> குருத்து: தங்கம் - விலை எகிறுவது ஏன்? - பாகம் 3

November 12, 2009

தங்கம் - விலை எகிறுவது ஏன்? - பாகம் 3குறிப்பு : தங்கம் விலை தொடர்ந்து ஏறிக்கொண்டே வருவதில், பல காரணிகள் இருக்கின்றன. அதில் தங்கம் எதற்காக என்று கேள்வி எழுப்பி, கட்டுரையில் பதிலளித்திருக்கிறார் செல்லமுத்து குப்புச்சாமி. இந்த கட்டுரை உயிர்மை தளத்தில் வெளிவந்தது. முதல் பகுதியை இரண்டாம் பாகத்தில் பார்த்தோம். அதனுடைய தொடர்ச்சியைப் படித்து விட்டு தங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி.

****

தங்கம் எதற்காக? - செல்லமுத்து குப்புச்சாமி

உதிரித் தகவல்.

- பெரும்பாலான தங்க வயல்கள் ஒரு டன் தாதுவிற்கு 1 முதல் 5 கிராம் வரை தங்கம் கொண்டிருக்கின்றன. அதாவது பத்து இலட்சம் துகள்களில் 1 முதல் 5 துகள்கள் தங்கமாக இருக்கலாம். இதெல்லாம் மண்ணில் உள்ள தங்கம். கடல் நீரில்கூடத் தங்கம் இருக்கிறது தெரியுமா உங்களுக்கு? ஆயிரம் கோடியில் ஒன்றிரண்டு பங்கு தங்கம் அதில் செறிந்திருக்கிறது. முதலாம் உலகப் போருக்குப் பிறகு கடல் நீரில் இருந்து தங்கம் பிரித்தெடுக்கும் முயற்சி Fritz Haber என்ற விஞ்ஞானியின் முயற்சியால் ஜெர்மனியில் நடந்தது. பொருளாதாரச் சாத்தியமின்மை காரணமாக அது கைவிடப்பட்டது.

- தங்கம் பாதரசத்தைத் தவிர வேறு எதிலும் கரையாது. அதனோடு கலக்கப்படும் வெள்ளி முதலிய உலோகங்கள் நைட்ரிக் அமிலத்தில் கரையும். எனவே அந்த அமிலத்தில் தங்கத்தை கரைத்துப் பார்த்தால் சுத்தத் தங்கம் போக மற்றதெல்லாம் கரைந்து போகும். கரையாமல் அப்படியே இருந்தால் அது சுத்தத் தங்கம். இதனை 'அமிலப் பரிசோதனை' (acid tect) என்கிறார்கள். தனி மனிதனோ அல்லது நிறுவனங்களோ பெரிய சிக்கலை எதிர்நோக்கும் போது அதை acid test என்று வேடிக்கையாகவும் சொல்வதுண்டு, தீக்குளித்து தன் பரிசுத்தத்தை நிரூபித்த சீதையை நாம் அடிக்கடி உதாரணத்திற்கு இழுப்பது போல.

*********************

அதிகமாக உற்பத்தி செய்வது தென்னாப்பிரிக்காவாக இருக்கலாம். அதிகம் வைத்திருப்பது அமெரிக்காவாக இருக்கலாம். ஆனால் ஆபரணத்திற்காக அதிகம் பயன்படுத்துவது இந்தியாவே! நமது வருடாந்திய கோல்டு ஜூவல்லரி சந்தையின் மதிப்பு ரூ 50,000 கோடிக்கு மேல். உலக
அரங்கில் எந்த நாட்டிலும் இந்த அளவிற்குக் கிடையாது. ஒவ்வொரு வீட்டிலும் உள்ள ஒட்டு மொத்தத் தங்கத்தின் அளவைக் கணக்கில் கொண்டால் ரிசர்வ் வங்கி வைத்திருப்பதைவிட, அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் வங்கி வைத்திருப்பதைவிட நம் மக்களிடம் அதிகமாக இருந்தாலும் வியப்படைவதற்கில்லை.

சுத்தத் தங்கத்தை அப்படியே நகை செய்யப் பயன்படுத்த முடியாது. தங்கத்தின் தரத்தை 'காரட்' கணக்கில் குறிக்கிறோம். 24 காரட் என்றால் முழுக்க முழுக்க தங்கம். ஆனால் அதன் கடினத்தன்மை குறைவு என்பதால் தாமிரம் அல்லது வெள்ளி போன்ற உலோகங்களைக் கலந்துதான் ஆபரணம் செய்கிறார்கள். அப்போது அது 22, 20, 18 காரட் என்றாகும். 18 காரட் தங்கம் என்றால், 24 கிராம் எடையில் வெறும் 18 கிராம் மட்டுமே தங்கம். மிச்ச 6 கிராம் வேறு ஏதாவது இருக்கும். அதனால்தான் சுத்தத் தங்கத்திற்கும், ஆபரணத் தங்கத்திற்கும் விலை வித்தியாசம் உள்ளது. காரட் குறையக் குறைய விலையும் குறையும்.

பெரும்பாலான ஜூவல்லரி கடைகளில் நகை வாங்கும் போது நம்மால் தங்கத்தின் தரத்தை - அதாவது காரட் அளவை - பரிசோதனை செய்ய முடியாத நிலையே நிலவுகிறது. ஏமாற்றப்படுவதற்கான வாய்ப்புகள் ஏராளம். ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்வதற்குப் பதிலாக தங்கத்தில் போட்டு சேமிக்கலாம் என்று நினைக்கும் போது குருட்டாம் போக்கில் ஏதாவது கடையில் நகையாக வாங்கும் போது செய்கூலி மற்றும் சேதாரத்தில் பெருமளவு இழப்பது மட்டுமல்லாமல், வாங்குகிற நகை தரமானதா என்ற ஆபத்து இன்னொரு பக்கம். அதற்குப் பதிலாக 'பிஸ்கெட்' அல்லது 'காசு' வடிவத்தில் வாங்கிச் சேமிக்கலாம். அப்படிச் செய்யும் போது ஆபரணத் தங்கமாக இல்லாமல் சுத்தமான 24 காரட் தங்கமாக வாங்கிக் கொள்ளலாம். வங்கிகளேகூட பொற்காசுகளை விற்பனை செய்கின்றன. அவை நம்பகமானவை. கூடவே அத்தாட்சிப் பத்திரமும் பெறலாம். அஞ்சல் நிலையங்களில்கூடத் தங்கக் காசுகளை விற்பனை செய்யும் திட்டத்தை அமைச்சர் ராசா அறிவிக்கிறாராம்.

மதிப்பு குறைந்து கொண்டே செல்லக் கூடிய முதலீடுகளில் இருந்து தற்காப்பதற்காகவும், பணவீக்கத்தைச் சமாளிப்பதற்காகவும் நமது செல்வத்தின் ஒரு பகுதியைத் தங்கத்தில் இட்டுச் சேமிப்பது சரியான அணுகுமுறைதான். அதே நேரம் ஆபரண வடிவத்தில் வாங்காமல் காசு வடிவத்தில் வாங்குவது புத்திசாலித்தனமான காரியம். ஆனால் அதற்கு உங்கள் மனைவி சம்மதிக்க வேண்டும். பெரும்பாலான நேரங்களில் பகுத்தறிவின் பயன்பாடு குடும்ப வாழ்க்கையில் இருப்பதே இல்லை அல்லவா?

"ஏங்க. ஷேர் மார்க்கெட், ரியல் எஸ்டேட் எல்லாமே கம்மி ஆகிருக்கு. பவுன் மட்டும் பத்தாயிரத்தில இருக்கு. கொறைஞ்சிருக்கிறத வாங்குவீங்களா இல்ல அதிகமா இருக்கறத வாங்குவீங்களா?" என்று மட்டும் கேட்கிற மனைவி உங்களுக்கு அமைந்தால், நீங்கள் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலி!! தங்கம் போனால் போகிறது விடுங்கள்.

நன்றி : உயிர்மை

0 பின்னூட்டங்கள்: