> குருத்து: இரண்டு நோபல் பரிசு பெற்ற முதல் பெண் அறிவியலாளர் மேரி க்யூரி – சித்திரக்கதை

November 14, 2021

இரண்டு நோபல் பரிசு பெற்ற முதல் பெண் அறிவியலாளர் மேரி க்யூரி – சித்திரக்கதை

நோபல் பரிசின் வரலாற்றில் இரண்டுமுறை நோபல் பரிசு பெற்று அசத்தியிருக்கிறார். ஒருமுறை இயற்பியலிலும், மறுமுறை வேதியியலிலும் என்பது இன்னும் ஆச்சர்யம். ஒரு பறவை பார்வையில் மேரி க்யூரி அவர்களின் பிறப்பு முதல் கண்டுபிடிப்பு வரை இந்த சித்திரக்கதை விளக்குகிறது.



மேரி க்யூரி 1867ல் போலந்தில் பிறந்தார். மேரியின் பெற்றோர்கள் ஆசிரியர்கள். சிறப்பாக படித்து பள்ளிப்படிப்பை முடித்தார். நாம் பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் இருந்தது போல, அப்பொழுது ஜார் மன்னனின் ஆட்சியதிகாரத்தில் இருந்த ரசியா ஆதிக்கத்தின் கீழ் போலந்து இருந்தது. ஆகையால் போலந்தில் மேற்கொண்டு படிக்க முடியாது என உணர்ந்து, மேற்படிப்புக்காக பாரிசு செல்கிறார்.


படிப்பை முடித்துவிட்டு, சோறு, தண்ணியை கூட கண்டுகொள்ளாமல் ஆய்வில் இறங்குகிறார். தன்னை போலவே ஒரு அறிவியலாளரை திருமணம் செய்துகொள்கிறார். 1903ல் முதல் இயற்பியலில் நோபல் பரிசு வேறு ஒருவருக்கும், இவருக்கும் தரப்பட்டுள்ளது. தன் ஆய்வை தொடர்ந்து செய்ததில் 1911ல் வேதியியலில் பங்களிப்பை செய்தற்காக நோபல் பரிசு பெற்றிருக்கிறார்.

பெற்றோருடைய வழியிலேயே ஆய்வு செய்த மகளுக்கும், மருமகனுக்கும் 1935ல் நோபல் பரிசு கிடைத்திருக்கிறது. மேரி குடும்பத்தை ”நோபல்” குடும்பம் என தாரளமாக அழைக்கலாம். மேரி அவர்களுடைய கண்டுபிடிப்புக்கு அமெரிக்க நிறுவனம் ஒன்று காப்புரிமைக்காக விலை பேசியிருக்கிறது. எல்லா மக்களுக்கும் தன் கண்டுபிடிப்பு போய் சேரவேண்டும் என உறுதியாக இருந்திருக்கிறார். அதே போல தன் தேசத்தின் மீதான அன்பில் தன் கண்டுபிடிப்புக்கு போலந்து பெயரையே “பொலோனியம்” என பெயர் வைத்திருக்கிறார். துவக்க காலம் என்பதால், உரிய பாதுகாப்பு இல்லாமல் ஆய்வில் ஈடுபட்டதால், ரேடியத்தின் பாதிப்பு அதிகமாகி 66 வயதில் மரணமடைந்தார்.

அமெரிக்க அறிஞர் நோம் சோம்ஸ்கி “முகத்துக்கு பூசுகிற கிரீமை தயாரித்து, வித்து காசு சம்பாரிச்சுக்கிட்டு திரியறீங்க! முதல்ல கொரானாவிற்கு மருந்து கண்டுபிடிங்கப்பா” என பெரு முதலாளிகளை சாடினார். அம்பது லட்சத்திற்கு மேற்பட்ட மனித உயிர்களை உலகம் முழுவதும் கொரானாவும், அனைவருக்கும் மருத்துவம் தராத முதலாளித்துவமும் கொன்றிருக்கிறது. பரந்துபட்ட மக்களை நேசிக்கிற மேரி க்யூரிக்கள் தான் உலகத்திற்கு இப்பொழுது தேவை.

ஆங்கிலத்தில் வெளிவந்ததை தமிழில் மொழிபெயர்த்து தந்த குமரேசன் முருகானந்தம் அவர்களுக்கு நன்றி. இது போல பல அறிவியலாளர்கள் கதைகளை இளம் தலைமுறைக்கு உருவாக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

பக்கங்கள் : 25

0 பின்னூட்டங்கள்: