வகாண்டாவின் அரசன் உடல்நிலை சரியில்லாமல் இறக்கிறான். வகாண்டாவிற்கு பெரிய இழப்பு. வகாண்டாவில் உள்ள சக்தி மிகுந்த வைப்பரேனியம் உலக வல்லரசு நாடுகளின் கண்களை உறுத்திக்கொண்டே இருக்கிறது. பொதுச்சபையிலும் கேட்கிறார்கள். குறுக்குவழிகளிலும் அடைய முயல்கிறார்கள்.
இதற்கிடையில்… கடலுக்குள் வாழும் ஒரு குழு மக்கள் அறிவியலை வெறுப்பவர்கள். விஞ்ஞானி இருந்தால் தானே விஞ்ஞானம் வளரும் என்ற சிந்தனையில் அமெரிக்காவில் இருக்கும் ஒரு இளம் பெண் விஞ்ஞானியை கொலை செய்ய போகிறார்கள். அங்கு வகாண்டாவின் இளவரசி வந்து தடுக்கிறாள். கடல் வாழ் அரசனோடு பேச்சு வார்த்தையில் ஈடுபடுகிறாள். அந்த பெண் விஞ்ஞானியை கொலை செய்வதில் உறுதியாய் இருக்கிறான். அதை வகாண்டா தடுத்தால்… வகாண்டாவையும் தாக்குவேன் என்கிறான். அதற்கு ஏற்றார் போல் அவர்கள் வலுவோடு இருக்கிறார்கள். இந்த கடல்வாழ் குழு செய்வதை எல்லாம்… வகாண்டா தான் செய்கிறது என பிற நாடுகள் தப்பாகவும் நினைக்கிறார்கள்.
வைப்பரேனியத்தை அடைய உலக வல்லரசு நாடுகள் ஒரு பக்கம். மல்லுக்கு நிற்கும் கடல்வாழ் அரசன் ஒருபக்கம். வகாண்டா சமாளித்ததா? என முதல் பாதியில் நிறைய பேசியும், இரண்டாம் பகுதியில் சண்டைப் போட்டும் சொல்லியிருக்கிறார்கள்.
***
மார்வல் படங்களில் இதுவும் ஒன்று. சமீபத்திய வெளியான மார்வல் படங்களில் இந்தப் படம் தேறியது என்பேன். சொதப்பவில்லை. VFX நன்றாக செய்திருக்கிறார்கள்.
வகாண்டாவின் அரசனாக நடித்த Chadwick Boseman 2020ல் புற்றுநோய் வந்து 43 வயதில் இறந்துபோனார். இந்தப் படம் அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதத்தில் தான் எடுத்திருக்கிறார்கள்.
மார்வல் எடுக்கும் கதைகள் ஏற்கனவே காமிக்ஸாக வந்தது. அதைத் தான் படங்களாக எடுத்துக்கொண்டிருக்கிறார்கள் என புரிந்துகொண்டிருக்கிறேன். நம்மூர் சீரியல் போல நடப்பு விசயங்களை இப்பொழுதுள்ள ஆட்கள் அப்டேட் செய்து வெளியிடுவார்களா? மார்வல் பிரியர்கள் யாராவது சொன்னால் நல்லது.
இந்தப் படம் மார்வல் பிரியர்களை ஈர்க்கும். மார்வல் படங்களை தொடர்ந்து பார்க்காதவர்களுக்கு ஈர்க்குமா என தெரியவில்லை.
0 பின்னூட்டங்கள்:
Post a Comment