முதல் காட்சி. அந்த வீட்டிலிருந்து ஒரு குடும்பம் அலறி அடித்து காரில் ஏறி தப்பித்து போகிறது.
ஒரு வருடம் கழித்து, விலை கொஞ்சம் குறைவாக கிடைக்கிறது என அந்த வீட்டை வாங்கி, அம்மா, அப்பா, உயர்நிலைப் பள்ளி செல்லும் வயதில் இரு பையன்கள் கொண்ட குடும்பம் வந்து சேர்கிறது.
அப்பா பல தொழில்கள் செய்து, தோற்றுப்போனவர். அடுத்து என்ன செய்வது என யோசித்து வருபவர். குடும்ப பிரச்சனைகளில் சின்னவன் தனிமை விரும்பியாக` இருக்கிறான். எதைச்சையாக மாடி அறைக்கு வரும் பொழுது, மத்திய வயது கொண்ட ஒரு ஆண் பேயாக வந்து பயமுறுத்துகிறது. பயப்படாமல் அவன் சிரிக்கிறான். அதை காணொளியாகவும் பதிவு செய்கிறான். அந்த பேய் பயந்து போய் மறைந்து கொள்கிறது.
அந்த காணொளியைப் பார்க்கும் அப்பா அதை யூடியூப்பில் பதிவேற்றுகிறார். உண்மையா பொய்யா என விவாதம் எழுகிறது. அதற்கு பிறகு அந்த பையன் அந்த பேயிடம் மெல்ல மெல்ல பழக துவங்குகிறான். அந்த பேய் அந்த வீட்டிற்குள் மாட்டிக்கொண்டு இருக்கிறது. அங்கிருந்து வெளியேறுவதற்கு உதவி செய்யவேண்டும் என நினைக்கிறான். இதற்கிடையில் அவ்வப்பொழுது பேயின் நடவடிக்கைகளைப் பதிவேற்ற, மக்களிடத்தில் பெரிய அளவில் பேசுபொருளாகிறது. காணொளி மில்லியன்களில் பெருகுகிறது. வருமானமும் வருகிறது. வாசலைத் திறந்தால் ஒரு குழு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் குரல் கொடுத்துக்கொண்டே இருக்கிறது.
சிஐஏ முன்பு பேய் சமாச்சாரங்களுக்கென்று நிதி கொடுத்து ஒரு துறையை உருவாக்கி வைத்திருக்கிறது. இடையில் அந்த துறை பயன்படவில்லை என்பதால், இழுத்து மூடிவிடுகிறார்கள். இந்த செய்திகளினால் மீண்டும் அந்த துறையை தூசித் தட்டி திறக்கிறார்கள்.
பிறகு என்ன ஆனது என்பதை சில பல கலாட்டாக்களுக்கு பிறகு கொஞ்சம் உணர்வுப்பூர்வமாகவும் முடித்திருக்கிறார்கள்.
****
பேயை வைத்து இங்கிலீசில் ஜாலியான படங்கள் வந்திருக்கலாம். ஆனால் தமிழில் தான் பெரிய கில்லாடிகள் இருக்கிறார்கள். விட்டாலாச்சர்யா துவங்கி, ராகவா லாரன்ஸ் வரை வரிசையாக இருக்கிறார்கள். பேய் என ஒன்று இருந்தால் இவர்களிடம் ராயல்டி வாங்கியே பெரிய ஆளாகியிருக்கும்.
பொதுவாக ஒரு படம் IMDBயில் ஏழு மார்க் பெற்றிருந்தால், பார்க்கலாம் என நம்பிக்கை வந்துவிடும். ஆனால் அதையே பேய் படங்களுக்கு வைத்தால்… வெகு சில படங்களே தேறும் என்பதால்… பேய் படங்களுக்கு மட்டும் ஆறு இருந்தாலே போதும் என பெருந்தன்மையாக ( ) முடிவு செய்திருக்கிறேன். அதன்படி இந்தப் படம் 6.2 மார்க் பெற்றிருந்ததால், பார்த்தேன். ரெம்பவும் மோசமில்லை என சொல்லலாம்.
இந்தப் படம் சிரிப்பூட்ட முயன்றிருக்கிறார்கள். ஆனால் பெரிதாய் வெற்றி பெறவில்லை. இப்படிப்பட்ட படங்களை எல்லாம் தேடித்தேடி ஏன் நெட்பிளிக்ஸ் வாங்குகிறது என தெரியவில்லை.
இளைய பையனாக வரும் Jahi Winston, மெல்லிய மனம் கொண்ட, பேச முடியாத பேயாக வரும் டேவிட் ஹார்பர், அவெஞ்சரில் Falconயாக வரும் Anthony Mackie அப்பாவாக அடக்கி வாசித்திருக்கிறார்.
நெட் பிளிக்சில் தமிழ் டப்பிங்கில் இருக்கிறது. நிறைய நேரம் இருக்கிறவர்கள் பாருங்கள்.
0 பின்னூட்டங்கள்:
Post a Comment