> குருத்து: Jab we met (2007) இந்தி - நாம் சந்தித்த பொழுது!

February 28, 2022

Jab we met (2007) இந்தி - நாம் சந்தித்த பொழுது!


நாயகன் பெரும் பணக்கார குடும்பத்தின் வாரிசு. அப்பா இறக்கிறார். தொழிலை ஏற்று நடத்த வேண்டிய நிர்ப்பந்தம். அம்மா வேறு ஒருவரை திருமணம் செய்ய முடிவெடுக்கிறார். தான் காதலித்தப் பெண் வேறு ஒருவரை மணக்கிறார். எல்லாம் ஒன்றாய் சேர்ந்து மொத்தமாய் தாக்கியதில் மனம் வெறுத்து, கால் போன போக்கில் போய், ரயிலில் ஏறுகிறார். தற்கொலை செய்துகொள்ளலாம் என கண நேரத்தில் முடிவெடுக்கும் பொழுது, நாயகி அவன் வாழ்வில் வருகிறார்.


நாயகன் எவ்வளவோ சீரியசோ, அவள் எதையுமே சீரியசாக எடுத்துக்கொள்ளாத ஆள். கலகலவென பேசுகிறார். இவனை காப்பாற்றப் போய் ரயிலை தவறவிடுகிறார். ஏகப்பட்ட கலாட்டக்களுக்கு பிறகு, அவளின் குணம் தந்த தாக்கத்தால், அவன் தன் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் தைரியம் கொள்கிறான்.

இருவரும் நாயகியின் வீடு வந்து சேர்கிறார்கள். நாயகி ஒருவனை காதலிக்கிறாள். வீட்டில் சொன்னால் ஒத்துக்கொள்ளமாட்டார்கள் என அவளைத் தேடி கிளம்புகிறாள். போகும் பொழுது வீட்டிற்கு வந்திருந்த நாயகனையும் அழைத்து செல்கிறாள். வீட்டில் இருவரும் ஓடிவிட்டார்கள் என தேடுகிறார்கள்.

தேடிச் சென்ற காதலனை திருமணம் முடித்தாளா? பிறகு என்ன நடந்தது என்பதை
உணர்வுபூர்வமாக சொல்லியிருக்கிறார்கள்.

***

எதிரெதிர் குணங்கள் கொண்ட இருவர் ஒருவருக்கொருவர் எப்படி பாதிக்கிறார்கள் என்பது தான் கதை. சமீபத்தில் முகநூலில் ஒருவர் எழுதியிருந்தார். “எல்லாவற்றையும் கடந்து, நாற்பதுகளை கடக்கும் பொழுது, மீண்டும் 20 லிருந்து ஆரம்பித்தால், ஏகமாய் சாதிக்கலாம் என எண்ணம் வரும். அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தாலும், பெரிதாக எதையும் மாற்றிவிடமுடியாது.” அது போல வாழ்வில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை கொஞ்சம் கூலாகவே எதிர்கொள்ளலாம். ரெம்பவும் பதட்டப்பட வேண்டியதில்லை என்பதை ஜாலியாக சொல்லிய பீல் குட் மூவி தான் படம். பிரச்சனைகளால் மண்டை காயும் பொழுது, இந்தப் படத்தைப் பார்த்தால் மீண்டுவிடலாம்.

கரீனாவும், ஷாகித்தும் சிறப்பாக நடித்து படம் வந்து வெற்றி பெற்றது. படத்தில் பாடிய ஸ்ரேயாவிற்கு தேசிய விருது கிடைத்தது. தென்னிந்திய மொழிகளில் மீண்டும் எடுக்க முயன்றதில், தமிழில் பரத், தமன்னா நடித்து கண்ணன் இயக்கியிருந்தார். இந்திப் படத்தை அப்படியே எந்தவித (உடைகள் கூட அதே தான் 🙂 ) மாற்றம் இல்லாமல் எடுத்தார்கள். வெற்றி பெற்றது.

நெட் பிளிக்சில் இருக்கிறது. வாய்ப்பிருப்பவர்கள் பாருங்கள்.

0 பின்னூட்டங்கள்: