November 5, 2009
தங்கம் - விலை எகிறுவது ஏன்?
முன்குறிப்பு : தங்கத்தின் விலை கடந்த 2000ல் ரூ. 3320, 2005ல் -ரூ. 6048, 2009 - பிப்ரவரியில் ரூ. 11232, இன்றைய விலை ரூ. 12520. கட்ந்த மூன்று நாட்களில் மட்டும் ரூ. 592 எகிறி இருக்கிறது.
எகிறுவதற்கான காரணங்களாக... தங்கம் வெட்டி எடுப்பது குறைந்து வருகிறது. இது தவிர பணவீக்கம், பங்கு சந்தை, டாலர் மதிப்பு, சர்வதேச அளவில் ஏற்படும் கச்சா பொருட்களின் விலை உயர்வு, ஆன்லைன் வர்த்தம் என சொல்லப்படுகின்றன. நம் அறிவுக்கு இவர்கள் சொல்வது சரிதானா என வரும் பதிவுகளில் தங்கத்தை உரசிப் பார்க்கலாம்.
கீழே உள்ள தினமணி கதிர் கட்டுரை நேசனல் ஸ்டாக் எக்சேஞ்சின் எம்.சி.எக்ஸ், என்.சிடி.இ.எக்ஸ் மூலமாக தங்கம் விற்கப்படுவதை பற்றி, அதன் விவரங்களை தருவதாக இருக்கிறது. தங்கத்தின் விலை எகிறுவதற்கான காரணங்களில் இதுவும் ஒன்று. படியுங்கள். உங்கள் கருத்துகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
*****
வணிகம்: இன்றைய விலைக்கு 5 ஆண்டு கழித்து தங்கம்!
தேவைப்படும்போது தங்கத்தை வாங்கிக் கொள்ளலாம் என்று நினைத்தால் தங்கத்தின் விலையோ எப்போதும் ஏறுமுகமாகவே இருக்கிறது. தங்கத்தின் விலை குறைவதெல்லாம் முழம் ஏறி சாண் சறுக்குவதாகவே இருக்கிறது.
""இன்றுள்ள விலையில் தங்கத்தை நீங்கள் வாங்குவதாக ஓர் ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொண்டு சிறிது அட்வான்ஸôகப் பணம் செலுத்திவிட்டு உங்களுக்குத் தேவையானபோது மீதித் தொகையைச் செலுத்தி தங்கத்தைப் பெற்றுக் கொள்ளும் வசதி இப்போது வந்துவிட்டது. தங்கத்தை நீங்கள் கையில் பெறும்போது உள்ள மார்க்கெட் விலையைச் செலுத்தத் தேவையில்லை'' என்கிறார் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஃபின்மார்ட் நிறுவனத்தின் உரிமையாளர் பழ.லக்ஷ்மணன்.
இந்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள நேஷனல் ஸ்டாக் எக்சேஞ்சின் என்சிடிஇஎக்ஸ் மற்றும் எம்சிஎக்ஸ் மூலமாக தங்கத்தை வாங்கிக் கொள்ளலாம் என்று கூறும் அவரிடம் மேலும் விவரங்களைத் தெரிந்து கொள்வதற்காகப் பேசினோம்.
""முதலில் எல்லாம் கையில் பணத்தை வைத்துக் கொண்டு எதில் முதலீடு செய்யலாம் என்று விழித்துக் கொண்டிருந்தவர்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்தார்கள். பங்குச் சந்தையில் எவ்வளவுதான் புத்திசாலித்தனமாக முதலீடு செய்தாலும் சமயத்தில் காலை வாரிவிட்டுவிடும். அதில் ரிஸ்க் அதிகம்.
ஆனால் தங்கத்தில் முதலீடு செய்தால் நஷ்டம் வர வழியில்லை. தங்கத்தின் விலை எப்போதாவது குறைந்தாலும் ஏறிக் கொண்டே இருப்பதுதான் அதன் இயல்பாக இருக்கிறது.
......
சாதாரணமாக தங்கத்தை வாங்க நினைக்கும் ஒருவர் கடைகளில் விற்கும் 22 காரட் தங்கத்தை வாங்குவார். அது அன்றைய மார்க்கெட் விலையை விடச் சற்றுக் கூடுதலாகவே இருக்கும். அதாவது செய்கூலி, சேதாரம் என்று நிறையச் சொல்வார்கள். அதுபோல வாங்கிய தங்கத்தை விற்கப் போனாலும் அன்றைய மார்க்கெட் விலையைத் தரமாட்டார்கள்.
தங்கத்தின் தரத்தைத் தெரிந்து கொள்வதும் அவ்வளவு எளிதான காரியம் அல்ல.
இப்போது வங்கிகளில் தங்கம் விற்கிறார்கள். அப்படி வாங்கிய தங்கத்தை விற்க வேண்டும் என்றால் நீங்கள் வங்கிகளை அணுக முடியாது. கடைக்காரர்களையே அணுக வேண்டும்.
மக்களுக்கு தங்கம் வாங்குவதில் உள்ள இந்தச் சிரமங்களைப் போக்கும்விதமாக இப்போது தங்கம் வாங்குவதில், விற்பதில் புதியமுறைகள் வந்துவிட்டன.
நேஷனல் ஸ்டாக் எக்சேஞ்சின் எம்சிஎக்ஸ், என்சிடிஇஎக்ஸ் மூலமாகத் தங்கம் விற்கப்படுகிறது.
நீங்கள் கடையில் தங்கம் வாங்க வேண்டும் என்றால் முழுத் தொகையையும் உடனே செலுத்த வேண்டும். ஆனால் இந்த நிறுவனங்களின் மூலமாகத் தங்கம் வாங்க வேண்டும் என்றால் வாங்கும் தங்கத்தின் மொத்த மதிப்பில் 15 சதவீதத்தை உடனே செலுத்த வேண்டும். பின்னர் தங்கத்தைப் பெறும்போது மீதித் தொகையைச் செலுத்த வேண்டும்.
இதற்கு எம்சிஎக்ஸ் அல்லது என்சிடிஇஎக்ஸ்யுடன் ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொள்ள வேண்டும். உதாரணமாக 3 மாதத்திற்குப் பின் தங்கத்தை வாங்கிக் கொள்கிறேன் என்று நீங்கள் ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். ஒரு மாதத்திற்குப் பின், இரண்டு மாதத்திற்குப் பின் என்றும் கூட நீங்கள் ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். இந்த 3 மாத அளவை தொடர்ந்து புதுப்பிப்பதன் மூலம் எத்தனை ஆண்டுகாலம் வேண்டுமானாலும், ஒப்பந்தத்தைத் தொடரலாம்.
தங்கத்தை வாங்குவதில் நீங்கள் தங்கத்தைக் கைகளில் வாங்கிக் கொள்ளவும் முடியும். கைகளில் வாங்கிக் கொள்ளாமலேயே உங்கள் அக்கவுண்டில் வரவு வைத்துக் கொள்ளவும் முடியும்.
வங்கியில் நீங்கள் பணத்தைப் போட்டு வைத்துக் கொள்வதை சேமிப்புக் கணக்கு என்கிறோம். அதுபோல தங்கம், வெள்ளி போன்றவற்றைச் சேமித்து வைப்பதற்கு டி மேட் அக்கவுண்ட் என்கிறோம். இந்த டி மேட் அக்கவுண்டில் நீங்கள் வாங்குகிற தங்கத்தை உங்கள் கணக்கில் சேர்த்துக் கொள்ளலாம். தங்கத்தை நீங்கள் விற்றுவிட்டால் அந்தத் தங்கத்தை உங்கள் கணக்கில் இருந்து கழித்துக் கொள்ளலாம். இத்தனைக்கும் தங்கத்தை நீங்கள் கண்ணில் பார்க்க வேண்டும் என்ற அவசியமில்லை.
இதில் என்ன லாபம் என்றால் தங்கத்தின் மார்க்கெட் விலை ஏறிக் கொண்டே இருப்பதால் நீங்கள் டி மேட் அக்கவுண்டில் போட்ட தங்கத்தின் மதிப்பும் உயர்ந்து கொண்டே இருக்கும்.
நீங்கள் போட்டு வைத்த பணத்திற்கு வங்கியில் வட்டி கிடைக்கிறது. இந்த டி மேட் அக்கவுண்டில் தங்கத்தின் விலை உயர்வால் உங்களுடைய தங்கத்தின் மதிப்பு ஏறுகிறது. அதனால் உங்களுக்கு லாபம் கிடைக்கிறது.
தங்கம் வாங்கும் போது 8 கிராம், 16 கிராம், 24 கிராம் என்று எட்டின் மடங்குகளாக நீங்கள் வாங்கலாம். கொஞ்சம் வசதியான பார்ட்டியாக நீங்கள் இருந்தால் 100 கிராம், 200 கிராம், 300 கிராம் என்று வாங்கலாம். அதைவிட வசதியாக நீங்கள் இருந்தால் 1 கிலோ, 2 கிலோ, 3 கிலோ என்று கூட வாங்கலாம்.
