> குருத்து: ரன் பேபி ரன் (2023)

February 16, 2023

ரன் பேபி ரன் (2023)


நாயகன் வங்கியில் அதிகாரியாக இருக்கிறார். திருமணம் நிச்சயமாகியிருக்கிறது. ஒரு மருத்துவ கல்லூரியில் மாணவி ஒருவர் மாடியிலிருந்து கீழே விழுந்து சாகிறார். சில நாட்கள் கழித்து… சில அடியாட்களிடமிருந்து உயிருக்கு தப்பி மருத்துவ கல்லூரி மாணவி ஒருத்தி நாயகனின் காரில் வந்து ஒளிந்துகொள்கிறார். அந்த பெண்ணால் தனக்கு எந்த பிரச்சனையும் வந்துவிடகூடாது என பயப்படுகிறார்.


இருப்பினும் அந்த பெண் கெஞ்சி கேட்டதற்கிணங்க, அன்றிரவு தன் அபார்ட்மெண்ட் வீட்டில் தங்க அனுமதிக்கிறார். காலையில் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார். பழி நம் மீது வந்துவிடும் என அஞ்சி… உடலை அப்புறப்படுத்த நினைக்கிறார். அது அடுத்தடுத்து சிக்கல்களை உருவாக்குகிறது.

அந்த பெண் யார்? ஏன் கொலை செய்யவேண்டும்? அதற்கு பின்னால் உள்ளவர்கள் என்பதை திரில்லராக சொல்லியிருக்கிறார்கள்.
****
Spoiler Alert

மருத்துவ கல்லூரி சீட் என்பது சமூகத்தில் பெரிய விசயம். எவன் செத்தாலும் பரவாயில்லை. என் பிள்ளைக்கு சீட் வேணும் நினைக்கிறவர்கள் எவ்வளவு வேண்டுமென்றாலும் தர தயாராக இருக்கிறார்கள். இந்திய அளவில் அவ்வப்பொழுது மருத்துவ கல்லூரி மாணவர்கள் மர்மமாக சாவதும், பிறகு அதை கண்டுபிடிக்காமல்… ஊத்தி மூடுவதும் நடந்துகொண்டு தான் இருக்கிறது. கல்வி என்பது வியாபாரமாகி விட்ட பிறகு … இப்படிப்பட்ட சிக்கல்கள் உருவாகிக்கொண்டு தான் போகும்.

இதன் பின்னணியை எடுத்துக்கொண்டு படத்தின் கதையை எடுத்திருக்கிறார்கள். இதில் இறுதிவரை சஸ்பென்ஸோடு எடுத்து சென்றது சிறப்பு. ஆனால், நான் மேலே சொன்ன செய்தியை செய்தியாக சொல்லி்விட்டு முடித்துவிட்டார்கள். அழுத்தமில்லாமல் சொன்னது பெரிய மைனஸ்.

நாயகனாக பாலாஜி. இந்தமுறை சிரிப்பு காட்டாமல் பயந்து நடித்திருக்கிறார். ஐஸ்வர்யா சில நிமிடங்கள் மட்டும் வந்தாலும் நினைவில் நிற்கிறார். மற்றவர்களும் வந்து போகிறார்கள்.

ஆங்கிலப் படங்களில் சர்வதேச அளவில் எதிரியாக ரசியாவை காட்டுவார்கள். அது போல தமிழ் படங்களில் சிறுபான்மையினரை வில்லனாக காட்டும் போக்கு தொடர்கிறது. தவிர்க்கவேண்டும். ஜியென் கிருஷ்ணகுமார் மலையாளத்திலிருந்து வந்து இயக்கியிருக்கிறார். படத்தின் ஓட்டத்திற்கு இசையும், ஒளிப்பதிவும் நன்றாக உதவியிருக்கிறது.

0 பின்னூட்டங்கள்: