April 5, 2011
தேர்தல் புறக்கணிப்பு - சிறு வெளியீடு - பாகம் 2
முதல் பாகம் படிக்க...
ஜனநாயகத்தை அடியறுக்கும் ஆயுதமாக வாக்குரிமை!
ஜெயலலிதா சூறாவளி சுற்றுப்பயணம், விஜயகாந்த் சுனாமி சுற்றுப்பயணம்… என்று தமிழ்நாடு முழுவதும் புழுதி பறந்து கொண்டிருக்கிறது. ‘எனக்கு ஓட்டுப் போடுங்கள்’ என்ற கோரிக்கையை முன்வைத்து மக்களைச் சந்திக்க வரும் தலைவர்களின் அணிவகுப்பால் எல்லாச் சாலைகளிலும் போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது. இந்தச் ‘சாலை மறியலுக்கு’ போலீசு காவல் நிற்கிறது. இக்காட்சிகளைப் புகைப்படம் எடுத்து பக்கம் பக்கமாகப் பிரசுரிக்கின்றன பத்திரிக்கைகள்.
‘எங்களுக்கு குடிக்கத் தண்ணீர் வேண்டும், பாசனத்திற்குத் தண்ணீர் வேண்டும், பள்ளிக்கூடம் வேண்டும், சாலை வேண்டும், பேருந்து விடவேண்டும், வெள்ள நிவாரணம் வேண்டும், வறட்சி நிவாரணம் வேண்டும்” – என்று மக்கள் தமது கோரிக்கைகளை முன்வைத்து நடத்திய சாலை மறியல் போராட்டங்கள் கொஞ்சமா?
சாலை மறியல் என்றவுடனே போலீசு வரும், பிறகு அதிரடிப்படை வரும், அதன்பின் யுதப்படை வரும். இவை எதற்கும் பயப்படாமல் மக்கள் துணிந்து நின்றால் கடைசியாக தாசில்தார் வருவார். கலைந்து போகச்சொல்வார். கொளுத்தும் வெயிலில் பிள்ளை குட்டிகளோடு தெருவில் உட்கார்ந்திருக்கும் மக்களைச் சந்திக்க மந்திரி, எம்.எல்.ஏ, வட்டம், குட்டம் எவனும் எப்போதும் வந்ததில்லை. அவர்களுடைய கோரிக்கைகளைக் காது கொடுத்துக் கேட்டதுமில்லை. ஆளும் கட்சி மட்டுமல்ல, எதிர்க்கட்சிகள் எனப்படுவோரின் யோக்கியதையும் இதுதான்.ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் கடந்த 5 ஆண்டுகளில் நடைபெற்ற மக்கள் போராட்டங்களைக் கொஞ்சம் நினைவு படுத்திப் பாருங்கள்.
ஆட்சிக்கு வந்தவுடன் டிசம்பர் 2001- இலேயே பேருந்துக் கட்டணம் பன்மடங்கு உயர்த்தப் பட்டது. மாணவர் பஸ் பாஸ் ரத்து, அரசு மருத்துவ மனையில் நோயாளிகளுக்குக் கட்டணம், நோயாளியைப் பார்க்கப் போகும் பார்வையாளர்களுக்குக் கட்டணம், ரேசன் அரிசி விலை ஏற்றம், அரிசி வாங்க கூப்பன் … எல்லாம் ஒரே நாளில் அறிவிக்கப்பட்டன. தமிழகமெங்கும் மக்கள் எதிர்த்துப் போராடினார்கள்.
அரசுக் கல்லூரிகள் பல்கலைக்கழகங்களுடன் இணைக்கப் பட்டன. கல்லூரிகளை லாபமீட்டும் கம்பெனிகளாக்கி ஏழை மாணவர்களின் கல்வியைப் பறிப்பதற்கெதிராக மாணவர்கள் போராடினார்கள்.
நீதிமன்றக் கட்டணம் 100 மடங்கு உயர்த்தப்பட்டதை எதிர்த்து வழக்குரைஞர்கள் போராடினார்கள். மாவட்ட ட்சியரிடம் மனுக்கொடுக்க 25 ரூபாய் கட்டணம், நகர்ப்புற நடுத்தர மக்களைக் கொள்ளையடிக்க கட்டிட வரன்முறைச் சட்டம்… என ஆட்சிக்கு வந்த எட்டே மாதத்தில் எல்லா மக்கட்பிரிவினர் மீதும் தாக்குதல் தொடுத்தது ஜெயா ட்சி.
காவிரியில் தண்ணீரில்லாததால் விவசாயிகள் எலிக்கறி தின்றார்கள். நெற்களஞ்சியமாம் தஞ்சையில் பட்டினிச்சாவு தொடங்கியது. 22 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டார் கள். ஜெ அரசோ விவசாயிகளுக்கான கூட்டுறவுக் கடனையும் கடன் தள்ளுபடியையும் நிறுத்தியது. அரசாங்க நெல் கொள்முதலையும் குறைத்தது.
கிணறு தோண்டித் தோண்டி தண்ணீரைக் காணாமல் திவாலான ஒரு விவசாயியின் குடும்பம் கரண்டு கம்பியை உடலில் சுற்றிக்கொண்டு தற்கொலை செய்து கொண்டது. ஜெயலலிதா பம்பு செட்டுக்கு மீட்டர் போடப்போவதாக அறிவித்தார். அதே நேரத்தில் தனியார் தண்ணீர் வியாபாரம் ஊக்குவிக்கப்பட்டது. தாமிரவருணி கோகோ கோலாவிற்கு விலை பேசப்பட்டது.
கைத்தறிக்கு ஒதுக்கப்பட்ட ரகங்கள் குறைக்கப்பட்டதால் நசிந்து போன நெசவாளர்கள் மீதும் தாக்குதல் தொடுத்தது ஜெ அரசு. இலவச வேட்டி சேலை கொள்முதலை நிறுத்தியதால் தேங்கிய துணிகளை விற்க முடியாமல் பல லட்சம் நெசவாளர்கள் பட்டினிச் சாவுக்கும் தற்கொலைக்கும் தள்ளப்பட்டனர். கஞ்சித் தொட்டியின் முன்னால் கையேந்தி நின்ற அந்த நெசவாளர்கள் மீதும் தடியடி நடத்தியது ஜெ அரசு.
18,000 கிராமப்புறத் தொடக்கப் பள்ளிகளில் 5 ஆசிரியர்களை 2 ஆகக் குறைத்தது ஜெ அரசு. 1500 பள்ளிகளுக்கு ஒரே ஆசிரியர். நூற்றுக்கணக்கான பள்ளிகள் இழுத்து மூடப்பட்டன. ஆசிரியர்களும் பேராசிரியர்களும் இனி காண்டிராக்டு முறையில்தான் நியமிக்கப் படுவார்களென்று பகிரங்கமாக அறிவித்தது அரசு.
இழந்த உரிமைகளை மீட்பதற்காகப் போராடிய போக்குவரத்துத் தொழிலாளர்கள் 27,000 பேர் சிறையிலடைக்கப் பட்டார்கள். அரசு ஊழியர்கள் நடத்திய போராட்டமோ இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கப்பட்டது. 2 லட்சம் ஊழியர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டார்கள். 50-க்கும் மேற்பட்டோர் மாரடைப்பால் இறந்தார்கள். பல்லாயிரக்கணக்கான மக்கள் நலப் பணியாளர்களும் சாலைப் பணியாளர்களும் ஒரே நொடியில் வேலை நீக்கம் செய்யப்பட்டார்கள். 64 சாலைப் பணியாளர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள்.
மதமாற்றத் தடைச்சட்டம், கிடா வெட்டுத் தடைச்சட்டம் என பார்ப்பன பாசிச சட்டங்கள் திணிக்கப்பட்டன. கிடா வெட்டி சாமி கும்பிடப் போன பக்தர்களும் பூசாரிகளும் கைது செய்யப் பட்டார்கள். கிராமப்புறக் கோயில்கள் போலீசின் புறக்காவல் நிலையங்களாகவே மாற்றப்பட்டன.
தலித் மக்களின் வாயில் மலத்தைத் திணிப்பது, சிறுநீர்கழிப்பது, பாப்பாப்பட்டி கீரிப்பட்டி தேர்தல்களை சாதி வெறியர்கள் முடக்குவது… என தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான தாக்குதல்கள் தீவிரமடைந்தன.
அதிரடிப்படையின் அக்கிரமங்கள், லாக் அப் கொலைகள், போலி மோதல் கொலைகள், ஏட்டு முதல் எஸ்பி வரை நீண்டு சென்ற ஜெயலட்சுமி புராணம், கான்ஸ்டபிள் முதல் டி.ஐ.ஜி வரையிலான அனைத்து போலீசு அதிகாரிகளின் களவாணித் தனங்கள்.. என ஜெயலலிதாவால் செல்லப் பிராணியாக வளர்க்கப்பட்ட போலீசின் அட்டூழியங்கள் கட்டுக்கடங்காமல் அதிகரித்தன.
இவற்றின் விளைவாகக் கொண்ட த்திரத்தில்தான் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் எதிர்க்கட்சிகளுக்கு வாக்களித்தார்கள். ஆனால் மக்களுடைய வாக்குகளை அறுவடை செய்து கொள்வதற்கு இந்த எதிர்க்கட்சிகளுக்கு என்ன அருகதை இருக்கிறது?
இன்று ஓட்டுக்கேட்டு உங்கள் மத்தியில் ஊர்ஊராகச் சூறாவளி சுற்றுப் பயணம் வரும் ஓட்டுப் பொறுக்கிகள் அன்று மக்களுடைய போராட்டங்களுக்கு தரவாகக் களத்தில் இறங்கினார்களா? இணைந்து போராடினார்களா? இல்லை. வீட்டிலிருந்தபடியே அறிக்கை விட்டார்கள். ஜெயலலிதாவிடம் அடிபடும் மக்கள் அடுத்த தேர்தலில் எப்படியும் தங்களுக்குத்தான் ஓட்டுப் போடுவார்கள் என்று எண்ணி, மக்கள் அடிவாங்கு வதைக் கண்டு மகிழ்ச்சியடைந்து கொண்டிருந்தார்கள். இது மிகையல்ல, உண்மை.
தேர்தலைப் புறக்கணிக்க வேண்டுமென்று கூறும் நாங்கள்தான் மக்கள் கோரிக்கைகளுக்கு தரவாகத் தமிழக மெங்கும் ஊர் ஊராகப் பிரச்சாரம் செய்தோம். போராடினோம். சிறையும் சென்றோம்.
ஒருவேளை மக்கள் கோரிக்கைகளுக்கு தரவாக மற்றெல்லாக் கட்சியினரும் ‘கூட்டணி சேர்ந்து’ போராடியிருந்தால் மக்கள் தனித்தனியே போராடி அடிவாங்கித் தோற்றுத் துவண்டு விழும் நிலை ஏற்பட்டிருக்காது. இத்தனை அரசு ஊழியர்களும் சாலைப்பணியாளர்களும் நெசவாளர்களும் விவசாயிகளும் அநியாயமாகச் செத்து மடியவேண்டிய நிலையும் ஏற்பட்டிருக்காது.
ஆனால் மக்கள் தங்களுடைய ஜனநாயக உரிமைகளை தங்களுடைய சொந்தக் கரங்களாலேயே போராடி வென்றெடுப் பதை ஓட்டுப்பொறுக்கிகள் யாரும் விரும்புவதில்லை. அது அவர்களுடைய முதலுக்கே மோசமாகிவிடும் என்று அஞ்சுகிறார்கள்.
‘ஐந்தாண்டுகள் அடக்குமுறைகளைப் பல்லைக் கடித்துக் கொண்டு சகித்துக்கொள்ளுங்கள், அதற்குப் பிறகு எங்களுக்கு ஓட்டுப் போட்டு நாற்காலியில் உட்காரவையுங்கள். நாங்கள் வந்து கிழிக்கிறோம்” என்று கூறி மக்களுடைய போராட்டங்களை முடமாக்குகிறார்கள். ஜனநாயக உணர்வை மழுங்கடிக் கிறார்கள்.
வாக்குரிமையை மிகவும் புனிதமான உரிமையாகச் சித்தரிக்கும் ஓட்டுப்பொறுக்கிகள், மக்களுடைய பிறவாழ்வுரி மைகளையும் ஜனநாயக உரிமைகளையும் எப்போதுமே கால்தூசுக்குச் சமமாகத்தான் மதிக்கிறார்கள். எந்த ஆட்சியாக இருந்தாலும் போலீசின் அனுமதி இல்லாமல் நீங்கள் பொதுக்கூட்டம் நடத்தவோ, பேரணி நடத்தவோ, ஆர்ப்பாட்டம் நடத்தவோ முடியாது. ஓட்டுப்போடுவதற்கு மட்டும் போலீசு அனுமதி தேவையில்லை எனும்போது, பேசுவதற்கும் போராடுவதற்கும் மட்டும் ஏன் போலிசைக் கேட்க வேண்டும்? வாக்குரிமையைப் போல கருத்துரிமையும் ஒரு அடிப்படை ஜனநாயக உரிமை என்பதை எந்த ஆட்சியும் ஏற்பதில்லை.
அதனால்தான், மக்கள் தண்ணீர் கேட்டுப் போராடினால் குடிநீர் வாரிய அதிகாரி வருவதில்லை; போலீசு வருகிறது. சாலை கேட்டால் நெடுஞ்சாலைத்துறை அதிகாரி வருவதில்லை, போலீசு வருகிறது. பள்ளிக்கூடம் கேட்டால் கல்வித்துறை அதிகாரி வருவதில்லை, போலீசுதான் வருகிறது. அமைச்சர்களும் எம்.எல்.ஏ-க்களும் போராடும் மக்களைச் சந்திப்பதற்கு எப்போதுமே வருவதில்லை. ஏனென்றால் மக்களின் அடிப்படை உரிமைகள் எதையும் ஓட்டுப் பொறுக்கிகள் அங்கீகரிப்பதேயில்லை.
வாக்குரிமையைத் தவிர வேறெந்த உரிமையைப் பற்றி மக்கள் பேசினாலும் அது ஓட்டுப்பொறுக்கிகளுக்கு வேப்பங்காயாய்க் கசக்கிறது. விவசாயிகள் வாழவேண்டுமானால் விளை பொருளுக்கு விலை நிர்ணயம் செய்யும் உரிமை அவர்களுக்கு வழங்கப்படவேண்டும். கருணாநிதியோ
’2 ரூபாய்க்கு அரிசி போடுகிறேன் கஞ்சி குடித்துக்கொள்” என்று ‘கருணை’ காட்டுகிறார். இலவச மருத்துவம் மக்களின் உரிமை. ‘எனக்கு ஓட்டுப் போட்டால் பிரசவத்துக்கு பணம் கொடுக்கிறேன்” என்கிறார் விஜயகாந்த். இலவசக் கல்வி என்பது மக்களின் உரிமை. அம்மாவோ சைக்கிள் கொடுக்கிறார், ஏழை மாணவர்கள் 4 பேருக்கு முதல்வர் நிவாரண நிதியிலிருந்து தாயுள்ளத்துடன் தருமம் கொடுத்துவிட்டு பத்திரிகைகளில் பிலிம் காட்டுகிறார்.
‘எல்லோரும் இந்நாட்டு மன்னர்’ என்ற பேச்சே ஒரு பித்தலாட்டம். இப்போது நாம் காண்பது ஒரு புதிய வகை மன்னராட்சி. ராஜாவுக்குப் பிறந்தவன் ராஜா என்பதற்குப் பதிலாக 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மன்னரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உரிமை வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த மன்னர் போடும் பிச்சைதான் உங்கள் வாழ்க்கை.
வாக்குரிமை என்பது மற்றெல்லா உரிமைகளையும் அடியறுக்கும் ஆயுதமாகவே மாற்றப்பட்டு விட்டது. இந்த ஆயுதத்தை நமக்கெதிராக நாமே பயன்படுத்துவது மடமையில்லையா, என்பதுதான் எங்கள் கேள்வி.
தொடரும்.
நன்றி : நல்லூர் முழக்கம்
Labels:
அரசியல்,
தமிழகம்,
தேர்தல்,
புரட்சிகர அமைப்பு செய்திகள்,
பொதுவுடைமை
Subscribe to:
Post Comments (Atom)
0 பின்னூட்டங்கள்:
Post a Comment