இந்தப் புதிய முறையில் தங்கத்தை வாங்கிக் கொள்வது மிகவும் பாதுகாப்பானது. ஐந்து வருடம் கழித்து நடக்க வேண்டிய திருமணத்திற்கு இப்போதுள்ள விலையில் தங்கத்தை வாங்குவதாக ஒப்பந்தம் செய்து கொண்டு குறிப்பிட்ட அளவு பணத்தை முன் பணமாகச் செலுத்திவிட்டு மீதிப் பணத்தைத் தவணை முறையில் செலுத்தலாம். தங்கத்தின் விலை உயர்ந்துகொண்டே போவதைப் பற்றிக் கலங்காமல் இருக்கலாம்.
சில நகைக் கடைகளில் தங்கம் வாங்குவதற்குச் சேமிப்புத் திட்டத்தை அறிவித்திருப்பார்கள். அந்தத் திட்டத்தில் சேர்ந்து மாதம் மாதம் குறிப்பிட்ட அளவு பணம் செலுத்த வேண்டும். பணம் செலுத்தி முடித்தவுடன் அன்றைய தங்க விலை நிலவரத்தின் அடிப்படையில் உங்களுக்குத் தங்கத்தைத் தருவார்கள். இதில் இன்னொரு ரிஸ்க்கும் உள்ளது. நீங்கள் தங்கம் வாங்குவதற்காகப் பணத்தைச் செலுத்திய கடை ஆறு மாதம் கழித்துக் காணாமல் போனாலும் போய்விடும்.
இன்றைய விலையில் தங்கத்தை வாங்குகிறபோது தங்கத்தை விற்கும் எக்சேஞ்சிற்கு நஷ்டம் ஏற்படுமே, அதை எப்படிச் சமாளிக்கிறார்கள் என்ற கேள்வி எழும்.
நீங்கள் 100 கிராம் தங்கத்தை இன்றைய விலையில் வாங்குவதாக ஓர் ஒப்பந்தம் போடுகிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதற்காகக் குறிப்பிட்ட தொகையைச் செலுத்திவிட்டு மீதிப் பணத்தை மூன்று மாதம் செலுத்துவதாகக் கூறுகிறீர்கள். மூன்று மாதம் கழித்து நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் தங்கம் உங்கள் கைகளுக்கு வரும். ஆனால் உண்மையில் நீங்கள் என்று ஒப்பந்தம் போட்டீர்களோ அன்றே தங்கத்தை வாங்கிவிட்டீர்கள். நீங்கள் ஒப்பந்தம் போட்ட அன்று யாராவது தங்கத்தை விற்பார்கள் அல்லவா? அந்தத் தங்கத்தை உங்களுக்கு மாற்றிவிட்டு விடுவார்கள். எனவே இன்றைய விலையில் தங்கத்தை உங்களுக்கு விற்பதால் நஷ்டம் ஏதும் எக்சேஞ்சிற்கு ஏற்படாது. தங்கம் விற்பது, வாங்குவது என்பது ஏதோ ஓரிரு நபர்கள் மட்டுமே பங்கு பெறும் நிகழ்வாக மட்டும் நடப்பதில்லை. தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் தங்கத்தை வாங்குகிறார்கள்; விற்கிறார்கள்.
தங்கத்தை எம்சிஎக்ஸ் நிறுவனத்தின் புரோக்கர்கள் மூலமாகவே வாங்கவோ, விற்கவோ முடியும். தங்கத்தை வாங்கும்போது மொத்த மதிப்பில் .03 சதவீதம் புரோக்கர், சப்புரோக்கர் கமிஷனாகத் தர வேண்டும். எங்களுடைய ஃபின் மார்ட் நிறுவனம் சப் புரோக்கராகச் செயல்படுகிறது.
****
நன்றி : ந. ஜீவா, தினமணி கதிர் (21/06/2009)
பின்குறிப்பு : கட்டுரையின் நீளத்தை கருதி, சில அவசியமில்லாத பத்திகளை நீக்கியுள்ளேன். முழுதாக படிக்க... லிங்கை கிளிக்கவும்.
Subscribe to:
Post Comments (Atom)
3 பின்னூட்டங்கள்:
தோழருக்கு எமது நவம்பர் புரட்சி நாள் வாழ்த்துக்கள்
தோழருக்கு எமது நவம்பர் புரட்சி நாள் வாழ்த்துக்கள்
தோழருக்கு எமது நவம்பர் புரட்சி நாள் வாழ்த்துக்கள்
Post a Comment