தோழி ஒருவர் மதுரையில் வசிக்கிறார். அவர் தன் அனுபவத்தை பகிர்ந்துகொண்டார்.
வழக்கம் போல மின்சார பில் வருகிறது. அதை என் கணவரிடம் தெரிவித்தேன். என் கணவர் ஜிபே மூலம் செலுத்திவிட்டு, வேலைக்கு போய்விட்டார்.
இரண்டு மாதம் நகர்கிறது. வழக்கம் போல மின்சார அளவீடு எடுப்பதற்கு அந்த மின்சார ஊழியர் வருகிறார். வாசலில் நின்றுகொண்டே, யாருக்கோ போன் செய்து, “கரண்ட் பில் கட்டலைன்னு, பீஸை பிடுங்கனும்! ஆனால் வீட்டை கண்டுபிடிக்க முடியலைன்னு சொன்னியே! அந்த வீடு இங்கத்தான் இருக்கு!” என்றார்.
ஏதோ ஒரு வீட்டைப் பற்றி சொல்கிறார் என நினைத்துக்கொண்டே இருக்கும் பொழுது, அந்த வயர்மேனும் எங்கள் வீடு வந்து சேர்ந்தார். “மேடம்! நீங்க கடந்த பில்லுக்கு இன்னும் பணம் கட்டலை! ஆகையால் இன்றைக்கே கட்டுங்க!” என்றார்.
”நாங்க பணம் கட்டிட்டேமே! அதற்கான ரசீது கூட வைச்சிருக்கேன்!” என சொல்ல… ”பணம் திரும்ப வந்திருக்கும். சரிப்பாருங்க! சரிப்பார்த்துவிட்டு, திரும்ப வந்திருச்சுன்னா… இன்றைக்கே பணத்தை கட்டிருங்க! இல்லைன்னா பீஸை பிடுங்கியிருவோம்!” என சொன்னார்.
உடனே, வங்கிக் கணக்கை சரிப்பார்க்க சொல்லி, கணவருக்கு சொன்னால், ”ஆமா! பணம் திரும்ப வந்திருக்கு!” என சொல்ல, உடனடியாக மின்சார பில்லுக்கு பணத்தை செலுத்திவிட்டேன். அதற்கான அபராதத் தொகையையும் சேர்த்து கட்டிவிட்டேன்.
அடுத்து தான் ஒரு பெரிய பூதம் கிளம்பியது. இந்த மாதம் எடுத்த பில்லுக்கு, பணம் கட்ட மின்சாரம் கட்டுவதற்கான தளத்திற்கு போனால், எந்த பில் தொகையையும் காட்டவில்லை. ஆகையால் கட்ட முடியவில்லை.
மின்சார அலுவலகத்துக்குப் போய் விசாரித்தால், கடந்த பில்லுக்கு இப்பொழுது தான் பணம் கட்டியதால், இந்த பில்லை கட்ட முடியாது. இனி அடுத்தப் பில் வரும் பொழுது தான் கட்டமுடியும் என்றார்கள்.
இதென்ன அநியாயம், அடுத்த பில் தான் கட்டமுடியும் என்றால், நான்கு மாதத்துக்கு சேர்த்து பெரிய தொகையாக வரும். எல்லாம் டிஜிட்டல் மயம் என்கிறார்கள். ஜிபேயில் செலுத்தி, அது போய் சேராமல், இவர்கள் சிஸ்டத்தின் படி, பீஸ் கட்டையை பிடுங்க போகிறேன் என சொல்லியிருந்தால், கட்டியிருப்பேன். அதையும் அவர்கள் செய்யவில்லை.
இவை எல்லாம் முடிந்து, அடுத்த பில்லுக்கு கணக்கிட வந்து, நாலு மாதத்துக்கும் சேர்த்து ரூ 11000 செலுத்தவேண்டும் என பெரிதாக ஷாக் கொடுத்தார்கள்.
இரண்டு இரண்டு மாதத்திற்கு பிரித்து எவ்வளவு எனச் சொல்லுங்கள். நான் கட்டிவிடுகிறேன். இவ்வளவுப் பணத்தை என்னால் கட்டமுடியாது. அது நியாயமும் இல்லை என சொன்னேன். என் நியாயத்தை கேட்பதற்கு அங்கு எந்த காதும் தயாராக இல்லை.
என்ன நடந்தது என முறையாக கடிதம் எழுதி, மேலதிகாரிக்கு கொண்டுப் போய் கொடுத்தால், அவரும் ”என்னால் ஒன்றும் செய்யமுடியாது. நீங்கள் கட்டத்தான் வேண்டும்” என்றார்.
இதற்கிடையில், பணம் கட்டவில்லை என்றால், பீஸ் கட்டையை பிடுங்க வேண்டிய பொறுப்பில் உள்ள லைன் மேன் “நான் தான் பீஸ் கட்டையை பிடுங்கியிருக்கவேண்டும். தேடித்தேடிப் பார்த்து, உங்கள் வீட்டை கண்டுபிடிக்கமுடியவில்லை. பிறகு மறந்து போனேன். இப்பொழுது நீங்கள் இந்தப் பிரச்சனையை எழுப்பினால், என் வேலையில் சிக்கல் செய்வார்கள். மெமோ கொடுப்பார்கள். நான் இப்பொழுது வீடு கட்டிக்கொண்டிருக்கிறேன். ஆகையால், நீங்கள் எவ்வளவு கட்டவேண்டும் என்பதை கணக்கிட்டு கொடுங்கள். மிச்சத்தை நானே போட்டு கட்டிவிடுகிறேன்” என வந்து தனிப்பட்ட முறையில் பேசினார்.
இதற்கிடையில், மின்சாரத் துறையின் தலைமை அலுவலகம் போய், புகார் கொடுக்கப் போனால், அங்கு இருந்த ஒரு அதிகாரி “நேரிடையாக இங்கு வந்து விட்டீர்கள். இடைப்பட்ட நிலையில் ஒரு அதிகாரியிடம் புகார் கொடுக்கவேண்டும்” என என்னிடம் சொல்லிவிட்டு, சம்பந்தப்பட்ட அலுவலரிடம் பேசினார். “அவர்கள் பணம் செலுத்தவில்லை என்றால், முறையாக தெரிவித்து, அவர்களை பணம் செலுத்த வைத்திருக்கவேண்டும். அதை விட்டுவிட்டு, இப்படி செய்திருக்கிறீர்களே! உங்க வீட்டுக்கு இப்படி செய்வீர்களா? அவர்கள் நுகர்வோர் நீதிமன்றத்திற்கு போனால், நீங்கள் நால்வரும் தான் நிற்கவேண்டும்.” என பேசினார்.
அடுத்தநாள், மின்சார அலுவலகம் போனால், மீண்டும் பழைய நிலைக்கே வந்துவிட்டார்கள். ”நீங்கள் பணம் கட்டித்தான் ஆகவேண்டும்.” என பழைய பல்லவியே பாடத் துவங்கினார்கள். ”நான் கோர்ட்டுக்கு போவேன். நீங்க நாலு பேர் வந்து அங்கு பதில் சொல்லுங்கள்” என சொல்லிப்பார்த்தேன். எதுவும் அவர்களை அசைக்கவில்லை. அல்லது அசைக்காதது மாதிரி நடித்தார்கள்.
அந்த லைன் மேன், “இது என்னுடைய தவறு. நாமே பேசி சரி செய்துவிடலாம் என்றேன். நீங்கள் இப்பொழுது அடுத்தடுத்த நிலைக்கு போகிறீர்கள். இப்பொழுது எனக்குத்தான் சிக்கல். ஆகையால், நான்கு மாத கணக்கை, இரண்டு இரண்டு மாதங்களாக பிரித்து என்ன தொகை வருகிறதோ, அந்தத் தொகையை என்னிடம் கொடுங்கள். மீதிப்பணத்தைப் போட்டு நான் கட்டிவிடுகிறேன்” என்றார்.
இறுதியில், ஆறாயிரத்தை அவரிடம் கொடுத்து, லைன் மேன் கூடுதலாக பணத்தை போட்டு, கட்டிவிட்டு, என்னிடம் ரசீது தந்தார்.
இப்படியாக இந்தப் பிரச்சனை முடிந்தது என என்னிடம் தெரிவித்தார். கூடுதலாக கட்டியப் பணத்தை அடுத்த மாதம் போல அவரிடம் கொடுக்கலாம் என இருக்கிறேன் என தெரிவித்தார் தோழி.
ஆக, இந்த நிகழ்வில், பெற்ற பாடம் என்பது இது தான்.
ஜி.பே போன்றவற்றின் மூலமாக பணம் செலுத்தினால், அந்தப் பணம் மின்சாரத்துறைக்கு போய்விட்டதா என நாம் ஒருமுறைக்கு, இருமுறை நன்றாக சோதித்துக்கொள்ளவேண்டும். இல்லையெனில், சிக்கல் தான்.
மின்சாரத்துறையும் தன் கடமையை சரியாக செய்யாது. அது செய்யும் சிக்கல்களுக்கும் சேர்த்து நாம் தாம் தண்டத்தை அழவேண்டும்.