> குருத்து: December 2021

December 28, 2021

சென்னையில் தொடர்ந்து உற்சாகமாக செயல்படும் GST Professionals Society






2017ல் ஜி.எஸ்.டியை எந்தவித முன் தயாரிப்பும் இல்லாமல் திடீரென அறிமுகப்படுத்திய பொழுது ஏகப்பட்ட குழப்பம். பதட்டம். தொழில் செய்பவர்களுக்கு ஜி.எஸ்.டியை எப்படி அமுல்படுத்துவது என விளக்கம் கொடுக்க வேண்டிய அதிகாரிகள் அப்பொழுது தான் ஜி.எஸ்.டி சட்டத்தைப் படித்துக்கொண்டு இருந்தார்கள். சமீபத்தில் வருமான வரித் தளம் எத்தனை பிரச்சனையாய் இருந்ததோ, அதை விட பல மடங்கு குழப்பத்தில் ஜி.எஸ்.டி தளம் இருந்தது. தணிக்கையாளர்களும், முதலாளிகளுக்கான சங்கங்களும் மத்திய அரசுக்கு தொடர்ச்சியாக கடிதம் எழுதிக்கொண்டிருந்தார்கள். வரி ஆலோசகர்களும் தடுமாறி போயிருந்தார்கள்.


இந்த இக்கட்டான சமயத்தில் தான் சென்னையில் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக வணிக வரித்துறையில் அனுபவம் வாய்ந்த செந்தமிழ்ச்செல்வன் அவர்கள் இந்த சொசைட்டியை தன்னைப் போலவே சிந்தனை கொண்டவர்களுடன் இணைந்து ஜி.எஸ்.டி புரொபசனல்ஸ் சொசைட்டி ஒன்றை உருவாக்கினார். எனது சீனியர் வில்லியப்பன் அவர்கள் செந்தமிழ்ச்செல்வன் அவர்களை அறிமுகப்படுத்தினார். இருவரும் சொசைட்டியில் உறுப்பினர்களாய் இணைந்தோம்.

சொசைட்டியில் தணிக்கையாளர்கள், வரி ஆலோசகர்கள், கணக்காளர்கள் என எல்லா நிலைகளிலும் உறுப்பினர்களாய் இருந்தார்கள். மாதம் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்தார்கள். அதில் ஜி.எஸ்.டி குறித்த விளக்க கூட்டங்கள் நடத்தப்பட்டது. உறுப்பினர்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டன. சந்தேகங்கள் தீர்க்கப்பட்டன.

கொரானா காலத்திற்கு பிறகு செயல்பாடுகள் முடங்கி போகாமல், இன்னும் உற்சாகமாகின. வாரம் ஒரு கூட்டம் இணைய வழியில் (Zoom Via) நடத்தப்பட்டது. சொசைட்டியின் நிர்வாகிகளுக்கு பரந்துப்பட்ட தொடர்புகள் இருந்ததால், வாரம் ஒருவர் ஒரு தலைப்பில் உரையாற்றினார். தொடர்ச்சியாக கூட்டங்கள் உற்சாகமாக நடைபெற்றன.

சொசைட்டியின் பெயரில் ஒரு வாட்சப் குழு ஒன்று ஆரோக்கியமாய் இயக்கப்படுகிறது. அதில் புதிதாய் வரும் ஜி.எஸ்.டி நோட்டிபிகேசன்ஸ், அப்டேட்கள், செய்திகள், வழக்குகள், தீர்ப்புகள் குறித்த விவரம் என தினமும் நிர்வாகிகளால் பகிரப்படுகின்றன. நம்மால் தான் படிக்க முடியவில்லை. உறுப்பினர்களின் சந்தேகங்களுக்கும் பதில் அளிக்கப்படுகிறது.

நம் தொழிலில் எதிர்கொள்ளும் ஜி.எஸ்.டி குறித்த எந்த கேள்விக்கும், சந்தேகத்திற்கும், வழிகாட்டலுக்கும் நிர்வாகிகளை தொடர்புகொண்டால் உடனே பதிலளிக்கிறார்கள். வழிகாட்டுகிறார்கள்.

கடந்த ஆண்டு சொசைட்டி சார்பாக உறுப்பினர்களுக்கு பெரிய அளவில் மாத காலண்டர்களும், ஒரு தடிமனான டைரி ஒன்றும் தந்து தொடங்கி வைத்தார்கள். இதோ இந்த ஆண்டும் அதே போல உறுப்பினர்களுக்கு விநியோகித்திருக்கிறார்கள்.

சொசைட்டி என்பது கூட்டு நடவடிக்கை. ஒவ்வொருவரும் அதன் செயல்பாட்டில் பங்கெடுக்கும் பொழுது தான் அதன் பயனை எல்லோரும் பலன் பெறமுடியும். நிர்வாகிகள் கூட்டம் நடத்துவது பற்றி தொடர்ச்சியாய் சிந்திக்கிறார்கள். பேச்சாளர்களிடம் பேசி ஏற்பாடு செய்கிறார்கள். கூட்டத்தை சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்துகிறார்கள். இந்த சமயத்தில் உறுப்பினர்கள் சார்பாக நிர்வாகிகளுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

ஜி.எஸ்.டி துவங்கிய காலத்திற்கு இன்றைக்கும் திருத்தங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. வழக்குகள் நடைபெற்று வருகின்றன. அது குறித்த முக்கிய தீர்ப்புகள் வந்துகொண்டே தான் இருக்கின்றன. இதை தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவரும் தன்னை அப்டேட் செய்வது என்பது மிகச்சிரமம். ஆனால் கூட்டு நடவடிக்கை என்பது எளிதில் சாத்தியமாகிறது. ஆகையால் சொசைட்டியில் இணைய முன் வாருங்கள்.

சொசைட்டியை நம் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்துவோம். சொசைட்டியில் சேர பதிவுக்கட்டணம் ரூ.100. மாதம் ரூ. 200 கட்டணம் என வருடத்திற்கு ரூ.2000. சொசைட்டியில் இணையுங்கள். வேறு ஏதும் சந்தேகம் இருந்தாலும், என்னை அழையுங்கள். பதில் சொல்கிறேன்.

அழைக்க : 9551291721

புதிய ஆண்டை புதிய உற்சாகத்துடன் எதிர்கொள்வோம்!

நன்றி.

கிழவனும் கடலும் – உலகப் புகழ் பெற்ற நாவல்


ஒவ்வொரு நாளும் ஒரு புதிய நாள். அதிர்ஷ்டசாலியாக இருப்பது நல்லது. ஆனால் அதிர்ஷ்டம் வரும்போது நாம் தயாராக இருக்கவேண்டும்.”

- நாவலில் இருந்து...


தென் அமெரிக்காவில் கியூபாவைச் சேர்ந்த மிக வயதான மீனவர் அவர். குடும்பம் ஏதுமின்றி கடற்கரையோரம் உள்ள குடிசையில் தனியனாக வாழ்கிறார். கடலுக்குள் தன் வைத்திருக்கும் சிறு படகில் சென்று தூண்டில் போட்டு மீன் பிடித்து அதில் கிடைக்கும் சொற்பத்தை வைத்துக்கொண்டு வாழ்ந்து வருகிறார். அவர் மேல் அன்பு கொண்டு அந்த பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுவன் அவரோடு நட்பாக இருக்கிறான். சிறுவனுக்கு தொழில் சொல்லிக்கொடுத்த குரு அவர்.

கடந்த சில நாட்களாக மீன் எதுவும் கிடைக்காமல் சோர்வடைந்து இருக்கிறார். அந்த சிறுவன் அந்த மீனவரோடு தொடர்ந்து வந்தவன் தான். இப்பொழுது மீன் எதுவும் கிடைக்காததால், அவனுடைய பெற்றோர் வேறு ஒரு படகில் அனுப்பி வைக்கிறார்கள்.

இந்தச் சூழலில் அன்றைக்கும் மனம் தளராமல், தன்னுடைய சிறு படகை எடுத்துக்கொண்டு கடலுக்குள் தனியாக செல்கிறார். அன்றைக்கு அவருடைய தூண்டிலில் சிக்குவதோ மிகப்பெரிய மீன். அதாவது அவரின் படகை விட இரண்டு மடங்கு பெரிது. தன் மொத்த வித்தையையும், தன் உடலில் உள்ள மொத்த பலத்தையும் பயன்படுத்தி, அந்த மீனை வீழ்த்தி, படகோடு சேர்த்து கட்டிக் கொண்டு வரும் பொழுது, பெரிய பெரிய சுறாக்கள் அவர் பிடித்து வைத்திருந்த மீனை சூறையாடுகின்றன. அவைகளோடும் மல்லுக்கட்டுகிறார். பிறகு அவரும், பிடித்து வைத்திருந்த மீனோடும் கரை வந்தடைந்தாரா என்பதை சாகசமாக சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.
***

உலகப் புகழ்பெற்ற நாவல் இது. இதை எழுதியவர் அமெரிக்காவைச் சேர்ந்த எர்னஸ்ட் ஹெமிங்வே. 1953ல் இந்த நாவலுக்காக இலக்கியத்திற்காக தரப்படும் புலிட்சர் விருதும், 1954ல் நோபல் பரிசும் பெற்றிருக்கிறார். இந்த நாவல் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. இந்நாவலை வெவ்வேறு காலக்கட்டங்களில், வெவ்வேறு மொழிகளில் படமாகவும் உருவாக்கியிருக்கிறார்கள்.

மொத்த நாவலையும் படித்து முடித்தப்பின்பு மனதில் தோன்றிய வார்த்தைகள். சொந்தங்கள் இல்லாமல் சோர்ந்து வாழும் அந்த மனிதனுக்கு ஒரு கடும் போராட்டத்தையும், தன் உயிரையும் தந்து இனி வாழும் காலம் வரைக்கும் பெரும் நம்பிக்கை கொடுத்துவிட்டது அந்த பெரிய மீன். நாவல் படித்து முடித்தப்பின்பு எனக்கே அந்த உற்சாகம் தொற்றிக்கொண்டுவிட்டது. “இப்போது உங்களிடம் இல்லாததைப் பற்றி சிந்திக்க நேரமில்லை. உள்ளதை வைத்து என்ன செய்யலாம் என்று யோசியுங்கள்” என்ற நாவலில் வரிகள் தான் நினைவுக்கு வருகிறது.

இந்த நாவல் முழுவதும் அவர் தனக்குள்ளே பேசிக்கொள்வது, யாரும் இல்லாததால், வெளிப்படையாகவும் வாய்விட்டு பேசிக்கொள்கிறார். அவருடைய அக உலகத்தையும், கடலையும் விரிவாக சொல்லியிருக்கிறார் ஆசிரியர். ஒரு நாவலுக்கும், ஒரு திரைப்படத்திற்கும் என்ன வித்தியாசம் என்பதை இந்த நாவலையும், படத்தையும் பார்த்தால் நன்றாக உணரமுடியும்.

மற்றபடி, மீனவரின் வாழ்க்கை எப்பொழுதும் மற்ற தொழில்களை காட்டிலும் ஆபத்தானாக இருக்கிறது. கரையில் இத்தனை மக்களோடு பாதுகாப்பாய் வாழ்வை கடக்கிறோம். மீனவர்கள் ஒவ்வொரு நாளும் கடலோடும், மாறுகிற காலநிலைகளோடும் போராடி போராடித் தான் நாம் சாப்பிடுகிற அந்த சுவையான மீன் கிடைக்கிறது என்பது எல்லோரும் நினைத்துப் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியமானது.

இந்த நாவலின் மூல நாவலை ஹெமிங்வே 28 பக்கங்களில் எழுதியதாக ஒரு குறிப்பு படித்தேன். ஆனால் எப்படி இத்தனைப் பக்கங்களில் தமிழில் மொழி பெயர்த்துள்ளார்கள் என்பது ஆச்சர்யம். தமிழிலேயே வேறு சிலரும் இந்த நாவலை மொழியாக்கம் செய்திருக்கிறார்கள் என கேள்விப்பட்டேன். இந்த நாவல் மொழி பெயர்ப்பு நாவல் போல இல்லாமல் தமிழ் நாவலை போலவே அருமையாக மொழியாக்கம் செய்துள்ளார் எம்.எஸ். அவருக்கு நமது நன்றிகள்.

இந்த நாவல் பள்ளிகளில் மாணவர்களுக்கு பாடத்திட்டமாகவும் வைத்திருக்கிறார்கள். இந்த நாவலை பார்த்த பின்பு 20 நிமிட அனிமேசன் படத்தைப் பார்த்தேன். அதுவும் நன்றாக இருந்தது. பின்னூட்டத்தில் பகிர்ந்துகொள்கிறேன். பாருங்கள்.

அனைவரும் படிக்கவேண்டிய அருமையான நாவல். படியுங்கள்.

நாவலில் உள்ள வாசகங்களோடு முடிப்போம்.
மனிதன் தோல்விக்காக படைக்கப்படவில்லை. ஒரு மனிதனை அழிக்க முடியும். ஆனால் தோற்கடிக்க முடியாது” – நாவலில் இருந்து...

பக்கங்கள் : 104
ஆசிரியர் : எர்னெஸ்ட் ஹெமிங்வே
தமிழில் : எம். எஸ்
வெளியீடு : காலச்சுவடு

December 24, 2021

போக புத்தகம் – போகன் சங்கர்


எழுத்தாளர் போகன் சங்கரை ஆனந்த விகடனில், முகநூலில் என ஆங்காங்கே கொஞ்சூண்டு கொஞ்சூண்டு படித்திருக்கிறேன். இப்பொழுது தான் முதன் முதலில் புத்தகமாக வாசிக்கிறேன்.


முகநூலில் எழுதியதை எல்லாம் 106 தலைப்புகளில் இந்த புத்தகத்தில் தொகுத்து தந்துள்ளார்கள். வெவ்வேறு தலைப்புகளில், வெவ்வேறு உணர்ச்சிகள் வெளிப்பட்டாலும், பரவலாக வெளிப்படுகிற உணர்ச்சி பகடி தான். ”அவள் பாசாகி டீச்சராகிவிட்டாள். இவன் கோட்டாகி, நடிகர் முரளி போல நிரந்தர மாணவனாகிவிட்டான்.” (பக். 35).

மார்ச்சுவரி வாசலில் ஒருவர் தொடர்ந்து ஒரு எண்ணுக்கு முயன்றுகொண்டே இருக்கிறார். அவர் எடுக்கவில்லை. இவரிடம் உதவி கேட்கிறார். இவரும் முயற்சி செய்கிறார். திடீரென சுதாரித்து உங்கள் பையன் பெயர் என்ன என்கிறார். சொல்கிறார். மார்ச்சுவரிக்குள் ஓடிப்போய் செத்துப்போன அந்த பையனின் பெயரை கேட்கும் பொழுது அவரும் அதே பெயரை சொல்கிறார்.

”எனக்கு சட்டென்று இந்தக் கவிதை நினைவு வந்தது.
எமிலி டிக்கின்சனின் கவிதை.

”மூழ்குதல் அத்தனை துயரமானதில்லை
மூழ்காமல் இருக்க நாம் செய்கிற முயற்சிகள் போல
மூழ்கும் மனிதன் மூழ்கும் முன்பு
மூன்றுமுறை மேலெழும்பி
வானத்தைப் பார்க்க வருவான் என்று சொல்லப்படுகிறது
பிறகு அவன் நேரடியாக அமிழ்ந்துபோய்விடுகிறான்
அந்த அந்தகாரத்தில்
நம்பிக்கையும் அவனும் கடைசியாகப் பிரிகிற
ஒரு கணத்தில்.”

நான் பலத்த சப்தத்துடன் வெடித்து அழ ஆரம்பித்தேன். (பக். 58)

சமீபத்தில் ஆசிரியருடைய மீட்பு சிறுகதையைப் பற்றி கேள்விப்பட்டு, தேடும் பொழுது, பவா செல்லத்துரை அந்த கதையை வாசித்திருந்த ஒரு காணொளியைப் பார்த்தேன். அந்த கதை எனக்கு பிடித்திருந்தது.

பகடி ஆசிரியருக்கு நன்றாகவே வருகிறது. எல்லா இடங்களிலும் வெளிப்படுத்துகிற பகடி விமர்சனத்துக்கு ஆளாகியிருக்கிறது. கனலிக்கு கொடுத்த பேட்டியின் ஓரிடத்தில்… “பகடியாய் எழுதுவதை நிறுத்து என சொல்வதன் மூலம் எழுதுவதை நிறுத்த சொல்கிறார்கள். மற்றவைகளுக்கு சிரிப்பவர்கள் தங்களை பகடி செய்யும் பொழுது முகத்தை திருப்பிக்கொள்கிறார்கள்” என்கிறார்.

தமிழில் பகடியாய் எழுதுபவர்கள் மிகவும் குறைவு. இதே பகடி வேறு ஒருவரிடமும் படித்திருக்கிறோமே என யோசித்த பொழுது, எழுத்தாளர் அ. முத்துலிங்கம் சட்டென நினைவுக்கு வருகிறார். ”கடவுள் தொடங்கிய இடம்” என ஒரு தொடரை அவர் ஆனந்த விகடனில் எழுதியிருந்தார். அந்த தொடர் என்பது வெவ்வேறு காரணங்களுக்காக வேறு வழியே இல்லாமல் சொந்த மண்ணை விட்டு ஓடுகிவர்கள் எதிர்கொள்ளக்கூடிய பலதரப்பட்ட பிரச்சனைகள் தான் நாவலின் அடிப்படை. அவருடைய பகடி இத்தனை கனமான விசயத்திலும் வரும் பொழுது அது தரவேண்டிய நியாயமான உணர்ச்சியை தரவில்லை என்பதை உணர்ந்தேன்.

அவருடைய பல பதிவுகள் தன்னளவில் தான் எழுதுகிறார். இதே எழுத்து தான் என்னுடையதும் என்பதால் ஆசிரியர் எனக்கு நெருக்கமாய் தெரிகிறார். அவர் கவிதைகளும் எழுதியிருப்பார் போலிருக்கிறது. கவிதையில் எப்படி பகடி? என யோசித்துக்கொண்டிருக்கிறேன். படிக்கவேண்டும்.

பக். 334
விலை ரூ. 350
வெளியீடு : கிழக்கு பதிப்பகம்

December 22, 2021

சினிமா வியாபாரம் – கேபிள் சங்கர்





பொதுவாக அந்தந்த துறை சார்ந்த நபர்கள் எத்தனை திறமைசாலி என்றாலும், பொதுமக்களுக்கோ அல்லது துறையில் முன்னேறி வரும் இளம் ஆட்களுக்கோ ஒரு விழிப்புணர்வை/வழிகாட்டலை உருவாக்கவேண்டும் என்ற எண்ணம் இருப்பதில்லை. அப்படியே இருந்தாலும், எழுதுவது என்பது பழக்கமில்லாததால், நடைமுறை சாத்தியமில்லாமல் போகிறது. விகடன் போன்ற பத்திரிக்கைகள் அவர்களை பேசவைத்து, எழுதக்கூடிய தன் ஆட்களை வைத்து தங்கள் பத்திரிக்கைகளில் வெளியிடுகிறார்கள். இப்பொழுது யூடியூப் என்ற சானல் வந்துவிட்டதால், நேரிடையாக போய் பேசி, பதிவு செய்து வெளியிடுகிறார்கள். நல்ல விசயம்.

