> குருத்து: பிறந்தநாள் வாழ்த்துகள் இலக்கியா

November 11, 2022

பிறந்தநாள் வாழ்த்துகள் இலக்கியா



”நாளைக்கு எனக்கு பிறந்தநாள். என்ன பரிசு தரப்போகிறீர்கள் அப்பா?” என முதல்முறை கேட்டாள். ஆச்சர்யமாய் இருந்தது.


பிறந்தநாளுக்கு வழக்கமாய் ஆடை வாங்கித் தருவோம். பிறந்தநாளில் பள்ளி இருந்தால், பள்ளி. மாலை அக்கம் பக்கம் இருப்பவர்களுக்கு சாக்லெட்டுகள் தருவாள்.

அவளின் அம்மாச்சி கடலைப்பருப்பு, தேங்காய், இனிப்பு வைத்து ஒரு இனிப்பு பொருள் செய்து தருவார்கள். சுவையாக இருக்கும். விடுமுறை நாளாய் இருந்தால், கடற்கரை செல்வோம். திரும்பி வரும் பொழுது பாரதி உணவகம் போன்ற உணவகத்தில் சாப்பிட்டு வீடு வந்து சேர்வோம். தனியாக பரிசு பொருள் என வாங்கித் தந்ததில்லை. முதல்முறை கேட்ட பொழுது கொஞ்சம் ஆச்சர்யமாய் இருந்தது.


இப்படித் தான் கடந்த 15 பிறந்தநாள்களும்! ஒரு கேக் வெட்டி கொண்டாடியதில்லை. அவளைப் பொறுத்தவரையில் பிறந்தநாள் என்பது எப்பொழுதும் விசேசமான நாளாகத் தான் நினைத்து வந்திருக்கிறாள். மூன்று மாதத்திற்கு முன்பே இன்னும் மூணு மாதம் தான் இருக்கிறது என சொல்ல ஆரம்பிப்பாள். இப்பொழுது வளர்ந்துவிட்டாள். அம்மாவுடன் சென்று ஆடை வாங்குவது என்பது மாறி, இந்தமுறை உடன் படிக்கும் தோழிகளோடு போய் ஆடை வாங்கி வந்தாள். நன்றாகத் தான் இருந்தது.

இதோ வெளியே மழை பெய்து கொண்டிருக்கிறது. இப்படித்தான் தொடர்ச்சியாய் பெய்த மழை நாட்களில் ஒன்றில் தான் இலக்கியா பிறந்தாள். ஏரிகள் நிரம்பி வழிந்தன. தொலைக்காட்சிகளில் மழையைப் பற்றி சொல்லி சொல்லி அலுத்துப் போயிருந்தார்கள்.

சாலைகளில் வெள்ளம் வழிந்தோடி கொண்டிருந்தன. எங்கு பார்த்தாலும் நீரின் நடனம் தான். எப்படி இலக்கியாவின் அம்மாவை மருத்துவமனையில் சேர்ப்பது என குழம்பி போயிருந்தேன்.

அம்பத்தூர் ரோட்டரி மருத்துவமனைக்கு தட்டுத் தடுமாறி கொண்டு போய் சேர்த்துவிட்டேன். சுகப்பிரவசம் என கடைசி வரை சொல்லி... திடீரென பனிக்குடம் உடைந்துவிட்டது. ஆகையால் உடனே அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என சொன்னதும். வருத்தமாக இருந்தது. மருத்துவர் சொல்கிறாரே! என ஒத்துக்கொண்டேன். 11/11/2006 சனிக்கிழமை மதியம் 1.28க்கு பிறந்தாள்.

எப்பொழுதாவது இலக்கியாவிடம் விளையாட்டாய் சொல்வேன். “நீ ஒரு வயலண்டான குழந்தை. பிறக்கும் பொழுது அம்மாவின் நிறைய ரத்தம் பார்த்து தான் பிறந்தாய். அம்மாவை கவனமாய் பார்த்துக்கொள்”.

இருவருமே பொது வாழ்வில் இருக்கிறோம். ஒரு குழந்தை தான். அது பெண் குழந்தையோ, ஆண் குழந்தையோ ஒன்று போதும் என உறுதியாய் இருந்தோம். இலக்கியா பிறந்து, அதற்கு பிறகான இத்தனை வருடங்களில் இது குறித்து இரண்டாவது எண்ணம் எங்களுக்கு எப்பொழுதும் வந்ததேயில்லை. நாங்கள் இருவருமே வெளி வேலைகளுக்கு அலைந்து கொண்டிருந்த பொழுது, அவளை வளர்த்தது அவளின் அம்மாச்சி தான்.

இலக்கியா வளர வளர பெற்றோராகிய எங்கள் இருவரின் குடும்பத்து ஆட்களைப் போல மாறி மாறி முகச்சாடை வந்துகொண்டே இருந்தது. இப்பொழுது பெரும்பாலும் என் சாயலில் இருக்கிறாள். ஆனால் குணங்களை, பழக்க வழக்கங்களைப் பொறுத்தவரையில் இருவருடைய கலப்பு தான். இருவரிடம் இல்லாத தனித்துவமான குணங்களும் உண்டு. இருவருமே உணர்ச்சிப்பூர்வமானவர்கள். இலக்கியாவும் அப்படித்தான்.

சின்ன வயதில் இருந்தே பெரிய தொந்தரவுகள் தந்ததில்லை. குழந்தையாய் கட்டிலை விட்டு இறங்கும் பொழுது கூட பொறுப்பாய் இறங்குவாள். எங்கும் அடிப்பட்டு, யாரிடமும் சண்டையிட்டு பஞ்சாயத்துக்களை வீட்டுக்கு இழுத்து வந்ததில்லை. இது தான் வேண்டும் என அடம் பிடித்ததில்லை. பெரிதாய் செலவுகளும் வைத்ததில்லை. சிக்கனம் தான். அதை சிலமுறை கவனித்திருக்கிறேன். சொன்னால் கேட்டுக்கொள்கிற ஆள். உனக்கு அம்மா பிடிக்குமா? அப்பா பிடிக்குமா? என சிறுவயதில் யாராவது கேட்டால், இருவரையுமே பிடிக்கும் என்பாள்.

ஒரு நாளும் அவளுடன் உட்கார்ந்து பாடங்களை சொல்லித் தந்ததில்லை. படிப்பில் முதல் பத்துக்குள் வந்துவிடுவாள். அவள் பள்ளியில் நடந்தவைகளை பற்றியோ, அவளின் தோழிகளைப் பற்றியோ ஏதாவது சொன்னால் மட்டும், கவனமாய் கேட்டுக்கொள்வேன். அவள் வளர்ந்துவிட்டாள். அவள் சொல்வதை கவனமாக கேள் என அவளின் அம்மாவிடம் சொல்லிக்கொண்டு இருக்கிறேன். அவளுக்கு இன்னும் தன் பிள்ளை சிறுபிள்ளையாகவே தெரிகிறாள்.

பத்தாவது தேர்வு எழுதுவதற்கு முன்பு எந்த குரூப் படிப்பது என அவ்வப்பொழுது கேட்பாள். அறிவியல், கணக்குப் பாடங்களை கவனமாய் படி என சொல்லிக்கொண்டிருப்போம். தேர்வு தொடங்குவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு, “அறிவியல் கஷ்டமா இருக்குதுப்பா!

அறிவியல் குரூப் வேண்டாமே! என குழப்பம் இல்லாமல் முடிவெடுத்து சொன்னது போல சொன்னாள். ”ஏன்?” என்றேன். ”அறிவியல் ஆசிரியர் புரிகிற மாதிரி சொல்லித் தரவில்லை. ஆகையால் எனக்கு மதிப்பெண்கள் குறைகிறது”. என்றாள்.
சொல்லியிருக்கலாமே! பள்ளியில் வந்து பேசியிருக்கலாம்! அல்லது மாற்று ஏற்பாடு செய்து இருக்கலாமே!” என பேசுகிற பொழுது காலம் கடந்துவிட்டிருந்தது. இப்பொழுது வணிகம் சம்பந்தப்பட்ட பிரிவு எடுத்துத்தான் படிக்கிறாள்.
தன் அம்மாவோடு பல போராட்டங்களுக்கு போயிருக்கிறாள். தோழர்களோடு எப்பொழுதும் பழகிக்கொண்டு இருக்கிறாள்.

அவள் வளர்கிறாள். அவள் விரும்பிய படிப்பை படிக்கட்டும். பிடித்த தொழிலை செய்யட்டும். எங்களைப் பொறுத்தவரையில் இந்த உலகம் இரண்டாகத் தான் இயங்குகிறது. ஒடுக்குபவர்கள். ஒடுக்கப்படுபவர்கள். எப்பொழுதும் ஒடுக்கப்பட்டவர்களின் பக்கம் நிற்கவேண்டும். அவள் நிற்பாள். எங்களுக்கு அந்த நம்பிக்கை இருக்கிறது.

குழந்தை வளர்ப்பில்.... கவிஞர் கலீல் ஜிப்ரானின் இந்த வரிகள் தான் அவ்வப்பொழுது நினைவுக்கு வரும்.

உங்கள் குழந்தைகள்
உங்களின் குழந்தைகள் அல்ல.
அவர்கள் காத்திருக்கும்
எதிர்கால வாழ்வின் மகன் மற்றும் மகள்கள்
அவர்கள் உங்கள் வழியாக வருகிறார்கள்.
ஆனால், அவர்கள்
உங்களில் இருந்து வரவில்லை.

அவர்களுக்கு நீங்கள்
உங்களுடைய அன்பைத் தரலாம்;
ஏனெனில் அவர்களுக்கென்று
அழகான சிந்தனைகள் உண்டு.
அவர்களின் உடலுக்கு மட்டுமே
நீங்கள் வீடமைக்கலாம்.
அவர்களின் ஆன்மாவிற்கு அல்ல
ஏனென்றால் அவர்களின் ஆன்மா
வருங்காலத்தின் வீடுகளில் வாழ்கிறது
அந்த வீட்டை நீங்கள் கனவில் கூடச்
சென்றடைய முடியாது.

மீண்டும் ஒருமுறை பிறந்தநாள் வாழ்த்துகள் இலக்கியா!

0 பின்னூட்டங்கள்: