November 5, 2009
தங்கம் விலை எகிறுவது ஏன்? - பாகம் 2
முன்குறிப்பு : தங்கம் விலை தொடர்ந்து ஏறிக்கொண்டே வருவதில், பல காரணிகள் இருக்கின்றன. அதில் தங்கம் எதற்காக என்று கேள்வி எழுப்பி, கட்டுரையில் பதிலளித்திருக்கிறார் செல்லமுத்து குப்புச்சாமி. இந்த கட்டுரை உயிர்மை தளத்தில் வெளிவந்தது. படித்து விட்டு தங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி.
//தக்காளி, வெங்காயத்தைப் போல தங்கத்தின் விலையை அதன் உற்பத்திக்கும் தேவைக்குமான சமன்பாடு தீர்மானிப்பதில்லை. தங்கத்தின் தேவை என்பது 'ஆபரணத்திற்கான பயன்பாடு' என்ற சங்கதியைச் சார்ந்தது மட்டுமல்ல. பல காரணிகள் அதைத் தீர்மானிக்கின்றன. சவரன் கணக்கில் நகை வாங்குவதெல்லாம் தாண்டி உலகத்தில் உள்ள எல்லா நாடுகளின் மத்திய வங்கிகளும் (நமது ரிசர்வ் வங்கியைப் போல) தங்கத்தை வாங்கிக் குவிக்கின்றன. //
****
தங்கம் எதற்காக? செல்லமுத்து குப்புசாமி
ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வியாக்கியானம் சொல்லப்படுகிறது. விளைவுகளுக்கான காரணிகளும், காரணிகளினால் ஏற்படும் விளைவுகளும் புதிது புதிதாகக் கண்டறியப்படுகின்றன அல்லது புதுப்பிக்கப்படுகின்றன. மழை பெய்தால் சிமெண்ட் கம்பெனிகளின் இலாபம் குறையும்; வட்டி வீதம் அதிகரித்தால் வங்கிகளின் பங்குகள் சரியும்; கச்சா எண்ணெய் விலை ஏறினால் ஷேர் மார்க்கெட் சறுக்கும். இப்படியெல்லாம் ஒவ்வொருவர் மீதும் ஒரு கற்பிதம், ஒரு வாய்ப்பாடு சுமத்தப்படுகிறது. அல்லது அது மாதிரியான கற்பிதத்தை அவர்களே விரும்பி ஏற்றுக்கொண்டு தமக்கும் பண்டிதத்தனம் வந்து விட்டதாகக் கருதுகிறார்கள்.
கச்சா எண்ணெய்க்கும், உலகலாவிய பங்குச் சந்தைகளுக்கும் எதிர்மறையான நிரந்தரத் தொடர்பு இருப்பதாக நம்பப்பட்டது. அப்படியே நடக்கவும் செய்தது. ஆனால் பங்குச் சந்தை, கச்சா எண்ணெய், ரியல் எஸ்டேட் என யாவும் ஒரு சேரக் குறைவதுகூடச் சாத்தியமே என்று கணித்தவர்கள் வெகு சிலரே. அப்படிப்பட்ட சூழலே பொருளாதாரத் தேக்கம் அல்லது பின்னடைவு என உருமாற்றம் கொள்கிறது, தற்போதைய சூழலைப் போல. எல்லாமே ஒரு சேரச் சரிந்தாலும் தங்கம் மட்டும் ஸ்டெடியாக நிமிர்ந்து நிற்கிறது.
இந்த உலகத்திலேயே உபயோகம் மிகுந்த உலோகங்களைப் பட்டியலிட்டால் அதில் இரும்பு அதிமுக்கியமான இடத்தைப் பெறும். உபயோகம் இல்லாத உலோகங்களைப் பட்டியலிட்டால் அதில் தங்கத்திற்கு மிக முக்கியமான இடம் உண்டு. இருந்தாலும் அதற்கு ஏகப்பட்ட கிராக்கியும், மதிப்பும் வாய்க்கிறது. துருப்பிடிக்காத, ஜொலிப்பான, அடர்த்தியான உலோகமாக அனைவரையும் ஈர்க்கிறது. பன்னெடுங்காலமாக செல்வத்தின் அடையாளமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு வந்திருக்கிறது. ஷேர் மார்க்கெட், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட முதலீடு செய்வதற்கு ஏதுவான அனைத்து உபகரணங்களோடும் ஒப்பிடப்படும் ஒரு பொருள் உண்டென்றால் அது தங்கத்தைத் தவிர வேறேதும் இல்லை.
அத்து அவசரத்துக்கு ஆகும் என்றுதான் நம் ஊரில் காலங்காலமாக தங்க நகைகளைச் சேகரிக்கும் கலாச்சாரத்தைப் பேணுகிறோம். ஷேர் வாங்கினால் முறைக்கும் மனைவிமார்கள், செய்கூலி சேதாரத்திற்கு 20 சதவீதம் போனாலும் பூரிப்போடு பொன்னகையை வரவேற்கிறார்கள். நம்மைப் பொறுத்த மட்டில் 'பொன்' என்பது வெறும் முதலீடு என்ற அளவோடு நின்று விடுவதில்லை. அது சமூக அந்தஸ்தின் அடையாளமாகவும், சேமிப்பின் வடிவமாகவும், எப்போது வேண்டுமானாலும் விற்க முடிகிற தன்மையோடும் திகழ்கிறது. அப்பழுக்கில்லாத மனிதனை, பத்தரை மாற்றுத் தங்கம் - அல்லது 24 காரட் தங்கம் - என்கிறோம்.
ஆபரணக் கண்ணோட்டத்தைத் தவிர்த்துவிட்டு தங்கத்தை முதலீட்டுக் கண்ணோட்டத்தோடு நோக்க வேண்டியது அவசியம். (அப்படி நோக்கும் போது காதலிகளைப் பக்கத்தில் வைத்துக்கொள்ள வேண்டாம்) உண்மையைச் சொல்ல வேண்டுமானால் தங்கம் என்பது இரும்பைப் போல பூமியில் இருந்து வெட்டி எடுக்கப்படும் ஒரு உலோகம். அதன் மதிப்பு அல்லது விலை என்பது அதை வெட்டி எடுப்பதற்கு ஆகும் செலவுக்குச் சமமாக இருக்க வேண்டும். வெங்காயத்தை விளைவித்து சந்தைக்கும் கொண்டு வருவதற்கு ஆகும் செலவு வெங்காயத்தின் விலையை நிர்ணயிப்பது போல, இரும்பை வெட்டி எடுக்க ஆகும் செலவு அதன் விலையை நிர்ணயிப்பது போல, தங்கத்தை வெட்டியெடுக்க ஆகும் செலவுதான் அதன் விலையை நிர்ணயிக்க வேண்டும். ஆனால் பெரும்பாலான சமயங்களில் அப்படி நடப்பதில்லை. ஒரு லாரி வெங்காயத்தையோ, பத்து டன் இரும்புக் கம்பியையோ நாம் பத்து வருடத்திற்கு சேமித்து வைப்பதில்லை. ஆனால் தங்கத்தை சேர்த்து வைக்கிறோம். சிறிதளவே தேவைப்படுகிற இடம், ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு சுலபமாக எடுத்துச் செல்லும் வசதி, காலத்தால் அழியாத தன்மை மற்றும் இயல்பாகவே தங்கத்தின் மீது பெண்களுக்கு உள்ள மோகம் ஆகியன
தங்கத்தின் தேவையை நிர்ணயித்து அதன் விலையையும் நிர்ணயிக்கின்றன.
ஆக தங்கத்தின் தேவை என்பது அதன் பயன்பாடு சார்ந்தது மட்டுமல்ல. நகை வாங்குவதற்குச் சொல்லப்படும் முதன்மையான காரணம் 'பணவீக்கத்தைச் சமாளிப்பது'. உண்மையே! எப்படியானாலும் பணத்தின் மதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே போகும், அதாவது விலைவாசி ஏறிக்கொண்டே போகும். பணத்தை அப்படியே வைத்திருப்பதற்குப் பதிலாக தங்கத்தில் போடலாம். விலைவாசி ஏற்றத்திற்கு எதிரான இன்சூரன்ஸ் என்றுகூட இதைக் கருதலாம்.