 
அப்படி திரைத்துறையில் பல ஆண்டுகளாக ஒரு விநியோகிஸ்தராக, திரையரங்கை நடத்திய பங்குதாரராக, கலகலப்பு, ஈகோ படங்களுக்கு வசனகர்த்தாவாக, ”தொட்டால் தொடரும்” படத்திற்கு இயக்குனராக திரை உலகில் தொடர்ந்து இயங்கிவரும் கேபிள் சங்கர் “சினிமா வியாபாரம்” குறித்து தான் வைத்திருந்த தளத்தில் தொடர்ந்து எழுதி வந்தார். அவ்வப்பொழுது நானும் படித்த நினைவு இருக்கிறது. அதை எல்லாவற்றையும் தொகுத்து, இப்பொழுது ஒரு புத்தகமாக தந்திருக்கிறார்.
 
 
தமிழ்நாட்டில் திரைப்படங்கள் எப்படி வெளியிடப்படுகிறது? தயாரிப்பாளர்கள் – விநியோகிஸ்தர் – திரையரங்கு உரிமையாளர்கள் – மூவருக்கும் உள்ள உறவு என்ன? எந்தெந்த முறைகளில் தங்களுக்குள் ஒப்பந்தம் போட்டுக்கொள்கிறார்கள்? ஒரு படத்தை எந்தெந்த வழிகளில் விற்கலாம்? எவ்வளவு வருமானம் வருகிறது? நம்மூரில் இப்படி என்றால்.. ஹாலிவூட்டில் எப்படி தயாரிக்கிறார்கள்? எப்படி வெளியிடுகிறார்கள் என்பதை முதல் பாகத்திலும், தன் நண்பர்களுடன் ஒரு திரையரங்கை எடுத்து நடத்திய பல அனுபவங்கள், மேலும் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் என்பதையும் ஒரு பறவைப் பார்வையில் பல விசயங்களையும் இந்த புத்தகத்தில் பேசியிருக்கிறார்.
 
புத்ததகம் படித்ததில் இருந்து… இத்தனை ஆண்டு காலங்கள் கடந்தும், திரைப்படத்துறை இன்னும் முறைப்படுத்தப்படவில்லை என்பது விளங்குகிறது. ஆகையால், தயாரிப்பாளர், விநியோகிஸ்தர், திரையரங்கு உரிமையாளர்கள் மத்தியில் ஒரு சுமூகமான நிலை என்பது இல்லை. ஒரு சூதாட்ட விளையாட்டு போல இருக்கிறது. பல கோடிகளில் பணம் புழங்குகிறது. கிடைத்தவரை சுருட்டுவது என்பதாக இருக்கிறது. இதனால் சிலர் விரைவாக மேலே செல்கிறார்கள். பலர் தெருவிற்கு வந்துவிடுகிறார்கள். சிலர் தற்கொலை செய்துகொள்கிறார்கள். இவர்கள் செய்கிற எல்லா கோளாறுகளும், இந்த திரை உலகைச் சார்ந்த பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்களையும், , இறுதி நுகர்வோர்களான மக்களைத்தான் பாதிக்கிறது என்பது மட்டும் நன்றாக தெரிகிறது.
 
ஆசிரியர் சொல்வது போல கேரளாவில் முறைப்படுத்தப்பட்ட நுழைவுக் கட்டணம் இருக்கிறது. அடிப்படை வசதிகளும் செய்து தரப்படுகிறது. ஆகையால், இன்னும் குடும்பத்தோடு படம் பார்க்கும் பழக்கம் இருக்கிறது என்கிறார். அதே போல ஆந்திராவிலும் கட்டணம் உயர்வு அதிகமில்லை. திரையரங்கு வசதிகளும் நன்றாக செய்து தருகிறார்கள் என்கிறார். தமிழ்நாடு ஏன் இவ்வளவு மோசமாக இருக்கிறது? இதையெல்லாம் திரையுலகை சார்ந்த சங்கங்களும், அரசு தான் முறைப்படுத்தவேண்டும்.
 
சென்னையில் உள்ள ஒரு பழைய அதுவும் பிட்டு படம் ஓட்டிய திரையரங்கை, நண்பர்களுடன் வாடகைக்கு எடுத்து, அதன் களங்கத்தை துடைக்க திரையரங்கை சீரமைத்து புதிய படங்களை வெளியிட படாதபாடு பட்டு என பல்வேறு அனுபவங்களை இரண்டாவது பாகத்தில் சொல்லியிருக்கிறார். அதில் பார்வையாளர்களில் சிலர் செய்யும் பிரச்சனை, உள்ளூரில் இருந்து இலவசமாய் பார்ப்பதற்காக சிலர் செய்யும் சேட்டைகள் என வேகமாய் சொல்லி சென்றுவிட்டார். அதைத் தனியாக விரித்து எழுதினால் தனிப்புத்தகமாக போடலாம். நல்ல பதிவாக இருக்கும். யோசியுங்கள் கேபிள் சங்கர்.
 
இதில் ஒவ்வொரு விசயத்திலும் இன்னும் நிறைய அம்சங்கள் விவாதிக்க இருக்கின்றன. மிகவும் நீண்டு போய்விடும் என பயந்துகொண்டு இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன்.
 
மத்தப்படி புத்தகத்தின் வடிவமைப்பு பொறுத்தவரையில், புத்தகத்தில் கால்வாசி ஆங்கிலத்தில் தான் எழுதியிருக்கிறார். இதை அவரிடம் கேட்டால், நடைமுறையில் அப்படித்தானே இருக்கிறது என பதில் சொல்லலாம். இப்பொழுது சமூகத்திலேயே ஒரு பிரச்சனை இருக்கிறது. குறிப்பாக சென்னை போன்ற பெருநகரத்தில்! படிப்பது ஆங்கில வழியாக இருக்கிறது. பலரிடம் ஆங்கிலத்தில் பேசுகிறார்கள் அல்லது தமிங்கிலீஷில் பேசுகிறார்கள். அதனால், எழுதுவதும் அப்படித்தான் இருக்கிறது. ஆனால் கேபிள் சங்கர் 70களில் பிறந்திருப்பதால் முயன்றால், பல ஆங்கில வார்த்தைகளை தவிர்த்து தமிழில் எழுத முடியும். இந்த ஒரு புத்தகம் மட்டுமல்ல வேறு சில புத்தகங்களையும் தொடர்ந்து எழுதிவருகிறார். ஆகையால், அடுத்து எழுதும் புத்தகத்தில் இதை சரிசெய்வார் என நம்புகிறேன்.
 
தன் தளத்தில் எழுதியதை எந்தவித திருத்தம் இல்லாமல், வெளியிட்டிருக்கிறார்கள். ஆங்காங்கே சில இடங்களில் எழுத்துப்பிழை இருக்கிறது. சில இடங்களில் ஆங்கில வார்த்தைகள் வரவேண்டும். அதற்கு பதில் தமிழ் வார்த்தைகள் இருக்கிறது. இரண்டாவது பதிப்பில் சரிசெய்யவேண்டும்.
 
பக்கங்கள் : 192
ஆசிரியர் : கேபிள் சங்கர்.
வெளியீடு : டிஸ்கவரி புக் பேலஸ்

December 20, 2021

எங் கதெ – இமையம்


நாயகன் விநாயகத்தின் குடும்பம் விவசாய குடும்பம்.  அவனுக்கு மூன்று தங்கைகள். குடும்பமே ஆண் பிள்ளை என்பதால் எந்த வேலையும் வாங்குவதில்லை. டிகிரி வரை படித்திருந்தும், வேலைக்கு போகாமல் வெட்டியாக ஊரை சுற்றிக்கொண்டிருக்கிறான். 

 

நாயகி கமலாவின் கணவன் ஒரு துவக்கப்பள்ளி ஆசிரியர்.  (இரட்டையர்களான) இரண்டு பெண் பிள்ளைகள். கணவர் விபத்தில் இறந்துவிட, வேலையில் இருக்கும் பொழுது இறந்ததால், கருணை அடிப்படையில் நாயகிக்கு பள்ளியில் அலுவலக உதவியாளர் பணி கிடைக்கிறது. நாயகனின் ஊருக்கு தன் பிள்ளைகளை அழைத்து வந்து பணியில் சேர்கிறாள்.

 

கணவனை இழந்தவள் என்பதாலும், பார்ப்பதற்கு வசீகரமாக இருப்பதாலும் ஊரில் உள்ள பலர் அவளோடு ’பழக’ முயற்சி செய்ய விநாயகம் அவளோடு பழகுகிறான். திருமணம் செய்யாமலே இருவரும் வாழ துவங்குகிறார்கள்.  நாயகனின் வீட்டிற்கு தெரிந்து, அவனுக்கு வேறு ஒரு திருமணம் செய்து வைக்க முயற்சி செய்கிறார்கள். அவன் வேறு வேறு காரணம் சொல்லி மறுத்துவிடுகிறான்.

 

வேலையில் அடுத்த நிலை பதவி கிடைத்து, கடலூருக்கு செல்கிறாள். அங்கு ஒரு சிஇஓ அதிகாரி வீட்டிற்கு ஏசி, லேப்டாப் வாங்கித்தந்து அவளை ’தொல்லை’ செய்கிறான். நாயகன், நாயகி இருவருக்குள்ளும் சண்டைகள் வருகின்றன. பிறகு இந்த உறவு என்ன ஆனது என்பதை உணர்வுபூர்வமாக சொல்லிமுடித்திருக்கிறார்.

 

****

கிராமத்தில் Living together வாழ்க்கை. அதில் எழும் சிக்கல்கள் தான் கதை. சம காலத்தில் திருமணம் செய்து கொண்ட வாழ்க்கையிலேயே தம்பதிகளிடையே புரிதல்கள், பொருளாதாரம், செக்ஸ் என ஆயிரத்தெட்டு பிரச்சனைகள் எழும் பொழுது, கல்யாணம் முடிக்காமல் வாழ்வது என்பது தெரிந்தே இன்னும் ஆயிரம் பிரச்சனைகளை இழுத்துப் போட்டுக்கொள்வது தான்!

 

நாயகன், நாயகி இருவரும் விட்டேத்திகளாக தான் இருக்கிறார்கள். நாயகிக்கு வேலை இருக்கிறது. விதவை திருமணம் செய்தால், அரசு வேலை கூட போய்விடலாம். அவள் ஓரளவு பொருளாதார பின்புலம் உள்ளவள் தான். அவளின் இயல்புக்கு வேறு ஒரு வேலை கூட தேடிக்கொண்டிருக்கலாம் நாயகன் அவளிடம் மயங்கி கிடக்கிறான். கல்யாணம் முடித்துக்கொள்ளலாம். வேலைக்கு போகச் சொல்லியிருந்தால் அவனும் கூட போயிருப்பான். சமூக ஒழுங்கு என்று மட்டும் இல்லாமல், இருவருக்குள்ளும் ஒரு கமிட்மெண்ட் வருவதற்காகவது திருமணம் செய்திருக்கலாம். செய்யவில்லை.

ஒரு சண்டையின் பொழுது, ” என்னை திருமணம் செய்துகொள்.நான் வேலையை விட்டுவிடுகிறேன். வேலைக்கு போய் எனக்கு சோறு போடு” என நாயகி கோபமாய் சொல்வாள். அவன் அதை சட்டை செய்யமாட்டான்.  நாயகியை விட நாயகன் இன்னும் விட்டேத்தியான ஆள்.

 

ஒரு திருடன் கூட தன் நிலைக்கு நியாயம் கற்பித்துக்கொண்டு தான் வாழ்வான். இல்லையெனில் அவன் குற்ற உணர்வே அவனை கொன்றுவிடும்.  நாயகன் நாவலின் முழுமைக்கும் தன்னைத்தானே அவ்வளவு தாழ்த்திக்கொள்கிறான்.  அவனின் இருப்புக்கு அவன் ஏதோ நியாயம் கற்பித்துக்கொண்டு தான் வாழமுடியும். ஆசிரியர் முடிவு செய்து படிக்கும் வாசகனை அவனை வெறுத்து ஒதுக்கும்படி செய்திருக்கிறார்.

 

நாயகன் வேலைக்கு செல்வதில்லை. தமிழகத்தின் இப்போதைய டிரெண்ட் என்னவென்றால், இப்படி வெட்டியாக சுற்றுகிறவர்கள் எல்லாம் குடிகாரர்களாக, குடிநோயாளிகளாக மாறியிருப்பார்கள்.  நாயகன்  மண்டையில் தாறுமாறாக யோசிக்க கூடிய ஆள். குடியும் சேர்ந்திருந்தால், அந்த உறவு எப்பொழுதோ முறிந்துபோயிருக்கும்.  இதெல்லாம் நம் கற்பனை. அதனால் ஒதுக்கி வைத்துவிடுவோம். 

 

நாயகின் பின்புலம் கிராம பொருளாதாரத்தில் இருந்தவன் தான். ஆகையால், நிலவுடமை பண்பாட்டில் தான் வாழ்கிறான். பெண்ணை உடைமை பொருளாக தான் பார்ப்பான். கதைப்படியே அப்படித்தான் பல முறை சிந்திக்கிறான். அந்த திசையில் தான் கதையின் இறுதி பக்கங்களில் ஒரு முடிவை நோக்கி நகர்கிறான். ஆகையால் இறுதி டிவிஸ்ட் முடிவு எடுப்பதெல்லாம் ஆசிரியரின் ஆசையாக இருக்கும். அவன் என்ன நோக்கத்தில் போனானோ அதை செய்வதற்கு தான் 100% சாத்தியம்.

 

கிராமத்துப் பின்னணியில் நாயகனின் குடும்பத்திற்கு தெரிந்தும் பல ஆண்டுகளாக இந்த உறவை விட்டுவைக்கிறார்கள் என்பது சாத்தியமில்லாத ஒன்று.  பையனை ஒன்றும் சொல்லாமல் வீடேறி பெண்ணை மிரட்டுவார்கள்.  சில வருடங்களுக்கு பிறகு மூன்று தங்கைகளும் நாயகி வீட்டுக்கு போய் ஒரு கலாட்டா செய்வார்கள்.  அது எப்போதோ நடந்திருக்கும்.

 

இன்னும் விவாதிப்பதற்கு நாவலில் பல அம்சங்கள் இருக்கின்றன. நீண்டு விடும் என்பதால் இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன்.

 

இமையம் எனக்கு பிடித்த எழுத்தாளர்களில் ஒருவர். ஆசிரியர். சமூக செயல்பாடுகளில் தன்னை இணைத்துக்கொண்டவரும் என்பதால், அவர் மீது மிகுந்த மரியாதை இருக்கிறது. இமையத்தின் சிறுகதைகள் அங்கொன்றும், இங்கொன்றுமாய் படித்திருக்கிறேன். இப்பொழுது தான் அவருடைய முழு நாவலை படித்திருக்கிறேன்.

 

நாயகனின் பார்வையில் மட்டும் மொத்த நாவலும் நகர்கிறது. ஏன் இந்த வடிவத்தை தேர்ந்தெடுத்தார் என தெரியவில்லை.  நாயகியின் பார்வையை நம்மால் புரிந்துகொள்ள முடியவில்லை. வட்டார வழக்கில் நாவல் எழுதப்பட்டிருந்தாலும், மிகவும் சிரமப்படுத்தவில்லை என்பது எனக்கு ஆறுதலாய் இருந்தது. அவருடைய மாஸ்டர் பீஸ் சொல்லப்படுகிற நாவலை விரைவில் படித்துவிடவேண்டும் என முடிவு செய்திருக்கிறேன்.

 

அனைவரும் படிக்கவேண்டிய நாவல். படியுங்கள்.

 

பக்கங்கள் : 110

வெளியீடு : க்ரியா

ஆசிரியர் : இமையம்

 

 


வாழ்வதைப் போல சங்கடமான விஷயம் வேறு எதுவுமே இல்லை – மனுஷ்ய புத்திரன்

 


வாசிப்பில்லாத மனிதர்கள் ஒரு மிகப் பெரிய அனுபவத்தை இழக்கிறார்கள். உங்களிடம் ஒரு வைரக் கல்லைக் கொடுத்தால்கூட, எது வைரம் என்ற கான்ஸெப்ட் உங்கள் மனதில் இருந்தால்தான் நீங்கள் அந்த வரைத்தை வைரமாக உணரமுடியும். அது கண்ணாடிக் கல்லா, வைரமா என்பது உங்களுக்கு எப்படித் தெரியும்? நிறைய பேர் வைரத்தைக் கண்ணாடிக் கல் என்று தூக்கி எறிந்துவிடுகிறார்கள். கண்ணாடிக் கற்களை வைரங்களாக வைத்திருக்கும் மனிதர்களும் இருகிறார்கள். ஏன்? எது கண்ணாடி, எது வைரம் என்பதை எது உங்களுக்குச் சொல்லித்தரும்?

 

நீங்கள் வைரத்தை எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா? இல்லையே! இப்படி வாழ்க்கையில் நமக்குக் கிடைத்த எத்தனையோ வைரங்களை நாம் தொலைத்திருக்கிறோம். காரணம் அவற்றைக் காண்பதற்கான கண்கள் நம்மிடம் இருந்ததில்லை; பார்வை நம்மிடம் இருந்ததில்லை. எத்தனை உறவுகளை நாம் போகிறபோக்கில் தொலைத்திருக்கிறோம்!”


******

அனைவருக்கும் வணக்கம். இது என்னுடைய முதல் ஜூம் மீட்டிங் என்று சொல்லலாம். இது போன்ற விஷயங்கள் எனக்கு அவ்வளவாகப் பழக்கமில்லாதவை. ஆனால், வாசக நண்பர்களை இதன் மூலமாக நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்திப்பது எனபது எனக்கு உண்மையிலேயே மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. நியாயமாகப் பார்த்தால் இந்தச் சமயத்தில் நான் சிங்கப்பூரில் இருக்கவேண்டும். தொடர்ந்து மூன்று மாதங்களாக ஷாநவாஸ் கூப்பிட்டுக்கொண்டே இருக்கிறார். போன வாரம்கூட போனில் பேசும்போது, “கொரானா இருந்தாலும் பரவாயில்லைவாருங்கள்என்றார். அதனால் கூடிய சீக்கிரம் நான் இங்கே வருவேன். வந்து நேரில் உங்களையெல்லாம் சந்திப்பேன்.


இப்படி ஒரு டெக்னாலஜி வழியாக நாம் தொடர்புகொள்ள இயலுகிறது என்பது ஒரு விதத்தில் நாம் யாரும் தனிமைப்படுத்தப்பட்டுப் போகவில்லை என்பதை உணர்த்துகிறது. அல்லது முன்பு எப்போதையும்விட நாம் இன்னும் தொடர்பில் இருப்பதற்கான ஓர் அவசியம் இருக்கிறது என்பதை இந்தக் காலகட்டம் நமக்கு உணர்த்தியிருக்கிறது என்று நான் நினைக்கிறேன். இந்தக் காலகட்டம் உருவாக்கக்கூடிய தனிமையைக் கலை, இலக்கியம் வழியாகத்தான் நாம் கடந்து செல்ல முடியும்.

 

நீங்கள் வெளியே சுற்ற முடியாது; நிறைய நண்பர்களைப் பொது இடங்களில் போய்ப் பார்க்க முடியாது; உணவகங்களுக்குப் போக முடியாது; திரைப்படத்துக்குப் போக முடியாது; கடற்கரைக்குப் போக முடியாது. அவ்வளவு ஏன்நமக்கு மிகவும் பிடித்தவர்களைஒரு காலத்தில் நம்மை மிகவும் நேசித்தவர்களைக்கூட நேரில்போய்ப் பார்க்க முடியாது. அதாவது எவையெல்லாம் நம்முடைய பிளாங் ஹவர்ஸை இட்டு நிரப்பிக்கொண்டிருந்தனவோ அவற்றையெல்லாம் செய்ய முடியாது. காதலன்கள் காதலிகளையும், காதலிகள் காதலன்களையும் பார்க்க முடியாது; நண்பர்களைச் சந்திக்க முடியாது; அந்தச் சந்தர்ப்பத்தில் கலையும் இலக்கியமும் நமக்கு மிகப் பெரிய வாசல்களைத் திறந்து விட்டிருக்கின்றன என்றுதான் சொல்லவேண்டும்.

 

ஒரு காலத்தில் மனிதன் அப்படித்தான் இருந்தான். இன்றைக்குத்தான் நமக்கு இந்த அவுட்டிங் என்று சொல்லப்படும் வெளியே போவதற்கு இவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன. வெளியே போவது என்றால் பார்ப்பதற்கும் கேட்பதற்கும் விஷயங்கள் இருக்கின்றன என்று நினைக்கிறோம் இல்லையா? நூறு வருடங்களுக்கு முன்பு போக்குவரத்து இல்லாத காலகட்டத்தில் மனிதன் எங்கே போனான்? இவ்வளவு பொழுதுபோக்குகள் இல்லாத காலகட்டத்தில் மனிதன் எங்கேதான் போயிருப்பான்? தாத்தா பாட்டியெல்லாம் எங்கே போயிருப்பார்கள்? வாய்க்கால் வரப்புகளுக்கு வேலைக்குப் போயிருப்பார்கள்; அப்புறம் வீட்டுக்கு வந்திருப்பார்கள்; வியாபாரம் செய்திருப்பார்கள்; வீட்டுக்கு வந்திருப்பார்கள். வீட்டையும், தொழிலையும் தவிர யாருக்கும் எந்த வெளியுலகமும் கிடையாது.

 

அப்பொழுதெல்லாம் ஊரில் ஒரு கூத்து நடக்கும். கூத்தை இரவெல்லாம் கண்விழித்துப் பார்ப்பார்கள். திருவிழாவுக்காகக் காத்துக்கொண்டிருப்பார்கள். அல்லது ஊரில் நடக்கும் ஒரு சிறிய கலை நிகழ்ச்சிக்காகக் காத்துக்கொண்டிருப்பார்கள். அல்லது நான்கு பேர்கள் உட்கார்ந்து பேசுவதைக் கேட்கக் காத்துக்கொண்டிருப்பார்கள். இப்படித்தான் காலம் காலமாக நம்முடைய கதைசொல்லிகள்கூட உருவாகியிருந்திருக்கிறார்கள் என்று சொல்லலாம்.

 

அதற்கப்புறம்தான்சமூகத்தில் தனிமைப்படுத்தப்பட்டுப்போக ஆரம்பித்ததற்கப்புறம்நாம் நமக்கென்று தனிப்பட்ட பொழுதுபோக்குகளை நிறைய உருவாக்கிக்கொண்டோம். சிறிய, சிறிய குழுக்களாக வெளியுலகத்துடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டோம். இந்த லாக்டவுன் என்பது மனிதகுல வரலாற்றின் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத ஒரு புது அனுபவம். இது வரைக்கும் நமக்கு என்னவெல்லாம் கொடுக்கப்பட்டனவோ அவை எல்லாம் எடுக்கப்பட்டுவிட்டன. அதற்குப் பதிலாக ஒரு நூறு வருடங்களுக்கு முன்பான பிரைமரி ஸ்டேஜ் என்று சொல்லப்படும் நிலைக்குக் கொண்டுவிடப்பட்டுவிட்டோம்.

 

ஆனால், நாம் சும்மா இருக்க மாட்டோம் அல்லவா? நாம் திரும்பவும் டெக்னாலஜி வழியாக இணைக்கிறோம். ‘நீ எப்படி எங்களை லாக் அவுட் செய்யமுடியும்? நாங்கள் 100 பேர் சேர்வோம்; 50 பேர் பேசுவோம்; ஒருவரையொருவர் பார்த்துக்கொள்வோம்என்கிறோம். மனிதனுடைய மிகப் பெரிய சவாலாக இதைத்தான் நான் பார்க்கிறேன்.

 

மனிதனை மிகவும்கெட்ட பையன்என்று சொல்லலாம். எல்லா சூழ்நிலைகளிலும் அவன் மீண்டு வந்திருக்கிறான். இது போல எத்தனை பேண்டமிக்குகளை நாம் பார்த்திருக்கிறோம். எவ்வளவோ பேர் இறந்திருக்கிறார்கள். ஆனாலும், நாம் மீண்டு வந்திருக்கிறோம்.

 

யோசித்துப் பாருங்கள்இங்கே பேசியவர்கள் எல்லாம் நிறைய விஷயங்களைப் பற்றிப் பேசினார்கள். தியடோர் பாஸ்கரன், ஜெயமோகன், மௌனிஇப்படி ஒரு பரந்த தளத்தில் ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமான முக்கியமான ஆசிரியர்களைப் பற்றியும் அவர்களது படைப்புகளைப் பற்றியும், அவர்களது வாசக அனுபவங்களைப் பற்றியும் பகிர்ந்துகொண்டார்கள்.

 

நமக்குக் கால காலமாக உருவாக்கிய இலக்கியம் சார்ந்த ஒரு திறப்புக் கிடைத்திருக்கிறது. வால்ட் விட்மன் ஒரு கவிதையில்இந்தக் கவிதைகளைத் தொடுகிறவன் என்னையே தொடுகிறான்என்று சொல்வார்.

நாம் ஓர் எழுத்தாளைனைஒரு படைப்பாளியைவாசிக்கிறபோது ஒரு தனி மனிதனை வாசிக்கவில்லைஅவன் வாழ்நாள் முழுக்கக் கற்றறிந்த ஓர் உணர்வு, அவன் தேடிக் கண்டடைந்த ஓர் உலகம் ஆகியவற்றை அவன் அப்படியே நம் கைகளில் கொடுக்கிறான். அதை அப்படியே நாம் எடுத்துக்கொள்கிறோம்.

இன்னும் சொல்லப்போனால் இந்தப் புத்தக அலமாரியைப் பார்த்தோம் என்றால், அது தனியாக இந்த அறையில் இருப்பது போலத் தோன்றும். ஆனால் எத்தனை நூறு, நூறு ஆசிரியர்கள் என்னோடு இருக்கிறார்கள்! எத்தனைமாஸ்டர்கள் என்னுடன் இருக்கிறார்கள்!

 

என்னுடைய எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லக்கூடிய ஆசிரியர்கள்என்னோடு இருக்கிறார்கள். இதில் பிரச்னை என்னவென்றால் நிறையப் பேருக்கு ஆசிரியர்களோடு உரையாடுவதற்கான மொழி இல்லை; ஆர்வம் இல்லை; அதற்கான ஓர் உத்வேகம் இல்லை. இந்த ஆசிரியர்கள் நமக்கு எதைக் கொடுப்பார்கள் என்ற ஒரு பார்வை இல்லை. நான் அதைத்தான் பார்க்கிறேன். அப்படிப் பார்க்கும்பொழுது இந்த லாக் டவுன் காலத்தை ரொம்பப் பயனுள்ளதாக அமைத்துக்கொள்கிறவர்கள் இருக்கிறார்கள். நிறையப் பேர்களிடம் நல்ல புத்தகங்களே இருக்காது. சில பேர்தான் புத்தகங்களை அதிகமாகத் தேடித் தேடிச் சேகரித்து வைத்துக்கொண்டிருப்பார்கள்.

இன்னொரு விஷயம், நேரம் தொடர்பானது. பல பேர், “படிப்பதற்கு எனக்கு நேரமே இல்லைஎன்பார்கள். இப்போது நிறைய நேரத்தைக் காலம் நமக்குக் கொடுத்திருக்கிறது. ஆனால், இப்படி நிறைய நேரம் கிடைத்திருக்கும் சமயத்தில் எவ்வளவு பேர் படிக்கிறோம் என்ற ஒரு கேள்வியைக் கேட்டால் மிகவும் நகைச்சுவையாக இருக்கும்.

 

நிறையப் பேர் உண்மையை ஒப்புக்கொள்ளமாட்டார்கள். இதற்கு முன்பு என்ன செய்துகொண்டிருந்தார்களோதிரும்பவும் அதே சோஷியல் மீடியா, அதே கேம்ஸ், அதே திரைப்படங்கள், அதே சேட்டிங் இதைத்தான் செய்துகொண்டிருப்பார்கள். இவற்றைத் தவறு என்று சொல்லவில்லை. நானும் அவற்றையெல்லம் செய்பவன்தான். இதெல்லாம் தவறு இல்லை. ஆனால் படிக்க நேரம் இல்லையென்று சொல்கிறோம் அல்லவா? அது சும்மா. இந்த குவாரன்டைன், லாக்டவுன் எல்லாம் வராதபொழுது படித்துக்கொண்டிருந்தவர்கள்தான் இப்போதும் படிக்கிறார்கள். முன்பு எதையும் படிக்காதவர்கள் இப்போதும் படிக்கமாட்டார்கள். அவர்களைக் கட்டிவைத்து உரித்தாலும்கூடப் படிக்கமாட்டார்கள். இதுதான் நாம் பார்க்கக்கூடிய ஒரு விஷயம்.

 

படிப்பு என்பது ஒரு பெரிய வேலை. அது ஒரு பயிற்சி. என்னைப் பொருத்த வரைக்கும் எழுதுவதைப் போலத்தான் படிப்பதும். எழுதுவதற்கு நமக்கு எப்படி ஒரு நீண்ட பயிற்சியும் முயற்சியும் தேவைப்படுகிறதோ, எப்படி அவற்றைத் திரும்பத் திரும்ப நாம் பயிற்சி செய்கிறோமோ அப்படியேதான் படிப்பதும்!

கொஞ்ச காலம் படிக்காமல் விட்டுவிட்டீர்கள் என்றால் உங்களுக்குப் புத்தகங்களிலேயே நாட்டம் இல்லாமல் போய்விடும்; அவற்றைப் பார்த்தாலே எரிச்சலாக வரும்; தூக்கம் வரும். தூங்குவதற்குப் புத்தகங்களைப் பயன்படுத்துபவர்கள் நிறையப்பேர் இருக்கிறார்கள். சரிபுத்தகத்தால் ஏதாவது ஒரு பயன் இருந்தால் நல்லதுதானே?

 

இதில் ஒரு செய்தி உண்டு. நாம் படிக்கும்போது இரண்டு விதமான வாசிப்புகள் இருக்கின்றன. ஒன்று, தேர்ந்தெடுத்துப் படிப்பது. அது கவிஞர்களாக இருக்கலாம்; கதாசிரியர்களாக இருக்கலாம்; உரைநடை ஆசிரியர்களாக இருக்கலாம். ஆனால் அவர்களில் நாம் முதன்மையாககண்டிப்பாக வாசித்தே தீரவேண்டியவர்கள் இருப்பார்கள்.

 

என்னைப் பொருத்த வரை தமிழில் முதல் நிலையில் வாசிக்கவேண்டிய புத்தகங்கள் என்று பார்த்தால் ஒரு 100 புத்தகங்கள்தாம் இருக்கின்றன. இரண்டாம் நிலையில் படிக்கவேண்டிய புத்தகங்கள் ஒரு 1,000 இருக்கும். ஆனால், நமக்கு நேரம் இருக்கும்பொழுது எப்பொழுது வேண்டுமானாலும் படிக்கலாம் என்பதற்கு ஏராளமானவை இருக்கின்றன.

 

அப்படிப் பார்க்கும்பொழுது இந்த முதல் நிலை ஆசிரியர்களை நாம் பயில வேண்டும். கவிஞர்கள் என்றால் ஒரு பத்து இருபது பேரை நீங்கள் நிச்சயம் படித்தாக வேண்டும். அதே போல சிறுகதை ஆசிரியர்கள், நாவல் ஆசிரியர்கள் என்றால் ஒரு பத்து, இருபது பேரைப் படித்தாகவேண்டும். “1,000 சிறுகதைகளை நான் படிக்கப் போகிறேன்என்று ஒரு நண்பர் சொன்னார். ஒரே ஆசிரியர்கூட 200 அல்லது 300 கதைகளை எழுதியிருப்பார். எனவே, அப்படிப் படிக்கக்கூடாது.

 

1,000 கதைகளைப் படிக்கவேண்டும் என்றால் நான் முதலில் 100 சிறந்த ஆசிரியர்களைத் தேர்வுசெய்துகொள்வேன். அதில் 50 பேர் தமிழ்ச் சிறுகதை ஆசிரியர்களாகவும், 50 பேர் பிற மொழிகளைச் சேர்ந்தவர்களாகவும் இருப்பார்கள். ஒவ்வொருவருடைய கதைகளிலும் பத்துப் பத்துக் கதைகளை நான் படிப்பேன். அப்படிப் படிக்கிறபோது, அவர்களுடைய உலகம் என்ன என்கிற ஒரு பரந்த பார்வை கிடைக்கும். அப்படிக் கிடைக்கிறபோதுதான் அடிப்படையில் நாம் சிறந்த வாசகர்களாக உருவாக முடியும்.

நிறையப் பேருக்கு அந்தச் சிறந்த வாசகர்களாக உருவாவதற்கான பரந்த வாசிப்பு என்பதே இருப்பதில்லை. சில பேருக்கு சில எழுத்தாளர்களை மிகவும் பிடிக்கும். உதாரணமாக ஒருவருக்கு ஜெயகாந்தனை மிகவும் பிடிக்கும் என்று வைத்துக்கொள்ளுங்கள். அவர் ஜெயகாந்தனையே வாழ்க்கை முழுவதும் படித்துக்கொண்டே இருப்பார். இன்னொருவருக்கு இன்னோர் எழுத்தாளரைப் பிடிக்கும் என்று வைத்துக்கொள்ளுங்கள். பெயர்களைச் சொல்வதைத் தவிர்த்துவிடலாமேவம்பு வேண்டாம்அவரையே படித்துக்கொண்டிருப்பார்.

 

இப்படியெல்லாம் படிக்கும்போது, சில பேர் சில தத்துவஞானிகளை அப்படியே பின்பற்றுவார்கள். ஜே.கிருஷ்ணமூர்த்தியைப் பின்பற்றுகிறார்கள் என்றால் அவர்களுக்கு ஜே.கிருஷ்ணமூர்த்தியைத் தவிர உலகில் வேறு என்ன இருக்கிறதென்றே தெரியாது. அவர்களை எல்லாம் பார்க்கும்போது மிகவும் பாவமாக இருக்கும். சில பேர் ஓஷோ படிக்கிறார்கள் என்றால் ஓஷோவை மட்டுமே படித்துக்கொண்டிருப்பர்கள்.

அறிவு என்பது மிகவும் வெர்ஸடைலாக இருக்கவேண்டும். பல்வேறு விதமான ஆசிரியர்களையும், கவிஞர்களையும் படிக்கும்போது 2,000 ஆண்டுகளாகக் கவிதை எழுதிய ஒரு மொழியில், நீங்கள் கொஞ்சம் கொஞ்சம் படித்தாலும்கூடப் பரவாயில்லை. நிறைய ஆசிரியர்களுடைய படைப்புகளை நான் தொட்டுப்பார்த்திருக்கிறேன் அவர்களோடுஅவர்கள் புத்தகங்களோடுஒரு மணி நேரமாவது நான் உரையாடி இருக்கிறேன் என்னும்போது அந்த ஆசிரியர்கள் மிகச் சிறந்த வாக்கியங்களை உங்கள் மனதில் விட்டுச் செல்வார்கள்.

 

நம் தமிழ் மரபிலேயே ஒரு பழமொழி இருக்கிறது. ‘கண்டதையும் படிக்கக்கூடியவன் பண்டிதனாவான்’. நான் எல்லா விதமான விஷயங்களையும் அப்படிப் படிக்கக்கூடியவன். க்ரைம் நாவல்கள் படிப்பேன்; கிளாசிக்ஸ் படிப்பேன்; தத்துவ நூல்களைப் படிப்பேன்.

 

எனக்கு அதிலெல்லாம் ஒரு வேறுபாடும் கிடையாது. ஒவ்வொருவருடைய மொழியும் எப்படி இருக்கிறது, புலமை எப்படி இருக்கிறது? ஒவ்வொருவரும் சொல்லியிருக்கிற சிறந்த விஷயங்களைப் படிப்பேன். ‘கோலம் எப்படிப் போடுவது?’ என்ற புத்தகத்தைக்கூட ஆர்வமாகப் படிப்பேன். ஏனென்றால், எப்படி ஒரு கோலம் போடுவது என்று எனக்குத் தெரியாது. அது ஓர் அறிவு. சமையல் புத்தகத்தை எடுத்தும் வாசித்துப் பார்ப்பேன். ஏனெனில், ஓர் எழுத்தாளனாக எல்லாத் துறை சார்ந்த அறிவும் எனக்குத் தேவை.

 

ஆனால், நிறையப் பேரிடம் இருக்கும் பிரச்சனை இதுதான். ஒருவர் கவிஞர் என்றால் கவிதைகளை மட்டுமே படித்துக்கொண்டிருப்பார். உருப்படாமல் போவதற்கு முதல் வழி அது. கவிதை எழுதுபவன் முதலில் பிற துறைகள் சார்ந்த நூல்களைப் படிக்கவேண்டும். தத்துவம், வரலாறு, பொருளாதாரம் போன்றவற்றில் அவனுக்கு ஈடுபாடு இருக்கவேண்டும். அப்போதுதான் அவற்றின் சாரம் அவனுடைய கவிதைகளில் இருக்கும்.

 

உரைநடை ஆசிரியர் என்றால் அவர் நிறையக் கவிதைகளையும் நாவல்களையும் படிக்கவேண்டும். இப்படிக் கலவையாக நீங்கள் படிக்கும்போதுதான் உங்களுடைய அறிவு மிகவும் பிரகாசமாக இருக்கும் என்பது என்னுடைய அபிப்ராயம். நிறையப் பேரிடம் இருக்கும் சிக்கல் சிலவற்றை மட்டுமே தேர்ந்தெடுத்துப் படிப்பது. அப்படிப் படிக்கும்போது உங்களை நீங்களே குறுக்கிக்கொள்கிறீர்கள். இது ஒரு பிரச்னை.

 

அடுத்தது வழிபாடு. சில எழுத்தாளர்களை வழிபடுவது. ஸ்பெஷல் ரீடர்ஸ் ஆக இருப்பது; பின்பற்றுவது. சில எழுத்தாளர்கள் அதை மிகவும் ஊக்குவிக்கவும் செய்கிறார்கள். ஓர் எழுத்தாளன் செய்யக்கூடிய முக்கியமான பணி தன்னிடம் வரும் வாசகனுக்கு யாரையெல்லாம் படிக்கவேண்டும், யாரிடமெல்லாம் கற்றுக்கொள்ளவேண்டும் என்று சொல்வதுதான். அவனை ஒரு தொண்டனாக மாற்றக்கூடாது. சில எழுத்தாளர்கள் அதைச் செய்கிறார்கள். அது தேவையில்லை. எனக்கு நூற்றுக்கணக்கில் ஆசான்கள் இருக்கிறார்கள். நூற்றுக்கணக்கான வழிகாட்டிகளும் இருக்கிறார்கள். வாசிப்பு என்னும் விஷயத்தில் தனிப்பட்ட வழிபாடு என்பது கூடாது.

 

சில எழுத்தாளர்கள் நம்முடைய மன உலகத்துக்கு மிகவும் நெருக்கமாக இருப்பார்கள். உதாரணமாக எத்தனையோ இசையமைப்பாளர்கள் இருந்தாலும் இளையராஜா உங்களுக்கு மிகவும் பிடித்தமானவராக இருப்பார். அல்லது உங்களுக்கு .ஆர்.ரஹ்மானை மிகவும் பிடிக்கும். இளையராஜாவை ரசிப்பதற்கு நீங்கள் .ஆர்.ரஹ்மானின் விசிறியாக இருப்பது தடையாகிவிடக்கூடாது; எம்எஸ்வியை ரசிக்க அது ஒரு தடையாகிவிடக்கூடாது.

 

உங்களுடைய மன உலகத்தோடு தொடர்புடைய சில எழுத்தாளர்கள் கண்டிப்பாக இருப்பார்கள். ஆனால் ஒரு குழுவின் ஒரு பகுதியாக நீங்கள் மாறக்கூடாது. அது ஓர் அந்தரங்கமான ஓர் உறவு. ஓர் எழுத்தாளனுக்கும் உங்களுக்குமான உறவு என்பது மிக மிக அந்தரங்கமானது. இன்னும் சொல்லப்போனால் நிறைய வெளிச்சங்கள் உங்களுக்குத் தேவை. ஓர் எழுத்தாளனைப் புரிந்துகொள்வதற்கே இன்னோர் எழுத்தாளன் தேவை. நீங்கள் ஒரு பத்து எழுத்தாளர்களைப் படித்தால்தான் அதில்ஒவ்வொரு எழுத்தாளரும் எப்படித் தனித்துவமானவர் என்பது உங்களுக்குத் தெரியும். அந்த மாதிரியான ஒரு விஷயம்தான் அது.

 

அப்படிப் பார்க்கும்பொழுது பரந்துபட்ட வாசிப்பு என்பதும், வாசிக்கிற விஷயங்களை நாம் குறிப்புகள் எடுத்துக்கொள்வது, அல்லது அதைப் பற்றி விவாதிப்பது, உரையாடுவது என்பனவும் ஒரு கதையைத் திரும்பச் சொல்கிற விஷயம் இல்லை.

 

உதாரணத்துக்குபுதுமைப்பித்தனுடைய ஒரு கதையைப் படிக்கிறேன் என்றால், புதுமைப்பித்தன் அந்தக் கதையை எப்படி எழுதியிருக்கிறார் என்று உங்களுக்கு நான் சொல்வதில் பெரிய உபயோகம் இல்லை. அந்தக் கதை உங்களிடமும் இருக்கும். அந்தக் கதையில் ஏதாவது ஒரு வரி உங்களை பாதித்திருக்கும் அல்லவா? உங்களுடைய வாழ்க்கை அனுபவத்தோடு ஏதாவது ஒரு வரி தொடர்புடையதாக இருக்கும் அல்லவா? உங்கள் வாழ்க்கையில் நடந்த ஏதாவது ஒரு சம்பவத்தோடு அந்த வரி உங்கள் மனதைக் கிளர்ச்சியடைய வைத்திருக்கும் அல்லவா? அதுதான் முக்கியம்.

 

நீங்கள் ஒருவருடைய கவிதையைப் படிக்கிறீர்கள். நகுலனின் ஒரு கவிதையைப் பாருங்கள்: “இருப்பதற்கென்றுதான் வருகிறோம். இல்லாமல் போகிறோம்”. இதில்இருப்பதற்கென்றுதான் வருகிறோம்என்பதில் ஒரு பிடிவாதம் இருக்கிறது. ‘நான் இருப்பதற்குத்தாண்டா வந்தேன் இங்கே’. ‘இல்லாமல் போகிறோம்என்னும்போது டோன் அப்படியே டவுனாகிறது.

 

எனக்கு நகுலனுடைய இன்னொரு கவிதை ஞாபகம் வருகிறது. ‘நேற்று ஒரு கனவு. சுசீலாவின் முதல் கர்ப்பம் அலசிவிட்டதாக’ – இதைச் சொல்லிவிட்டு, ‘இந்த மனதை வைத்துக்கொண்டு ஒன்றும் செய்ய முடியாது’. ‘இந்த மனசை வைத்துக்கொண்டு ஒன்றும் செய்துவிட முடியாதுஎன்று சொன்னால், என் மனதால்தானே நான் யோசிக்கிறேன்? அப்போ இந்த மனதை வைத்துக்கொண்டு ஒன்றும் செய்ய முடியாது என்று சொல்கிற இன்னொரு மனது என்பது என்ன? அது எங்கே இருக்கிறது? அப்படியானால் எனக்கு இரண்டு மனம் இருக்கின்றனவா? என் மனதைப் பற்றியே யோசிக்கும் இன்னொரு மனம் இருக்கிறதா? அப்படியானால் என்னுடைய எமோஷைனை ஹேண்டில் செய்யும் ரேஷனாலிடி பற்றிப் பேசினேனா? இல்லை மனம் என்பதே பல்வேறு அடுக்குகளைக் கொண்டதா? அப்படியானால் இந்த மனதை வைத்துக்கொண்டு நான் ஒன்றும் செய்யாமல் இருந்த தருணங்கள் வாழ்க்கையில் எவ்வளவு இருக்கும்? இந்த மனதைக் கழற்றித் தூரப்போட்டுவிட்டால் எப்படி இருக்கும் என்று நினைத்த தருணங்கள் எவ்வளவோ இருக்கின்றன.

இந்த மனம் இல்லாமல் போகவேண்டும் என்பதற்காகத்தானே நிறையப் பேர் தற்கொலை செய்துகொள்கிறார்கள்? இந்த மனம் இல்லாமல் போகவேண்டும் என்பதற்காகத்தானே நிறையப் பேர் குடிக்கிறார்கள்? அல்லது வேறு எது எதற்குள்ளாகவோ மூழ்கிப்போகிறார்கள்? இந்த மனதை வைத்துக்கொண்டு ஒன்றும் செய்ய முடியாது. இந்த மனம் சில சமயம் ஒரு பெரிய பாறாங்கல் போலக் கிடக்கிறது. சில சமயம் ஓர் இறகு போல இருக்கிறது.

ஓர் இரண்டு வரிகள் கொடுக்கக்கூடிய இந்த அனுபவம், இது எனக்குள் எவ்வளவு திறப்புகளை ஏற்படுத்துகிறது!

 

நீங்கள் ஒரு 100 பக்கம்கொண்ட ஒரு கதையை வாசிக்கலாம். ஆனால், அதில் இரண்டே இரண்டு வரிகள்தாம் உங்களுக்கானவை. ஓர் எழுத்தாளர் 1,000 வரிகள் எழுதியிருப்பார். அது அவருடைய சௌகரியம். ஒரு கவிஞன் ஆயிரக்கணக்கான சொற்களை எழுதுவார். அது அவருடைய சௌகரியம். இரண்டே இரண்டு வாக்கியம்தான் உங்களுக்கான வாக்கியம். நீங்கள் எங்கே போனாலும் உங்கள் கூடவே அவை வந்துகொண்டிருக்கும். உங்கள் குழந்தை போல உங்களுடன் வந்துகொண்டிருக்கும்; அது உங்களுடைய கையில் இருக்கும் விளக்கைப்போல உங்களுடன் வந்துகொண்டேயிருக்கும்; எல்லா சந்தர்ப்பத்திலும் அந்த வரி ஞாபகம் வரும்.

நான் ஒரு கவிதை எழுதியிருந்தேன். நிறைய நண்பர்கள், “அவை எங்களுக்கான வரிகள்என்று சொல்வார்கள்.

 

அழுகை வராமல் இல்லை;

ஒரு வைராக்கியம்

உங்கள் முன்னால் அழக்கூடாது

 

ஏன் உங்கள் முன்னால் அழக்கூடாது? அந்த உங்கள் என்பது அந்தக் கவிதைசொல்லி எழுதிய சமயத்தில் யாரைப் பற்றிச் சொன்னார் என்பது நமக்குத் தெரியாது. ஆனால் உங்கள் வாழ்க்கையில் எத்தனை சமயங்களில் கண்ணீர் வந்தால்கூட, ‘இவங்க முன்னால் நாம் அழக்கூடாதுஎன்று இருந்திருப்பீர்கள்! அத்தனை சந்தர்ப்பங்களும் உங்களுக்கு ஞாபகம் வரும். உடைந்து அழவேண்டிய நேரத்தில்கூட நீங்கள் வைராக்கியத்துடன் சிரித்துக்கொண்டு உட்கார்ந்திருப்பீர்கள். ‘நான் இவர்கள் முன்னால் அழக்கூடாதுஎன்று இருந்திருப்பீர்கள். அதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கும். இப்படி உங்கள் அனுபவத்தினுடைய ஒரு கதவைத் தட்டித் திறக்கக்கூடிய வரிகளை நீங்கள் பெற்றுக் கொள்ளவேண்டும்.

 

ஆயிரக்கணக்கான வரிகள் உங்களைச் சுற்றி எழுதப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. நாமும் படித்துக்கொண்டே இருகிறோம். ஆனால் எனக்கான சொல் எது, எனக்கான வாக்கியம் எதுஅதைத் தரக்கூடிய எழுத்தாளர் யார், யார் என்னுடைய நினைவுகளின் அடுக்குகளைத் திறக்கிறார்கள், இதுதான் மிகவும் முக்கியம். அப்படி உங்கள் நினைவுகளுடைய அடுக்குகளின் வரிகளை நீங்கள் தொகுத்துக்கொண்டே வருகிறபோது ஒரு பெரிய மேஜிக் உங்களுக்குள் நடக்கும். அது என்னவென்றால் எல்லா சந்தர்ப்பங்களுக்குமான வாக்கியங்களையும் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் உருவாக்கிக் கொண்டுவிடுவீர்கள். எல்லா சந்தர்ப்பங்களுக்குமான வாக்கியங்களும் உங்களிடம் இருக்கும்.

 

இதை நான் சொல்வதற்கு ஒரு காரணம் இருக்கிறது. உங்கள் வாழ்க்கையின் எல்லா சந்தர்ப்பங்களிலும் ஓர் எழுத்தாளருடைய வாக்கியமோ, அல்லது அவர் எழுதிய ஒரு சந்தர்ப்பமோ உங்களுக்கு ஞாபகம் வந்தது என்றால் நீங்கள் ஒரு மிகச் சிறந்த வாசகர் என்று அர்த்தம். ஏனெனில் எல்லாமே சொல்லப்பட்டுவிட்டன; எல்லாமே பேசப்பட்டுவிட்டன; எல்லாமே எழுதப்பட்டுவிட்டன; எழுதப்படாதது ஒன்றுமே கிடையாது.

கைகளைக் கழுவுங்கள், கைகளைக் கழுவுங்கள்என்று இந்த பேண்டமிக் சமயத்தில் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். கை கழுவும் ஒவ்வொரு சமயத்திலும் மாக்பெத்தான் நினைவுக்கு வருகிறது.

 

தீராத குற்ற உணர்வின் காரணமாகக் கைகளைக் கழுவிக்கொண்டே இருந்த அந்த விஷயம் இன்று உலகளாவிய மிகப் பெரிய ஓர் அனுபவமாக மாறிவிட்டதை நான் உணர்கிறேன். ஒவ்வொருவருக்குள்ளும் எவ்வளவு பெரிய குற்ற உணர்வு இருக்கிறது! மேக்பெத் போல நாம் கைகளைக் கழுவாமல் இருந்தோம். இப்போது நாள் முழுக்கக் கைகளைக் கழுவிக்கொண்டே இருக்கிறோம்.

 

ஓர் இலக்கியத்தில் எப்போதோ சொல்லப்பட்ட ஒன்றை இப்போது மனிதகுலம் முழுவது செய்துகொண்டே இருக்கிறது. இரண்டுக்கும் சம்பந்தம் இல்லையென்று நீங்கள் சொல்லலாம். என்னைப் பொருத்த வரைக்கும் சம்பந்தம் இருக்கிறது. நான் அப்படித்தான் பொருத்திப் பார்க்கிறேன். அதுதான் ஓர் எழுத்தாளனாகவும் வாசகனாகவும் எனக்கிருக்கும் பெரிய வரம்!

 

இந்த உலகத்தில் இருக்கும் வெவ்வேறு காலகட்டங்களில் சொல்லப்பட்ட வாக்கியங்கள்அவை நம்முடைய புனித நூல்களில் சொல்லப்பட்டனவாக இருக்கலாம்நம்முடைய பண்டை இலக்கியங்களில் சொல்லப்பட்டனவாக இருக்கலாம்எல்லாமே இந்த நிமிஷம்இந்தத் தேதியில்நாம் வாழுகிற வாழ்க்கைக்கு அர்த்தத்தைக் கொடுக்ககூடியனவாக இருக்கின்றன. அது ஒரு திறப்பைக் கொடுக்கக்கூடிய ஒன்றாக இருக்கின்றன.

 

நான் தனியாக இல்லை. மகத்தான ஆசிரியர்கள் என்னோடு இருக்கிறார்கள். அவர்கள் ஏற்றிவைத்த விளக்கு என் வீட்டில் எப்போதும் எரிந்துகொண்டே இருக்கிறது. அந்த மெழுகுவர்த்தி ஒரு நாளும் அணைவதே இல்லை. ஒரு விளக்கு அணைந்தால் இன்னொரு விளக்கு எரிய ஆரம்பித்துவிடுகிறது.

 

நான் என்னுடைய 13-வது வயதில் இருந்து வாசித்துக்கொண்டேதான் இருக்கிறேன். எனக்கு எவ்வளவு வெளிச்சம் இருந்தாலும் போதவில்லை. அவ்வளவு இருள் என் வாழ்க்கையில்என் மனதில்இருக்கிறது.

வாழ்க்கை என்பது சங்கடங்கள் நிரம்பிய ஒன்று. வாழ்வதைப் போல சங்கடமான விஷயம் வேறு எதுவுமே இல்லை. எந்த வயதில் யோசித்தாலும் நாம் ரொம்ப வருஷம் இந்த உலகத்தில் இருந்துவிட்டோமோ என்று சோர்வாக இருக்கிறது. ஆனால்கூட இன்னும் கொஞ்சம் அந்த வெளிச்சத்தை நாம் நம் கைகளில் ஏந்திக் கொள்வதற்காகவே நாம் வாழ்கிறோம்.

 

யோசித்துப் பாருங்கள் காதலின் ஓர் அற்புதமான தருணத்தில் ஒரு பெண்ணின் முகத்தைப் பார்த்துக்கொண்டே இருக்கும்போது எனக்கு ஒரு கவிதை வரி ஞாபகம் வந்ததென்றால் நான் ஒரு வாசகன் என்பது உறுதியாகிவிட்டது.

 

எனக்கு அந்தக் கவிதை வரி இல்லையென்றால் அந்த முகத்தைப் பற்றிச் சொல்வதற்கு, அந்தக் கண்களைப் பற்றிச் சொல்வதற்கு எதுவுமே கிடையாது. எதுவும் இல்லாமலே ஆகிவிடும். நான் வெறும் நிராயுதபாணியாக நின்றுவிடுவேன். இப்போது என்னை முழுமையடையச் செய்வதற்குக் காரணம் இந்த வாசிப்பு, இந்த இலக்கியம், இந்த சொற்கள் எல்லாமே!

 

வாசிப்பில்லாத மனிதர்கள் ஒரு மிகப் பெரிய அனுபவத்தை இழக்கிறார்கள். உங்களிடம் ஒரு வைரக் கல்லைக் கொடுத்தால்கூட, எது வைரம் என்ற கான்ஸெப்ட் உங்கள் மனதில் இருந்தால்தான் நீங்கள் அந்த வரைத்தை வைரமாக உணரமுடியும். அது கண்ணாடிக் கல்லா, வைரமா என்பது உங்களுக்கு எப்படித் தெரியும்? நிறைய பேர் வைரத்தைக் கண்ணாடிக் கல் என்று தூக்கி எறிந்துவிடுகிறார்கள். கண்ணாடிக் கற்களை வைரங்களாக வைத்திருக்கும் மனிதர்களும் இருகிறார்கள். ஏன்? எது கண்ணாடி, எது வைரம் என்பதை எது உங்களுக்குச் சொல்லித்தரும்?

 

நீங்கள் வைரத்தை எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா? இல்லையே! இப்படி வாழ்க்கையில் நமக்குக் கிடைத்த எத்தனையோ வைரங்களை நாம் தொலைத்திருக்கிறோம். காரணம் அவற்றைக் காண்பதற்கான கண்கள் நம்மிடம் இருந்ததில்லை; பார்வை நம்மிடம் இருந்ததில்லை. எத்தனை உறவுகளை நாம் போகிறபோக்கில் தொலைத்திருக்கிறோம்!

 

கொஞ்ச காலம் கழித்துத்தான் உங்களுக்குத் தெரியும் எவ்வளவு மகத்தான உறவுகளாக அவை நமக்கு இருந்திருக்கும் என்று! நம்முடைய அகங்காரத்தின் காரணமாகநம்முடைய ஈகோவின் காரணமாகசின்னச் சின்னப் பிரச்னைகளுக்காக, அல்லது சின்னச் சின்ன வருத்தங்களுக்காக போகிற போக்கில் தூக்கி எறிந்துவிட்டுப் போயிருப்போம்.

 

அப்புறம் ஒரு நாள் யோசிக்கும்போதுதான் நாம் யாரை இழந்தோம் என்பது நமக்கு நினைவுக்கு வரும். அந்த வைரக் கற்கள் எங்கே போயின என்பதே நமக்குத் தெரியாது. நம்மைவிட்டு ரொம்ப தூரத்தில் இருக்கும். அப்படியானால் வைரத்தை அடையாளம் காண்பதற்கு இலக்கியம் தேவைப்படுகிறது.

 

இன்னும் சொல்லப் போனால் நம்முடைய வாழ்க்கையில் இருக்கும் மிகச் சிறந்த நறுமணங்கள், சொற்கள் எல்லாமே நம்மை முழுமையடையச் செய்யக் கூடிய ஒரு பார்வையை நமக்குத் தருகின்றன. அதுதான் எனக்கு வாசிப்பின் மூலமாகக் கிடைத்த ஒரு விஷயமாக நான் நினைக்கிறேன்.

 

நாம் நேருக்கு நேராக இருந்தல்கூடப் பரவாயில்லை. நான் தொலைவில் இருக்கும் ஒரு நபராகப் பேசிக்கொண்டே இருப்பதும், அதை நீங்கள் கேட்டுக்கொண்டே இருப்பதும் உங்களுக்குச் சோர்வு அளிக்கக்கூடிய விஷயமாக இருக்குமா என்று எனக்குத் தெரியவில்லை.

 

நீங்கள் ஏதாவது ஒன்றிரண்டு கேள்விகளைக் கேட்டால்அவை நான் பேசிய விஷயங்களை ஒட்டிக்கூட இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லைஅது உங்கள் மனதில் இருக்கக்கூடிய கேள்வியாகக்கூட இருக்கலாம்அவற்றை நீங்கள் கேட்கிற பட்சத்தில் நாம் அதிலிருந்துகூட இந்த உரையாடலை இன்னும் சற்று நேரம் நீடிக்கலாம் என்று நினைக்கிறேன். எதைப் பற்றி வேண்டுமானாலும் நீங்கள் கேட்கலாம்

நன்றி. வணக்கம்.

 

-          மனுஷ்ய புத்திரன், கவிஞர்