நாயகன் படித்துவிட்டு வேலை தேடிக்கொண்டிருக்கிறான். அம்மாவுடனும், பாட்டியுடனும் வாழ்கிறான். பாட்டி படுத்த படுக்கையாய் இருப்பதால், அம்மா ஆசிரியர் வேலைக்கு செல்வதால், உள்ளூரிலேயே வேலை தேட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறான். ஆனால் வேலை கிடைத்தபாடில்லை.
பாட்டி இறந்துவிடுகிறார். அம்மாவிற்கு கொஞ்சம் மனம் சார்ந்த பிரச்சனைக்கு மருத்துவம் பார்த்துவருகிறாள். இரவானால் பழைய கசப்பான நினைவுகளாலோ, நோய் உண்டாக்கும் சிரமத்திலோ அவள் நீண்ட நேரம் அழுதுகொண்டே இருக்கிறாள். அம்மாவும், மகனும் பேசினாலே சண்டை வந்துவிடுகிறது. ஆகையால், மகனை திட்டிக்கொண்டே இருக்கிறார். அவன் தண்ணி, தம்முன்னு சுற்றிக்கொண்டிருக்கிறான்
வீட்டில் அமானுஷ்யமாக சில நிகழ்வு நடப்பதாக மகன் சொல்கிறான். அவன் தொடர்ந்து தண்ணி அடிப்பதால், இரவுகளில் தூக்கம் இல்லாமல் இருப்பதால், அவனுக்கு சில பிரமைகள் உருவாகியிருக்கலாம் என உறவினர் சொல்கிறார். அதற்கான மருத்துவம் பார்த்தால், சரியாகிவிடும் என்கிறார்.
அவனுக்கு கவுன்சிலிங் கொடுத்தவர் அந்த வீடு பற்றி சொல்லப்படும் அமானுஷிய கதைக்கு பின்னால் உள்ள நிகழ்வுகளை தேடுகிறார். இறுதியில் என்ன ஆனது என்பதை கொஞ்சம் பயம் காட்டி அனுப்பியிருக்கிறார்கள்.
**
ஏழு வயதில் அப்பாவை இழந்தது, அம்மாவிற்கு சில மனப்பிரச்சனைகள், வேலைக்கு போகாதது, யாரிடமும் மனம் விட்டு பேசாதது என நாயகனின் சூழலே மிக இறுக்கமாக இருக்கிறது. இரவுகளில் மட்டும் பெய்யும் பேய் மழை, மாத்திரையைப் போட்டுவிட்டு தூங்கும் அம்மா, அமானுஷ்யமான வீட்டின் செயல்கள், இவனின் தூக்கமில்லா இரவுகள், களை இழந்த கண்கள், மெல்லியதாய் இரவின் விசேசமான சத்தங்களோடு, நம்மை கொஞ்சம் பயமுறுத்தும் இசை எல்லாம் கலந்து நம்மையும் பயமுறுத்துகின்றன.
1997ல் Cure என ஒரு ஜப்பான் படம். 2004ல் Machinist என ஆங்கிலப்படம். இந்த இரண்டு படங்களை Depressed Movie வகைப் படங்கள் என்பேன். அந்த வரிசையில் இந்தப் படத்தையும் தாராளமாய் சேர்க்கலாம்.
அம்மாவாக வரும் நம்ம ரேவதியும், கும்பளங்கி நைட்ஸ் Shane Nigam மகனுமாய் மொத்தப்படத்தையும் தாங்கியிருக்கிறார்கள். மற்றவர்களும் சிறப்பு. ஒளிப்பதிவும், இசையும் படத்திற்கு பெரிய பலம்.
சோனி லைவ்வில் வெளியாகியிருக்கிறது. பேய், திகில் பட விரும்புவர்கள் பாருங்கள். குழந்தைகளை தவிருங்கள்.
0 பின்னூட்டங்கள்:
Post a Comment