> குருத்து: அழகிரியின் அதிரடி பத்திரிக்கை!

November 4, 2009

அழகிரியின் அதிரடி பத்திரிக்கை!


எந்தக் கழகம் ஆளும் கட்சியாக இருக்கிறதோ, அந்தக் கட்சியின் தலைமை மற்றும் அமைச்சர்களைப் புகழ்ந்து சிலர் பத்திரிகை நடத்துவதும், அதன் மூலம் விளம்பரங்கள் பெறுவதும், அமைச்சர்களிடம் காரியம் சாதித்துக் கொள்வதும் வழக்கமானதுதான். ஜெயலலிதா ஆட்சியில் சில பத்திரிகைகள் அப்படி முளைத்ததுண்டு. தற்போதும் கருணாநிதி மற்றும் ஸ்டாலினை புகழ்வதற்கென்றே சில பத்திரிகைகள் வருகின்றன.


இதில், மு.க. அழகிரியைத் துதி பாடுவதற்காக வரும் ‘கலைஞரின் மு.க. அழகிரி’ என்ற மாதமிருமுறை இதழ் வித்தியாசமாக இருக்கிறது. சமீபத்தில் அதன் இரு இதழ்களை வாசிக்க நேர்ந்தபோது, வேடிக்கையாகவும், அதிரடியாகவும் இருப்பதை உணர முடிந்தது. அந்த அழகிரி இதழிலிருந்து சில பக்கங்களைப் பார்ப்போம்:

இதழின் முதல் பக்கத்திலேயே,

“இந்த இதழில் எங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறோம். தி.மு.க. தலைமையே கூட கொஞ்சம் எரிச்சல் அடையலாம். அதற்காக நாங்கள் வருத்தப்படப் போவதில்லை. எங்களுக்கு கலைஞர் மற்றும் அழகிரிதான் முக்கியம். இவர்கள் இருவரைத் தவிர வேறு யாராக இருந்தாலும், அவர்களை நேர்சீர்களை தூக்கிப் பார்த்துத்தான் எழுதுவோம்”

– என்று ஆசிரியர் குறிப்பிட்டிருக்கிறார்.

அடுத்தப் பக்கத்தில் அமைச்சர் கே.என். நேருவைப் பாராட்டி விட்டு,

அரசியலில் தன்னைத் தக்க வைத்து கொள்வதற்காக அவர் சில விதிகளை மீறலாம், கலைஞரைப் போல! அதனால் அதை நாங்கள் கண்டுகொள்வதில்லை. அதுதான் நியாயமும் கூட; தர்மமும் கூட”

– என்று குறிப்பிடுகிறது அழகிரி பத்திரிகை.

மு.க. அழகிரியின் தியரி’ என்ற கட்டுரையில்,

“ஓட்டர்களையே விலைக்கு வாங்கும் பணம் தியரி யாருக்கு வரும்? தாதா, ரௌடியிஸம் எதுவும் இல்லாமல், அவரால் எப்படி ஒரு புது தியரியை உருவாக்க முடிந்தது என்று எதிரிகளே அசந்து போய்விட்டார்கள். பெயருக்குக் கூட காசு அவிழ்க்காத கலைஞரின் வாரிசில் இப்படியொரு பிள்ளையா? பணம் பாதாளம் வரை பாயும் என்ற பழமொழி எல்லோருக்கும் தெரியும். ஆனால், பணம் மக்களின் மனம் வரை பாயும் என்பதை, அழகிரி ஒருவரால்தான் புரிந்து கொள்ள முடிந்தது. அதனால்தான் சொல்கிறோம், கலைஞரின் மைந்தா வா! தலைமை ஏற்க வா!”

– என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

திருச்சி போலீஸ் கமிஷனர், திருச்சியில் பல கெடுபிடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ஆளும் கட்சி என்ற பாகுபாட்டைப் பெரிதாக அவர் கண்டுகொள்வதில்லை. அவரைக் கண்டித்து ஒரு கட்டுரை அழகிரி பத்திரிகையில் உள்ளது. ‘போலீஸைக் கட்டவிழ்த்து விட்டது கலைஞரா, துணை முதல்வரா?’ என்கிற தலைப்பில் வெளியாகியுள்ள கட்டுரையில்,

தலைமை மட்டும் சூட்கேஸ் மாற்றிக் கொண்டால் போதாது. தொண்டன் ஒரு சுருக்குப் பையையாவது மாற்றிக் கொள்ள வேண்டாமா? ஒரு தொண்டனைப் போஸ்டர் ஒட்டுவதற்கும், நோட்டீஸ் ஒட்டுவதற்கும் பயன்படுத்திக் கொண்டு, அவனைப் பசை தின்னவா சொல்ல முடியும்? தலைவன் பிரியாணி தின்றால், தொண்டன் பழைய சோறாவது தின்ன வேண்டாமா?”

– என்று கேட்கும் கட்டுரை மேலும் விரிகிறது.


“துணை முதல்வர் பதவி வந்ததற்குப் பின்தான், இப்படி தி.மு.க.வின் பலத்தைக் குறைக்கிறார்கள். வட இந்தியப் போலீஸ் அதிகாரி வரும்போது ஆளும் கட்சிக்கே சவால் விடுகிறான். கேட்டால், நேரடியாக துணை முதல்வர் கண்காணிப்பில் வந்தவன் என்கிறார்கள். வடஇந்தியர்களின் கையில் தமிழகம் போய்விட்டதா? தயாநிதி மாறன் வீட்டில் தி.மு.க. கரைவேட்டிக் கட்சியினரை விட, வடநாட்டு மார்வாடிப் பயல்கள் கூட்டம்தான் அதிகமாக இருக்கிறது. இது எப்படி?

“ஜெயலலிதா ஆட்சிதான் போலீஸ் ஆட்சியாக இருந்தது. ஜெயலலிதா போல துணை முதல்வர் செயல்படுவதாக அறிகிறோம். மக்களுக்கு நலத் திட்டங்கள் அறிவித்தால் மட்டும் போதாது. தி.மு.க.வினரின் நலன்களையும் பார்க்க வேண்டும். மேல்மட்டத் தலைவர்கள் தேனை நக்கும்போது, தொண்டன் விரல் சூப்பிக் கொண்டா இருக்க முடியும்? ஸ்ரீரங்கம் 4-ஆவது வட்டச் செயலாளர் ராம்குமார், அமைச்சர் நேருவுக்காகப் பாடுபடும் தொண்டன். இவரை ஆன்லைன் லாட்டரி நடத்தினார் என்று போலீஸ் வழக்குப் போட்டுள்ளது. ‘காவல்துறை தன் கடமையைச் செய்யட்டும்’ என்று துணை முதல்வர் விட்டுவிட்டாராம். இது எதைக் காட்டுகிறது? துணை முதல்வரின் கையாலாகாத்தனத்தையே காட்டுகிறது. நேருவின் கையை யார் கட்டிப் போட்டது? அஞ்சா நெஞ்சனிடம் இது நடக்குமா?”

– என்று போகிறது அந்தக் கட்டுரை.

அழகிரி பத்திரிகை, பக்கத்துக்கு பக்கம் அழகிரியின் படத்தோடு, அழகிரி பற்றிய செய்திகளையும் வெளியிட்டுள்ளது. இந்த அழகிரி பத்திரிகையின் பதிவு அலுவலகம் திருச்சியில் இருந்தாலும், மதுரையில் அழகிரியின் கல்யாண மண்டபம் அருகே ஒரு அலுவலகமும், டெல்லியில் ஒரு அலுவலகமும் இருப்பதாக இம்ப்ரின்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. ‘அஞ்சா நெஞ்சன்தான் கட்சிக்குத் தலைமையேற்க வேண்டும்’ என்று பல இடங்களில் குறிப்பிடும் இப்பத்திரிகையில், அழகிரியின் பேட்டி ஒன்றும் வெளியாகி இருப்பதால், அழகிரியின் ஆசியுடன் இந்தப் பத்திரிகை வெளிவருவதாகவே கருத வேண்டியுள்ளது.
(நன்றி: துக்ளக்)

நன்றி : இட்லிவடை

0 பின்னூட்டங்கள்: