> குருத்து: சில நேரங்களில் சில மனிதர்கள் (2022)

March 21, 2022

சில நேரங்களில் சில மனிதர்கள் (2022)


செல்போன் கடையில் விற்பனை பிரதிநிதியாக நாயகன். தன்னுடன் வேலை செய்யும் பெண்ணையே காதலித்து, திருமணமும் நிச்சயித்து இருக்கிறார்கள். நாயகன் அப்பா மீது அன்புடன் இருந்தாலும், கடிந்து, கடிந்து தான் அணுகுகிறார். அப்பா மகனை புரிந்துகொண்டு, நடந்துகொள்கிறார்.


நிறைய நாட்கள் இருக்கின்றன. அதனால் பிறகு கொடுக்கலாம் என்று சொன்ன மகனின் பேச்சை மீறி, நல்லநாள் என்பதால், பத்திரிக்கைகளை கொடுக்க கிளம்புகிறார். அன்று இரவு வீடு திரும்பும் பொழுது, சாலையில் விபத்து ஏற்பட்டு இறந்துவிடுகிறார்.

இன்னும் சில நாளில் அமெரிக்காவிற்கு வேலைக்கு செல்லும் கணிப்பொறி இன்ஜினியர்… எப்பொழுதும் பகட்டாக பேசுகிறார். நடந்தும் கொள்கிறார். அவரோடு முரண்படும் அவருடைய மனைவி.

தமிழ் திரையுலகில் செண்டிமென்ட் இயக்குநர் என புகழ்பெற்ற இயக்குநர் அவர். அப்பா வழியில் இல்லாமல் வெளிநாட்டில் படித்துவிட்டு, புதிய முறை சினிமா எடுக்க முனையும் மகன். அதனால் இரண்டு பேரும் முரண்படுகிறார்கள்.

ஒரு பெரிய ஓய்வு விடுதியில் (Resort) ஹவுஸ் கீப்பிங் வேலை செய்யும் ஒரு இளைஞன். அடுத்தடுத்து மேலே செல்ல முயலும் பொழுது கிடைக்கும் தோல்விகளால் மனம் வெதும்பும் ஒரு பாத்திரம்.

அந்த சாலை விபத்தில் இவர்கள் அனைவரும் ஏதோ வகையில் சம்பந்தப்படுகிறார்கள். அந்த சாவு அவர்களின் வாழ்வினை எந்த அளவிற்கு பாதிக்கிறது என்பதை அழுத்தமாக பதிந்திருக்கிறார்கள்.

***

செய்தித்தாள்களில் தினசரி விபத்து செய்திகளைப் பார்த்து எளிதாய் கடந்துபோகிறோம். சாகின்ற ஒவ்வொரு மனிதனுக்கு பின்னாலும் இப்படி நிறைய கதைகள் இருக்கத்தான் செய்கின்றன. ஒரு கதையை எடுத்துக்கொண்டு மனித உணர்வுகளை வெளிப்படுத்தியதற்கு இயக்குநரைப் பாராட்டுவோம்.

ஒரு விபத்தோ, ஒரு உலுக்கும் சம்பவமோ சம்பந்தப்பட்டவர்களிடம் அழுத்தமாக சில உணர்வுகளை தூண்டிவிடும். படத்தில் காண்பிப்பது போல அது ஆழப் பாதித்து, யூடர்ன் எல்லாம் மனிதர்கள் இயல்பாக எடுத்துவிடுவதில்லை. (விதி விலக்குகள் இருக்கலாம்) சில தீர்மானங்களை எடுப்பார்கள். மெல்ல மெல்ல மங்கும். சில நாட்களிலேயே தன் இயல்புக்கு மாறிவிடுவார்கள். இவ்வளவு காலம் மனிதர்களை உற்றுப் பார்த்ததில் நான் கற்றுக்கொண்ட விசயங்களில் இதுவும் ஒன்று.

அதே போல, ஒரு வேலையில் உள்ள அலுப்பு, சலிப்பு என்பதை கோட்பாட்டு அளவில் சொன்னால் “அந்நியமாதல்” எனலாம். பெரும்பாலான மனிதர்களிடம் சில சமயங்களிலோ அல்லது தொடர்ச்சியாகவோ இது வெளிப்படும். அவர்களது உழைப்புக்கு கிடைக்கும் தொகை என்பது, உயிர் வாழ்வதற்கு தான் தரப்படுகிறது. ஒரு நல்ல வாழ்க்கை வாழ்வதற்கான ஊதியம் கிடைப்பதில்லை. அதைப் பெற்றுக்கொண்டு, வேலையை எல்லாம் ரசித்து செய்துவிட முடியாது. ஆனால், உழைப்பின் பலனோ அல்லது அதைவிட பன்மடங்கோ திரும்ப கிடைப்பவர்களான ஒரு சிறு முதலாளியோ, பெரு முதலாளியோ எப்பொழுதும் உற்சாகமாக இருப்பார்கள். இது ஒரு சமூகப் பிரச்சனை. முதலில் இதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

படத்தில் இப்படி இன்னும் நிறைய பேசலாம். நீண்டு போவதால், இத்துடன் நிறுத்திக்கொள்வோம். மற்றபடி, அப்பாவாக வரும் நாசர், நாயகன் அசோக் செல்வன், புதிய முகமான நாயகி, ஜெய்பீம் மணிகண்டன் (வசனமும் இவர் தான்), ரித்விகா என நிறைய பழகிய முகங்கள். எல்லோருமே சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

படம் Zee5ல் இருக்கிறது. பாருங்கள்.

0 பின்னூட்டங்கள்: