசியிருக்கிறார்கள். மூன்றாம் உலக நாடுகளில் ஒன்றான இந்தியாவில் பெண்கள் வீட்டிலும், சமூகத்திலும் பெண்கள் மீதான தாக்குதல்கள் அதிகம். இந்தியாவில் பாலியல் பலாத்கார வழக்குகள் தினமும் சராசரியாக 77 வழக்குகள் (2020ம் வருடத்தில் 28046 வழக்குகள்) பதிவாகி இருக்கின்றன என இந்திய ஆவண காப்பகமே அறிவித்திருக்கிறது..

பொதுவாக பெண்களின் எதிர்கால வாழ்க்கை கருதி பெண்ணின் குடும்பமே வழக்கு தராமல் பெரும்பாலும் தவிர்த்துவிடுகிறார்கள். அப்படி மீறி புகார் கொடுக்க போலீஸ் ஸ்டேசன் போனாலும், வழக்கை பதிவு செய்ய எவ்வளவு தவிர்க்க முடியுமோ அவ்வளவு தவிர்ப்பார்கள். இதையெல்லாம் மீறித்தான் சராசரியாக 77 வழக்குகள் பதிவாகிறது என்றால் இதன் தீவிரத்தை புரிந்துகொள்ளமுடியும். அமெரிக்கா ஒருவாரத்திற்கு முன்பாக தகுந்த பாதுகாப்பு இல்லாமல் இந்தியாவில் தனியாக பயணிக்காதீர்கள் என தனது குடிமக்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறது. இந்த தலைகுனிவு இந்தியாவிற்கு மட்டுமல்ல, உலகம் முழுவதிலும் பாலியல் ரீதியான தொந்தரவுகள் பெண்களுகு அதிகமாக தான் இருக்கின்றன. நேற்று கூட மெக்சிக்கோவிலும், துருக்கியிலும், சிலியிலும் பெண்கள் மீதான தாக்குதல்கள் பெருகி வருவதை கண்டித்து பெண்கள் போராடியதாக செய்தியில் தெரிவித்தார்கள். மொத்த சமூகமும் இதில் கவனத்துடனும், அக்கறையுடன் இருந்தால் தான் இந்த பிரச்சனையை தீர்க்கமுடியும்.

மற்றபடி, நாயகனாக நடித்த நவாசுதீன் சித்திக், அந்த பெரியவருக்கு இரண்டாவது மனைவியாக வரும் ராதிகா ஆப்தே உட்பட படத்தில் நடித்த அத்தனை பேரும் சிறப்பாக செய்திருக்கிறார்கள். படத்தில் உழைத்த அத்தனை தொழில்நுட்பம் சார்ந்தவர்களும் சிறப்பாக பணியாற்றியிருக்கிறார்கள்.

கொரானா முதல் அலையில் நேரடியாக நெட் பிளிக்சில் வெளியாகியிருக்கிறது. இப்பொழுதெல்லாம் பிலிம்பேர் விருதுகள் ஓடிடி படங்களுக்கு தனியாக தருகிறார்கள் போல! இந்தப் படம் சிறந்தப்படத்திற்கான விருதை வென்றிருக்கிறது. நாயகன் நாவசுதீனும் வென்றிருக்கிறார்.

திரில்லர் ரசிகர்களுக்கு பிடிக்கும். பாருங்கள்.

0 பின்னூட்டங்கள்: