> குருத்து: அன்புள்ள வாசிப்பை நேசிப்போமுக்கு,

November 5, 2022

அன்புள்ள வாசிப்பை நேசிப்போமுக்கு,


வணக்கம். பிறந்தது முதல் கடந்த ஐந்து ஆண்டுகள் வரை ஒரு தெளிந்த நீரோடை போல போகிற வழிகளில் எல்லாம், அறிவை பரப்பும் உன் ஆற்றலை கண்டு வியக்கிறேன். உனக்கு என்னுடைய இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். இன்னும் பல ஆண்டுகள் வெற்றிகரமாக பயணிக்கவும் வாழ்த்துகிறேன்.


ஒரு புத்தகம் சார்ந்த குழுவில் 56,600 என்பது எவ்வளவு பெரிய மனித கூட்டம். உலகம் முழுவதும் இதில் உறுப்பினர்கள் பரந்து விரிந்து இருக்கிறார்கள் என்பது ஆச்சர்யம்.

படிக்கிற காலம், எழுதுகிற காலம் எல்லாம் போன தலைமுறையுடையது. இனி பேசுகிற, கேட்கிற, காணொளிகள் பார்க்கிற காலம் என நினைத்துக்கொண்டிருந்த பொழுது, ஒவ்வொரு புத்தகத்தையும் படித்து, சில வரிகளாவது தன் உணர்வுகளை பகிர்வது என்பது இன்னும் ஆச்சர்யம்.

இந்த குழுவில் நான் இரண்டு ஆண்டுகளாக பயணிக்கிறேன். அதற்கு முன்பு படிக்கிற புத்தகங்களைப் பற்றி எப்பொழுதாவது என் பக்கத்தில் சிறிய அறிமுகம் எழுதுவதோடு சரி. ஆனால் இந்த குழுவை யார் அறிமுகப்படுத்தினார்கள் என்பது நினைவில்லை. அறிமுகம் ஆன பிறகு, நான் முன்பை விட உற்சாகமாக படித்தேன் என்பதை உணர்ந்தேன்.

கடந்த ஆண்டு மாரத்தானில் சேர்ந்து நான் பெற்ற அனுபவம் என்பது அலாதியானது. இரண்டு புத்தகங்கள் மட்டும், ஜனவரி, பிப்ரவரியில் எழுதிவிட்டு, கோமாளி படத்தின் நாயகனை போல ”கோமாவுக்கு” சென்றுவிட்டேன். மீதி 23 புத்தகங்களை இன்னும் படிக்கவில்லையா? செய்து கொடுத்த சத்தியம் அவ்வளவு தானா? என நிர்வாகிகள் பாண்டிய மன்னனின் ஆபத்துதவிகள் போல அவ்வப்பொழுது கனவில் வந்து செல்லமாய் மிரட்ட ஆரம்பித்து, பிறகு விரட்டி படித்து, டிசம்பர் 31ல் 25 வது பதிவு எழுதி போட்ட பொழுது, உண்மையிலேயே மாரத்தானில் ஓடிய அனுபவமாக தான் இருந்தது. தட்டுத்தடுமாறி இலக்கை அடைந்ததில் எனக்கு ஒரு சிறிய பதக்கமும், புத்தகமும் பரிசாக தந்தார்கள். அந்த சின்ன பதக்கம் இந்த ஆண்டு மாரத்தானில் ஓடுவதற்கு உற்சாகம் தருகிறது.

”வாசிப்பை நேசிப்போம்” குழுவின் வெற்றிகரமான பயணம் என்பது ஊர் கூடி தேர் இழுப்பது போல தான். ஒரு பொது நோக்கத்தில் ஒன்றுபட்டு இயங்கும் மனிதர்களின் கூட்டு சிந்தனை. கூட்டு முயற்சி. கூட்டு உழைப்பு – மூன்றின் வெற்றி என்றே பார்க்கிறேன்.

அதனால் தான் மாரத்தான் போட்டி, எழுத்தாளர்கள் வரிசையில் படிப்பது, 30 நாள் போட்டி என புதிது புதிதாக சிந்தித்து உற்சாகமாய் நடைமுறைப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள். நிறைய வாசிப்பவர்களுக்கு, நன்றாக எழுதுகிறவர்களுக்கு என புத்தகங்கள், நினைவு பரிசுகள் பரிசாக தந்து உற்சாகப்படுத்துகிறார்கள்.

உலகத்திலேயே சிரமமான காரியம் என்பது என் அனுபவத்தில் மனிதர்களை கையாள்வது தான். அதுவும் நமது சமூகம் ஏற்றத்தாழ்வான சமூகம். பல்வேறு சித்தாந்த ரீதியான, உணர்ச்சிப்பூர்வமான என கலவையான ஆட்கள் புழங்குகிற பகுதி அது. ஏதாவது ஒரு பதிவு ”மனதை புண்படுத்திவிட்டால்” குழுவில் கருத்து சொல்லாமல், மார்க்குக்கு மொட்டை கடிதாசி எழுதி, தளங்களை முடக்கிப்போடுகிற ஆட்கள் வலம்வருகிற உலகம் இது.

தன் சொந்த, அலுவல் வேலைகளையும் பார்த்துக்கொண்டு, எல்லா பதிவுகளையும் பொறுமையாக படித்து, அனுமதித்து, கொஞ்சம் சிக்கல் செய்தால், அவர்களிடம் பக்குவமாக சொல்லி, சரி செய்கிற நிர்வாகிகள் தான் இன்னும் ஆச்சரியப்படுத்திக்கொண்டே இருக்கிறார்கள். நிர்வாகிகளில் ஒருவரான கதிர் அவர்களை பலரும் குறிப்பிடுவது போல, ஒரு சந்தேகம் கேட்டால், உடனே பதில் அளிக்கிற அவரின் வேகம் அலாதியானது.

இவற்றில் அவர்களுக்கு தனிப்பட்ட பொருளாதார லாபமும் இல்லை. சமூகத்தின் மீதான அக்கறை இல்லாமல் இத்தனை பொறுமையும், உழைப்பும் சாத்தியமேயில்லை. அவர்களுக்கும் இந்த பிறந்த நாளில் நன்றிகளையும், தொடர்ந்து உற்சாகமாக செயல்பட வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

சில ஆலோசனைகள்

1. என்னளவில் எனக்கு நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் பதிவுகளைப் படித்து, லைக் மட்டுமில்லாமல், ஒரு சில வார்த்தைகளில் என் கருத்தையும் பகிர்கிறேன். இந்த வேலையை உறுப்பினர்கள் பலரும் மெனக்கெட்டு செய்யவேண்டும் என வேண்டிக்கேட்டுகொள்கிறேன்.

2. இப்பொழுது வருகிற இளைய தலைமுறையிடம் படிக்கும் பழக்கத்தை உற்சாகப்படுத்த காணொளி வடிவில் புத்தக அனுபவத்தை பகிர அனுமதிக்கவேண்டும். இதுவரை அப்படி அனுமதிக்கப்பட்டுள்ளது என நான் அறியவில்லை. அனுமதிக்கவில்லை எனில், இனியாவது அனுமதிக்கவேண்டும்.

3. புத்தகம் அறிமுகப் பதிவுகள் நீண்ட பதிவுகளாக எழுதாமல், 300, 200 வரிகளில் என இலக்கு வைத்து எழுதுவது நல்லது. குறைந்த வார்த்தைகளில் சிறப்பாக எழுதும் பழக்கத்தை கொண்டு வரமுயலவேண்டும். என் அனுபவத்தில் நீண்ட பதிவுகள் செல்லில் படிப்பது சிரமமாக இருக்கிறது. பாதிப் படித்துவிட்டு, சோர்வாகி தாண்டி போய்விடுகிறேன்.

இந்தப் பதிவு கூட 400 வார்த்தைகளைத் தாண்டுகிறேன். இன்னும் சொல்வதற்கு நிறைய இருந்தாலும், ”போதும் நிறுத்திக்கொள்” என உள்ளுக்குள் இருந்து ஒருகுரல் கேட்கிறது. நிறுத்திவிட்டேன். 😉

0 பின்னூட்டங்கள்: