> குருத்து: கண்புரை (Cataract) சிகிச்சை

June 12, 2023

கண்புரை (Cataract) சிகிச்சை


சில நாட்களாக சென்னை மங்கலாகி கொண்டே வந்தது. சுற்றுப்புற சூழல் அவ்வளவு கெட்டுப்போய் கிடக்கிறது என மிகவும் வருத்தப்பட்டேன். ஒருநாள் லேசான சந்தேகம் வந்து, இடதுகண்ணை மூடிவிட்டு வலது கண்ணால் மட்டும் பார்த்த பொழுது தான் வலது கண்ணுக்கு ஏதோ பிரச்சனையாகிவிட்டது என மங்கலாக புரிந்தது.


மருத்துவரைப் பார்த்தேன். கண்புரை வந்துவிட்டது. இன்னும் சில மாதங்கள் வரை வளரும். பிறகு சிகிச்சை செய்துகொள்ளுங்கள் இப்பொழுதே கூட நீங்கள் விரும்பினால் சிகிச்சை செய்துகொள்ளலாம் என பரிந்துரைத்தார். ”கண்புரை குறைபாடு எல்லாம் வயதானவர்களுக்கு தானே வரும்! இவ்வளவு சின்ன வயதில் ஏன் எனக்கு டாக்டர்?” என்றேன். இப்பொழுதெல்லாம் பிறந்த குழந்தைக்கே புரை வந்துவிடுகிறது. அதனால் கவலைப்படாதீர்கள்! என ஆறுதல் சொன்னார்.

கண்புரை என்றால், கண்ணில் இயற்கையாக இருந்த லென்ஸ் பழுதடைந்துவிட்டது. அதை அகற்றிவிட்டு, செயற்கை லென்ஸ் வைத்துக்கொள்ளவேண்டியது தான்! இயற்கை லென்ஸ் எவ்வளவு நாட்கள் வருகிறதோ! அதுவரை பார்த்துக்கொள்ளலாம். பிறகு மாற்றிக்கொள்ளலாம் என முடிவு செய்தேன்.

இதற்கிடையில் கட்டணம், சிகிச்சை எல்லாம் விசாரித்தால்… மருத்துவமனைக்கு தகுந்த மாதிரி கட்டணம் சொன்னார்கள். அதே போல கண்ணில் வைக்கிற லென்ஸ்க்கு தகுந்தமாதிரி விலையும் இருந்தது. மூன்று வகையான லென்ஸ்கள் இருக்கின்றன. என்னுடைய தொழில். எப்பொழுதும் கணிப்பொறி, படிப்பு வேலைகள் என்பதால் அதற்கு பொருத்தமான இறக்குமதி (import) செய்த ஒரு லென்ஸை தேர்ந்தெடுத்தேன். கட்டணத்தை விட லென்ஸின் விலை அதிகமாக இருந்தது.

ஒப்பீட்டளவில் சென்னையில் உள்ள அரவிந்த் கண் மருத்துவமனையில் கட்டணம் குறைவாக இருந்தது. அதனால் அங்கேயே செய்துகொள்ளலாம் என முடிவு செய்துவிட்டேன். சர்க்கரை, ரத்த அழுத்தம் எல்லாம் இயல்பாக இருந்ததால், தாமதிக்காமல் தேதியை குறித்துக்கொடுத்தார்கள்.

காலையில் ஏழு மணியளவில் போனோம். மதியம் 12 மணிக்கு எல்லாம் வீடு வந்து சேர்ந்துவிட்டோம். சிகிச்சைக்கான மொத்த நேரம் 15 நிமிடம் தான். மற்றபடி, பரிசோதனைகளுக்கான நேரம் தான் கூடுதலாக ஆனது. கொஞ்சம் பதட்டம் இருந்தது. இருந்தாலும் சமாளித்துவிட்டேன். என்னுடன் சிகிச்சை செய்துகொண்டவர்கள் பெரும்பாலோர் என்னை விட மூத்தவர்கள் தான். இரண்டு பேர் மட்டுமே என்னை விட இளையவர்கள்.

மூன்றுவாரம் ஓய்வில் இருந்தேன். கண்ணை பயன்படுத்தாமல் இயல்பு வாழ்வில் எதையும் செய்யமுடியவில்லை. படிக்க முடியவில்லை. பார்க்க முடியவில்லை. வெளியே போக முடியவில்லை. ஆடியோ வடிவில் செய்திகள் கேட்டேன். சில அரசியல் உரைகள் கேட்டேன். வீட்டில் கேட்டால், ”நான் இயல்பாக என்ன செய்வேனோ எல்லாமே செய்தேன்.” என அபாண்டமாய் புகார் சொல்வார்கள்.

மூன்று வாரம். வழக்கமாக செய்யும் அலுவலக வேலைகளை சமாளிப்பது தான் கொஞ்சம் சவாலாக இருந்தது. கண் சிகிச்சை என்பதால், புரிந்துகொண்டு, ஒத்துழைத்தார்கள். சில வேலைகளை இணையத்தின் உதவியுடன் செய்து முடித்தேன். கேள்விப்பட்ட சொந்தங்கள், நண்பர்கள், அலுவலக நண்பர்கள், தோழர்கள் எல்லோரும் நலம் விசாரித்தார்கள்.

மூன்றாவது வார முடிவில், கண்ணை பரிசோதித்த பொழுது, கண் நன்றாக இருந்தது. கண்களின் தன்மைக்கேற்ப புதிய கண்ணாடி எழுதித்தந்தார்கள்.

இப்பொழுது சென்னை முன்பை விட பளிச்சென தெரிகிறது. வலது கண் சிகிச்சையின் பொழுது, இடது கண்ணையும் சோதித்த பொழுது, அந்த கண்ணிலும் புரை துவங்கியிருப்பதாக சொன்னார்கள். ஆறு மாதம் தாங்கும். இடது கண்ணிலும் சிகிச்சை செய்துகொண்டால், இன்னும் சென்னை பளிச்சென தெரியும்.

இந்த செயற்கை லென்ஸ் எவ்வளவு ஆண்டுகள் வரும் என கேட்ட பொழுது, 30 ஆண்டுகள் வரை அதிகப்பட்சம் வரும் என்றார்கள். நல்லது. புதிய லென்ஸ். புதிய உலகு. உற்சாகமாய் செயல்படுவோம்.

0 பின்னூட்டங்கள்: