> குருத்து: காவல்நிலையங்களின் தரம் - "ஏ" கிரேடு யாருக்கும் கிடைக்கவில்லை!

November 18, 2009

காவல்நிலையங்களின் தரம் - "ஏ" கிரேடு யாருக்கும் கிடைக்கவில்லை!

சென்னையில் இருக்கும் காவல்நிலையங்களின் தரம் பற்றி அறிய துறைவாரியான ஆய்வுக்கு கமிசனர் ராஜேந்திரன் ஓர் ஆய்வு ஒன்றை நடத்தி இருக்கிறார். முதலில் காவல்நிலையங்களில் உள்ள செயல்பாடுகளை 23 வகைகளாக பிரித்திருக்கிறார்கள். பிறகு, துணை கமிசனர்கள் தனக்கு கீழ் இயங்கும் காவல்நிலையங்களுக்கு பணிகளின் தரம் குறித்து, நேரடியாக சென்று ஆய்ந்து (!) மார்க் போட்டிருக்கிறார்கள். பிறகு, இணை கமிசனர்களும் மார்க் போட்டிருக்கிறார்கள்.

எல்லா ரிப்போர்ட்டுகளும் ஒன்றாய் சேர்த்து பார்த்தால், மொத்தம் 104 நிலையங்களில் "ஏ" கிரேடு எந்த காவல்நிலையத்துக்கும் கிடைக்கவில்லை. "பி" கிரேடு 22 காவல் நிலையங்களுக்கு கிடைத்திருக்கின்றன.
மற்றவையெல்லாம் "சி" கிரேடுகள். 104க்கு 22 தேறுகிறது என்றால்... சதவிகித அடிப்படையில் 21%. அப்படின்னா பெயில். எல்லா இன்ஸ்பெக்டர்களையும் நேரடியாக அழைத்து, கமிஷனர் (என்ன இப்படி மானத்தை வாங்கிட்டீங்க என!) அட்வைஸ் செய்கிறாராம். இனி, தரத்தை உயர்த்துவது குறித்து நடவடிக்கைகள் எடுக்கப்படுமாம்.

இந்த நாட்டில், சட்டங்களை மீறுவது யார் என பட்டியலிட்டால்... அதில் முதலிடத்தை பெறுவது காவல்துறையாக தான் இருக்கும். ஆளும் வர்க்கத்திற்கும், அதிகார வர்க்கத்திற்கும் விசுவாசமாய் நடப்பது, பாவப்பட்ட தொழிலாளி ஏதேனும் புகார் கொடுக்க போனால், டீ வாங்கி வா! ஒரு குயர் பேப்பர் வாங்கி வா! என விரட்டுவதும். புகார் கொடுப்பவரிடம் காசு வாங்குவது, புகார் கொடுக்கப்பட்டவரிடமும், மிரட்டி காசு பிடுங்குவது, சட்ட விரோதமாக இரண்டு தரப்பினரையும் வைத்து கட்டபஞ்சாயத்து செய்து அநியாய தீர்ப்பு வழங்குவது, கைதிகளை சட்டவிரோதமாக அடிப்பது, உதைப்பது, தன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், டாஸ்மார்க் பாரிலிருந்து, தரையில் பரிதாபமாய் கடை விரித்திருக்கும் பாட்டி வரைக்கும் மிரட்டி மாமூல் வாங்குவது, ஏதேனும் போராட்டமென்றால், உடனே ஆஜராகி, துவைத்தெடுப்பது, பெண்கள் புகார் கொடுக்கப்போனால், அவர்களை பலாத்காரம் செய்வது. (இதற்காக தான் மொத்தம் 104 காவல் நிலையங்களில் 18 மகளிர் காவல் நிலையங்கள் உருவாக்கப்பட்டன) என மக்கள் விரோத, அராஜக செயல்களை செய்வதில் நம்பர் ஒன்னாக இருப்பது காவல்துறை தான். இதெல்லாம் கற்பனையாக சொல்லவில்லை. தினசரி செய்திகளில் மலிவாக கிடைக்கும் செய்திகள் தான். நிலைமை இவ்வாறு மோசமாக இருக்க, எப்படி "ஏ" கிரேடு கிடைக்கும்?

துறைவாரியாக அந்தந்த துறை நிர்வாகம் செய்யும் துணை கமிஷனர்கள் மார்க் போட்டதால் தான், 22 காவல்நிலையங்களுக்காகவாவது "பி" கிரேடு கிடைத்திருக்கிறது. மனித உரிமை அமைப்பு மற்றும் வேறு துறை சார்ந்த நபர்களை குழுவாக நியமித்திருந்தால், எந்த காவல் நிலையத்துக்கும் "சி" கிரேடு கூட கிடைத்திருக்காது.


செய்தி ஆதாரம் : தினத்தந்தி, 19/11/2009 இதழில்

1 பின்னூட்டங்கள்:

Anonymous said...

test