> குருத்து: தேர்தல் புறக்கணிப்பு - சிறு வெளியீடு - பாகம் 3

April 6, 2011

தேர்தல் புறக்கணிப்பு - சிறு வெளியீடு - பாகம் 3



பாகம் - 1

பாகம் - 2

யாரால் கொள்ளையடிக்கப்பட விரும்புகிறீர்கள்?


ஒரு வாக்காளர் என்ற முறையில் சொல்லுங்கள். ஓட்டுக் கட்சிகளுக்கு உங்கள் ஓட்டு ஏன் தேவைப்படுகிறது? ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் தேர்தல் என்ற இந்தக் கூத்தினால் என்ன பயன்?

‘தேர்தல் என்ற ஒன்று நடக்காமல் அரசாங்கம் எப்படி அமையும்? நல்லதோ கெட்டதோ, அரசாங்கம் என்ற ஒன்று அமையாமல், சட்டசபை என்ற ஒன்று இல்லாமல், சட்டதிட்டங்கள் வகுப்பது எப்படி? நிர்வாகம் நடப்பது எப்படி? மக்களுக்கு நல்லது கெட்டது செய்வது எப்படி?” என்று நீங்கள் திருப்பிக் கேட்கக் கூடும்.

இது ஓட்டுப்போடும் வாக்காளராகிய உங்களுடைய கருத்து. ஓட்டு வாங்கும் வேட்பாளர்களிடம் இதே கேள்வியைக் கேட்டுப் பாருங்கள். வை.கோ என்ற அசிங்கத்தைப் பார்த்த பிறகும் இந்தத் தேர்தல் என்பது பொறுக்கித் தின்பதற்கான போட்டி என்பதை இவர்களிடம் கேட்டுத்தான் தெரிந்து கொள்ள வேண்டுமா?

தயாநிதியும் அன்புமணியும் திடீர் மந்திரிகளாக்கப் பட்டதும், முதல்வர் நாற்காலியைப் பிடிப்பதற்காகக் கருணாநிதியின் முதுகுக்குப் பின்னால் ஸ்டாலின் தயாராகக் காத்து நிற்பதும் வேறெதற்கு?

வீரபாண்டி ஆறுமுகம் தனக்கொரு சீட், தன் மகனுக்கு ஒரு சீட், மச்சானுக்கு ஒரு சீட் வாங்கியிருப்பதும், காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமியும் அன்பரசுவும் தமது பிள்ளைகளுக்கு சீட் வாங்கியிருப்பதும் எதற்கு, குடும்பத்தோடு மக்கள் தொண்டாற்றவா?

‘எனக்கும் ஒரு வாய்ப்பு கொடுங்கள்” என்று விஜயகாந்த் கெஞ்சுவதும், ‘கருணாநிதி குடும்பம் மட்டும்தான் கொள்ளையடிக்க வேண்டுமா, காத்திருக்கும் நாங்களெல்லாம் இளித்த வாயர்களா” என்று வை.கோ குமுறி வெடிப்பதும், எல்லாக் கட்சிகளின் ‘செயல் வீரர்’ கூட்டங்களிலும் நாற்காலிகள் பறப்பதும், சத்தியமூர்த்தி பவனில் அன்றாடம் பத்து இருபது கதர்ச்சட்டைகள் கிழிவதும் எதற்காக?

இதில் மூடுமந்திரம் எதுவும் இல்லை. அ.தி.மு.க வில் வேட்பாளர் விண்ணப்பத்துக்கான கட்டணம் 10,000 ரூபாய். வேட்பாளராகத் தெரிவு செய்யப்பட்டு ஜெயித்தால் பல கோடி பம்பர் பரிசு. தோற்றால், தேர்தல் செலவுக்கு அம்மா கொடுக்கும் 2 கோடியில் அமுக்கியவரை லாபம் – இது றுதல் பரிசு. ஜெயித்தாலும் தோற்றாலும் பரிசு தரும் லாட்டரிச் சீட்டு உலகத்தில் வேறெங்காவது உண்டா?

‘சீட்டு கிடைக்காதவர்கள் கோபப்படாதீர்கள்; ராஜ்யசபா சீட்டு தருகிறேன், மேல்சபைக்கு மீண்டும் உயிர் கொடுக்கிறேன்” என்று உடன் பிறப்புகளுக்கு உற்சாகபானம் ஊற்றி உசுப்பி விடுகிறார் கலைஞர்.

தேர்தலின் நோக்கம் என்ன என்பது பற்றி வாக்காளராகிய நீங்கள் ஏதாவது முட்டாள்தனமாகக் கற்பனை செய்து கொண்டிருக்கலாம். ஆனால், தாங்கள் போட்டியிடுவதன் நோக்கம் என்ன என்பதில் வேட்பாளர்கள் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள். ஒளிவு மறைவோ கூச்சநாச்சமோ இல்லாமல் அதை வெளிப்படையாகப் பேசவும் செய்கிறார்கள்.

ஆயுத பேரத்தில் லஞ்சம், நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்பதற்கு லஞ்சம், தொகுதி மேம்பாட்டு நிதியை மக்களுக்குச் செலவிடுவதற்கு லஞ்சம்.. என அனைத்தும் தெளிவாக வீடியோ படமெடுத்து நாடெங்கும் ஒளிபரப்பப்பட்டுவிட்டன. நடைபெறவிருப்பது இரண்டு கொள்ளைக் கூட்டணிகளுக் கிடையிலான ‘ஜனநாயக பூர்வமான’ மோதல்.

மக்களிடம் மாமூல் வசூலிப்பதில் ஒரே ஊரிலுள்ள இரண்டு ரவுடிக்கும்பல்களுக்கிடையே போட்டி வந்தால் என்ன நடக்கும்? அடிதடி வெட்டு குத்தின் மூலம் ஒரு கோஷ்டி இன்னொரு கோஷ்டியை ஒழித்துக் கட்டி, தனது அதிகாரத்தை நிலைநாட்டிக் கொள்ளும்.

அவ்வாறில்லாமல், கொள்ளையடிக்கும் உரிமையை ‘ஜனநாயகபூர்வமான’ முறையில் முடிவு செய்வதுதான் இந்தத் தேர்தல். அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீங்கள் யாரால் கொள்ளை யடிக்கப்பட விரும்புகிறீர்கள் என்பதை நீங்கள் ‘ரகசியமாக’த் தெரிவித்து விட்டால், அதன்பின் அவர்கள் உங்களைப் பகிரங்கமாகவும் சட்டபூர்வமாகவும் கொள்ளையடிப்பார்கள். இதுதான் தேர்தல் விசயத்தில் வேட்பாளர்கள் கொண்டிருக்கும் நோக்கம்.

யாருடைய நோக்கம் நிறைவேறப் போகிறது? வாக்காளர்களாகிய உங்களுடைய நோக்கமா, கொள்ளையர்களாகிய அவர்களுடைய நோக்கமா?
உங்கள் ஒடுக்க நீங்களே நியாயவுரிமை வழங்காதீர்கள்

புழுத்து நாறிவிட்டது இந்த ஜனநாயகம். இதற்குப் புனுகு பூசி, நம்பிக்கையிழந்து வெறுத்துப் போன வாக்காளர்களுக்கு நம்பிக்கையூட்டி, தேர்தலில் ஒரு விறுவிறுப்பை உருவாக்கி வாக்காளர்களைக் கவர்ந்திழுக்கிறார்கள் ஆளும்வர்க்கங்கள்.

‘நல்லவர்கள், வல்லவர்களாகப் பார்த்துத் தேர்ந்தெடுக்க வேண்டியது உங்கள் பொறுப்பு. நல்ல பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்தால் நல்ல சட்டம் போடுவார்கள். வல்லவர்களைத் தேர்ந்தெடுத்தால் நாட்டை வல்லரசாக்குவார்கள். வெல்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களைத் தேர்ந்தெடுப்பவர்கள் மக்களாகிய நீங்கள்தான். உங்கள் பிரதிநிதிகள்தான் சட்டமியற்றுகிறார்கள். எனவே அவற்றுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டியது உங்கள் கடமை” என்று நம்மை ஏற்கச் செய்கிறார்கள்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாம்! இந்த நியாய உரிமையை வைத்துக் கொண்டுதான் மன்மோகன் சிங்கும், ப.சிதம்பரமும், ஜெயலலிதாவும் எல்லா வகையான மக்கள் விரோதத் திட்டங்களையும் அமலாக்குகிறார்கள். நாட்டின் முன்னேற்றத்தில் பெரிதும் அக்கறை கொண்டவர்கள் போல நடிக்கிறார்கள். ‘தமிழ்நாடு முதல் மாநிலமாகிறது, இந்தியா வல்லரசாகிறது” என்ற பிரமைகளைப் பரப்பிவிட்டு மக்களை மயக்கத்திலாழ்த்துகிறார்கள்.

சட்டமன்றத்தில் நடக்கும் விவாதங்களின் யோக்கிய தையைப் பற்றி உங்களுக்குத் தெரியாதா? ‘ஜெயலலிதா எங்களைப் பேசவே விடுவதில்லை” என்று கூறி எதிர்க்கட்சிகள் ஒவ்வொரு நாளும் வெளிநடப்பு செய்தன. மீறிப் பேசினால் அவைக் குறிப்பிலிருந்து நீக்குவார் காளிமுத்து. இவர்களுடைய பேச்செல்லாம் அவைக் குறிப்பில் ஏறினால் என்ன, இறங்கினால் என்ன?

இந்த அவையிலேயே இல்லாத உலக வங்கியும், உலக வர்த்தகக் கழகமும் தான் அவையில் நிறைவேற்றப்படும் சட்ட திட்டங்கள் அனைத்தையும் தீர்மானிக்கின்றன. 2001 இல் நாற்காலியில் அமர்ந்த மறுகணமே பேருந்துக் கட்டண உயர்வு, ரேசன் விலை உயர்வு, பம்பு செட்டுக்கு மீட்டர் என்று ஒரே நாளில் அறிவித்தாரே ஜெயலலிதா, அவை உலக வங்கியின் உத்தரவுகளன்றி வேறென்ன? அரசு ஊழியர் சலுகைகளை வெட்டும் சதித்திட்டம் முதல், மகளிர் சுய உதவிக்குழு போன்ற ‘நலத்திட்டங்கள்’ வரை அனைத்தும் உலக வங்கியின் ஆணைகள். தண்ணீர் தனியார்மயம், கடற்கரை தனியார்மயம், பன்னாட்டு நிறுவனங்கள் தொடங்கவிருக்கும் பண்ணை விவசாயம், சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் தொழிலாளர் சட்டங்கள் ரத்து என்பன போன்ற அனைத்தும் உலக வர்த்தகக் கழகத்தின் உத்தரவுகள்.

இத்தகைய மசோதாக்களெல்லாம் தமிழக சட்டமன்றத்தில் ஒரே நாளில் 10, 15 என்று கொத்துக்கொத்தாக விவாதமின்றி நிறைவேற்றப் பட்டிருக்கின்றன. ‘ஏக்கருக்கு ஆண்டொன்றுக்கு 8000 ரூபாய் தண்ணீர் வரி’ என்ற மசோதா உட்பட 16 மசோதாக்களை ஒரே மணிநேரத்தில் நிறைவேற்றியது மகாராட்டிரச் சட்டமன்றம்.
நாடாளுமன்றத்தில் நடப்பதென்ன?

பொதுத்துறைகளைத் தனியார்மயமாக்கும் நடவடிக்கை களையெல்லாம் அமல்படுத்திவிட்டு, அப்புறம் போனால் போகிறதென்றுதான் பாராளுமன்றத்துக்குச் சேதி சொல்கிறார் ப.சிதம்பரம். உலக வங்கியின் வழிகாட்டுதலின் கீழ்தான் மத்திய மாநிலபட்ஜெட்டுகள் தயாரிக்கப்படுகின்றன.

பிறகு, டாடா, பிர்லா, பஜாஜ், அம்பானி, நாராயணமூர்த்தி, மல்லையா போன்ற தரகு முதலாளிகள் நிதியமைச்சருக்கு ‘லோசனை’ வழங்குகிறார்கள். அதன்பின் இந்த மாபெரும் ‘ரகசிய வணத்திற்கு’ அரக்கு சீல் வைத்து, யுதக் காவல் போட்டு மக்கள் பிரதிநிதிகளுக்கு விநியோகிக்கிறார் நிதியமைச்சர்.சமீபத்தில் அமெரிக்காவுடன் போடப்பட்ட ராணுவ ஒப்பந்தம், அணுசக்தி ஒப்பந்தம், விவசாய ஒப்பந்தம் கியவற்றில் என்ன இருக்கிறது என்றுகூட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்த நிமிடம் வரை முழுமையாகத் தெரியாது. நம்முடைய நாட்டையே வல்லரசுகளுக்கு அடிமையாக்கும் ‘காட்’ ஒப்பந்தமோ அதிகாரிகளால் கையெழுத்திடப்பட்டு அதன் பின்னர் அரைகுறையாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.

நாட்டின் தலைவிதியையும் மக்களின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கின்ற கொள்கைகள் – திட்டங்கள் பற்றி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கே எதுவும் தெரிவிக்கப் படுவதில்லை எனும்போது, மக்களாகிய நம்முடைய நிலைமையைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா?

‘என்னைத் தேர்ந்தெடுத்தால் ரேசன் விலையை ஏற்றுவேன், பம்புசெட்டுக்கு மீட்டர் போடுவேன், பேருந்துக் கட்டணத்தை உயர்த்துவேன், தொழிலாளர்களுக்கு போனஸை வெட்டுவேன்” என்று மக்களுக்கு ‘வாக்குறுதி’ அளித்திருந்தால், 2001 இல் ஜெயலலிதா ஆட்சியைக் கைப்பற்றியிருக்க முடியுமா?

‘எங்களைத் தேர்ந்தெடுத்தால் ஆண்டுக்கு 1000 விவசாயிகளையாவது மருந்து வைத்துக் கொல்லுவோம், லாபமீட்டும் பொதுத்துறை நிறுவனங்களை பன்னாட்டு முதலாளிகளிடம் அடிமாட்டு விலைக்குத் தள்ளுவோம், சில்லறை வணிகத்தை பன்னாட்டு நிறுவனங்களுக்குத் திறந்து விடுவோம் – இதுதான் எங்களுடைய குறைந்த பட்ச செயல் திட்டம்” – என்று கூறி காங்கிரஸ் வென்றிருக்க முடியுமா?

இன்ன கொள்கையைத்தான் அமல்படுத்தப் போகிறோம் என்பதை வெளிப்படையாகச் சொன்னால் ஓட்டுப் பொறுக்கிகள் மக்களிடம் ஓட்டு வாங்குவது கடினம். எனவேதான் கள்ளத் தனமான வாக்குறுதிகளைத் தந்து ஏமாற்றி ஆட்சியைக் கைப்பற்றுகிறார்கள். பெரும்பான்மை மக்களின் வாக்குகளைப் பெற்றுள்வதற்கான நியாய உரிமையைப் பெறுகிறார்கள்.

நம்மைச் சுரண்டிச் சூறையாடி ஒடுக்குவதற்கான நியாய உரிமையை ஆளும் வர்க்கங்களுக்கும் அவர்களது எடுபிடிகளான ஓட்டுப் பொறுக்கிகளுக்கும் நாமே வழங்குவது அறிவுடைமையா என்பதுதான் நாங்கள் எழுப்பும் கேள்வி.


****

நன்றி : நல்லூர் முழக்கம்

1 பின்னூட்டங்கள்:

வலிப்போக்கன் said...

சரியான கேள்விதானுங்க!