> குருத்து: விஜி அம்மாவிற்கு அஞ்சலி!

March 13, 2022

விஜி அம்மாவிற்கு அஞ்சலி!



கடந்த வாரம் மதுரையிலிருந்து தோழர் இராஜேந்திரன் தொலைபேசியில் அழைத்தார். திருப்பூர் தாய்த்தமிழ்ப் பள்ளியை நடத்திவரும் தோழர் தங்கராசு அவர்களின் துணைவியார் விஜயலட்சுமி உடல்நலமில்லாமல் கடந்த பொங்கலை ஒட்டி, இறந்த தகவலை சொன்ன பொழுது, அதிர்ந்து போனேன். அன்பானவர்கள், நம்முடைய பிரியத்துக்குரியமானவர்கள் எல்லோரும் பல ஆண்டுகள் வாழ்வார்கள் என அப்பாவியாய் நம்புகிறோம். ஆனால், காலம் கருணையற்றதாக இருக்கிறது. அப்படி அனுமதிப்பதில்லை.


திருப்பூரில் இருந்த அந்த ஒரு ஆண்டு நினைவுகள் மெலெழும்புகின்றன. ஆண்டுகள் பல கடந்ததால். திருப்பூர் நகரத்தின் நினைவுகள் என் நினைவில் இருந்து, மெல்ல மெல்ல மங்கிவருகின்றன. ஆனால், தாய்த்தமிழ் பள்ளியின் நினைவுகளும், அங்கு பழகிய மனிதர்கள் மட்டும் இன்னும் நினைவில் பசுமையாக இருக்கிறார்கள். விஜியம்மா இன்னும் பசுமையாக இருக்கிறார்.

1998ல் இளநிலை வணிகவியல் படித்துவிட்டு, மதுரையில் ஏதும் பொருத்தமான வேலை அமையாமல் வேலை தேடிக்கொண்டிருந்த காலம். வெளியூர் போகலாமா? தலைநகருக்கு போகலாமா? என யோசித்துக்கொண்டிருக்கும் பொழுது, தோழர் இராஜேந்திரன் திருப்பூரில் தாய்த்தமிழ்ப் பள்ளி நடத்தி வரும் தோழர் தங்கராசு இருக்கிறார் என நம்பிக்கை தந்தார்.

தமிழகம் தழுவிய அளவில் ஆங்காங்கே தமிழ் மீதான பற்றால், தாய்த்தமிழ் பள்ளிகள் துவங்கப்பட்டு கொண்டிருந்த நேரம். திருப்பூரில் சிறப்பாக நடத்திவருகிறார்கள் என தோழர்கள் வழியாக கேள்விப்பட்டிருந்தேன். சுபயோகம், சுப தினம் என்றெல்லாம் எதுவும் பார்க்காமல், ஒரு விடிகாலையில் அங்கு போய் சேர்ந்தேன்.

தோழர் தங்கராசு, விஜி அம்மா, ஜீவா, தமிழினி என அளவான, அழகான குடும்பம். அந்த குடும்பத்தின் உறுப்பினராக என்னையும் ஒருவனாக எளிதில் ஏற்றுக்கொண்டார்கள். தோழர் தங்கராசு தொழிலாளியாக இருந்து, சிபிஐ அமைப்பில் தொழிற்சங்க செயற்பாட்டாளராக இருந்து தான் பிறகு தான் பள்ளி ஆரம்பித்தார் என கேள்விப்பட்டிருந்தேன்.

அந்த ஓராண்டில் அருகில் இருந்து பள்ளியை பார்த்ததில், தாய்த்தமிழ் பள்ளியை ஆசிரியர்கள், மாணவிகளின் பெற்றோர்கள், பள்ளியின் மீது அளவில்லா பற்றுக்கொண்டவர்கள், தமிழ் பற்றாளர்கள் என பலரும் அந்த பள்ளியை ஊர் கூடி தேர் இழுப்பது போல இழுத்து சென்றார்கள் என்றால், தங்கராசு குடும்பம் அதன் அச்சாணியாய் இருந்தார்கள் என்பேன். காலை எழுந்ததிலிருந்து இரவு தூங்கும் வரை பள்ளியை நடத்துவதிலும், அதன் வளர்ச்சியைப் பற்றி சிந்திப்பதிலும், உழைப்பிலும் முதன்மையானவராய் இருந்தாலும், எல்லா ஆசிரியர்களும் சம்பளம் பெற்றுக்கொண்ட பிறகு தான் ஊதியமாய் பெற்றதை வைத்துத்தான் குடும்பத்தை நடத்தினார். அதே போல தான் விஜி அம்மாவும்! வீட்டில் தேவையான வேலைகளை எல்லாம் செய்துவிட்டு, பள்ளியில் குழந்தைகளை கவனித்துக்கொள்ளும் பணியையும் செய்து வந்தார்.

அந்த வீட்டில், அவர்களோடு வாழ்ந்ததால், உணவு, மருத்துவம் என அடிப்படைத் தேவைகளுக்கு கூட அந்த குடும்பத்தில் பற்றாக்குறை இருப்பதை தெரிந்துகொள்ள முடிந்தது. சில நூறு பிள்ளைகள் படிக்கும் பள்ளியை இயக்குவது என்பது எளிதான பணியல்ல! ஆனால், எடுத்துக்கொண்ட பணி பெரிது என்பதால், வறுமையை மகிழ்ச்சியாய் ஏற்றுக்கொண்டிருந்தார்கள். தமிழினி சிறியவள். அதே பள்ளியில் படித்துக்கொண்டிருந்தாள். ஜீவா கல்லூரியில் நுழையும் பதின்ம வயதில் இருந்தான். ஒரு குடும்பத்து தலைவன் தான் கொண்ட கொள்கைக்காக கடினமான பாதையை தேர்ந்தெடுக்கலாம். குடும்பத்து உறுப்பினர்கள் அந்த வழியை ஏற்றுக்கொண்டார்கள் என்றால் அந்த மனிதன் தன் குடும்பத்தையும் அதன் வழியில் பண்படுத்தியிருக்கிறான் அல்லது அந்த குடும்ப உறுப்பினர்கள் பண்பட்டு இருக்கிறார்கள் என்று தான் புரிந்துகொள்கிறேன்.

தங்கராசு தோழர் ஆழ்கடலை போல அமைதியானவர். எல்லா துன்பங்களையும், நெருக்கடிகளையும் தனக்குள்ளேயே ஒளித்து வைத்துக்கொள்வார். தேவைக்கு மட்டும் பேசுவார். விஜி அம்மா அவருக்கு நேர் எதிர். கலகலப்பானவர். மதுரையில் தூக்கத்திலிருந்து எழுப்புவதை “உசுப்புவது” என்போம். அதை ஒருமுறை நான் சொன்னதும், விஜி அம்மா விழுந்து விழுந்து சிரித்தது இன்னும் நினைவில் இருக்கிறது. வெள்ளந்தியான மனுசிகளால் மட்டுமே அப்படி சிரிக்கமுடியும். திருப்பூர் வட்டார தமிழில், என் பெயரை வித்தியாசமாக அழைப்பது இன்னும் காதில் ஒலித்துக்கொண்டு தான் இருக்கிறது.

நான் அங்கிருந்த காலத்தில், பள்ளி கூரை கட்டிடமாக இருந்தது. அதன் பிறகு, கட்டிடத்திற்கு மாறியது. இப்பொழுதும் தோழர் தங்கராசு குடும்பம் பள்ளிக்காக தங்களை அர்ப்பணித்துக்கொண்டு உழைக்கிறார்கள். அப்பொழுது இருந்த நிதி பற்றாக்குறை போன்ற பிரச்சனைகளுடன் தான் பள்ளி இப்பொழுதும் பயணிக்கிறது என்பதை தோழர்கள் வழியாக கேள்விப்படுகிறேன். இவை எல்லாம் தங்கராசு தோழருக்கு இத்தனை ஆண்டுகளாய் நீடிப்பதால், வழக்கமான ஒன்றாக பழகி போயிருக்கலாம். ஆனால், விஜி அம்மா இவ்வளவு காலமும் அவருக்கு உறுதுணையாக இருந்துவந்திருக்கிறார். இப்பொழுது விஜி அம்மா இல்லை எனும் பொழுது, தோழர் தங்கராசு தோழருக்கு என்ன சொல்லி ஆறுதல் சொல்வது என்பது திகைப்பாக இருக்கிறது.,

மாயக்கதைகளில் வருவது போல ஒரு பறவைக்குள் உயிரை ஒளித்து வைத்திருப்பதாக சொல்வார்கள்! அது போல பள்ளிக் கட்டிடத்தின் உறுதியில், பிள்ளைகளின் தமிழில், வளர்ச்சியில் விஜி அம்மாவின் உயிரும் கலந்திருக்கிறது. இன்றைக்கும் ஒரு பட்டாம்பூச்சியை போல அந்த பள்ளியைத் தான் சுற்றி வந்துகொண்டிருப்பார். நம்மை எல்லாம் பார்த்துக்கொண்டு தான் இருப்பார்.

அவரை இழந்து வாடும் தோழர் தங்கராசு குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

0 பின்னூட்டங்கள்: