அரவக்குறிச்சிக்கு வருவது இதுவே முதல்முறை. மதியப் பொழுது வந்து இறங்கினேன். மாப்பிள்ளை அலுவல் ரீதியான பழக்கம். நாளை திருமணம். இன்று வரவேற்பு. மாப்பிள்ளை வீட்டார் ஏற்பாடு செய்து கொடுத்த அந்த ஹோட்டலில் தங்கினேன். மாலை இன்னும் சில நண்பர்கள் வந்தனர். பெல் அடித்ததும்… வழக்கத்தை விட அதிக கனமான மெத்தை அது. அதனால் எழும் பொழுது கையை உந்தி எழுந்தேன். எழுந்த வேகத்தில் கட்டிலின் இடதுபுறத்தில் இருந்த கட்டிலின் ஒருமுனையில் நச்சென மோதினேன். ரஜினி சொன்னது போல கொஞ்சம் தலைச்சுத்தித்தான் போனேன்.
நெற்றியைத் தொட்டுப் பார்த்த பொழுது… லேசாக ரத்தம் வந்தது. கதவை திறந்ததும்.. பார்த்தவர்கள் கொஞ்சம் பதட்டம் அடைந்தார்கள். ஊரில் உள்ள மருத்துவரிடம் பேசினேன். ”டிடி ஊசி போட்டுக்கொள்ளுங்கள். போதும்” என்றார். ஹோட்டலின் எதிரேயே ஒரு டாக்டரைப் பார்த்து போட்டுக்கொண்டேன். கிளம்பும் பொழுது, அந்த ஹோட்டலில் வரவேற்பரையில்… அடிப்பட்டது குறித்து என சொன்னதை ஏதோ அவர்களின் மகத்தான சேவையை பாராட்டுவது போல ரிசப்சனில் இருந்த இளைஞன் கேட்டுக்கொண்டான். இப்படி வருகிற கஸ்டமர்களை எல்லாம் அடிப்பட்டு சந்தோசமாக அனுப்புங்க! தொடர்ந்து இங்கேயே தங்குவார்கள் என்றேன். அதற்கும் அமைதியாய் இருந்தான்.
இரண்டு நாட்கள் கழித்து… அண்ணாநகர் கிழக்கில் ஒரு வேலை தொடர்பாக போனேன். நெற்றியில் இருந்த காயத்தின் வலி இன்னும் இருந்தது. ஹெல்மெட் போட்டால் இன்னும் அதிகமாய் வலித்தது. ஆகையால் ஹெல்மெட் போடவில்லை. ஹெல்மெட் போடாமலேயே வீடு வந்து சேர்ந்துவிட்டேன்.
இரண்டு நாட்கள் கழித்து… ஒரு குறுஞ்செய்தி வந்தது. இரண்டு நாட்கள் முன்பு ஹெல்மெட் அணியாமல் சிக்னலில் காத்திருந்ததால்… அதற்கு தண்டனையாக ரூ. 100 என அபராதம் போலீசு போட்டிருந்தார்கள். அதற்கு சாட்சியாக என்னை பின்பக்கம் புகைப்படம் எடுத்து ஆதாரமாய் இணைத்திருந்தார்கள். புகைப்படத்தில் தெளிவாகவும், ஸ்டைலாகவும் இருந்தேன். தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில், அண்ணாநகரில் இந்த வசதியை ஏற்படுத்தியிருக்கிறார்கள் என பிற்பாடு தெரிந்துகொண்டேன்.
இந்த விசயத்தில் என் தரப்பு நியாயத்தை சொல்வதாக இருந்தால்… சொல்வதற்கு ஒரு வாரம் கொடுத்தார்கள். நெற்றிக்காயம், அதனால் ஹெல்மெட் போடவில்லை என அவர்களிடம் போய் சொல்வதற்கெல்லாம் எனக்கு நேரமுமில்லை. பொறுமையும் இல்லை. பணத்தை கட்டிவிடலாம் என அமைதியாய் இருந்துவிட்டேன்.
போலீசு சொன்னது போல, சரியாக ஒரு வாரம் கழித்து ஒரு சலானை போட்டு எனக்கு அனுப்பியிருந்தார்கள். (உங்களுக்கு ஆயிரத்தெட்டு பிரச்சனை இருக்கலாம்.) ஆனால் எங்களுக்கு ரூ. 1000 உடனே செலுத்தவும் என உத்தரவிட்டிருந்தது. அதிர்ச்சியாக இருந்தது. கண்ணாடியை துடைத்துக்கொண்டு திரும்பவும் பார்த்தேன். ரூ.1000 தான் உறுதி.
நான் சிக்னலை கடந்தது அக்டோபர் 19. அக்டோபர் 28 லிருந்து தான் ஒன்றிய அரசு மக்கள் மீது மிகுந்த அக்கறை கொண்டு. ரூ. 100 என இருந்த தண்டத்தொகையை ரூ. 1000 என கடுமையாக உயர்த்தியிருந்தார்கள். எல்லா ஊடகங்களிலும் செய்திகள் வந்தது. ரூ. 100 என்று இருந்த தண்டத்தொகை ரூ. 1000 என மாறுவது எவ்வளவு பெரிய வரப்பிரசாதம். அரசுக்கு மட்டுமில்லை. லஞ்சம் வாங்கும் அதிகாரிகளுக்குத்தான். புதிய உத்தரவு கொடுத்த சொல்ல முடியாத உற்சாகத்தில் தான் எனக்கும் ரூ. 100க்கு பதிலாக ரூ. 1000 என பில்லைப் போட்டு அனுப்பியிருக்கிறார்கள். ஏதும் முன் தேதியிட்டு சட்டத்தை திருத்தியிருப்பார்களோ என நானும் தமிழ், ஆங்கிலம் என நாலைந்து செய்தித்தாள்களை திரும்ப, திரும்ப படித்தேன். அப்படி ஏதும் இல்லை.
நமக்கு தெரிந்த ஒரு வழக்குரைஞரிடம் இது சம்பந்தமாக ஆலோசனை கேட்டேன். ”ப்ரீயா விடுங்க! பார்த்துக்கலாம்!” என ஆறுதல் சொன்னார். நாளை எங்கேயாவது அவசரமாக போய்க்கொண்டிருக்கும் பொழுது, வண்டியை நிறுத்தி ரூ. 1000 யை எடுத்து வை! ரூ. 1000 கூட இல்லைன்னா உனக்கு எதற்கு வண்டி. வண்டியை நிறுத்திவிட்டு கிளம்புன்னு சொன்னா என்ன செய்றது! என குழம்பினேன்.
முதலில் வந்த செய்தியையும், சலானை அனுப்பி வைத்த மின்னஞ்சலையும் திரும்பவும் படித்தேன். அதில் அவர்களுக்கான மின்னஞ்சல் ஒன்று இருந்தது. நடந்ததை எழுதி.. நான் ரூ. 100 கட்ட தயாராக இருக்கிறேன். எனக்கு சலானைத் திருத்தி அனுப்புங்கள் என ஒரு நமக்கு தெரிந்த ஒரு இங்கிலீசில் ஒரு கடிதம் எழுதினேன். உள்ளுக்குள் வண்டி வண்டியாக திட்ட்டினாலும்.. கடிதத்தின் கடைசியில் ”உங்கள் உண்மையுள்ள” என அடக்கமாய் முடித்திருந்தேன்.
அடுத்த பத்து நாளில் எனக்கு ஒரு பதிலை பொறுப்பாக அனுப்பியிருந்தார்கள். அதில் ”டியர் சார், மாலை வணக்கம். அரசு ஆணைப்படி (G.O. (MS) No. 758 (6) படி ரூ. 1000 என தண்டத்தொகையை உயர்த்தியிருக்கிறது. எங்களுடைய உயர் அதிகாரி தில்லியில் உள்ள NIC (Delhi) அலுவலகத்திற்கு கடிதம் எழுதியிருக்கிறார். கொஞ்ச நாட்கள் காத்திருங்கள்” என செய்தி இருந்தது.
போலீசு கடிதம் அனுப்பி வெற்றிகரமாக 100 நாட்கள் கடந்துவிட்டன. ஏதும் பதில் இல்லை. இதற்கிடையில்.. அம்பத்தூர் எஸ்டேட் உள்ள பைபாஸை ஒட்டி ஒரு அதிகாரி வண்டிகளை சோதனை செய்துகொண்டிருந்தார். வண்டியை ஓரங்கட்டி அவரிடம் போய் என் சோகக்கதையை கொஞ்சம் சோகமாக முகத்தை வைத்துக்கொண்டு சொன்னேன். இதை எப்படி சரி செய்வது என கேட்டேன். அவர் ”அண்ணாநகர் ரவுண்டானா அருகில் டிராபிக் போலீஸ் அலுவலகம் இருக்கிறது. அங்கு போய் கேளுங்கள்” என்றார்.
ஒரு வாரம் கழித்து.. அண்ணா நகர் ரவுண்டானா வரை ஒரு வேலையாக போயிருந்தேன். ரூ. 1000 நினைவுக்கு வந்தது. அங்கு இருந்த அதிகாரியிடம் மீண்டும் முதலில் இருந்து சுருக்கமாய் விளக்கினேன். ”இங்கிருந்து எழுதிய கடிதத்திற்கு, அவர்கள் மதிப்பளித்து… திருத்தி அனுப்பினால் தான் கட்டமுடியும். அதுவரை காத்திருங்கள்” என்றார். ”திடீரென இடையில் எங்கேனும் நிறுத்தி, பணத்தைக் கட்ட சொன்னால்.. என்ன செய்வது சார்?” என்றேன். ”இப்பொழுது விதி மீறுபவர்களுக்கு அபராதம் போடுகிறோம். அபராதம் வெயிட்டாக இருப்பதால்.. உடனே கட்டச் சொல்லி கட்டாயப்படுத்துவதில்லை. அப்போதைக்கு பணம் இல்லையென்றால்… பிறகு கட்டுங்கள் என அனுப்பிவிடுகிறோம். ஆனால் இப்படி ஒவ்வொருமுறையும் சொல்லித் தப்பிக்க முடியாது” என்றார் கறாராய்.
தமிழக அரசே ஒன்றிய அரசுக்கு பல கடிதங்களை எழுதிக்கொண்டிருக்கிறது. அதற்கே அவர்கள் பதில் தர மறுக்கிறார்கள். தமிழ்நாட்டில் இருந்து எந்த கடிதம் வந்தாலும் பதில் கிடையாது என முடிவில் இருந்தால் என்ன செய்வது? ஒரே ஆயாசமாய் இருக்கிறது.
இன்றைக்கு ஒரு பத்திரிக்கையாளர் தன் மோசமான அனுபவத்தை முகநூலில் பகிர்ந்துள்ளார். தன்னை போக்குவரத்து நேற்று போலீசு தடுத்து நிறுத்தியதாகவும்… எப்பொழுதோ அவர் பெயரில் ஒரு அபராதத்தை போட்டு கிடப்பில் வைத்திருந்ததாகவும், கட்டிவிட்டு போனால் தான் உண்டு என அடம்பிடித்ததாகவும், காரணம் தெரியாமல் ஒரு ரூபாய் கூட கட்டமாட்டேன் என இவரும் அடம்பிடித்திருக்கிறார். ஒருவழியாக தேடி, பழைய புகைப்படத்தை அந்த போலீசுகாரர் காட்டியிருக்கிறார். அந்தப் புகைப்படத்தை ஆராய்ந்தால், பத்திரிக்கையாளர் ஹெல்மெட் அணிந்திருக்கிறார். மற்ற விதிமுறைகளையும் பொறுப்பாக கடைப்பிடித்திருக்கிறார். எப்படி இவ்வளவு பொறுப்பாக இருக்கலாம் என அபராதத்தையும் போட்டு வைத்திருக்கிறார்கள். இப்படி எத்தனை மக்களிடம் அபராதம் என்ற பெயரில் கல்லாக் கட்டினார்களோ!
தினமும் ஆங்காங்கே வண்டி சோதனைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. தலையில் ஹெல்மெட் இருப்பதால், பெரும்பாலும் நிறுத்துவதில்லை. என்றைக்கு நிறுத்துவார்கள்? நடந்த பிளாஷ்பேக்கை எல்லாம் சொல்லலாம் தான். ஆனால் அவர்கள அதைக் கேட்கிற மனநிலையில் இருப்பார்களா? பொதுவாக மக்கள் பேசும் எதையும் கேட்கிற மனநிலையில் இருப்பதில்லை என்பது தான் போலீசின் இயல்பாக இருக்கிறது. போலீசுன்னா அப்படித்தான் என்கிறீர்களா!
0 பின்னூட்டங்கள்:
Post a Comment