> குருத்து: True Spirit (2023)

February 25, 2023

True Spirit (2023)



கடலில் தன்னந்தனியே உலகைச் சுற்றி வலம் வந்த இளம்பெண்ணின் உண்மை கதை


ஆஸ்திரேலியாவில் வசித்த குடும்பம் ஜெஸிக்காவுடையது. அம்மா, அப்பா, ஜெஸிக்காவுடன் இன்னும் மூன்று பிள்ளைகள்.

அவளுக்கு தன்னந்தனியே கடலில் உலகைச் சுற்றி வர ஆசை. பெற்றோர் பயப்படுகிறார்கள். அரசு அனுமதிக்க மறுக்கிறது. ஊடகங்கள் விமர்சனம் செய்கின்றன. இருப்பினும் அவள் உறுதியுடன் இருக்கிறாள்.

ஒரு ட்ரையல் போகும் பொழுது ஒரு சிறு விபத்து ஏற்படுகிறது. எதிர்ப்பு இருப்பது போல ஆதரவு கரங்களும் நீட்டுகிறார்கள்.

அந்த சிறு படகில் உற்சாகமாய் கிளம்புகிறாள். 7 மாதங்கள். 23000 நாட்டிக்கல் மைல்கள் பயணம் செய்யவேண்டும்.

புயல் வருகிறது. எதிர்கொள்கிறாள். காற்றே இல்லாமல் படகு ஒரு வாரத்திற்கு மேல் நகராமல் நிற்கிறது. அழுகிறாள்.

ஒரு பெரும்புயல் வருகிறது. இவ்வளவு தூரம் பயணம் செய்ததே சாதனை தான். அருகில் உள்ள துறைமுகத்தில் கரையேறிவிடு என்கிறார்கள் பெற்றோர், கோச் என எல்லோரும். புயலை எதிர்த்து நிற்காமல், புயலின் போக்கிலேயே பயணிக்கிறேன் என்கிறாள்.

பெரும்புயலை எதிர்கொண்டு உயிருடன் கரையேறினாளா என்பதை படம் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

16 வயதில் நாம் என்ன செய்வோம். 11ம் வகுப்பு படித்துக்கொண்டிருப்போம். இந்த வயதில் உலகை சுற்றவேண்டும் என நினைத்தால்... எவ்வளவு பெரிய விசயம்!

படகை சரி செய்ய யாரும் உதவிக்கு போக கூடாது போன்ற கறாரான நிபந்தனைகள் உண்டு.

18க்கு கீழ் வயது என்பதால் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டாலும் கணக்கில் வராது என சொல்லிவிட்டார்கள்.

படம் உண்மைக்கதை என்பதால்... அதற்குரிய தன்மையுடன் இருக்கிறது. இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு டாக்குமெண்ட்ரி என்ற உணர்வு வராமல் தவிர்த்திருக்கலாம்.

ஜெஸிக்காவாக நடித்தவர் சிறப்பு. மற்றவர்கள் உதவியிருக்கிறார்கள்.

நெட் பிளிக்சில் இருக்கிறது. தமிழ் டப்பிங்கில் இருக்கிறது. பாருங்கள்.

0 பின்னூட்டங்கள்: