> குருத்து: சர்தார் (2022)

October 30, 2022

சர்தார் (2022)


நாயகன் போலீஸ் அதிகாரியாக இருக்கிறார். ஒரு தேசதுரோகியின் மகன் என சிறுவயதில் இருந்தே அவமானப்படுத்திக்கொண்டே இருக்கிறார்கள். அதை சரிசெய்வதற்காக சமூக வலைத்தளங்களில் போலீசையும் அவரையும் புகழ்பாடும்படி ஏதாவது மெனக்கெட்டு செய்துகொண்டேயிருக்கிறார்.


ஒரு நடுத்தர வயது அம்மா தன் பையனுடன் வாழ்கிறார். அவனுக்கு உடல்நலம் சிக்கலாகி, இன்னும் சில மாதங்கள் தான் வாழமுடியும் என்கிறார் மருத்துவர். காரணம் அறியும் பொழுது, பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் பயன்பாடு தான் பிரச்சனை என அறிகிறார்.

அதிலிருந்து தண்ணீரை பாட்டிலில் அடைத்து விற்பதை, தண்ணீர் தனியார்மயமாவதை தொடர்ந்து எதிர்க்கிறார். சின்ன சின்ன நிறுவனங்களை எதிர்ப்பது வரை பிரச்சனையில்லை. பெரிய கார்ப்பரேட் நிறுவனத்தை எதிர்த்து சில வேலைகளை செய்யும் பொழுது, படுகொலை செய்யப்படுகிறார்.

அரசு அவரை ஒரு தேசதுரோகி என அறிவிக்கிறது. அவரை நிரபராதி என நாயகன் அறிகிறார். தனக்கு ஏற்பட்ட அதே நிலை அந்த பையனுக்கும் என வருந்துகிறார். யார் செய்த படுகொலை என தொட்டு தொட்டு ஆராயும் பொழுது, அது இந்தியா முழுவதும் தண்ணீர் தனியார்மயமாவதின் மிகப்பெரிய வலையை புரிந்துகொள்கிறார்.

இந்த பெரிய சதியை எப்படி முறியடிக்கிறார்கள் என்பதை சண்டை, துரத்தல் என ஆக்சனுடன் சொல்லியிருக்கிறார்கள்.
***

இயற்கை தரும் நீரை கடந்த மூன்று பத்தாண்டுகளில் உலகம் முழுவதும் வியாபார பொருளாக்கிவிட்டார்கள். லாபம். மேலும் லாபம். லாப வெறி என்ற முதலாளித்துவ இலக்கணப்படி, பல நாடுகளில் பல கார்ப்பரேட் நிறுவனங்கள் தண்ணீரை தங்கள் வசமாக்கிக்கொண்டே இருக்கிறார்கள். ஏற்கனவே மூன்றாம் உலக மக்கள் அத்தியாவசிய தேவைகளை பெறுவதற்கே அல்லல்படும் பொழுது, உயிர் வாழ்வதற்கு அடிப்படையான நீரையும் இவர்கள் காசாக்குகிற பொழுது, மக்கள் இன்னும் துன்பத்தில் மூழ்குகிறார்கள். இதை எதிர்த்து மக்கள் போராடுகிறார்கள். போராடிக்கொண்டே இருக்கிறார்கள். பல உயிர்களை இழந்திருக்கிறார்கள்.

தண்ணீர் பிரச்சனையை தான் இந்த வணிக ரீதியான படத்தில், வெகுமக்களை சென்றடையும் விதத்தில் பொருத்தியிருக்கிறார்கள். கார்த்தி, ராஷிக்கண்ணா, ரெஜிஜா, லைலா, முனீஷ்காந்த் என பலரும் நடித்திருக்கிறார்கள்.

ஒரு முக்கிய பிரச்சனையை கையாண்டு, சொந்த நாட்டில் தேச துரோகி என முத்திரை குத்தப்பட்டு, பல ஆண்டுகள் சிறையில் வாழும் பல திறனுடைய உளவாளி இந்தியாவில் என்ன நடக்கிறது என தெரியாமலே வாழ்வது பெரிய நெருடல். மற்றபடி, பார்வையாளர்களை ஈர்க்கும்படி சுவாரசியமாக எடுத்திருக்கிறார்கள்.

இது எங்கோ நடக்கிற கதை இல்லை. இதோ திருப்பூரிலும், கோயமுத்தூரிலும், சேலத்திலும் அந்த கார்ப்பரேட் ஆட்கள் கால்பதித்துவிட்டார்கள். படம் முடிந்து இறுதி காட்சிகளில் இந்த செய்தி அமைதியாக எழுத்தில் வந்து போகிறது. இதை படத்தில் வருகிற யாரோ ஒரு நாயகன் வந்து காப்பாத்துவான் என எதிர்பார்க்கமுடியாது. மோசமாக பாதிக்கப்படப் போகிற மக்கள் ஒன்றிணைந்து போராடினால் தான் அவர்களை விரட்டமுடியும் என மக்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

0 பின்னூட்டங்கள்: