> குருத்து: September 2022

September 24, 2022

ஸ்விக்கி ஊழியர்களின் நியாயமான போராட்டம் வெல்லட்டும்!



லட்சக்கணக்கில் வேலை செய்யும் இந்த தொழிலாளர்கள் கிக் பொருளாதாரத்தில் இந்த நிலைக்கு தள்ளப்பட்டவர்கள். இவ்வளவு பேருடைய வாழ்க்கையையும் தொழிலாளர் நலச்சட்டங்கள் வழியாக பாதுகாக்க வேண்டிய ஒன்றிய அரசு வேடிக்கைப் பார்க்கிறது.

****

கடந்த திங்கள்கிழமை துவங்கி தலைநகர் சென்னையில் ஸ்விக்கி ஊழியர்கள் தங்களது ஊதியம் கடுமையாக குறைக்கப்படுவதை எதிர்த்து போராடிவருகின்றனர். இந்த ஊதிய குறைப்பை மற்ற மாவட்டங்களுக்கும் ஸ்விக்கி அடுத்தடுத்து அமுல்படுத்தும் என்பதால், மற்ற மாவட்டங்களிலும் உள்ள ஸ்விக்கி ஊழியர்கள் போராட துவங்கியுள்ளனர்.

பைக், செல்போன், ஸ்விக்கி ஆப்பில் வரும் இங்கிலீசை வாசிக்க தெரியும் அளவிற்கு படிப்பு இருந்தால் வேலைக்கு ஆட்களை எடுத்துக்கொள்கிறார்கள். தொழிலாளர்களுக்கென எந்தவித அலுவலகமும் இல்லை. தெருவோரம் உள்ள மரத்தடிகளில் காத்திருக்கிறார்கள். வாடிக்கையாளரிடமிருந்து ஆர்டர் வந்ததும், வில்லிருந்து கிளம்பும் அம்பு போல கிளம்புகிறார்கள். ஆர்டர் அனுப்பியதும் 30 நிமிடங்களுக்குள் விநியோகிக்கவேண்டும் என்பது விதியாக இருக்கிறது. இதில் சூடாக (Hot), குளிர்ச்சியாக (Cool), காரமாக (Spicy), கூடுதலாக சட்னி, சாம்பார் வேண்டும் என வாடிக்கையாளர்களின் கூடுதல் கட்டளைகளும் உண்டு.

உணவகத்தில் எத்தனை கூட்டம் இருந்தாலும், அங்கு வேகப்படுத்தி வாங்கிக்கொண்டு போய், வாடிக்கையாளர் இடத்தை வேகமாக அடைந்து விநியோகிக்கிறார்கள். இதில் உணவகங்களில் தாமதம், சில்லறை தட்டுப்பாடு, சாப்பாடு பொருளை ஒவ்வொன்றாக பொறுமையாக சோதிப்பது, மனிதர்களை கையாள்வது போல இல்லாமல் ஒரு எந்திரத்தை கையாள்வது போல நடத்துவது என பல பிரச்சனைகளை தினந்தோறும் எதிர்கொள்கிறார்கள். தலைநகர் சென்னையில் போக்குவரத்து நெரிசல் என்பது பெரிய பிரச்சனை. இப்படி எல்லா பிரச்சனைகளையும் எதிர்கொண்டு தான் வேலைகளை செய்துவருகிறார்கள்.

இந்த நிலையில் தான் ஸ்விக்கி தன் ஊழியர்களுக்கு தரும் ஊதியத்தை ஏதோவொரு காரணம் சொல்லி குறைத்துக்கொண்டே செல்கிறது. இப்பொழுது நடக்கும் போராட்டம் ஏன் என்பதை ஊழியர்களே விளக்குகிறார்கள்.
ஊதியம் கணக்கிடும் முறை என்பது….

1. ஆர்டர் கட்டணம். (ஒருவர் ஒரு நாளைக்கு எத்தனை ஆர்டர்கள் எடுக்கிறார்களோ, அதற்கு தகுந்த கட்டணம் தருகிறார்கள்.

2. பெட்ரோல் அலவன்ஸ் (ஒரு ஆர்டர் என்பது 3 லிருந்து 4 கிமீ தூரம். கூடுதலாக 6,7 கி.மீ என போகும் பொழுது கொடுக்கப்படும் தொகை)

3. ஊக்கத்தொகை (Incentives) (ஒவ்வொரு நாளும் ஒரு இலக்கு வைக்கிறார்கள். அதை அடைந்தால் தொகை, வாரத்திற்கு இவ்வளவு என இலக்கு அதை அடைந்தால், ஒரு தொகை என தரப்படுவது.)

4. சர்சார்ஜ் தொகை (மழைக்காலங்களில், உணவகத்தில் மிக பிசியான சமயங்களில் வாடிக்கையாளர்களிடம் கூடுதலாக வாங்குவதில் இருந்து தருவது)
காத்திருப்பு கட்டணம் (Waiting Charges) (உணவகத்தில் காத்திருக்கும் நேரத்திற்காக தரும் தொகை)

மாதாந்திர சம்பளம் என எந்த ஊழியருக்கும் தரப்படுவதில்லை. இந்த ஐந்து வகைகளில் தான் கணக்கிட்டு சம்பளமாய் தருகிறார்கள்.

இப்பொழுது ஸ்விக்கி செய்திருக்கிற மாற்றம் என்னவென்றால்…

ஒரு தொழிலாளி மூன்று சிப்டுகளில் வேலை செய்துகொண்டிருந்தார்கள். இப்பொழுது அதை ஐந்து அடுக்குகளாக மாற்றிவிட்டார்கள்.

ஒரு தொழிலாளி 11 மணிக்கு ஸ்விக்கி ஆப்பை உள்ளே நுழைந்தால் (Log in) இரவு 11 மணி வரை, 12 மணி நேரம் வேலை செய்தால், அவர்கள் ஒரு நாளைக்கான இலக்கை அடைந்துவிட முடியும். ஆனால், கட்டணத்தை குறைத்ததன் மூலம் காலை 6 மணிக்கு உள்ளே நுழைந்தால், இரவு 11 மணி வரை வேலை செய்தால் தான் பழைய ஊதியத்தை அடைய முடிகிற அளவிற்கு கொண்டுவந்துவிட்டார்கள். இடையே மதியம் 3 மணிக்கு மேல் ஆர்டர் குறையும் பொழுது, வீட்டிற்கு போய் ஓய்வு எடுக்கமுடியும். இப்பொழுது அப்படி போகமுடியாத படிக்கு செய்கிறார்கள் என புகார் கூறுகிறார்கள்.

முன்பு ஒரு நாளைக்கு ஒரு தொழிலாளிக்கு 25 டெலிவரி தருவார்கள். இப்பொழுது அதை 10 ஆர்டர்களாக குறைத்துவிட்டார்கள். வருகிற ஆர்டர்களை தங்களோடு ஒப்பந்தம் போட்டு இருக்கிற ரேபிடோ (Rapido) போன்ற மற்ற நிறுவனங்களுக்கு தருகிறார்கள். நாங்கள் ஆர்டருக்காக காத்திருக்கும் பொழுது, இப்படி குறைப்பது நியாயமில்லை. என்கிறார்கள்.

முன்பு ஒரு ஆர்டருக்காக ஒரு உணவகத்துக்கு செல்லும் தூரம், அங்கிருந்து வாடிக்கையாளரை அடையும் தூரம் இரண்டையும் கணக்கிட்டு பணம் கொடுத்திருக்கிறார்கள். இப்பொழுது உணவகத்திற்கு செல்லும் தூரத்தை கணக்கில் எடுத்துக்கொள்ளமாட்டோம் என தெரிவிக்கிறார்கள்.

முன்பு வாரம் முழுவதும் வேலை செய்து இலக்கை அடைந்தால், ஊக்கத்தொகையாக ரூ. 1200 தருவார்கள். இப்பொழுது அந்த ஊக்கத்தொகை இல்லை என சொல்கிறார்கள்.

இது தவிர ஒரு ஆர்டரை உணவகத்தில் இருந்து வாடிக்கையாளருக்கு தரும் பொழுது, அந்த வாடிக்கையாளர் அந்த தொழிலாளி செய்த சேவையை மதிப்பிட்டு மதிப்பெண்கள் (Stars) தருகிறார்கள். சில வாடிக்கையாளர்கள் அதை குறைத்து தரும் பொழுது அவர்களுக்கு வாரந்திர ஊக்கத்தொகையை கடுமையாக வெட்டுகிறார்கள். வாடிக்கையாளர்கள் தரும் மதிப்பெண்களை ஸ்விக்கி நிறுவனம் மட்டுமே பார்க்கமுடியும். தொழிலாளியால் காணமுடியாது. இதை வைத்துக்கொண்டு ஸ்விக்கி தங்களது தரும் தொகையை பெரிய அளவில் வெட்டுகிறார்கள் என்கிறார்கள்.

வாடிக்கையாளர்களுக்கு அரை மணி நேரத்தில் உணவை சென்று சேர்க்கவேண்டும் என ஸ்விக்கி ஊழியர்கள் சாலைகளில் குறுக்கும் நெடுக்குமாய் செல்லும் பொழுது, அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. அதற்கு எல்லாம் ஸ்விக்கி பொறுப்பு ஏற்பதில்லை. ஒரு தொழிலாளருக்குரிய அடிப்படையாக தரவேண்டிய இ.எஸ்.ஐ, பி.எப் இரண்டையும் தருவதில்லை.

லட்சக்கணக்கில் வேலை செய்யும் இந்த தொழிலாளர்கள் கிக் பொருளாதாரத்தில் இந்த நிலைக்கு தள்ளப்பட்டவர்கள். இவ்வளவு பேருடைய வாழ்க்கையையும் தொழிலாளர் நலச்சட்டங்கள் வழியாக பாதுகாக்க வேண்டிய ஒன்றிய அரசு வேடிக்கைப் பார்க்கிறது. மாநில அரசும் வேடிக்கை பார்க்க கூடாது. விரைந்து அந்த தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்.

அவர்களுடைய கடுமையான உழைப்புக்கும், பெறும் குறைவான ஊதியத்திற்கும் மிகப்பெரிய ஏற்றத்தாழ்வு இருந்தாலும், ஸ்விக்கி நிறுவனத்திடம் பழைய ஊதிய முறையை அமுல்படுத்து! என என்று தான் கேட்கிறார்கள். அவர்களுடைய நியாயமான கோரிக்கையை மதிக்காமல், ஸ்விக்கி நிறுவனம் ”வேலை செய்தால் செய்! இல்லையெனில் கிளம்பு!” என்கிற ரீதியில் பேசுவதாய் தகவல்கள் வருகிறது.. இது கண்டிக்கத்தக்கது. ஸ்விக்கி ஊழியர்களின் சேவையை பெறும் பொது சமூகமும் ஸ்விக்கியின் இந்த அராஜகப்போக்கை கண்டிக்கவேண்டும். இல்லையெனில், ஸ்விக்கி உண்டாக்கும் ஊதிய நெருக்கடி என்பது தொழிலாளர்களுக்கும், சேவையை பெறும் மக்களுக்குமான உறவை சிக்கலாக்கும்.

இப்பொழுது மட்டுமில்லாமல், ஸ்விக்கி ஊழியர்கள் கடந்த காலத்திலும் ஊதியம் குறித்து போராடியிருக்கிறார்கள். ஆனால் இப்பொழுது ஒரு முன்னேற்றம். தாங்கள் ஒரு சங்கமாக இருக்கிறோம். முன்பு போல எங்களை ஏமாற்ற முடியாது. இந்தமுறை நாங்கள் எங்கள் உரிமைகளை பெற்றேத் தீருவோம் என உறுதியாய் சொல்கிறார்கள்.

தலைநகர் சென்னையில் மட்டும் 9 ஆயிரம் ஊழியர்கள் வேலை செய்கிறார்கள். இவர்கள் தான் கொரானாவால் ஊரடங்கு அமுலில் இருந்த பொழுது, மக்களுக்கு பசித்த பொழுது துணிந்து வந்து சேவை செய்தார்கள். அவர்கள் முன்பும் மக்களுக்காக தெருக்களில் தான் நின்றார்கள். இப்பொழுது போராடும் பொழுதும் தெருவில் இறங்கி தான் போராடுகிறார்கள். சிவில் சமூகம் தான் அவர்களின் நியாயமான கோரிக்கையை ஆதரிக்கவேண்டும். குரல் கொடுக்கவேண்டும்.

September 21, 2022

Ustad Hotel (2012)


“வயித்தை யாரு வேணா நிறைக்கலாம்!

அன்போடு சமைத்தால் தான் மனசையும் நிறைக்கமுடியும்”
***

ஒரு ”ஆண் வாரிசு”க்காக அடுத்தடுத்து நான்கு பெண் குழந்தைகளை பெறுகிறார். ஐந்து குழந்தைகளை பெற்றெடுத்த தாய் அதனாலேயே மரிக்கிறார். குடும்பம் மொத்தமும் கேரளாவில் இருந்து துபாய்க்கு நகர்கிறது.

நான்கு சகோதரிகளுடன் சமையல்கட்டில் வளர்ந்ததாலேயே சமையல் மீது அவனுக்கு ஆர்வம் வந்துவிடுகிறது. பிள்ளை எம்பிஏ படித்து அப்பா ஐந்து நட்சத்திர விடுதி நடத்தவேண்டும் என கனவு காண்க, அவன் வெளிநாடு போய் சமையல் கலை கற்றுவருகிறான். அங்கேயே ஒரு காதலியும் இருக்கிறாள்.

உண்மை தெரியும் பொழுது அப்பா பெருங்கோபம் கொள்கிறார். தற்காலிகமாக தன் அப்பா வழி தாத்தாவிடம் கேரளாவிற்கு வந்து சேர்கிறான். சில குடும்பங்களின் துணையுடன், கோழிக்கோடு கடற்கரையில் மலபார் பிரியாணி கடையை, பெரும் லாப நோக்குடன் இல்லாமல் பெரும் ஈடுபாட்டுடன் நடத்துகிறார். மெல்ல மெல்ல தாத்தாவிடம் நெருங்குகிறான். அருகில் உள்ள நட்சத்திர விடுதி அந்த உணவகம் இருக்கும் இடத்தை விழுங்க பார்க்கிறது.

நாயகன் தன் தாத்தாவுடன் அந்த பிரச்சனையை எப்படி எதிர்கொண்டான் என்பதை உணர்வுபூர்வமாக சொல்லியிருக்கிறார்கள்.

படம் மக்களுக்கு பிடித்து போனதால், பெரிய வெற்றி பெற்றது. மூன்று தேசிய விருதுகளையும் வென்றது. ”பாப்புலர் படம்” என்ற பிரிவில் படத்திற்கும், ”பெங்களூர் டேஸ்” இயக்கிய அஞ்சலிமேனன் கதை, திரைக்கதைக்காக தேசிய விருது பெற்றார். அன்வர் ரசீத் இயக்கியிருக்கிறார். துல்கர் சல்மானின் இரண்டாவது படம் என விக்கி சொல்கிறது. அந்த பாத்திரத்தில் இயல்பாக பொருந்திப்போகிறார். ஜோடியாக வரும் நித்யா சின்ன சின்ன ரியாக்சனில் அசத்துகிறார். தாத்தாவாக வரும் திலகன்
அருமையாக
பொருந்தியிருப்பார். அவருக்கும் ஒரு தேசிய விருது கிடைத்தது.

’யூத்’ படத்தில் ”உலகத்தில் மிகச்சிறந்த குக் யார்?” என ஒரு இன்டர்வியூவில் விஜயிடம் கேட்கும் பொழுது, ”அன்போடு தன் பிள்ளைகளுக்கு சமைக்கிற அம்மா தான்” என பதில் சொல்வார். அது தான் இந்தப் படத்தின் ஒன் லைன். நாயகனிடம் ஒரு கடிதம் தந்து ”அவனுக்கு சமைக்க கத்து கொடுத்திட்டேன். எதுக்காக சமைக்கனும்னு நீ கத்துக்கொடு!’ தனது நண்பரிடம் மதுரைக்கு அனுப்பிவைப்பார். ஒரு பக்கம் வசதி இருப்பதால், ஒவ்வொருநாளும் விதவிதமாய் சாப்பிடுகிற ஆட்கள் இருக்கிறார்கள். இன்னொரு பக்கம் ஒரு பெருங்கூட்டத்தைச் சேர்ந்த மக்கள் அடுத்த வேளைக்கு சாப்பாட்டுக்கு வழியில்லாமல் இருக்கிறார்கள். யாருக்கு சேவை செய்யவேண்டும் என முடிவு செய்யும் கட்டம் இது. நாயகன் அதை சரியாக புரிந்துகொண்டு முடிவெடுப்பான். படத்தில் நேரடியாக எங்கும் ஆலோசனைகள், அறிவுரைகள் இருக்காது. பஞ்ச் டயலாக் கிடையாது. அது தான் படத்தின் வெற்றி.

படம் எந்த ஓடிடியிலும் இப்பொழுது இல்லை. படம் தெலுங்கிலும், தமிழிலும் டப் செய்திருக்கிறார்கள். யூடியூப்பில் தமிழில் கிடைக்கிறது. கன்னடத்தில் திலகன் பாத்திரத்தில் பிரகாஷ்ராஜ் நடிக்க மீண்டும் எடுத்து இருக்கிறார்கள்.

September 13, 2022

Sky Rojo (2021) வெப் சீரிஸ் - மூன்று பெண்களின் போராட்டம்



ஸ்பெயினில் ஒரு இரவு விடுதி. அங்கு நிறைய பெண்களை வைத்து விபச்சார கிளப் நடத்துகிறார்கள். அவர்கள் வேறு வேறு நாடுகளிலிருந்து ஏமாற்றி அழைத்துவரப்பட்டவர்கள். அடியாட்களை வைத்து மிரட்டி நிறைய சம்பாதிக்கிறார்கள்.


ஒருத்தி தன் தாய், தம்பியை காப்பாற்றுவதற்காக ஹோட்டலில் வேலை என ஏமாற்றி கியூபாவிலிருந்து அழைத்துவரப்பட்டவள். இன்னொருவள் லெஸ்பியன். தன் காதலிக்காக இங்கு வந்தவள். இன்னொருவள் போதை அடிமை. அவளுக்கு போதை மருந்து இல்லையென்றால் கிறுக்கு பிடித்துவிடும். ஆகையால் அவள் அங்கு வந்து சேர்கிறாள்.

கியூபாவை சார்ந்தவள் அங்கிருந்து விடுபட்டு, தன் காதலனுடன் வாழ முடிவு செய்து தன்னிடமிருந்த அத்தனை சேமிப்பு பணத்தையும் கொடுக்கும் பொழுது, அந்த முதலாளி இன்னும் நிறைய பணம் கட்டவேண்டும் என சொல்கிறான். எவ்வளவு கொடுத்தாலும் உனக்கு போதாது என கோபமாகி அவனை அவள் அடித்துவிட, அவன் மோசமாக தாக்குகிறான். அங்கு எதைச்சையாக வரும் இன்னும் இரு பெண்களும் அவளை காப்பாற்ற அவனைத் தாக்க, அவன் செத்துவிட்டான் என பயந்து, மூவரும் அங்கிருந்து தப்பிக்கிறார்கள்.

சிக்கலாகிவிடும். திரும்பி போய் மன்னிப்பு கேட்கலாம் என மூவரும் பேசி மீண்டும் க்ளப்புக்கு போனால், தற்செயலாக கோரமான விபத்து ஒன்றும் ஆகிவிடுகிறது. தப்பிக்கிறார்கள். க்ளப்பின் அடியாட்கள் அவர்களை துரத்த, இவர்களுக்குள் நடக்கும் டாம் Vs ஜெர்ரி விளையாட்டுத்தான் முழுவதுமே!
****

உலகம் முழுவதும் போதை பொருளும், விபச்சாரமும் பரந்து விரிந்து இருக்கிறது. அதன் மூலம் ஒரு பெரிய ”வருமானம்” வருவதால், முதலாளித்துவ அரசுகள் கண்டுகொள்வதில்லை. பெண்களின் சதையை வைத்து, பெண்களை வதைத்து இப்படி விபச்சார விடுதிகள் இயங்குகிறதே என்கிற எந்த கூச்சமும் இல்லை. நாய் விற்ற காசு குலைக்காது தானே என்பது போல நடந்துகொள்கிறார்கள்.

ஐரோப்பாவில் ஸ்பெயின் தான் விபச்சாரத்தின் தலைநகர் என்கிறார்கள். 3,50,000 பேர் ஸ்பெயினில் இருப்பதாக ஒரு ஊடகம் எழுதுகிறது. ஸ்பெயின் அரசும் இந்த பெண்களை காப்பாற்ற என சட்டங்களை இயற்றி இருக்கிறது. அதெல்லாம் வெறும் கண் துடைப்பு தான்.

இந்தப் படமும் பெண்களின் பிரச்சனைகளை பேசுகிற படமும் இல்லை. அதை வைத்து கல்லா கட்டுகிற படமாக தான் இருக்கிறது என புகழ்பெற்ற “கார்டியன்” இதழ் சொல்வது சரி தான்.

ஒரு பெண் ஹோட்டலில் வேலை என ஏமாற்றி அழைத்துவரப்படுவாள். மேலே சொன்ன பிரச்சனையில் வெளியே வந்து அவள் அம்மாவிடம் பேசுவாள். ”எங்களுக்கு மாதமானால் சரியாக பணம் வந்துவிடுகிறது. உன் தம்பி படிக்கிறான். நானும் நல்லா இருக்கேன்.”. என்கிறாள் தாய். “அது ஒரு விபச்சார விடுதி. மாட்டிக்கொண்டேன். இப்பொழுது அங்கிருந்து தப்பித்துவிட்டேன்” என்பாள். அதற்கு அந்த தாய் “மீண்டும் அங்கேயே போய்விடு!” என்பாள். அவள் நொந்துபோவாள்.

சீரிசில் வருகிற ஒவ்வொரு கதாப்பாத்திரமும் நன்றாக செய்திருக்கிறார்கள். படம் போகிற போக்கிலேயே, பிளாஷ்பேக் காட்சிகள் வந்து வந்து போகும்.

கிளப் நடத்துகிறவர்கள் VS மூன்று பெண்கள் – இவர்களுக்குள் நடக்கும் டாம் & ஜெர்ரி சண்டை தான் படம். அதை சுவாரசியமாக எடுக்க முயன்றிருக்கிறார்கள்.

வாய்ப்புள்ளவர்கள் பாருங்கள். கிளப், விபச்சாரம் என கதை நகர்வதால் சில அடல்ட் காட்சிகள் உண்டு. நெட் பிளிக்சில் இருக்கிறது. இங்கிலீஷ் சப் டைட்டில்களுடன் பார்க்கலாம்.

2021ல் முதல் சீசன் மார்ச்சில் வந்தது. எட்டு அத்தியாங்கள். ஒவ்வொன்றும் 25 நிமிடங்கள். முதல் சீசனின் வெற்றியில் இரண்டாவது சீசனும் கடந்த ஆண்டு ஜூலையில் வெளியாகியிருக்கிறது. அதையும் பார்க்கவேண்டும்.

Delhi crime –சீசன் 2 சில கொலைகளும், விசாரணையும்


தலைநகர் தொகுப்பு வீடுகளில் (Gated Community) வசதியான வயதான தம்பதிகள் வீடாக பார்த்து, உள்ளே புகுந்து கொள்ளையடிக்கிறார்கள். சுத்தியலால் அடித்தே கொடூரமாக கொலையும் செய்கிறார்கள். அடுத்தடுத்து நடக்கும் கொலைகளால், தலைநகர் பதட்டமாகிறது.


இந்த வழக்கு DCP வர்த்திகா தன் குழுவுடன் விசாரணையை துவங்குகிறார். டவுசர் அணிந்து வருவது, சுத்தியல், கோடாரி போன்ற ஆயுதங்களை கொலை செய்ய பயன்படுத்துவது; தன் உடலில் ஆயிலை தடவிக்கொண்டு வருவது, – இவைகள் எல்லாம் சில ஆண்டுகளுக்கு முன்பு கச்சா பனியன் ஆட்கள் தான் இப்படி செய்வார்கள். ஆனால் அவர்கள் எந்த தடயத்தையும் விட்டுவிட்டு செல்வதில்லை. இவர்கள் சிசிடிவிக்களை சேதப்படுத்தவில்லை.

தில்லியில் வசிக்கும் கச்சா பனியன் ஆட்களை எல்லாம் அள்ளிப்போட்டுக்கொண்டு விசாரணையை துவக்குகிறார்கள். அதில் இருவர் கொலை நடந்த பகுதியில் நோட்டம் விட்டது சிசிடி மூலம் தெரியவருகிறது. அவர்களும் நீதிபதிகளிடம் அழைத்து செல்லும் பொழுது தப்பிவிடுகிறார்கள். கிடைத்தவர்களையும் தில்லி போலீசு கோட்டை விட்டுவிட்டது என கடுமையாக விமர்சனம் செய்கிறார்கள்.

ஒரு சமயத்தில் திடீரென வழக்கில் ஒரு ட்விஸ்ட் வருகிறது. பிறகு கொலையாளிகளை பிடித்தார்களா என்பதை சொல்லியிருக்கிறார்கள்.
**

முதல் சீசனில் தில்லியில் முக்கிய வழக்கான நிர்பயா வழக்கை எடுத்திருப்பார்கள். அதன் தொடர்ச்சியாக இந்த சீசன் இருக்கும் என நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால், அடுத்த கொலை வழக்கை கையில் எடுத்துவிட்டார்கள்.

இந்த கொலை வழக்கில் கச்சா பனியன் ஆட்கள் இருக்கிறார்கள் என தெரிந்ததுமே, பழைய வழக்கை விசாரித்த ஒரு இன்ஸ்பெக்டரை அழைத்து வருகிறார்கள். அந்த ஆள் பயங்கர லஞ்ச பேர்வழி. தன் வீட்டை பெரிய அரண்மனையை போல கட்டி வைத்திருக்கிறான். அந்த பழங்குடி சமூகத்தில் இருக்கும் சிறியவர்கள் என எல்லோரையும் பிறந்ததில் இருந்தே குற்றவாளி என வெறுப்பை கக்குகிறான். எல்லோரையும் ஸ்டேசனுக்கு கொண்டு செல்கிறார்கள். இப்படி அழைத்து சென்ற செய்தி ஊடகத்தின் மூலம் மக்களுக்கு தெரிந்து, அந்த பழங்குடி சமூகத்து ஆட்கள் எல்லாம் எங்கெல்லாம் வேலை செய்கிறார்களோ அங்கெல்லாம் வேலையில் இருந்து தூக்கப்படுகிறார்கள். ரூ.15000 கொடுத்தால், சந்தேக பட்டியலில் இருந்து தூக்கிவிடுகிறேன் என சொல்லி, அந்த மக்களிடம் இருந்து பணத்தை கறக்கிறான். DCPக்கு தெரியவந்து, அந்த ஆளை துரத்திவிடுகிறார். போலீசின் அதிகாரம் எப்படியெல்லாம் மக்களை அலைக்கழிக்கிறது என்பதை புரிந்துகொள்ளமுடியும்.

முதல் சீசனைப் போலவே, இந்த் சீரிசும் போலீசின் பார்வையிலேயே எடுக்கப்பட்டுள்ளது. போலீசின் குடும்ப பிரச்சனைகள், தில்லியில் போலீஸ் எண்ணிக்கை குறைபாடு என ஆங்காங்கே தூவி சொல்லியிருக்கிறார்கள்.

படத்தில் நடித்த எல்லோரும் இயல்பாக நடித்திருக்கிறார்கள். மற்ற கற்பனை படங்களை விட, நடந்த உண்மைகளின் அடிப்படையில் இது கவனம் பெறுகிறது. கொலை, விசாரணை படங்களில் ஆர்வமுள்ளவர்கள் பாருங்கள். நெட் பிளிக்சில் நல்ல தமிழ் டப்பிங்கில் கிடைக்கிறது.

சீசன் 2 – 5 அத்தியாயங்கள்
ஒரு எபிசோட் 35 லிருந்து 55 நிமிடங்களை வரை எடுத்திருக்கிறார்கள்.

September 11, 2022

"சாப்பாட்டுக்கு நம்மளை நம்பி தான் இருக்கீங்க! லீவு போட்டா கஷ்டப்படுவீங்களே!"


நீயா நானாவில் சமீபத்தில் ..வீட்டில் வேலை செய்யும் பணியாளர்கள், வேலை தரும் ஆட்கள் என விவாதித்தார்கள்.


இது தொடர்பாக அலுவலுகத்தில் ஒருவருடன் பேச்சு வந்தது.

அவர் வீட்டில் புதிதாக வேலைக்கு ஒருவர் கடந்த ஒரு மாதமாக வந்து கொண்டு இருக்கிறார்.

கணவர் வீட்டு வேலை அம்மாவிற்கு வாரம் ஒருநாள் விடுமுறை தரவேண்டும் என்கிறார். துணைவியாரோ அப்படி அவர் கேட்டால் கொடுக்கலாம். நாமாக சொல்லவேண்டாம் என்கிறார்.

அது சரியில்லை. அவர் கேட்காமல் இருப்பதற்காக நாம் கொடுக்காமல் இருப்பது சரியில்லை. அவங்களுக்கு குடும்பம் இருக்கு. அவங்களுக்கு ஓய்வு தேவை என சொன்னதும்... "அவங்க வராத ஒரு நாள் நீங்க சமைக்கிறீங்களா?" என சொல்லி வாயடைக்க பார்த்திருக்கிறார்.

"ஞாயிறு விடுமுறை வேண்டாம் என்றால்... செவ்வாயோ, வியாழனோ வார விடுமுறை எடுத்துக்கொள்ள சொல்லலாம். கடந்தமுறை வேலை செய்த அம்மா ஊருக்கு செல்லும் பொழுது மொத்தமாக எடுப்பார்களே! அப்படியாவது எடுத்துக்கொள்ளட்டும்" என சொன்ன பொழுது யோசித்து சொல்கிறேன் என சொல்லியிருக்கிறார்.

சமூக வலைத்தளங்களில் நீயா நானாவில் நடந்த விவாதம் தொடர்பாக தனிநபர் எழுதியவைகளை எல்லாம் எடுத்து தன் துணைவியாருக்கு அனுப்பிவைத்துள்ளார்.

தன் கணவர் விடமாட்டார் என நினைத்தாரோ என்னவோ, தொடர்ச்சியாக அனுப்பி வைத்த பதிவுகள் வேலை செய்ததோ என்னவோ... விடுமுறை தர ஒப்புக்கொண்டு இருக்கிறார்.

நேற்று காலையில் அந்த அம்மாவிடம் "வாரம் ஒருமுறை விடுமுறை எடுத்துக்கொள்ளுங்கள்" என சொன்னதற்கு...

"நான் வேலை செய்ற எந்த வீட்டிலும் வார விடுமுறை எடுப்பதில்லை. சாப்பாட்டுக்கு நம்மளை நம்பி தான் இருக்காங்க!விடுமுறை எடுத்தா கஷ்டப்படுவங்க! ஏழு நாளும் வர்றேன். ஊருக்கு போகும் பொழுது மட்டும் இரண்டு அல்லது மூன்று நாள் தேவைப்படும். அப்ப எடுத்துக்கிறேன்" என்றாராம்.

"எளிய மக்கள் மனிதாபிமானத்தோடு நடந்துகொள்கிறார்கள். நாம் தாம் அல்பத்தனமா நடந்துகிறோம்" என்றார்.

September 9, 2022

5லட்சம் கோடி மதிப்புள்ள 68,200 கிலோ போதை பொருள் பறிமுதல் ! இந்தியாவை போதையில் ஆழ்த்தி சுரண்டும் கார்ப்பரேட் காவி மோடி கும்பல்!



சசி காந்த், தான் சமர்ப்பித்த அறிக்கையில்"குறிப்பிட்ட நபர்களில் சிலர் பாரதிய ஜனதா மற்றும் அகாலி தளம் கட்சியின் எம்.எல்.ஏக்களாகவும் மந்திரிகளாகவும், போலீசு அதிகாரிகளாகவும் இருந்தார்கள்" என்பதை தெரிவித்துள்ளார்.

****

தமிழகத்தில் போதைப் பொருள் பழக்கம் பரவலாக இருக்கிறது. மாணவர்கள், இளைஞர்கள் என பல தரப்பும் போதை மருந்தால் முன்னெப்போதையும் விட மிக மோசமாக சீரழிகிறார்கள். மற்ற மது போதையை விட இன்னும் ஆபத்தானவையாக இருக்கிறது போதைப் பொருட்கள். பள்ளிகளில், கல்லூரிகளில் சரளமாக கிடைக்கிறது. போதைப் பொருட்கள் விற்கும் கும்பல் மாணவர்களை வைத்தே மாணவர்களிடம் ரகசியமாக விற்பனை செய்கிறது. காசுக்கேற்ப கஞ்சா துவங்கி ஹெராயின் வரை பல்வேறு போதைப் பொருட்கள் சரளமாக கிடைக்கிறது.

ஆகஸ்டு மாதம் போதைப் பொருட்கள் விற்பனையை, கடத்தலை தடுக்கவேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் மாவட்ட ஆட்சியாளர்கள், போலீஸ் அதிகாரிகளை அழைத்து மாநில அளவில் கூட்டம் நடத்தினார்.

இது தொடர்பாக சத்தியம் தொலைக்காட்சி, போதைப் பொருள் எங்கிருந்து வருகிறது? அரசின் நடவடிக்கைகள் என்ன ? என தேடும் பொழுது, கிடைத்த தகவல்கள் அதிர்ச்சி அளித்தன! 2020ல் 15,000 கிலோ போதை பொருட்களும், 2022ல் 50,000 கிலோ போதை பொருட்களும் என மொத்தம் 68,200 கிலோ போதைப் பொருட்களை தடுப்பு பிரிவு பறிமுதல் செய்திருக்கிறது. இந்த செய்தி ஒன்றிய அரசின் போதைப் பொருள் கட்டுப்பாட்டு துறையின் தளத்திலேயே எந்தெந்த மாநிலங்களில், என்னென்ன வகை போதைப் பொருட்களை எவ்வளவு பிடித்தோம் என்கிற நீண்ட பட்டியலை வெளியிட்டிருக்கிறார்கள்.

இதில் மிகப்பெரிய அளவில் சிக்கிமில் பிடித்ததாக பட்டியலில் இருக்கிறது. சத்தியம் தொலைக்காட்சி சிக்கிமின் தலைமை செயலகத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) வழியாக கேட்கும் பொழுது, அப்படி பெரிய அளவில் போதைப் பொருட்கள் எதுவும், சிக்கிம் மாநிலத்தில் பிடிபடவில்லை என பதில் தெரிவித்து இருக்கிறது.

ஆக, பிடிபட்ட போதைப் பொருட்களின் அளவு மிகப்பெரியதாக இருக்கிறது. அதை சோதிக்கும் பொழுது அதில் முரண்பாடுகள் வெளிப்படுகின்றன. 5 லட்சம் கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் பிடிபட்டு இருக்கின்றன என்றால், இந்த செய்தி ஏன் தேசிய அளவில் ஊடகங்கள் பேசு பொருளாக்கவில்லை? நீதிமன்றங்கள் ஏன் கண்டுகொள்ளவில்லை ?என சத்தியம் தொலைக்காட்சி கேள்வி கேட்கிறது. இதில் உள்ள ”அமைதி” தான் போதைப் பொருட்களை விட மிக ஆபத்தானதாக இருக்கிறது.

தமிழகத்தில் கஞ்சா போன்ற போதைப் பொருட்களை கைப்பற்றும் போலீசார். அதை முறையாக அழிக்காமல், சில போலீசார் நல்ல விலைக்கு விற்றுவிடுகிறார்கள் என புகார் எழுப்பப்பட்டு கைதும் செய்யப்பட்டுள்ளார்கள். 68,200 கிலோ போதைப் பொருட்களை இவர்கள் எப்படி அழித்திருப்பார்கள்? அதிகாரிகள் விற்று காசு பார்த்திருக்க மாட்டார்களா? என கேள்வி எழுப்புகிறது சத்தியம் தொலைக்காட்சி. நியாயமான கேள்வி!

சமீபத்தில் கமல் நடிப்பில் வெளிவந்த ’விக்ரம்” படத்தில் காணாமல் போன ஒரு பெரிய அளவு போதைப் பொருளை ஒரு மாபியா கும்பல் வெறிகொண்டு தேடுவார்கள். ஓரிடத்தில் ”அந்த பொருள் மட்டும் அவர்களுக்கு கிடைத்துவிட்டது என்றால், அவர்கள் இந்த அரசாங்கத்தை ஏன் மதிக்கப்போகிறார்கள்? அவர்களே ஒரு அரசாங்கத்தை உருவாக்கிக்கொள்வார்கள்!” என வசனம் வரும். பிடிபட்டது இவ்வளவு என்றால், வெளியே சுற்றும் போதைப் பொருட்களின் மதிப்பையும், மாபியா கும்பலின் வளர்ச்சியையும், அதன் பாதிப்பையும் கணக்கிட்டால் பெரிய மலைப்பாய் இருக்கிறது. சமூகம் எங்கே போய்க்கொண்டிருக்கிறது?

கடந்த வாரத்தில் அமைச்சர் பொன்முடி “தமிழகத்தில் மட்டும் போதைப் பொருட்களை தடை செய்தால் போதுமானது இல்லை. ஒன்றிய அரசு இதில் மெனக்கெடவேண்டும். குஜராத்தில் உள்ள அதானிக்கு சொந்தமான முந்த்ரா துறைமுகத்தில் சிலமுறை பெரிய அளவில் போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. குஜராத்தில் ஒரு நீதிபதி துறைமுகத்தில் சோதனை செய்யப்படவேண்டும் என உத்தரவிட்டுள்ளார். தனியார் துறைமுகங்களை அனுமதிக்க கூடாது” என பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்துள்ளார். உண்மை தான். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இரண்டு கண்டென்யினர்களில் 21,000 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் அதானியின் முந்த்ரா துறைமுகத்தில் பிடிப்பட்டது நினைவிருக்கும். ”சோதனையிடுவதற்கும், பறிமுதல் செய்வதற்கும் எங்களுக்கு அதிகாரம் இல்லை” என அதானி நிர்வாகம் நழுவியது. அனுப்பியவர் தன் தேவைக்கு அருகில் உள்ள துறைமுகத்தை தேர்ந்தெடுக்காமல், ஏன் குஜராத்தில் உள்ள அதானி துறைமுகத்தை தேர்ந்தெடுத்தார் என்பதையும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது.

ஏற்கனவே விமானங்கள் அரசின் வசம் இல்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விமானி போதைப் பொருட்களை கடத்தி வந்து, கைது செய்யப்பட்டார். அப்படி அவர் கொண்டு வந்தது முதல்முறை அல்ல! பெங்களூரில் ஆய்வகம் எல்லாம் வைத்து தொடர்ச்சியாக போதைப் பொருட்களை தயாரித்து, விநியோகித்துள்ளார்..

இப்பொழுது அரசின் வசம் விமானங்களும் இல்லை. நேற்று நாடு முழுவதும் உள்ள 65 விமான நிலையங்களில் இருந்து ”அவசியமற்ற” சில பணியிடங்களில் இருந்து அரசின் தொழிற்பாதுகாப்பு படைகளை 3049 பேரை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது. அந்த இடங்களில் தனியார் காவலர்களை நியமனம் செய்யப்போவதாக அறிவித்துள்ளார்கள். வரும் காலங்களில் மீதம் இருக்கும் அரசு படைகளை மெல்ல மெல்ல திரும்ப பெற்றுவிடுவார்கள். பிறகு தனியார் தரகு முதலாளிகளின் ராஜ்யம் தான்.

ஆளும் பா.ஜனதா கட்சியும் பொறுப்பான கட்சி இல்லை. மக்கள் விரோத கட்சி
என்பதை அவர்களின் ஒவ்வொரு செயலிலும் மக்கள் கவனித்துவருகிறார்கள். போதைப் பொருள் விசயத்திலும் கூட, இந்திய மாநிலங்களில் ஒப்பீட்டளவில் பஞ்சாப் முதல் மாநிலம். 2009-ம் ஆண்டு பஞ்சாபின் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சமூக பாதுகாப்புத் துறை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப்பத்திரம் ஒன்றில் சுமார் 67 சதவீத ஊரக குடும்பங்களில் குறைந்தது ஒரு போதை அடிமையாவது இருப்பதாக தெரிவித்திருந்தது. எய்ம்ஸ் மருத்துவமனை 2015-ம் ஆண்டு மேற்கொண்ட ஆய்வு ஒன்றின்படி, ஆண்டு தோறும் சுமார் 7,500 கோடி மதிப்பிலான போதை வஸ்துக்களை பஞ்சாப் மாநிலம் மட்டும் நுகர்ந்து வருகிறது.

எண்ணற்ற சந்தர்ப்பங்களில் பாரதிய ஜனதாவின் உள்ளூர் தலைவர்கள் போதைப் பொருட்களைக் கடத்தும் போது கைதாகியுள்ளனர். கடந்த 2007-ம் ஆண்டு முதன் முறையாக,” பாரதிய ஜனதா அகாலி தள கூட்டணி “அதிகாரத்தைக் கைப்பற்றியது. சுக்பீர் பாதல் முதலமைச்சராக பொறுப்பேற்றார். அந்த சமயத்தில் உளவுத் துறை தலைவராக இருந்த சசி காந்த், போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ள முக்கிய புள்ளிகளைக் குறித்து ஆய்வறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அந்த அறிக்கையில் நிழலுலக போதை மாபியா கும்பலைச் சேர்ந்த சுமார் 90 பெயர்களைப் பட்டியலிட்டுள்ளார். இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு பஞ்சாபின் போதைப் பிரச்சினை குறித்து பேட்டியளித்துள்ள சசி காந்த், தான் சமர்ப்பித்த அறிக்கையில் “குறிப்பிட்ட நபர்களில் சிலர் பாரதிய ஜனதா மற்றும் அகாலி தளம் கட்சியின் எம்.எல்.ஏக்களாகவும் மந்திரிகளாகவும், போலீசு அதிகாரிகளாகவும் இருந்தார்கள்” என்பதை தெரிவித்துள்ளார்.

மேற்படி அறிக்கை குறித்து சுமார் ஆறு மாத காலம் கழித்தே நடவடிக்கை எடுத்துள்ளது பாரதிய ஜனதா – அகாலி தளம் தலைமையிலான அரசு. அறிக்கை சமர்ப்பித்த சசி காந்தை பதவிலிருந்து நீக்கி பந்தாடியதே அந்த நடவடிக்கை. கேடி, கிரிமினல்களை எல்லாம் பொறுக்கி எடுத்து தன்னிடம் சேர்த்து வைத்திருக்கிற பாஜனதா கட்சியின் லட்சணம் இது தான்.

ஆக, போதைப் பொருட்களிலிருந்து கடுமையாக பாதிக்கப்படும் இளைய தலைமுறையை காக்கவேண்டும் என்றால், மக்கள் விரோத பா.ஜனதா கட்சியை ஒழித்துக்கட்டவேண்டும். கார்ப்பரேட் கும்பல்களிடம் இருந்து அரசின் பொதுச்சொத்துக்களான விமானங்கள், விமானநிலையங்கள், துறைமுகங்கள் அனைத்தையும் பறிக்கவேண்டும்.

September 7, 2022

அத்தைக்கு முதலாம் ஆண்டு அஞ்சலி!


கடந்த ஆண்டு இதே நாளில் தான் அத்தையை இழந்து நின்றோம். கொரானாவில் உலகமே சிக்கி, முதல் அலை, இரண்டாம் அலை என தீவிரமாய் இருந்த காலத்தில் எல்லாம் விசேசங்களுக்கோ, பொது இடங்களுக்கோ எங்கும் போகாமல், பாதுகாப்பாய் தான் அத்தையும், மாமாவும் வீட்டில் இருந்தார்கள்.


எங்கள் பகுதியில் எங்குமே பாசிட்டிவ் கேஸ்கள் இல்லாதிருந்த காலம். அத்தைக்கு பாதுகாப்பாக தடுப்பூசி போட்டுவிடலாம் என லேப்பில் சில அடிப்படை சோதனைகளை செய்தோம். அந்த சமயத்தில் தான் கொரானா தொற்றிக்கொண்டுவிட்டது. சில அறிகுறிகள் தெரிய, சோதிக்கும் பொழுது, பாசிட்டிவ் என வந்த பொழுது அதிர்ந்து போனோம். மருத்துவமனையில் நல்ல நிலையில் தான் வீட்டிலிருந்து கிளம்பினார்.

இரண்டு, மூன்று நாட்களிலேயே மூச்சுத் திணறல் ஏற்பட்டு கருவிகளின் உதவியுடன் தான் சுவாசித்தார். கடுமையான போராட்டம் அது. அவரை அந்த நிலையில் பார்க்கும் பொழுது கலக்கம் தொற்றிக்கொள்ளும். அவர் உடல்நலம் தேறி வீட்டுக்கு நல்லபடியாய் வந்துவிடுவார் என அனைவரும் நம்பினோம். அவருக்கும் வாழவேண்டும் எண்ணம் அதிகம் இருந்தது. அவருக்கு இரண்டு பெண்கள். ஒரு பையன் என மூன்று பிள்ளைகள். மூவருக்கும் திருமணமாகி, குழந்தைகள் திருமண வயதிலும் இருக்கிறார்கள். பேரன், பேத்தியின் திருமணங்களை பார்க்கவேண்டும் என பெருவிருப்பம் இருந்தது. அவரே அதை சொல்லியும் இருக்கிறார். 33ம் நாட்கள். எவ்வளவு முயன்றும் காப்பாற்றமுடியவில்லை. அவர் சுவாசம் நின்று போனது.

அவருடைய இழப்பு எங்கள் குடும்பத்துக்கு பெரிய இழப்பு. இலக்கியாவை சிறு வயதில் இருந்தே வளர்த்தவர் அவர் தான். பிள்ளைகளை மிகவும் கண்டிப்பான முறையில் வளர்த்தவர் அவர். ஆனால் பேர பிள்ளைகளிடம் மிகவும் அன்பாக இருந்தார். பார்த்து பார்த்து செய்தார். அவருடைய சொந்தங்களுக்கும் நிறைய செய்திருக்கிறார். ஊரிலிருந்து சென்னைக்கு நகர்ந்தால், அத்தை வீடு தான் அவர்களுக்கு முதல் புகலிடம்.

பகுதியில் முருங்கைமர வீட்டுக்காரர், இலக்கியா அப்பா என எனக்கு இருக்கும் வேறு வேறு பெயர்களில் சம்பூர்ணத்தம்மாவின் மருமகன் என்ற பெயரும் உண்டு. இலக்கியா பிறந்த வருடத்தில் இருந்து ஒரு பலசரக்கு கடை ஒன்றை அத்தையும், மாமாவும் நடத்தினார்கள். ஆகையால் பகுதி மக்கள் பெரும்பாலோரோடு நல்ல பழக்கம் உண்டு. வீட்டு விசேசங்களுக்கு எல்லாம் உரிமையோடு அழைப்பார்கள். இவரும் போய்வருவார்.

அத்தை எங்களுக்கு செய்தது அதிகம். எங்கள் மீதான பாசத்தில், பொது வேலை என இருவரும் அலைவதையும், சொத்து எதுவும் சேர்க்கவில்லை என இலக்கியாவிடம் திட்டுவார். எனக்கு தெரியவரும் பொழுதெல்லாம். அவருக்கு அந்த உரிமை இருக்கிறது. திட்டட்டும் என சிரித்துக்கொண்டே சொல்லிவிடுவேன். என்னென்ன விசயங்களில் திட்டுகிறார் என்பதை மட்டும் கேட்டு தெரிந்துகொள்வேன். நிலவுடைமை பண்பில் மருமகனான என்னிடம் நேரிடையாக எதுவும் சொல்லிக்கொள்ளமாட்டார்.

இந்த ஒரு வருடத்தில் வெவ்வேறு சமயங்களில், சம்பவங்களும், மனிதர்களும் அத்தையை நினைவுப்படுத்திக்கொண்டே இருக்கிறார்கள். சமீபத்தில் குற்றாலம் போனோம். அத்தை எங்களோடு ஒருமுறை குற்றாலம் வந்தது நினைவுக்கு வந்தது. இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒரு கனவு. சாலையில் வண்டியோட்டிக்கொண்டு போகிறேன். ஒரு திண்ணையில் அத்தை நின்றுகொண்டு இருக்கிறார். ”அத்தை இங்கு நிக்கிறாங்க!” என சொல்லிக்கொண்டே போகிறேன். அந்த காட்சி இன்னமும் நல்ல நினைவில் இருக்கிறது.

இரண்டு நாட்களுக்கு முன்பு கூட பகுதியில் ஒரு பெரியவர் “உங்க அத்தை இறந்தது இப்பத்தான் தெரியும். அன்னைக்கு உங்க மாமாகிட்ட நலம் விசாரிக்கும் பொழுது சொல்கிறார். அவங்க இறந்து வருடம் ஆச்சு என்கிறார். இத்தனை மாதங்களாக உடல் நலம் சரியில்லாமல் (Paralyzed) வீட்டிற்குள்ளேயே இருந்துவிட்டேன். ரெம்ப நல்ல மனுசி” என வருத்தத்துடன் சொல்லிக்கொண்டே சென்றார்.
செப். 4. 2022. சம்பூர்ணம் அத்தையின் முதலாம் நினைவு நாள் இன்று. கால இடைவெளியில் அத்தைகள் மறையும் செய்திகள் ஊரில் இருந்தும் வந்து கொண்டே இருக்கின்றன! அத்தைகள் இல்லாத உலகத்தை நினைத்துப் பார்ப்பது சிரமமாய் இருக்கிறது!

அப்பளத்துக்கு போரா? :)


நமது வீட்டு விசேசங்களுக்கு எத்தனை தலைகள் சாப்பிடவரும் என்பதை எப்பொழுதுமே துல்லியமாக கணக்கிட முடியாது. ஐநூறு பத்திரிக்கை கொடுப்போம். 700 பேருக்கு உணவு ஏற்பாடு செய்வோம் என குத்துமதிப்பாகத்தான் பல வீடுகளில் திட்டமிடுகிறார்கள்.


நம் வீட்டில் விசேச நாளன்று முகூர்த்த நாளாக இருந்தால், ஊரில் நிறைய விசேசங்கள் இருக்கும். ஆகையால் தலைகள் பிரிந்து போய், நமது விசேசத்தில் உணவு நிறைய மிஞ்சும்.

அதனால் தான், ”பந்திக்கு முந்து” என விளையாட்டாக சொல்வார்கள். முதல் பந்தியில் வைக்கப்படும் உணவு வகைகள் பந்திகள் அதிகரிக்க அதிகரிக்க குறைந்துகொண்டே போகும். சாம்பாரில் தண்ணீர் கலப்பார்கள். கூட்டத்தை சமாளிக்க அவசரம் அவசரமாய் சமைக்க துவங்குவார்கள்.

பணக்கார வீடுகளில் இந்த பிரச்சனை பெரும்பாலும் இருக்காது. கூடுதலாக சமைத்துவிடுவார்கள். ஆகையால் பெரும்பாலும் மிஞ்சும் என்றே நினைக்கிறேன். விதிவிலக்குகளும் இருக்கலாம்.

வளர்ந்த நாடுகளில் இந்த பிரச்சனையை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்றால், விசேசம் என்றால், பத்திரிக்கைகள் அனுப்பி, எத்தனை பேர் வருகிறார்கள் என உறுதி செய்துகொண்டு, அதற்கான ஏற்பாடுகளை பக்காவாக ஏற்பாடுச் செய்துகொண்டு தான் விசேசங்கள் நடத்துகிறார்கள். ”இன்னைக்கு நம்ம பிரண்ட் கல்யாணம். வாங்க போலாம்” என திடீரென நம் நண்பர்கள் நாலுபேரை அழைத்துக்கொண்டு போய்விடமுடியாது. உடல்நல பிரச்சனை என வேறு வேறு காரணங்களால் எண்ணிக்கை குறையலாமே தவிர அதிகமாக வாய்ப்பில்லை.

இப்படி புரிந்துகொண்டதால், எப்பொழுதும் பந்தியில் எல்லோருக்கும் என்னவோ, அதை மட்டும் வாங்கி சாப்பிட்டு வந்துவிடுவது என பல ஆண்டுகள் வழக்கம். நமது செல்வாக்கை பயன்படுத்த முடிந்தாலும், பயன்படுத்துவதில்லை.

கூடுதலாக எடுக்கப்படும் ஒவ்வொரு அப்பளமும், அது இன்னொருவருடையது என்பது எப்பொழுதும் நினைவில் இருக்கும். இந்த பொதுவிதியை அனைவரும் கடைப்பிடிக்கவேண்டும்.

பொதுவிதியை மீறினால் கலாட்டாக்களைத் தவிர்க்கமுடியாது தான்! :)

கர்நாடகம் : கல்வித்துறையின் ஊழலில் திளைக்கும் பிஜேபி!


பிஜேபி தன்னை ஊழலுக்கு எதிரான கட்சி என்று பொதுவெளியில் விளம்பரம் செய்கிறது. ஆனால் உண்மை நிலையோ வேறு. பிஜேபி ஆட்சி செய்யும் அத்துனை மாநிலங்களிலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது.


பிரதமர் மோடி ஊழல் குறித்து பல்வேறு மேடைகளில் முழங்குகிறார். சொந்த கட்சிகாரர்கள் மீது ஊரே காறித்துப்பினாலும் அமைதி காக்கிறார்.
***

கர்நாடகாவில் கல்வித்துறையில் லஞ்சம் உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்னிலைப்படுத்தி கர்நாடகாவைச் சேர்ந்த 13000 தனியார் பள்ளிகள் ஒன்றிணைந்து இரண்டு சங்கங்கள் சார்பாக பிரதமர் மோடிக்கு புகார் கடிதம் அனுப்பி இருக்கிறார்கள்.

கர்நாடகாவில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவதில், முறையான விதிமுறைகள் ஏதும் பின்பற்றப்படுவதில்லை. அதோடு புதிய கல்வி நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவதில் பெருமளவில் லஞ்சம், ஊழல் நடக்கிறது.

இது தொடர்பாக கல்வியமைச்சார் பி.சி நாகேஷ் மற்றும் முதல்வர் பசவராஜ் பொம்மையிடம் பலமுறை புகார் அளித்து இதுவரை நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.

அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை குறைத்து, தனியார் பள்ளிகளில் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான வேலைகளையும் ஆளும் பிஜேபி செய்துவருகிறது எனவும் புகார் எழுந்து இருக்கிறது.

ஏற்கனவே கர்நாடக ஒப்பந்ததாரர்கள் சங்கத்தின் சார்பில் “கர்நாடகாவில் அரசின் திட்ட பணிகளை ஒதுக்கீடு செய்வதற்காக அமைச்சர்கள் 40% கமிசன் கேட்கிறார்கள். இது சம்பந்தமாக முதல்வர் அலுவலகத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை” என மோடிக்கு புகார் கடிதம் அனுப்பினார்கள். இதே ஆண்டு மார்ச் மாதம் பிஜேபியை சார்ந்த ஒரு ஒப்பந்ததாரர் “4 கோடிக்கு சாலை பணிகள் செய்தேன். அந்த தொகையை விடுவிப்பதற்கு அமைச்சர் 40% கமிஷன் கேட்டார்” என மனம் நொந்து தற்கொலை செய்தது நினைவுக்கு வருகிறது.

கர்நாடகாவில் நிலைமை இப்படியிருக்க… பிரதமர் மோடியோ ”அரசின் நடைமுறையில் இருந்து ஊழல் வெறியேறவேண்டும். ஊழலைக் கட்டுப்படுத்துவதற்கு சாத்தியமான நம்பிக்கையை ஏற்படுத்துவதில் கடந்த ஏழு ஆண்டுகளில் அரசு வெற்றியடைந்துள்ளது” என 2021ல் பேசினார். கடந்த ’சுதந்திர’ தின உரையிலும் ஊழல் குறித்து உரக்க முழங்கினார். கர்நாடகாவில் பிஜேபி செய்யும் ஊழல்கள் நாளும் சந்தி சிரிக்கிறது.