> குருத்து: Taken (2008) 96 மணி நேரத்தில் மகளை மீட்கவேண்டும்!

February 23, 2023

Taken (2008) 96 மணி நேரத்தில் மகளை மீட்கவேண்டும்!


நாயகன் அரசுக்காக உளவு வேலைப் பார்த்த சிஐஏ ஆள். வேலை வேலை என அலைந்து திரிந்ததில்… குடும்பத்தை கவனிக்காமல் விட்டதில்… துணைவியார் பிரிந்து வேறு ஒருவரை திருமணம் செய்துகொண்டுவிடுகிறார். இருவருக்கும் ஒரு மகள் இருக்கிறாள். துணைவியாருடன் இருக்கிறாள். இவர் தனித்து வாழ்கிறார்.


தன் சக வயது தோழியுடன் மகள் ஐரோப்பா சென்று ஊர் சுற்றிப்பார்க்க ஆசைப்படுகிறாள். அம்மா உடன்படுகிறார். பதினெட்டு வயது முடியவில்லை என்பதால், அப்பாவின் அனுமதியும் சட்டப்பூர்வமாகவே தேவைப்படுகிறது. ஊரு கெட்டுப்போய் இருக்கும் பொழுது, தன் மகளை உரிய பாதுகாப்பு இல்லாமல் அனுப்ப மறுக்கிறார். அம்மாவும், பெண்ணும் கோவித்துக்கொள்கிறார்கள். பிறகு இவர் அனுமதி தருகிறார்.

நாயகன் பயந்தபடியே ஊருக்கு போய் சேர்ந்தவுடனே ஆபத்து தொற்றிக்கொள்கிறது. விபச்சாரத்திற்காக பெண்களை கடத்தும் ஒரு கும்பல் இருவரையும் தூக்கிக்கொண்டு போகிறது. 96 மணி நேரத்திற்குள் மீட்டாகவேண்டும். இல்லையெனில்.. அதற்கு பிறகு மீட்பதெல்லாம் சாத்தியமேயில்லை.

தனக்கு உறவு என்று இருக்கும் தன் பிரியத்துக்குரிய ஒரே மகளை மீட்டாரா இல்லையா என்பதை பரபரவென ஆக்சன் காட்சிகளோடு சொல்லியிருக்கிறார்கள்.
*****

நேற்று விஜய் சேதுபதி, இயக்குநர் மணிகண்டன் இருவருடைய பேட்டியைப் பார்த்துக்கொண்டிருக்கும் பொழுது, நல்ல படம் பாருங்கள் என மணிகண்டன் சொன்னார். பார்த்தேன். பிடித்திருந்தது என்றார் விஜே.

நேற்று தேடியதில் கிடைத்தது. இரவேப் பார்த்துவிட்டேன். மனிதர்களை கடத்தி உடல் உறுப்புகளை திருடுவது, விபச்சாரத்தில் ஈடுபடுத்துவது என உலகத்தில் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கிறது. அதிகரித்துக்கொண்டும் இருக்கிறது. இது சம்பந்தமாக உலக அளவில் பல படங்களும், சில தமிழ் படங்களும் வெளிவந்திருக்கின்றன.

இந்தப் படம் ஒரு அப்பாவின் பாசம், பெண்ணை மீட்பதற்கான போராட்டம் என்பதை சரியாக இணைத்திருக்கிறார்கள். இந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு இரண்டு பாகங்கள் தொடர்ந்து எடுத்திருக்கிறார்கள். எப்படியிருக்கிறது என பார்த்தவர்கள் சொல்லுங்கள்.

நாயகனாக Liam Neeson இப்பொழுது எழுபது வயதை தொட்டுவிட்டார். XMen படத்தில் முக்கிய பாத்திரமாக வரும் Famke Janssen தான் துணைவியாராக வருகிறார். படத்தில் நடித்த அத்தனைப் பேரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

ஆக்சன் பிரியர்கள் பாருங்கள். பிடிக்கும்.

0 பின்னூட்டங்கள்: