
வியாசர்பாடி அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரி மாணவர் இளையராஜாவின் தற்கொலைக்கு நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் என உண்மை அறியும் குழு தெரிவித்துள்ளது.
சென்னை வியாசர்பாடிய்ல் உள்ள டாக்டர் அம்பேத்கர் கலை அறிவியல் கல்லூரி மாணவர் இளையராஜா 11ம் தேதி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். அவரின் வருகைப் பதிவு போதுமானதாக இல்லாத காரணத்தால் கல்லூரி நிர்வாகம் தேர்வு எழுத அனுமதிக்கதாதே அவரின் தற்கொலைக்கு காரணம், எனக்கூறி சக கல்லூரி மாணவர்கள் தேர்வு நாளான ஏப்ரல் 18ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
இது தொடர்பாக இளையராஜாவின் தந்தை உள்பட 19 மாணவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதன் காரணமாக கல்லூரி நிர்வாகத்தினர் பருவத் தேர்வைக் காலவரையின்றி ஒத்திவைத்துள்ளனர்.
இதனிடையே, மாணவர் தற்கொலைக்கு பின்னணியில் உள்ள உண்மை நிலையை கண்டறியும், கல்லூரியில் மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் பல்வேரு கல்வியாளர்கள் அடங்கிய உண்மை அறியும் குழுவினர் விசாரித்து வந்தனர். இக்குழுவில் மனித உரிமைகளுக்கான மக்கள் கழகத்தின் உறுப்பினர் அ.மார்க்ஸ், அம்பேத்கர் முன்னாள் முதல்வர் மு.திருமாவளவன், மனித உரிமை ஆர்வலர் நடராஜ் உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர். இக்குழுவின் அறிக்கை ஏப். 27 அன்று வெளியிடப்பட்டது.
இது குறித்து குழு உறுப்பினர்களில் ஒருவரான அ.மார்க்ஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வியாசார்பாடி அம்பேத்கர் அரசுக் கல்லூரியில் உண்மை அறியும் குழுவின் சார்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், அக்கல்லூரியில் போதுமான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது தெரியவந்தது. கல்லூரிக்கு நிரந்தர முதல்வர் இல்லை. குறிப்பாக தற்கொஅலை செய்துக் கொண்ட மாணவர் பயின்ற பி.பி.ஏ. துறையில் கெளரவ விரிவுரையாளர்களே அதிக அளவில் இருக்கின்றனர்.
இந்த துறைக்கென, துறைத் தலைவரும் நியமிக்கப்படவில்லை. மாணவர் சங்கத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற விதியும் கடைப்பிடிக்கவில்லை. அவ்வாறு நடத்தப்பட்டிருந்தால் மாணவர்கள் தங்கள் குறைகளை, மாணவர் பிரதிந்தி மூலம் சரி செய்திருக்க முடியும். இதுவும் மாணவர் தற்கொலைக்கு ஒரு காரணமாக அமைந்துவிட்டது.
தன்னாட்சி கல்லூரிகளில் மாணவர் குறைத் தீர்க்கும் செல் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்பது பல்கலைக் கழக மானியக் குழுவின் விதி. இதுவும் கல்லூரியில் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
பொதுவாக கல்லூரியில் சில மாணவர்களின் வருகைப் பதிவு குறையும் பட்சத்தில் அந்த மாணவர்களின் பெற்றோருக்கு கல்லூரி நிர்வாகம் தெரியப்படுத்த வேண்டும். ஆனால், தற்கொலை செய்துக்கொண்ட மாணவர் இளையராஜவின் பெற்றோருக்கு எந்தவிதத் தகவலும் கல்லூரி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்படவில்லை. இது அவரது பெற்றோரிடம் மாணவர் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மாணவரின் தற்கொலைக்கு நிர்வாகத்தின் அலட்சியப்போக்கே காரணம்.
இந்நிலையில் கல்லூரி தேர்வுகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும். மேலும் கல்லூரியில் சுமூகமான சூழல் திரும்ப உடனடியாக இளையராஜாவின் தந்தை, சில மாணவர்கள் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என்றார்.
நன்றி : தினமணி (28/04/2011)
0 பின்னூட்டங்கள்:
Post a Comment