> குருத்து: 49 ஓ வாக்களித்தவர்களை கண்காணிக்க தடை!

April 27, 2011

49 ஓ வாக்களித்தவர்களை கண்காணிக்க தடை!


தொகுதியில் நிற்கும் எந்த வேட்பாளரையும் பிடிக்கவில்லை என்றால், 49 ஓ வாக்களிக்கலாம் என்ற முறையை தேர்தல் ஆணையம் ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த தேர்தலில் பல வாக்கு சாவடிகளில் அப்படி ஒரு படிவமே கேட்டும் கிடைக்கவில்லை. நூற்றுக்கணக்கில் மட்டும் பதிவாகியது.

இந்த முறையும் பல வாக்கு சாவடிகளில் வாக்காளர்கள் கேட்டு இல்லை என சொல்லி, காத்திருக்க சொல்லி இழுத்தடித்து, வெறுப்பேற்றி உள்ளனர். இதையும் மீறி பல மாவட்டங்களில், அடம்பிடித்து 25,491 வாக்காளர்கள் 49 ஓ வாக்களித்து உள்ளனர்.

உளவுத் துறை போலீசார் இப்படி வாக்களித்தவர்களின் பட்டியலை, தேர்தல் அதிகாரிகளிடம் மாவட்டம் வாரியாக வாங்கி, நக்சலைட்டுகளுடன் தொடர்பு உள்ளதா என விசாரிக்க கிளம்பி உள்ளதாம்.

உயர்நீதி மன்ற வழக்குரைஞர் எஸ். சத்தியசந்திரன் தேர்தல் ஆணையம் 49 ஓ வாக்களித்தவர்களின் பட்டியலை உளவுப்பிரிவினருக்கு தரக்கூடாது. விசாரிக்கவும் கூடாது என நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து, இப்பொழுது சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து தடை உத்தரவு வாங்கியுள்ளார். மேலும், தேர்தல் ஆணையமும், உளவுத்துறையும் இது குறித்து விளக்கமளிக்க வேண்டும் என கோரியுள்ளது.

தமிழகம் முழுவதும் புரட்சிகர நக்சல்பாரி அமைப்புகள் தேர்தலைப் புறக்கணிக்க சொல்லி, பிரச்சாரத்தை மக்களிடத்தில் பிரச்சாரம் செய்தனர். (கீழே உள்ள சுட்டிகளை பாருங்கள்.) பொதுமக்களும் நன்றாகவே ஆதரவளித்தனர்.

49 ஓ என்பது இந்த அரசமைப்பு ஏற்றுக்கொண்டு, வேட்பாளர்கள் யாரையும் தேர்ந்தெடுக்கும் விருப்பம் இல்லை என்பதை தெரியப்படுத்துவது தான். ஏதோதோ கட்சிகளுக்கு வாக்களித்தவர்கள் எல்லாம் இரகசியமாய் வாக்களிக்க, 49 ஓ வாக்களிப்பதை மட்டும் இரகசியம் இல்லாமல் செய்ததே, தேர்தல் ஆணையம் இந்த முறையை உற்சாகப்படுத்தவில்லை என்பது தெரிகிறது.

இப்பொழுது அவர்களும் மிரட்டப்படுவார்கள் என்றால், பெயரளவு ஜனநாயகம் கூட இங்கு இல்லாமல் இருக்கிறது என்கிற நக்சல்பாரிகளின் கருத்தை உண்மை என நிரூபிக்கிறது.
***

தொடர்புடைய சுட்டிகள் :

தேர்தல் புறக்கணிப்பு - ம.க.இ.க சிறு வெளியீடு

High Court restrains Q Branch police on questioning '49-O voters'

உங்கள் ஓட்டு திருவாளர் நாய் வேட்பாளருக்கே! - வினவு

0 பின்னூட்டங்கள்: