அமெரிக்க அரசு முதல் இந்திய அரசு வரை பல்வேறு நாட்டு அரசுகளின் ரகசிய சதித்திட்டங்களை ஆவண ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தி வருவது "விக்கிலீக்ஸ்" என்ற இணையத்தளம். இதன் முதன்மை ஆசிரியர் ஜூலியன் அசாங்கே.
இவரது விரிவான பேட்டி ஒன்றை இந்து நாளிதழ் சமீபத்தில் வெளியிட்டு உள்ளது. அவரிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்வியும், அவரது பதிலும் வருமாறு:
கேள்வி : அமெரிக்க நாட்டின் ஜனாதிபதி, உலகத்துக்கே ஜனாதிபதி என்பதைப் போல நடந்து கொள்கிறார் என்றும், இந்திய அரசின் கொள்கைகளை நிர்ணயிப்பதில் அமெரிக்க அரசு பெரும் செல்வாக்கு செலுத்துகிறது என்றும் நீங்கள் வெளியிட்டுள்ள ஆவணங்கள் தெரிவிக்கின்றன. இது உங்களுக்கு ஆச்சரியம் அளிக்கிறதா?
பதில் : இல்லை. மற்ற நாடுகளிடம் அமெரிக்கா எப்படி நடந்து கொள்கிறது என்பதற்கான ஆவணங்களையும் நாங்கள் வெளியிட்டுள்ளோம். அவற்றைப் பார்க்கும் போது, இந்தியாவிடம் அமெரிக்க நடந்து கொள்வது எனக்கு ஆச்சர்யம் அளிக்கவில்லை.
இந்த ஆவணங்கள் அனைத்தும் எனக்கு கிடைத்ததும் அவற்றை நான் படிக்கத் தொடங்கினேன். அப்போது தான், "அடக் கடவுளே! தென் அமெரிக்க நாடுகளின் மார்க்சியவாதிகள் 1960ஆம் ஆண்டுகளில் சொன்னதெல்லாம் உண்மைதான்!" என்று நான் நினைத்தேன்.
அமெரிக்க அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் மீது ஏராளமான புகார்களை அந்த மார்க்சியவாதிகள் கூறிவந்தார்கள். அவை வெற்று வசனம் அல்ல. அது மட்டுமல்ல. அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் என்பது அமெரிக்க முதலாளிகளின் கருவிதான் என்றே தோன்றுகின்றது. இந்த அமைச்சகத்தின் பிரதிநிதிகள் உலகம் முழுவதும் சென்று அனைத்து நாடுகளின் அரசியல், தொழிற்சங்கம் உள்ளிட்ட அனைத்திலும் தலையிடுகிறார்கள் என்பதும் தெரிகிறது.
இவ்வாறு அசாங்கே கூறியுள்ளார்.
"தோழமை" இதழிலிருந்து..
0 பின்னூட்டங்கள்:
Post a Comment