மூன்று பசங்க கொண்ட ஒரு குடும்பம். தாத்தா அடிதடியில் வாழ்ந்துவருகிறார். தாத்தா வழியில் பிள்ளைகளையும் அம்மா ஊக்கப்படுத்தி வளர்க்கிறார். பசங்களின் அப்பாவிற்கோ அமைதியான வாழ்க்கை வாழ விரும்புகிறார். ஒரு கட்டத்தில், கடைசி பையனை கையில் பிடித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறி தனியாக வாழ்கிறார்.
தொழில் சார்ந்த பிரச்சனையில், கேரளாவைச் சேர்ந்த ஒரு ஆள், அந்த அப்பாவை கொன்றுவிடுகிறார். அம்மா விடுவாரா? ”அப்பாவை கொன்னவனை கொன்னுட்டு தாண்டா வரணும்!” என அம்மா உசுப்பேத்திவிட, மூத்தவர்கள் இருவரும், விருப்பம் இல்லாத மூன்றாவது பையனையும் மிரட்டி மிரட்டி தங்களுடன் அழைத்து செல்கிறார்கள்.
திட்டமிட்டப்படி, கேரளாவிற்கு போய் சேர்கிறார்கள். கொல்லப் போன ஆளின் மகனோ கொலைகார கிறுக்கனாக இருக்கிறான். இந்த நாளில் அவன் வேறுஇடத்தில் இருக்கவேண்டும். இருப்பினும் மனம் தளராமல், காரியத்தில் கண்ணாக இருக்கிறார்கள்.
பிறகு என்ன நடந்தது என்பதை திரில்லாக சொல்லியிருக்கிறார்கள்.
***
என்ன கதைய முழுவதும் சொல்லிட்டனே என திட்டவேண்டாம். படம் துவங்கிய சில நிமிடங்களில் வாய்ஸ் ஓவரில் விஜய் சேதுபதியே நான் சொன்னதை எல்லாம் சொல்லிவிடுகிறார். படத்திலும் அதற்கான காட்சிகளில் மெனக்கெடவில்லை. போற போக்கில் சொல்லிவிடுகிறார்கள். கதைக்களனான கேரளாவிற்கே நேரடியாக போய்விடுகிறார்கள். பச்சை பசலென ஈரத்துடன் இருக்கும் கேரளா. நெருக்கமாய் இருக்கும் ரப்பர் தோட்டங்கள். அதற்கு நடுவே ஒரு தனியான வீடு. கண்ணில் கொலை வெறியுடன் ஆட்கள். நல்ல முரண்.
இடைவேளைக்கு பிறகு நடக்கும் திடீர் திருப்பங்கள் எதிர்பாராதவை. கதையில் சட்டென பிரேக் போட்டது மாதிரி ஆகிவிட்டது. இரண்டு குழுக்களோடு இன்னும் மல்லுக்கட்ட விட்டு பிறகு முடித்திருக்கலாம்.
பயம் என்பது மறைத்துகொள்வது தான். அத்தனை சிரித்து பேசினாலும், உள்ளுக்குள் ஒரு பயம் இருந்துகொண்டு தான் இருக்கும். அந்த திருப்பங்களுக்கு அது தான் அடிப்படை. வன்முறை என்பது ஒருபக்கம் மட்டும் கூர்மையுள்ள ஆயுதம் அல்ல! இரண்டு பக்கமும் கூர்மையாக உள்ள ஆயுதம் என்பதை முகத்தில் அறைந்தாற் போல சொல்லியிருக்கிறார்கள். வழக்கம் போல, செல்வாக்கு உள்ளவர்களுக்கு போலீஸ் அத்தனை வேலைகளையும் செய்து தருகிறது.
நடிகர்களில் பலரும் புதுமுகங்கள் தான். இரண்டு குழுக்களில் முக்கிய பாத்திரங்கள் அருமை. கதையை வாய்ஸ் ஓவரில் நகர்த்தியும், ஒரு சிறிய பாத்திரத்திலும் வந்து போகிறார் விஜய் சேதுபதி. பார்க்க வேண்டிய படம். நெட் பிளிக்சில் இருக்கிறது. பாருங்கள்.
0 பின்னூட்டங்கள்:
Post a Comment