ஆனாலும் தங்கத்தை சேமிப்பாகக் கருத வேண்டுமே தவிர முதலீடு என்று ஏற்றுக்கொள்ள முடியாது என்ற வாதத்தை ஏற்க வேண்டும். பணத்தை ஒரு நிறுவனத்தில்/தொழிலில் இட்டால் அதன் மூலம் உற்பத்தி கூடுகிறது. வேலை வாய்ப்பு ஏற்படுகிறது. தேசத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு அது உதவுகிறது. அப்படிப் போடும் பணத்திற்கு இலாபமும் கிடைக்கிறது. 'முதலீடு' என்பதன் உண்மையான பொருள் இதுதான். அப்படிச் செய்யாமல் நாட்டில் இருக்கிறவர்கள் எல்லோரும் தங்கத்தை வாங்கி வைத்துக்கொண்டு அல்லது ஒருவர் மாற்றி ஒருவர் தங்கத்தை விற்றுக்கொண்டும் வாங்கிகொண்டும் இருந்தால் உற்பத்தி எப்படிப் பெருகும், வேலைகள் எப்படிப் பெருகும்? சேமிப்பதைவிட முதலீடு செய்வதே நாட்டிற்கு மட்டுமல்லாமல் தனி நபருக்கும் நல்லது.
பொருளாதாரம் வலுவாக இருக்கும் போதும், வளரும் போதும் தொழில் முயற்சிகளில் அல்லது பங்குகளில் பணம் போடலாம். மேலே சொன்னது போல அது முதலீடு. வருங்காலத்தில் ஏற்படவிருக்கும் தொழில் வளர்ச்சியின் ஒரு அலகுதான் பங்கு. பெரும்பாலும் இது எதிர்காலம் குறித்தானது, எதிர்கால வளர்ச்சி குறித்தானது. ஒளிமயமான எதிர்காலம் புலப்படும் போது எல்லோருமே இப்படி முதலீடு செய்வதைக் காண்கிறோம். ஆனால் பொருளாதாரம் தேக்க நிலை அடையும் போதும், எதிர்காலம் குறித்தான கவலைகள் தோன்றும் போதும் மக்களுக்கு எழுகிற பிரதானமான கேள்வி, நிலையில்லாத எதிர்காலத்தை நம்பியிருப்பதா அல்லது நிலையான நிகழ்காலத்தைப் பாதுகாப்பதா என்பதே. முதலீடு வாயிலாகக் கிடைக்கப்போகும் இலாபம் என்பது எதிர்காலம் சம்மந்தப்பட்டது. அதைவிட நிகழ்காலத்தில் இருப்பதைச் சேமிப்பதே முக்கியத்துவம் பெறுகிறது. ஒரு நிறுவனத்தின் எதிர்கால இலாபத்தைக் குறிக்கும்
அதன் 'பங்குகளை'விட, நிகழ்காலத்தில் குறிப்பிட்ட மதிப்புள்ள ஒரு பொருளைச் சேமிப்பதை மக்கள் நாடுவது நடந்தேறுகிறது. ஒரு கிராம் தங்கத்தில் எவ்வளவு என்ன இருக்கிறது என்பதை உறுதியாக எடை போட்டுச் சொல்ல முடியும். ஆனால் ஒரு இன்ஃபோசிஸ் ஷேரில் என்ன இருக்கிறது என்பதை யாராலும் உறுதியாகச் சொல்ல முடியாது. ஆகவேதான் பொருளாதாரத் தேக்க நிலை என்று வரும் போது தங்கத்தின் மவுசு ஏகத்திற்கு ஏறிப்போகிறது.
தக்காளி, வெங்காயத்தைப் போல தங்கத்தின் விலையை அதன் உற்பத்திக்கும் தேவைக்குமான சமன்பாடு தீர்மானிப்பதில்லை. தங்கத்தின் தேவை என்பது 'ஆபரணத்திற்கான பயன்பாடு' என்ற சங்கதியைச் சார்ந்தது மட்டுமல்ல. பல காரணிகள் அதைத் தீர்மானிக்கின்றன. சவரன் கணக்கில் நகை வாங்குவதெல்லாம் தாண்டி உலகத்தில் உள்ள எல்லா நாடுகளின் மத்திய வங்கிகளும் (நமது ரிசர்வ் வங்கியைப் போல) தங்கத்தை வாங்கிக் குவிக்கின்றன.
இருக்கிற பணத்தைத் தங்கமாக மாற்றி வைத்திருந்தால் அந்தப் பணத்தின் மதிப்பு சரியாமல் காப்பாற்றப்படுமே தவிர அது உயராது என்பதையே கடந்த காலம் நமக்குப் புலப்படுத்துகிறது. நீண்ட கால அடிப்படையில் பணவீக்கத்தைக் கணக்குப் போட்டுப் பார்த்தால் தங்கத்தில் செய்த சேமிப்பு ஏறத்தாழ அதே அளவில் மட்டுமே இருந்திருக்கும். ஆனால் இது சீராக இருந்ததில்லை. அதாவது பணவீக்கம் எந்த அளவுக்கு கூடுகிறதோ அதே அளவு தங்கத்தின் விலை கூடியதில்லை. பணவீக்கம் குறையும் போது அதே அளவுக்குக் குறைந்ததும் இல்லை. தங்கத்தின் விலை கூடுவதற்கும் குறைவதற்கும் பொருளாதார நிலைத்தன்மை முக்கியமான காரணியாக இருந்து வந்திருக்கிறது.
உதாரணத்திற்கு அமெரிக்க டாலரைக் கருதுவோம். பல காலமாக டாலர் கரன்சியின் புன்புலமாகத் தங்கம் செயல்பட்டது. 1 அவுன்ஸ் தங்கம் = 35 டாலர் என்று அமெரிக்கா நிர்ணயித்திருந்தது. அந்த நாட்டு கஜானாவில் அவ்வளவு தங்கம் இருந்தது. அப்போதெல்லாம் டாலர் என்பது நிஜமாலுமே as good as gold. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு 1945 தொடங்கி சுமார் 1970 களின் ஆரம்பம் வரை இதே அளவில் தங்கத்தின் விலை நிலவியது. அதன் பிறகு டாலரைத் தங்கமாக மாற்ற முடியாத சூழ்நிலைக்கு அமெரிக்கா தள்ளப்பட்டதும் தங்கத்தின் விலை டாலர் கணக்கில் உயரத் தொடங்கியது. 1980 ஜனவரியில் அதிகபட்சமாக ஒரு அவுன்ஸ் 850 டாலர். 1970 களின் பொருளாதாரச் சூழல் அப்படி.
பிறகு எதிர்காலம் ஒளிமயமாக அனைவருக்கும் தோன்றியது. பங்குகள் உயர்ந்தன. தங்கம் சரிந்தது. படிப்படியாகக் கீழே இறங்கி வந்து 1999 இல் ஒரு அவுன்ஸ் வெறும் 252 டாலருக்கு இறங்கியது. 'டாட் காம் குமிழ்' என்று சொல்லப்படுகிற கணினி நிறுவனங்களின் பங்குகள் முன்னெடுத்துச் சென்ற மாபெரும் ஷேர் மார்க்கெட் விலையேற்றத்தின் மும்முரமான நாட்கள் அவை. குமிழ் உடைந்து பங்குச் சந்தைக்கும், பொருளாதாரத்திற்கும் கஷ்ட காலம் மீண்டும் வந்த போது தங்கம் மறுபடியும் ஏறியது. தங்கம் தனது 1980 உச்சக் கட்ட விலையை இந்த ஆண்டு ஜனவரி மூன்றாம் தேதி மீண்டும் எட்டிப் பிடித்தது. அதன் பிறகு மார்ச் மாதம் ஆயிரம் டாலரையும் எட்டியது. என்னதான் ஆயிரம் டாலர் என்றாலும், 1980 விலையைக் காட்டிலும் குறைவே என்கிறார்கள். பணவீக்கத்தைக் கணக்கிட்டுப் பார்த்தால் 1980 இல் 850 என்பது இப்போது 2,400 என்று சொல்கிறார்கள்.
அப்படிப் பார்த்தால்கூட 1980 விலையின் பாதியில்தான் இப்போது இருக்கிறோம். ஆனால் தற்போதைய உலகப் பொருளாதாரச் சிக்கல் அப்போதைய சூழலைக் காட்டிலும் மோசமானதா என்றும், அப்படி இருந்தால் தங்கத்தின் விலை மேலும் ஏறக் கூடுமே என்றும் ஒரு தரப்பினர் விளக்கம் கொடுக்கிறார்கள். கவனிக்க வேண்டிய விஷயம்.
தங்கத்தின் முதன்மையான சந்தை இலண்டன் மாநகரம். அங்கே நாளுக்கு இரண்டு முறை விலை நிர்ணயிக்கிறார்கள். தங்கத்தின் விலையைத் தீர்மானிப்பது ஆபரணம் செய்வதற்கான தேவையைக் காட்டிலும், தேசங்களின் மத்திய வங்கிகள் மற்றும் ஏனைய நிதி நிறுவனங்கள் வாங்கி விற்கும் செயலே ஆகும். மத்திய வங்கிகள் தங்கத்தை வாங்கிச் சேகரிப்பது அந்தந்த தேசங்களின் கரன்சி மதிப்பு நிலையாக இருக்க வேண்டும் என்பதற்கே. மேலும் 1991 சமயத்தில் வெறும் இரண்டு வார இறக்குமதிக்குத் தேவையான அளவு மட்டுமே அந்நியச் செலவாணியை இந்தியா வைத்திருந்த போது ரிசர்வ் வங்கிக் கையிருப்பில் இருந்த தங்கத்தை இரண்டு விமானத்தில் ஏற்றி பேங்க் ஆஃப் இங்கிலாந்திற்கு அனுப்பி அடமானம் வைத்த நிகழ்ச்சி 'தங்கம் எதற்காக?' என்ற கேள்விக்கு விடை தருகிறது.
2004 கணக்குப்படி மனித குல வரலாற்றில் அது வரை தோண்டியெடுக்கப்பட்ட மொத்தத் தங்கம் என்று கணிக்கப்படுகிற சுமார் 1,60,000 டன்னில் கிட்டத்தட்ட 19 சதவீதம் பல்வேறு மத்திய வங்கிகள் வசம் இருந்தன. அதில் முதலிடம் அமெரிக்காவிற்கு. இந்தியாவிற்கு 14 ஆவது இடம். உலகத்திலேயே அதிகமாகத் தங்கம் வைத்திருப்பது அமெரிக்கா என்றால் அதிகமாகத் தோண்டி எடுப்பது தென்னாப்பிரிக்கா. 1886 ல் இருந்தே அந்த ஆப்பிரிக்க அடிமை தேசம் கணக்கில்லாமல் தங்கத்தைத் தோண்டி உலகத்திற்குக் கொடுத்துள்ளது. சுரங்க வேலைக்குப் போனவர்கள் உருவாக்கிய ஜொகன்னஸ்பர்க் நகரம் அந்த நாட்டின் மிகப் பெரிய ஊர்களில் ஒன்றாக உருவெடுத்தது. கேப்டவுன் நகரம் 200 ஆண்டுகளில் எட்டிய வளர்ச்சியை ஜொகன்னஸ்பர்க் வெறும் பத்தாண்டுகளில் எட்டியது. 1970 ஆம் வருட உலக உற்பத்தியில் தென்னாப்பிரிக்காவின் பங்கு மட்டும் 79 சதவீதம்.
நன்றி : உயிர்மை
****
பின்குறிப்பு : இந்த கட்டுரையின் இறுதியில் சில உதிரி தகவல்கள் இருக்கின்றன. கட்டுரையின் நீளம் கருதி... அடுத்த பதிவிடுகிறேன். உடனே படிக்க வேண்டும் என விரும்புவர்கள் உயிர்மை லிங்கை கிளிக்கவும். நன்றி.
Subscribe to:
Post Comments (Atom)
1 பின்னூட்டங்கள்:
சோதனை
Post a Comment