> குருத்து: தேர்தல் ஜனநாயகம் - கார்ப்பரேட் முதலாளிகளின் பகற்கொள்ளைக்கான ஜனநாயகம்!

April 4, 2011

தேர்தல் ஜனநாயகம் - கார்ப்பரேட் முதலாளிகளின் பகற்கொள்ளைக்கான ஜனநாயகம்!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே,

காண்டிராக்டர்கள், ரியல் எஸ்டேட் முதலாளிகள், தொழிலதிபர்கள், சுயநிதிகல்விக் கொள்ளையர்கள், மணல் கொள்ளையர்கள், கந்துவட்டி பைனான்சுக்காரர்கள் இவர்கள் தான் எல்லாக் கட்சிகளின் சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்கள். அனைவருமே கோடீசுவரர்கள் தான். கோடீசுவரன் என்பவன் யோக்கியனாக இருக்க் முடியது. அதிலும் தேர்தலில் போட்டியிடுபவன் அயோக்கியனாக மட்டுமே இருக்க இயலும்.

இவர்களுக்கோ இவர்களுடைய கட்சிக்கோ கொள்கையும் கிடையாது; லட்சியமும் கிடையாது. இவர்களைப் பொருத்தவரை தேர்தல் என்பது ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நாட்டை கொள்ளையடிப்பதற்கு விடப்படும் டென்டர். இப்படி டென்டர் எடுத்து சம்பாதித்த எம்.எல்.ஏ; எம்.பிக்கள் அமைச்சர்களில் பலர் தொழிலதிபர்கள் ஆகிவிட்டார்கள். மல்லையா, அம்பானி, பிர்லா போன்ற தொழிலதிபர்களோ எம்.பிக்கள் ஆகிவிட்டார்கள். மொத்தத்தில் சட்டமன்றங்களும், நாடாளுமன்றமும், முதலாளிகள் மன்றமான லயன்ஸ் கிளப்பாகவே மாறிவிட்டன. இந்த முதலாளிகள் யாரேனும் ஒருவரைத் தமது பிரதிநிதியாகத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உரிமை தான் மக்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் வாக்குரிமை.

சட்டமன்றம் முதலாளிகள் மன்றமாக மாறி விட்டது மட்டுமல்ல, இந்த அரசு அமைப்பும் அதன் பல்வேறு உறுப்புகளும் கோடீசுவரர்களுக்கும் பன்னாட்டு முதலளிகளுக்கும் மட்டுமே சேவைசெய்யும் விதத்தில், தனியார் மயக் கொள்கைக்கு ஏற்ப மறுகட்டமைப்பு செய்யப்படுகின்றன. கடந்த இருபது ஆண்டுகளாக மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சிக்கு வரும் எல்லாக் கட்சி அரசுகளும் அமல் படுத்திவரும் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற கொள்கை, நமது நாட்டை முன்னேற்றுவதற்காக இங்குள்ள கட்சிகள் சிந்தித்து வகுத்த கொள்கை அல்ல. அது பன்னாட்டு கார்ப்பரேட் முதலாளிகள் உலக நாடுகளையும் மக்களையும் தடையின்றிக் கொள்ளையடிப்பதற்காக, அமெரிக்கா வகுத்துத் தந்த கொள்கை; உலக வங்கி, உலக வர்த்தகக் கழகம் ஆகிய அமைப்புகளின் மூலம் இந்தியா போன்ற நாடுகளின் மீது திணிக்கப் பட்டிருக்கும் மறுகாலனியாக்கக் கொள்கை.

எல்லா ஓட்டுக் கட்சிகளும் இந்த கொள்கையைத்தான் பின்பற்றுகின்றன. நாட்டின் இயற்கை வளங்களையும், பொதுச் சொத்துக்களையும், மக்களின் உழைப்பையும் பன்னாட்டு முதலாளிகளும் தரகு அதிகாரவர்க்க முதலாளிகளும் தடையின்றிக் கொள்ளையடிப்பதற்கு ஏற்பாடு செய்து கொடுப்பதும், அதற்கு தரகுத் தொகையாக கோடிக்கணக்கில் கையூட்டு பெற்றுக் கொள்வதும், வாய்ப்புள்ள இடங்களிலெல்லாம் பன்னாட்டு முதலாளிகளின் தொழில் பங்காளிகளாக சேர்ந்துகொண்டு கொள்ளையடிப்பதும்தான் இன்று நாம் காணும் ஓட்டுக் கட்சி அரசியல். இதில் ஓட்டு பொறுக்கிகளிடையான தொழில்போட்டியின் களம் தான் இந்தத் தேர்தல் களம். தனியார்மயக் கொள்கை என்ற பெயரில், சட்டபூர்வமாக கொள்கை முடிவெடுத்து கார்ப்பரேட் முதலாளிகள் நாட்டின் பொதுச் சொத்துகளையும் இயற்கை வளங்களையும் பகற்கொள்ளை அடிப்பதற்கு, அரசாங்கத்தையே கருவியாக்கி அடியாள் வேலை செய்யும் பணியைத்தான் கடந்த 20 ஆண்டுகளாக எல்லாக் கட்சி அரசுகளும் செய்து வருகின்றன.

தொலைபேசி, வங்கி, காப்பீடு, எண்ணெய் எரிவாயு, துறைமுகங்கள், விமானநிலையங்கள் போன்ற லாபம் ஈட்டுகின்ற பொதுத்துறைகள் எல்லாம் காங்கிரசு, பாஜக அரசுகளால் அடிமாட்டு விலைக்கு பன்னாட்டு முதலாளிகளுக்கும் தரகு முதலாளிகளுக்கும் அள்ளிக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வழங்கியுள்ள வரிச்சலுகை 22 லட்சம் கோடி ரூபாய். இது 14 ஸ்பெக்ட்ரம் கொள்ளைகளுக்கு இணையான தொகையாகும். சட்டிஸ்கார் மாநிலத்தில் 500 கிராமங்களைத் தீவைத்துக் கொளுத்தி, பழங்குடி மக்களை அடித்து விரட்டிவிட்டு அந்தக் கிராமங்களையே டாடாவின் இருப்புச் சுரங்க நிறுவனத்திற்கு சொந்தமாக்கியிருக்கிறது சட்டீஸ்கார் அரசு. டன் 7000 ரூபாய் சந்தை மதிப்புள்ள இருப்புத் தாதுவுக்கு வெறும் 27 ரூபாய் விலை நிர்ணயம் செய்து, பல லட்சம் டன் இருப்புத் தாதுவை வெட்டி விற்பதற்கு ரெட்டி சகோதரர்கள் என்ற கிரிமினல் முதலாளிகள் கும்பலுக்கு அனுமதி வழங்கியிருக்கிறது கர்னாடக அரசு. இதைப் போல பல அரிய கனிமப் பொருட்கள் அடிமாட்டு விலைக்கு பன்னாட்டு நிறுவனங்களுக்கு விலை பேசப்படுகின்றன. தமிழகத்தில் 650 கோடி ரூபாய் மூலதனம் போட்டிருக்கும் நோக்கியா நிறுவனத்திற்கு ஆண்டுதோறும் 650 கோடி ரூபாய் மனியம் அளித்து வருகிறது கருணாநிதி அரசு. லிட்டர் 13 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் தண்ணீரை லிட்டர் 1.3 பைசாவுக்கு கோகோகோலா நிறுவனத்திற்கு அன்றைய ஜெயலலிதா அரசு. ஆறுகளையே தனியார் முதலாளிகளுக்கு பட்டா போட்டு விற்றிருக்கிறது சட்டீஸ்கார் மாநில அரசு. இப்படி தனியார்மயம் என்ற பெயரில் கடந்த 20 ஆண்டுகளாக நடைபெற்றுவரும் கார்ப்பரேட் கொள்ளையை பட்டியலிட்டு மாளாது.

பன்னாட்டு நிறுவனங்களுடன் அரசு போடுகின்ற புரிந்துணர்வு ஒப்பந்தங்களும், அவற்றில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அரசு வழங்கும் சலுகைகளும் சட்டமன்றத்துக்கும், நாட்டாளுமன்றத்துக்குமே தெரியாத பரம ரகசியங்களாக பேணப்படுகின்றன. அதுமட்டுமல்ல, நகர்ப்புற குடிநீர் திட்டம் முதல் குப்பைவாரும் திட்டம் வரையிலான அனைத்தையும் வகுப்பவர்கள் உலக வங்கி அதிகாரிகள், அதிகாரவர்க்கம், பன்னாட்டு நிறுவன அதிகாரிகள் ஆகியோரடங்கிய குழுக்களேயன்றி மக்கள் பிரதிநிதிகள் அல்லர். கார்ப்பரேட் முதலாளிகளின் கொள்ளைக்கு வழிவகுக்கும் சட்டங்களும் திட்டங்களும் சட்டமன்றங்களிலும், நாடாளுமன்றத்திலும் ஒரு நாளும் விவாதிக்கப்பட்டதில்லை. இதுதான் சட்டமன்றங்கள் நாடாளுமன்றங்க‌ளின் யோக்கியதை.

கார்ப்பரேட் முதலாளிகளின் பகற்கொள்ளைக்கு ஏற்ப இந்த அரசமைப்பே மாற்றப்பட்டுவிட்டது. அரசின் கட்டமைப்பு, சட்டங்கள் விதிமுறைகள், நாடாளுமன்றம் சட்டமன்றங்களின் அதிகார வரம்பு ஆகிய அனைத்தும் மாற்றப்பட்டுவிட்டன. இதுதான் மையமான பிரச்சனை. எப்பேர்ப்பட்ட நல்லவரோ, வல்லவரோ, யோக்கியரோ பதவியில் அமர்ந்தாலும் இந்த அரசமைப்பினைக் கொண்டு கார்ப்பரேட் முதலாளிகளுக்குத்தான் சேவை செய்ய முடியுமே தவிர, மக்கள் நலன்னுக்காகவோ, நாட்டு நலனுக்காகவோ ஒரு துரும்பைக் கூட அசைக்க முடியாது. கார்ப்பரேட் கொள்ளைக்கு வழி செய்து கொடுத்து அதற்கு சேவைக் கட்டணமாக முதலாளிகள் வீசுகின்ற எலும்புத்துண்டுகளை மட்டுமே ஓட்டுக் கட்சிகள் பெற்றுக்கொள்ள முடியும்.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் 1,76,000 கோடி பகற்கொள்ளை அடிக்க கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சேவை செய்து ராசாவும் கருணாநிதி குடும்பமும் பெற்ற எலும்புத்துண்டுகளின் மதிப்பு சில ஆயிரம் கோடிகள். ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்துப் பேசும் எதிர்க்கட்சிகளும் ஊடகங்களும் இதனை ராசா திமுக வின் ஊழலாக மட்டுமே சித்தரிக்கின்றனர். இதில் லட்சக் கணக்கான கோடிகளைக் கொள்ளையடித்த குற்றவாளிகளான கார்ப்பரேட் முதலாளிகளின் பெயர்களையோ, அவர்கள் செய்த தில்லுமுல்லுகளையோ வெளியில் சொல்வதில்லை. காரணம், கார்ப்பரேட் கொள்ளைகளுக்கு சேவை செய்வதென்பது ஓட்டுக்கட்சிகளும் ஊடகங்களும் ஏற்றுக்கொண்ட கொள்கை.

கார்ப்பரேட் கொள்ளைக்கு வழியமைத்துக் கொடுப்பதன் மூலம் கிடைக்கக்கூடிய லஞ்சத்தின் அளவும், முதலாளிகளுடன் கூட்டுச் சேர்ந்து கொள்ளையிடுவதற்கான புதிய வாய்ப்புகளும் எத்தனை பிரமாண்டமாக விரிந்து கிடக்கின்றன என்பதை ஸ்பெக்ட்ரம் ஊழல் காட்டிவிட்டது. இத்தகைய பொன்னான வாய்ப்பை தலைமுறை தலைமுறையாக தங்களிடமே வைத்துக்கொள்வதற்கு கருணாநிதி குடும்பமும், அதனை தட்டிப் பறிப்பதற்கு ஜெயா சசி குடும்பமும் களத்தில் நிற்கின்றன. இதில் எந்தக் குடும்பம் கொள்ளையடிக்க வேண்டும் என்பதற்கான லைசன்சை உங்களிடமிருந்து பெறுவதற்காக நடத்தப்படுவது தான் இந்தத் தேர்தல்.

234 தொகுதிகளில் நிற்கும் சர்வ கட்சி வேட்பாளர்களும் கோடீசுவர அயோக்கியர்கள் மட்டுமே, “இவர்களில் எந்த அயோக்கியனை வேண்டுமானாலும் தேர்ந்தெடுங்கள், ஆனால் காசு வாங்காமல் மனசாட்சிப்படி யோக்கியமான முறையில் தேர்ந்தெடுங்கள்” என்று வாக்காளர்களுக்கு அறிவுறுத்துகிறது தேர்தல் ஆணையம். ஆனால் சுவரெழுத்து தெருமுனைப் பிரச்சாரங்கள், ஆட்டோ பிரச்சாரம் போன்ற உழைக்கும் மக்கள் கையாளக்கூடிய எளிய பிரச்சார முறைகளுக்கெல்லாம் தடைவிதித்து, இந்த தேர்தல் களத்திலிருந்தே உழைக்கும் மக்களைத் தீண்டத் தகாதவர்களாக்கி பலாத்காரமாக விலக்கி வைக்கிறது. தொலைக்காட்சிகள், நாளேடுகளில் விளம்பரம் கொடுக்க முடிந்த கோடீசுவரர்கள் மட்டும் தான் இனி தேர்தல் பிரச்சாரம் செய்யமுடியும் என்று பணநாயகத்தையே சட்டப்படி நிலைநாட்டி வருகிறது. “ஓட்டுக்கு பணம் கொடுப்பதும் குற்றம் பணம் வாங்குவதும் குற்றம் வழக்குப்போடுவேன்” என்று கர்ச்சிக்கிறது தேர்தல் ஆணையம். ஓட்டுப் பொறுக்கிகளோ “எம்.எல்.ஏ மந்திரி எங்களுக்கு, மிக்சி கிரைண்டர் உங்களுக்கு” என்று பகிரங்கமாக ஓட்டை விலை பேசிக் கொண்டிருக்கிறார்கள். இது வேடிக்கை போல தெரியலாம். ஆனால் இதன் உள்ளே ஒரு குரூரம் பொதிந்திருக்கிறது.

“னமக்கு கொள்கை லட்சியம் எல்லாம் கிடையாது. நாம் ஆட்சிக்கு வருவதே மக்கள் பணத்தை சுருட்டுவதற்குத்தான். இது மக்களுக்கு நன்றாகத் தெரியும். அப்படி இருக்கும் போது வெறுங்கையாகப் போய் ஓட்டுக் கேட்டால் ஓட்டு விழாது. எதிர்க்கட்சிக்காரனைவிட கூடுதலாக இலவசம் தருவதாக அறிவிக்க வேண்டும். அவனை மட்டம் தட்டிப் பேசுவதன் மூலம் நம்மை கொஞ்சம் யோக்கியனாகவும் காட்டிக் கொள்ள வேண்டும்” என்ற அடிப்படையில் தான் இலவசத் திட்டங்களை போட்டி போட்டுக் கொண்டு அறிவிக்கின்றனர் ஓட்டுப் பொறுக்கிகள்.

உங்கள் கையை வெட்டி உங்களுக்கே சூப் வைத்துத் தருவது போல, டாஸ்மாக் சாராயக் கடை விற்பனை மூலம் இலட்சக் கணக்கான உழைப்பாளர்களைக் குடிகாரர்களாக்கி, அவர்களது மனைவியர்களை கைம்பெண்களாக்கி, மாணவர் சமூகம் வரையில் குடிப்பழக்கத்திற்கு ஆளாக்கிச் சீரழித்து, பல லட்சம் குடும்பங்களின் கண்ணீரிலிருந்து அறுவடை செய்யப்பட்ட பணத்தைக் கொண்டுதான் இந்த இலவசங்களைக் கொடுக்க திட்டமிட்டிருக்கிறார்கள் ஓட்டுப் பொறுக்கிகள். கருணாநிதி பதவியிலிருந்த கடந்த ஐந்து ஆண்டுகளில் டாஸ்மாக் மூலம் அரசு ஈட்டிய வருவாய் ரூ 50,000 கோடி. இந்த ஐந்து ஆண்டுகளில் கருணாநிதி வழங்கிய இலவசத் திட்டங்கள் அனைத்துக்குமான மொத்தச் செலவு 40,000 கோடியைத் தாண்டாது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் டாஸ்மாக்கின் வருமானம் ஒரு லட்சம் கோடியைத் தாண்டும் என்று புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இதில் 60 70,000 கோடிகளைக் கொண்டே இவர்கள் அறிவிக்கும் எல்லா இலவசத்திட்டங்களையும் நிறைவேற்றிவிட முடியும். ஒரு சமூகத்தையே கருவறுத்து அழிக்கின்ற இத்தகையதொரு நயவஞ்சகத் திட்டத்தை ஜென்ம விரோதியோ, பகை நாட்டானோகூட சிந்தித்துப் பார்க்க முடியாது. அப்பேற்பட்ட கொலைகார கபட வேடதாரிகள் தான் உங்களிடம் ஓட்டுக் கேட்டு வருகிறார்கள்.

முடிவு செய்ய வேண்டியவர்கள் நீங்கள். வாக்களிக்கப் போகிறீர்களா? புறக்கணிக்கப் போகிறீர்களா? ஏதேனும் ஒரு கட்சிக்கு வாக்களித்துத்தனே ஆகவேண்டும் என்று வக்களிப்பதும், அல்லது குறிப்பிட்ட கட்சியையோ, வேட்பாளரையோ தோற்கடிப்பதன் மூலம் அவர்களைத் தண்டிக்கலாம் என்று சிந்திப்பதும் நமக்கு நாமே கூறிக்கொள்ளும் சமாதானங்கள் மட்டுமே. கடந்த 60 ஆண்டுகளில் இப்படிப்பட்ட ‘தண்டனைகளை’ பலமுறை அனுபவித்துத்தான் ஓட்டுப் பொறுக்கிகள் கோடீசுவரர்கள் ஆகியிருக்கிறார்கள். அவர்கள் மீண்டும் மீண்டும் கோடீசுவரர்கள் ஆவதற்கு வாய்ப்பு வழங்காதீர்கள்.

இந்த போலி ஜனநாயகத் தேர்தல் என்பது நமது போராட்ட உணர்வை மழுங்கடிக்கின்ற மயக்க மருந்து. தேர்தல் மூலம் மாற்றத்தைக் கொண்டுவந்து விடலாம் என்ற மயக்கத்திலிருந்து விடுபட்டு வெளியே வாருங்கள்.

கார்ப்பரேட் முதலாளிகளின் பகற்கொள்ளைக்கான ஜனநாயகத்தை ஒழிப்போம்!

தேர்தலைப் புறக்கணித்து நக்ச்ல்பாரிப் பாதையில் அணிதிரள்வோம்!

தொடர்புக்கு: அ. முகுந்தன்,

110, 2 வது மாடி,

மாநகராட்சி வணிக வளாகம்,

63 ஆற்காடு சாலை,

கோடம்பாக்கம்,

சென்னை 24.

பேசி: 9444834519.

மக்கள் கலை இலக்கியக் கழகம்

விவசாயிகள் விடுதலை முன்னணி

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி

பெண்கள் விடுதலை முன்னணி


நன்றி : செங்கொடி

0 பின்னூட்டங்கள்: