> குருத்து: ஓடும் இரயிலில் ”குண்டு”!

February 20, 2023

ஓடும் இரயிலில் ”குண்டு”!




”நல்லவேளை. ரயிலில் இருந்து இறங்கிய அந்த இளைஞர் மீசையை மழித்து தாடி வளர்க்கும் சாயபு அல்ல. ஒரு வேளை அவர் மட்டும் முஸ்லிமாக இருந்திருந்தால் பிரேக்கிங் நியூஸ் இல் வெடிகுண்டு புரளி பற்றி தமிழகம் பேசும்படி மாறிவிட்டிருக்கும்.”

****

திருவள்ளூரில் ஒரு முக்கிய வேலை இருந்தது. அம்பத்தூர் வரை பைக்கில் வந்து, ஸ்டாண்டில் வண்டியை போட்டுவிட்டு ரயில் நிலையத்தினுள் நுழைந்தேன். ஞாயிறு என்பதால் பெரிய அளவில் கூட்டமில்லை. உடனே ரயில் வந்தது. ஏறினேன்.

உடனே ஒரு சீட்டும் கிடைத்து, அமர்ந்தேன். எதிரே ஒரு சீட்டில் ஒரு இளைஞர் அமர்ந்திருந்தார். அவருக்கு அருகே ஒரு பெரிய கட்டைப்பை இருந்தது. அதில் முக்கால்வாசி ஏதோ பொருள் இருந்தது. (இந்த கட்டைப் பையை நன்றாக உற்றுப் பார்த்துக் கொள்ளுங்கள்.) ரயில் செல்லும் திசைப் பார்த்து அமர்வது என் வழக்கம். மாறி உட்கார்ந்துவிடலாம் என என்ற எண்ணத்தில் ”அந்த கட்டைப்பை உங்களுடையதா?” என்றேன். ”இல்லை” என்றார். கட்டைப்பையை எடுத்து கீழே வைத்துவிட்டு, உட்கார்ந்துவிடலாம். உட்கார்ந்த சில விநாடிகளில் என் பை என் இடம் என யாராவது உரிமை கோரினால்.. உட்கார்ந்திருந்த சீட்டும் போய்விடுமே!. என்ற யோசனையில் அப்படியே உட்கார்ந்துவிட்டேன்.

அந்த இளைஞர் அடுத்து வந்த ஸ்டேசனில் இறங்க.. உடனே நடுத்தர வயது கொண்ட கணவன், மனைவி இருவர் உடனே எதிரே இருந்த இருக்கைகளில் அமர்ந்தனர். இப்பொழுதும் அந்த கட்டைப்பை அங்கேயே இருந்தது. அவர்களுக்கு உட்கார கொஞ்சம் சிரமமாய் இருந்தது. என்னைப் பார்த்து “இது உங்கப் பையா?” என கேட்டார் கணவர். ”என்னுடையது இல்லை” என்றேன். என் அருகில் இருந்தவர்களும் அமைதியாக இருக்க… ”எழுந்து போன இளைஞர் மறந்துவிட்டு போய்விட்டாரோ!” என சந்தேகம் எழுப்பினார். “அவரிடம் கேட்டுவிட்டேன். அவர் இல்லை என சொன்னார்” என்றேன்.

இதையெல்லாம் பக்கத்து சீட்டில் உட்கார்ந்துப் பார்த்துக்கொண்டிருந்த.. நடுத்தர வயது கொண்ட இராணுவத்தில் இருக்கிற அந்த மனுசன் “இங்குள்ள யாருக்குமே இந்தப் பையைப் பற்றி தெரியாதா?” என்றார் கொஞ்சம் சத்தமாய்! அதைச் சொல்லும் பொழுதே அவர் குரலில் சின்ன பதட்டம் இருந்தது. அங்கு உட்கார்ந்திருந்த யாருமே அந்தப் பையை உரிமை கொண்டாடவில்லை.

இன்னும் பதட்டமாகி “அதில் ஏதாவது டேஞ்சரா இருக்கப் போகுதுங்க!” என ஒரு பய குண்டைத் தூக்கிப்போட்டார். நம்மூரில் ஒரு கெட்டப் பழக்கம். பேய்க்கதை ஒன்று சொன்னால்… இன்னொருவர் ”இப்படித்தாங்க எங்கூர்ல!” என இன்னொரு டெரர் பேய்க்கதை ஒன்றை எடுத்துவிடுவார். அது போல அவர் சொன்னதும்… “ஆமாங்க! இப்பெல்லாம் ரயில்ல! கோயில்ல எல்லா இடத்துலயும் குண்டு வைக்கிறாங்க!” என பேசி பதட்டத்தை இன்னும் அதிகரித்தார் ஒரு நடுத்தர வயது பெண்மணி. இப்படி அடுத்தடுத்து ”அதைப்” பற்றி பேச ஆரம்பித்தனர்.

இந்த இராணுவத்தை சேர்ந்த மனுசன்.. இப்படி குண்டு என பேச்சைத் தொடங்கிவிட்டாரே தவிர…அதற்கு பிறகு ”அதை” என்னவென்று உறுதி செய்வதற்கோ அல்லது மக்களை காப்பாற்றவோ எதுவும் செய்யாமல்…அவர் கொண்டு வந்திருந்த அவர் பையை மடியில் எடுத்து வைத்துக்கொண்டு… இன்னும் பயத்தை ஏற்றிவிடும் தோரணையில் பேச ஆரம்பித்தார். இதென்னடா! வம்பா போச்சு! என அந்த கட்டைப்பையில் என்ன இருக்கிறது என பார்த்து சொல்லிவிடலாம் என துணிந்து நான் பையைத் தொட்டதும்… “சார்! சார்! யாருடைய பையுன்னே தெரியாம அதை எல்லாம் தொடாதீங்க. ரெம்ப டேஞ்சர் சார்” என்று என்னையும் பயமுறுத்தினார். எதிரில் அமர்ந்திருந்த கணவன், மனைவி இருவரில்… அந்த அம்மா அந்தப் பையை மேலோட்டமாக எட்டிப்பார்த்து… ”மேலே கொத்தமல்லி கட்டு மாதிரி தெரியுது!” என்றார். இந்த மனுசன் அந்தாளும் எதுவும் செய்யமாட்டேங்கிறான். நம்மையும் எதையும் செய்ய விடமாட்டேங்குறான்னு என கடுப்பு கடுப்பாய் வந்தது.


வெளியே செல்லும் கதவை ஒட்டி… சில இளைஞர்கள் நின்று கொண்டு பேசிக்கொண்டிருந்தனர். சிலர் காதில் ஹெட் போனுடன் நின்று செல்லை நோண்டிக்கொண்டிருந்தனர். ரயில் வேகமாக செல்வதால்… உட்கார்ந்திருந்த மக்கள் பேசும் எதுவும் அங்கு நின்றிருந்தவர்களுக்கு கேட்க வாய்ப்பில்லை. அந்த இராணுவ ஆள் சரியான பயந்தாங்கொள்ளியா இருந்துகொண்டு மத்தவங்களையும் தேவையில்லாமல் பயமுறுத்துறானே என அந்த ஆளை கொஞ்சம் முறைத்துக்கொண்டே… ”கொஞ்ச நேரம் ஏதும் பேசாம அமைதியா இருங்க! அங்கு நிற்பவர்களை கேட்டுப்பார்க்கிறேன்னு!” என எழுந்தேன். அங்கு இருந்தவர்களிடம் ஒவ்வொருவராக கட்டைப் பை உங்களுடையதா என கேட்டதில்.. வாசலை ஒட்டி தன் நண்பனிடம் ஜாலியாக பேசிக்கொண்டிருந்த ஒரு பையன்… ”அது என் பை தாண்ணா! அதை கீழே எடுத்து வைச்சுட்டு நீங்க உட்கார்ந்துக்கிங்க!” என்றான் கூலாக! “உள்ளே வந்து.. இது உன் பை தான் எல்லோர்கிட்டேயும் சொல்லு தம்பி!” என்றேன். எதற்காக சொல்கிறேன் என புரியாமல் உள்ளே வந்து என்னைப் பார்த்துக்கொண்டே அங்கு இருந்தவர்களிடம் ”இது என் பை தாங்க!” என்றான். இப்பொழுதும் அந்த இராணுவ ஆள் சற்றும் மனம் தளராமல்… “தம்பி! இவ்வளவு நேரம் உன் பையைப் பத்தித்தான் எல்லோரும் பேசிக்கொண்டு இருக்கிறோம்! உனக்கு எதுவுமே தெரியாதா!” என்றார் வாய் முழுவதும் பல்லாக!

அப்பாடா! இந்த ஆள் போட்ட பய குண்டிலிருந்து எப்படியோ தப்பிச்சுட்டோம். இனி நிம்மதியாய் பயணம் செய்யலாம் என… கையில் வைத்திருந்த புத்தகத்தை விட்ட இடத்திலிருந்து படிக்க ஆரம்பித்தேன். அதற்குப் பிறகு அந்த ஆள் இறங்கும் வரை வாயைத் திறக்கவேயில்லை!

நல்லவேளை. ரயிலில் இருந்து இறங்கிய அந்த இளைஞர் மீசையை மழித்து தாடி வளர்க்கும் சாயபு அல்ல. ஒரு வேளை அவர் மட்டும் முஸ்லிமாக இருந்திருந்தால் பிரேக்கிங் நியூஸ் இல் வெடிகுண்டு புரளி பற்றி தமிழகம் பேசும்படி மாறிவிட்டிருக்கும்.

புரளி, வதந்தி, கலவரம் என இவைகளையே திரும்ப திரும்ப செய்து மக்களை மோதவிட்டு, மனித உயிர்களை பலியிட்டு.. அதில் குளிர்காய்ந்து தான் இன்று ஆட்சியைப் பிடித்து ஆண்டு கொண்டிருக்கிறது காவி பயங்கரவாத கும்பல். ஆகையால் புரளி, வதந்தி, கலவரம் என எங்கு தொடங்கினாலும், அதை முளையிலேயே கிள்ளி எறிந்துவிடவேண்டும். அது ஒவ்வொருவருடைய கடமை.

0 பின்னூட்டங்கள்: