> குருத்து: வாக்கை விற்கமாட்டோம்!

April 29, 2011

வாக்கை விற்கமாட்டோம்!


கடந்து முடிந்த தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிகமாகப் பேசப்பட்ட விஷயங்களில் முதலிடம் பிடித்தது பணப் பட்டுவாடா.....

நம்பித்தான் ஆக வேண்டும். ஆம்... இதுவே உண்மையும்கூட. உணவுக்காக ஊசிகளை விற்றும், உடலை மறைக்க வேண்டி, ஆடைகளுக்காகப் பாசிகளை விற்றும் தங்கள் வாழ்க்கையைக் கழித்துவரும் நரிக்குறவ மக்கள்தான் தேர்தலில் தங்கள் வாக்கு, விற்பனைக்கு அல்ல என்று அரசியல் கட்சியினரிடம் தைரியமாகக் கூறிப் பணம் வாங்க மறுத்துள்ளனர்.

மதுரை கருப்பாயூரணி போலீஸ் நிலைய எல்லைக்கு உள்பட்டது சக்கிமங்கலம். இந்தப் பகுதியில் சுமார் 500 நரிக்குறவ குடும்பங்கள் உள்ளன. பல ஆண்டுகளாக வாழ்ந்துவரும் இந்த மக்கள் அடிப்படை வசதிகூட இல்லாத நிலையிலேயே இருக்கிறார்கள்.

இங்கு வசிப்போரில் சுமார் 800 பேருக்கு மதுரை கிழக்குச் சட்டப்பேரவைத் தொகுதிக்குள் வாக்களிக்கும் வாய்ப்பு இருந்தது. இதைத் தெரிந்து கொண்ட ஆளும் கட்சி, எதிர்க்கட்சியினர் இவர்களை அணுகி எவ்வளவு வேண்டும் எனக் கேட்டுள்ளனர்.
எங்களுக்கு எதுவும் வேண்டாம். நாங்கள் பிழைப்புக்காக ஊசி, பாசி விற்போமே தவிர, எங்கள் உரிமையை ஒருபோதும் விற்கமாட்டோம் எனத் தெரிவித்துவிட்டனர்.

வாக்குக்குப் பணம் வாங்க மறுத்த அந்த நரிக்குறவ மக்களிடம் பேசியபோது, இப்போது இருநூறுக்கும், ஐநூறுக்கும் ஆசைப்பட்டால், அப்புறம் ஐந்தாண்டுகளுக்கு அவர்களிடம் எதையும் எதிர்பார்க்க முடியாது. வாக்குகளை விற்பதும் வாழ்க்கையை விற்பதும் ஒன்றுதான். ஊசி, பாசி விற்றால்கூட அதை நியாயமான விலைக்குத்தான் விற்போம். கூடுதல் விலை கொடுத்தாலோ, ஓசியில் பணம் கொடுக்க முன்வந்தாலோ வேண்டாம் என மறுத்துவிடுவோம் என்கின்றனர்.

""ஊசிமணி பாசி எல்லாம் விப்போமுங்க.. ஆனால், காசுக்காக மானத்தையே விக்கமாட்டோம்'' என்ற பாடல் வரிகள் நினைவுக்கு வந்தன.

நன்றி : வ. ஜெயபாண்டி, தினமணி

2 பின்னூட்டங்கள்:

Anonymous said...

good news.

குமரன் said...

இந்த செய்தியை பரவலாக அனைவருக்கும் சொல்லப்பட வேண்டும். எளிய மக்கள். ஓசி காசுக்கு ஆசைப்படாதவர்கள்.