> குருத்து: Smile 2 (2024)

February 17, 2025

Smile 2 (2024)


புன்னகையை பார்த்துவிடாதீர்கள்!

உங்களை துரத்தி பயமுறுத்தி கொல்லாமல் விடாது!

முதல் பாகம் பார்த்ததில் இருந்தே இரண்டாவது பாகம் எப்பொழுது வரும் என எதிர்பார்த்திருந்தேன். இந்தப் படம் திரையரங்கில் பார்த்தால் இன்னும் நன்றாக இருக்கும் என வெளிவந்த சமயத்திலேயே தேடிப்பார்த்தால், வீட்டில் இருந்து மிக
தூரமான திரையரங்குகளில் வெளியானதில் பார்க்கமுடியாது போய்விட்டது.

***


ஸ்மைல் (புன்னகை) எப்படி வேட்டையாடும்? என முதல் பாகத்தில் தெறிக்க தெறிக்கப் பார்த்தோம். இந்த முறை இளம் வசீகரமான ஒரு பாப் பாடகி அதன் கோர கைகளில் சிக்குண்டுவிட்டாள்.

நாயகி ஒரு பாப் பாடகி இளம் வயதில் பிரபலமாகி, விருதுகள் பெற்று.. மேலே மேலே போய்க்கொண்டிருந்த பொழுது, போதைப் பழக்கத்தில் சிக்கி, தன் போதை நண்பனுடன் ஒரு மோசமான கார் விபத்தில் சிக்கி, பிழைத்து வருவதே பெரும்பாடாகிவிட்டது. இப்பொழுது இரண்டாவது வாழ்க்கை அவளுக்கு துவங்குகிறது.

அவள் பல மாகாணங்களில் தனது நிகழ்ச்சியை நடத்த ஒரு நீண்ட பயணம் செல்வதற்கான கடுமையான பயிற்சியில் இருக்கிறாள். போதை மருந்தை விட்டொழித்திருந்தாலும், விபத்தினால் அவளுக்குள் இருந்த வலி திடீர் திடீரென தாங்க முடியாததாக வெளி வருகிறது. அதற்கான விசேச மாத்திரையைத் தேடி தனது போதை நண்பனை தேடிப் போகிறாள். அங்கு ஏற்கனவே புன்னகை (Smile) அவனை வேட்டையாடிக்கொண்டிருக்கிறது. புன்னகைக்கு தொடர்ச்சி தருவதற்காக இவள் வந்ததும், இவள் கண் முன்னாடியே கொடூரமாக தன்னைத் தானே வதைத்து கொன்றுவிடுகிறான்.

அங்கிருந்து புன்னகை இவளைத் துரத்த துவங்குகிறது. ஏற்கனவே பழைய துயரங்களில் மீண்டு வந்துவிடலாம் என்ற நம்பிக்கையுடன் இருந்த ஒரு இளம் பாடகி இதனால் தவித்துப் போகிறாள். திகிலான காட்சிகள் திடீர் திடீரென வருவதும், இவளை பயமுறுத்துவதும், அதனால் வரும் குழப்பங்களும்… பாவம் துவண்டு போய்விடுகிறாள். ஆனால் புன்னகைக்கு பலவீனமான மனது தானே வேண்டும். அவளை தொடர்ந்து விரட்டுகிறது. ஒரு கட்டத்தில் தனது உயிர் போய்விடும் என தெரிந்து… எப்படி அதனிடமிருந்து தப்பிப்பது என போராடுகிறாள்.

பிறகு என்ன ஆனது என்பது புன்னகையின் கொடூரத்துடன் சொல்லிமுடிக்கிறார்கள்.
***

முதல் பாகத்துக்கு இணையாக, இரண்டாவது பாகமும் வந்திருக்கிறது. முதல் பாகம் பிடித்திருந்தால், இந்தப் பாகமும் பிடிக்கும். பிடிக்கவில்லையென்றால், இதுவும் பிடிக்காது.

இளம் பாடகியாக வரும் Naomi Scott தனது பயத்தால், மிரட்சியால், ஸ்டைலான நடனத்தால் மொத்தப் படத்தையும் தாங்கியிருக்கிறார். கொஞ்சம் இந்திய சாயலும் இருப்பதால், பிடித்தமானவராகிவிட்டார். ஏற்கனவே அலாதீன் படத்திலும் வேறு சில படங்களிலும் நாயகியாக நடித்திருக்கிறார்.

சில காட்சிகள் பார்க்க முடியாததாக கொடூரமாக இருக்கிறது. ஆகையால் குழந்தைகளை தவிருங்கள். இப்படி படத்தில் பார்க்க காண சகிக்காத காட்சிகளை Final Destination படங்களில் உணர்ந்தேன். அதற்கு பிறகு இந்தப் படம் தான்.

முதல் படத்தை இயக்கிய Parker Finn இந்த படத்தையும் இயக்கி, தயாரித்தும் இருக்கிறார்.

மொத்தப் படமும் நம்மை எங்கும் கவனம் சிதறவிடாமல் கைக்குள்ளேயே நம்மை வைத்திருக்கிறது.

பலகீனமானவர்கள் தவிருங்கள். ஆங்கிலத்தில் பார்த்தேன். இங்கிலீஷ் சப் டைட்டிலுடன் கிடைக்கிறது. பிரைமில் வாடகைக்கு இருப்பதாக சொல்கிறார்கள். வேறு வழிகளில் முயலுங்கள்.

0 பின்னூட்டங்கள்: