> குருத்து: 83 (2021) இந்தியா உலகப்கோப்பையை முதன் முதலில் வென்ற கதை

February 16, 2023

83 (2021) இந்தியா உலகப்கோப்பையை முதன் முதலில் வென்ற கதை


இந்தியா அதுவரை கிரிக்கெட்டில் உலக கோப்பை அரையிறுதி போட்டியை கூட தொட்டதில்லை. முதன்முறையாக உலக கோப்பையை 1983ல் வென்றது. அந்த மேஜிக் எப்படி நடந்தது என்பதைத் தான் படத்தில் சொல்லியிருக்கிறார்கள்.


லண்டனை நோக்கி உலக கோப்பைக்காக விளையாடுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட குழு கிளம்புகிறது. அந்த குழுவின் நிர்வாகிக்கே அரையிறுதிக்கு முன்பே கிளம்பிவிடுவோம் என ”நம்பிக்கையுடன்” முடிவு செய்து மொத்த குழுவிற்கும் விமான டிக்கெட் எல்லாம் புக் செய்துவிடுகிறார். இது தான் அன்றைய மனநிலை.

ஆனால்… வெற்றியும் தோல்வியுமாக மெல்ல மெல்ல முன்னேறி அரையிறுதிக்கு முன்னேறி… பிறகு இறுதி போட்டியிலும் போராடி வென்று உலக கோப்பை வெல்வது வரைக்குமான போராட்டக் கதையை உற்சாகமாக சொல்லியிருக்கிறார்கள்.

நாற்பது ஆண்டுகளுக்கு முன்பான ஒரு நிகழ்வை மீண்டும் நிகழ்த்தி காட்டுவது என்பது பெரிய சவால் தான். அதே விளையாடுபவர்களைப் போலவே தோற்றம் உள்ளவர்களை தேடி, அதுவும் அவர்களுக்கு கிரிக்கெட் ஆட தெரிந்திருக்கவேண்டும். மேலும் அந்த சம்பந்தப்பட்டவரின் ஸ்டைலில் ஆடவேண்டும். தேர்ந்தெடுத்து, பயிற்சி தந்து… அதை அருமையாக நிகழ்த்தியும் காட்டி வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

கபில்தேவ் இந்த தொடரில் ஒரு விளையாட்டில் எல்லா விக்கெட்டுகளும் சட சடவென சரிய… ஒன்றை ஆளாய் நின்று 175 ரன்கள் அடித்து துவைத்திருப்பார். இது ஒரு உலக சாதனை. இந்த விளையாட்டை அப்பொழுது பிபிசி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்ததால் பதிவு செய்யவில்லை என்கிறார்கள். அதை பார்க்க வாய்ப்பில்லாதவர்களுக்கு இப்படம் மீண்டும் அந்த உற்சாகத்தை கொடுத்திருக்கிறது.

கபில் மொத்த குழுவையும் உற்சாகப்படுத்தி அழைத்து செல்லும் கேப்டனாக இருக்கிறார். அவருடைய ஓட்டை இங்கிலீஷை குழுவில் உள்ளவர்களே கேலி செய்கிறார்கள். ஆனால் உறுதியுடன் இருந்து அழைத்து செல்கிறார்.

நேரடியாக போட்டி, வெற்றி தோல்வி என இல்லாமல்… விளையாடுபவர்களின் உணர்ச்சிகள், குடும்ப உறுப்பினர்களின் மனநிலைகள், இந்திய ரசிகர்களின் உணர்ச்சிகள் என பல்வேறு அம்சங்களையும் சரியாக இணைத்திருக்கிறரர்கள்.

ஒரு வகையில் பார்த்தால்.. இந்த உலக கோப்பையில் வென்றதிலிருந்து தான்..
கிரிக்கெட் இந்தியாவில் பிரபலமாயிருக்கும் என நினைக்கிறேன். லண்டனில் தன்னுடைய ஆடையை லாண்ட்ரியில் போடப்போவதாக சொல்ல…குழுவில் இன்னொருவர் ”உனக்கு தினசரி கொடுக்கிற மொத்த பேட்டாவும் இதுக்கே காலியாகிவிடும்” என்பார். இந்தியாவில் குறிப்பிட்ட பகுதியில் மத ரீதியான வன்முறை நடக்கும் பொழுது.. பிரதமராக இருந்த இந்திரா “இந்த கிரிக்கெட் போட்டியை எல்லா கிராமங்களிலும் ஒளிபரப்புவதற்கு ஏற்பாடு செய்யுங்கள்” என்பார். அது பலனைத் தருவதாகவும் படத்தில் காட்டியிருப்பார்கள். கிரிக்கெட்டில் அரசியலை கலந்ததும்.. இப்பொழுது பல நூறு கோடிகள் கிரிக்கெட்டில் விளையாடுவதும் 80களிலேயே துவங்கிவிட்டது என புரிந்துகொள்ளலாம்.

இந்தப் படத்தை எப்பொழுதே நண்பரிடம் வாங்கி வைத்திருந்தேன். ஆனால் இப்பொழுது தான் பார்த்தேன். நமக்கு விளையாட்டில் அத்தனை ஆர்வம் இருந்ததில்லை. அதுவும் கிரிக்கெட்டுக்கு கொடுக்கிற முக்கியத்துவம் மற்ற விளையாட்டுக்களுக்கு கொடுக்காததாலேயே கிரிக்கெட் மீது செம கடுப்பு வேறு இருக்கிறது. இந்தப் படத்தை படம் வந்திருந்த பொழுது கிரிக்கெட் விரும்பிகளுடன் பார்த்திருக்கவேண்டும். மிஸ் பண்ணிவிட்டோம் என உணர்ந்தேன்.

மற்றபடி… படத்தில் நடித்த ரன்வீர் சிங் கபிலாகவும், தீபிகா கபிலின் துணைவியாராகவும், ஜீவா ஸ்ரீகாந்தாகவும் என பலரும் நடித்திருக்கிறார்கள். எல்லோரும் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

ஒரு இடத்தில்… விளையாடும் இடம் இலண்டன். இந்தியாவை ஆதிக்கம் செய்தவர்கள் என்பதால் இந்தியாவைச் சார்ந்தவர்களை குறைவாகவே நடத்துகிறார்கள். பத்திரிக்கையிலும் எழுதுகிறார்கள். அதற்காக ஒரு இடத்தில்… கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் “நாம் என்ன கோட்டாவிலா வந்திருக்கிறோம்” என சீற்றம் கொள்வார். இத்தனை வருடங்களாக கோட்டாவை கடுமையாக எதிர்த்தவர்கள் இப்பொழுது குறுக்கு வழியில் 10% கோட்டாவை அடைந்திருக்கிறார்கள்.

தமிழ் டப்பிங்கில் தான் பார்த்தேன். ஏனோ தானோ என செய்யாமல், நல்ல உழைப்பு கொடுத்திருக்கிறார்கள். ஒரு சில இடங்கள் மட்டும் சொதப்பல். இந்திய குழுவில் பந்து வீசுபவர் சிறப்பாக பந்து போடுவார். இதை இந்தியாவில் இருந்து பார்க்கும் அவருடைய அப்பாவிற்கு பத்து வயசு குறைந்திருக்கும் என சப் டைட்டிலில் வரும். ஆனால், தமிழ் வசனத்தில் பத்து வயது கூடியிருக்கும் என பேசுவார்கள். சரி ஒரு முறை என்றால் பரவாயில்லை. இறுதி ஆட்டத்திலும் அதே தப்பை மீண்டும் செய்திருப்பார்கள். இன்னொரு இடத்தில், ஒரு ஓவரில் நான்கு போர் (Four) என சப் டைட்டில் வரும். தமிழ் வசனத்தில் ”ஒரு ஓவரில் நான்கு சிக்ஸ்” என்பார்கள்.

ஹாட் ஸ்டாரிலும், நெட் பிளிக்சிலும் இருப்பதாக இணையம் சொல்கிறது. கிரிக்கெட் விளையாட்டு தெரியாதவர்களும் ரசிக்கும்படி எடுத்திருக்கிறார்கள். பாருங்கள்.

0 பின்னூட்டங்கள்: