November 21, 2009
தொழிலாளர்கள் பற்றிய இலக்கியங்கள்
"குறைந்த உழைப்பு, நிறைய பணம்" - ஈஸி மணி என்னும் கலாச்சாரம் சென்னை மாதிரி பெருநகர சூழலில் மனிதர்களை பிடித்திருக்கும் ஒரு வியாதி. இந்த நாட்டில் இப்படியெல்லாம் சிந்திக்க தெரியாத மனிதர்கள் காலம் காலமாக கடுமையாக உழைத்து, இந்த நாட்டை தாங்கி பிடித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்.
அந்த தொழிலாளர்களின் வாழ்க்கையில் சொல்ல முடியாத துயரமும், அவலமும் இருக்கிறது. இன்றைக்கு சென்னையில் மிகப்பெரிய கட்டிடங்கள் பிரமாண்டமாய் எழுந்து நிற்கிறது. அந்த கட்டிடங்களை உருவாக்குவதற்கு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இரவும் பகலுமாய் வேலை செய்கிறார்கள். அங்கு அடிப்படை வசதியான கழிவறை வசதி இருக்காது. நல்ல குடிநீர் கூட இருக்காது. ஒவ்வொரு கட்டிடமும் கட்டி முடிக்கும் பொழுது, குறைந்த பட்சம் ஒரு தொழிலாளியாவது மண் மூடியோ, மேலிருந்து கீழாக விழுந்தோ, மின்சாரம் பாய்நதோ பலியாகியிருப்பார். நம்மில் எத்தனை பெருக்கு தெரியும்?
10 ஆண்டுகளுக்கு முன்பாக ஆசியாவில் கைத்துண்டு உற்பத்தியில் பெரும்பான்மை பங்கு வகித்த பகுதி மதுரையில் செல்லூர் பகுதி. அந்த சமய்த்தில் தினமணியின் வணிகமணியில் இது குறித்து சிறப்பு கட்டுரை ஒன்று வெளிவந்தது. உலகுக்கு கைத்துண்டு கொடுத்த அந்த கைத்தறி தொழிலாளர்களின் வீட்டில் நல்ல துண்டு வீட்டில் இருக்காது. நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?
தமிழகத்தில் வேலூர், திண்டுக்கல் மாவட்டங்களில் மற்றும் சென்னை குரோம்பேட்டை - நாகல்கேணி பகுதிகளில் தோல் பதனிடும் தொழில் நடைபெறுகிறது. 50000 தொழிலாளர்கள் இந்த தொழிலில் ஈடுபட்டிருக்கிறார்கள். தோல்களை பதப்படுத்துவதற்காக அமிலம், ரசாயன உப்பு பயன்படுத்தப்படுவதால்... கை, கால்களில் புண்கள், கொப்பளம் ஏற்பட்டு மாதக்கணக்கில் புரையோடி போவதும், சில சமயங்களில் உறுப்புகள் வெட்ட்டி எடுக்கப்படுவதும் சகஜமாக உள்ளது. தோல் நோய் இல்லாதவரை காண்பது அரிது. நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?
இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். இதுவரை அறியாமல் இருந்தது போகட்டும். இனி அறிந்து கொள்ளலாம். தொழிலாளர்களை நெருக்கமாக அறிந்து அவர்களின் துயரங்களை சில நாவல்கள், சில கவிதைகள், சில கட்டுரைகள் சொல்ல முயற்சிக்கின்றன. நான் அறிந்த சில நாவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். படித்து சில ஆண்டுகள் ஆகிவிட்டதால், சில குறிப்புகள் மட்டும் தருகிறேன். இதுபோல நீங்களும் அறிமுகப்படுத்துங்கள்.
படித்த நாவல்கள் :
* பஞ்சும் பசியும் - 1950 -களில் தொ.மு.சி. ரகுநாதன் எழுதிய நாவல்களில் ஒன்று. திருநெல்வேலி மாவட்ட நெசவாளர்களை பற்றிய நாவல். தமிழில் யதார்த்தவாத நாவலில் முதல் நாவல் என்கிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு படித்தேன். கதையின் போக்கு, கதாபாத்திரங்கள் பழைய தமிழ் படம் பார்த்தது போல இருந்தது.
* உப்பு வயல் - ஸ்ரீதர கணேசன் எழுதிய நாவல். தூத்துக்குடி மாவட்டத்தில் உப்பளகத் தொழிலாளர்கள் பற்றிய வாழ்க்கைப் பற்றிய கதை. சிபிஐ அல்லது சிபிஎம் வட்டத்திலிருப்பவர் என நினைக்கிறேன். நாவலில் இறுதி காட்சி தாய் நாவலில் வரும் இறுதி காட்சியை காப்பியடித்திருப்பார்.
* நிழல் முற்றம் _ பெருமாள் முருகன் எழுதிய நாவல்களில் ஒன்று. திரையரங்கில் பணிபுரியும் இளைஞர்களைப் பற்றியது. கொஞ்சம் விவரமாக அறிய இங்கு சொடுக்கவும்.
* தாய் - ருசிய எழுத்தாளர் மார்க்சிம் கார்க்கி எழுதிய உலக புகழ்பெற்ற நாவல் இரண்டு பாகங்களை கொண்டது. முதல் பகுதி ஆலைத்தொழிலாளர்களின் வாழ்க்கைப் பற்றியது. இரண்டாம் பகுதி - விவசாயிகளைப் பற்றியது. உலகில் அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நாவல்களில் முதலிடம் என படித்திருக்கிறேன்.
இன்னும் படிக்காத நாவல்கள்
* கல்மரம் - திலகவதி எழுதிய நாவல். கட்டுமான தொழிலாளர்கள் பற்றிய நாவல். படித்தவர்கள் எப்படி இருக்கிறது என சொன்னால், நன்றாக இருக்கும்.
* எரியும் பனிக்காடு - பி.எச். டேனியலால் எழுதப்பட்ட நாவல். வால்பாறை தோட்ட தொழிலாளர்களின் வாழ்வைப் பற்றிய நாவல். எஸ். இராமகிருஷ்ணன் இது குறித்து விரிவாக எழுதியுள்ளார். இங்கு சொடுக்கவும்.
* சுரங்கம் - கு.சின்னப்ப பாரதி எழுதிய நாவல். கல்கத்தா நிலக்கரிச் சுரங்கங்கள், அவற்றில் பணி செய்யும் தொழிலாளர்கள் வாழ்க்கை அவலம் பற்றிய நாவல்.
கவிதைகள்
* பூக்காயம் - துரை. சண்முகம் எழுதிய கவிதை.
பூக்கட்டும் தொழிலாளியின் சிரமங்களை சொல்லும் அருமையான கவிதை. இங்கு சொடுக்கவும்.
கட்டுரைகள்
* ஓனிக்ஸ் என்ற தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் துப்புரவு தொழிலாளிகளைப் பற்றிய கட்டுரை. - புதிய கலாச்சாரத்தில் வெளிவந்தது. படியுங்கள். இங்கு சொடுக்கவும்.
* 30 ரூபாய் கூலிக்காக நாளொன்றுக்கு 150 கீ.மீ ரயில் - சிறு நகரத்திலிருந்து கிராமம் நோக்கி வேலை தேடிப்போகும் விவசாய கூலி தொழிலாளர்களின் அவலத்தைப் பற்றிய பத்திரிக்கையாளர் சாய்நாத் எழுதிய கட்டுரை. இங்கு சொடுக்கவும்.
****
* நான் எழுதியிருப்பது எல்லாம் ஒரு அறிமுகத்திற்காக தான். இதை விட நீங்கள் நிறைய படித்திருக்க கூடும். பின்னூட்டங்களில் அறிமுகப்படுத்துங்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
3 பின்னூட்டங்கள்:
test
சிறப்பான பதிவு. கிளிக்கவும் என்பதை விட சொடுக்கவும் என்றோ அல்லது குறிப்பிட்ட தலைப்பின் மீதே இணைப்பை கொடுக்கலாமே.
சொடுக்கவும் என்ற வார்த்தை நினைவுக்கு வராததால்... கிளிக்கவும் என போட்டுவிட்டேன். மாற்றிவிட்டேன்.
தலைப்பின் மீதும் இணைப்பு கொடுத்துவிடுகிறேன்.
தங்கள் ஆலோசனைக்கு நன்றி.
Post a Comment