> குருத்து: பணமதிப்பிழப்பும் பரிதாபமான பத்து ரூபாயும்!

January 13, 2022

பணமதிப்பிழப்பும் பரிதாபமான பத்து ரூபாயும்!

 



இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால், ஒரு விடிகாலையில் எழும்பூரின் ரயில் நிலையத்திற்கு எதிரில் இருந்த ஸ்வீட்ஸ் கடையில் நின்றிருந்தேன். கடைக்காரர் பத்து ரூபாய் நாணயங்கள் இரண்டைத் தர, வாடிக்கையாளர்செல்லாத நாணயத்தை எப்படி தரலாம்?” என காரசாரமாய் சண்டைப் போட்டுக்கொண்டிருந்தார். வாரத்திற்கு ஒரு ஆளாவது இப்படி வந்துறாங்க? என அலுத்துக்கொண்டார் கடைக்காரர். பிறகு சண்டை எல்லாம் முடியும் வரை காத்திருந்து, அவரிடம்நீங்க எந்த ஊர் என கேட்கும் பொழுது, ”வேலூர்என்றார்.

நேற்று சொந்த வேலையாய் திருச்சியில் ரயிலை விட்டு இறங்கி, வயிறு இரைய ஆரம்பித்திருக்கிறது. அங்குள்ள பொது கழிப்பறைக்கு நண்பர் போயிருக்கிறார். இரண்டு பத்து ரூபாய் நாணயங்கள் மட்டும் தான் சில்லறையாக கையில் இருந்திருக்கின்றன. அங்கிருந்தவர் அந்த நாணயத்தை என்ன சொல்லியும் வாங்க மறுத்துவிட்டாராம்

. வயிறு வேறு பிரச்சனை செய்துகொண்டே இருந்திருக்கிறது. என்னிடம் இதைப் புலம்பிக்கொண்டே சொன்னார்.


இப்படித்தான் ஒருமுறை பெட்ரோலை போட்டுவிட்டு, பத்து ரூபாய் நாணயங்கள் இரண்டு தந்ததற்கு செல்லாத பணத்தைத் தருகிறாய் என தகராறு செய்து, வண்டியை பிடுங்கி வைத்துக்கொண்டார்களாம் பங்க் ஊழியர்கள். இதுவும் வேலூரில் நடந்திருக்கிறது.

திருப்பூர் போக்குவரத்துப் பணிமனை இரண்டாவது மண்டலத்தில், `பயணிகள் கொடுக்கும் 10 ரூபாய் நாணயங்களை முடிந்தவரைத் தவிர்க்கவும். தவறும்பட்சத்தில் வழித்தடத்தில் பணிகளுக்கு வழங்கவும். வசூல் தொகை செலுத்தும்போது, 10 ரூபாய் நாணயத்தைத் தவிர்க்குமாறு அனைத்து நடத்துநர்களுக்கும் இதன்மூலம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது' என்று சுற்றறிக்கையை சீல், கையெழுத்தோடு  . அதை எடுத்து ஒரு பயணி சமூக வலைத்தளங்களில் பகிர பிரச்சனையாகி பிறகு மன்னிப்பு கேட்டு அந்த உத்தரவை திரும்ப பெற்றிருக்கிறார்கள்.

சமீபத்தில் புத்துச்சேரியில் இந்தியன் வங்கியில் நடந்த நிகழ்வின் காணொளி வைரலானது. பத்து ரூபாய் நாணயங்களை வங்கியில் தர, அந்த பெண் காசாளர் வாங்க மறுக்கிறார். ஏன் வாங்க மாட்டேங்கிறீங்க? அதை எழுதிக்கொடுங்க என கேட்டதற்கு, நீங்க எங்க வேண்டுமென்றாலும் போய் புகார் கொடுங்க! எனக்கு கவலையே இல்லை! என அலட்சியமாக பதில் சொல்கிறார். அவர் அப்படியே வங்கி மேலாளரிடம் போய் கேட்டால், அவர் கொஞ்சம் அடக்கி வாசித்துஆர்பிஐ காயின் மேளா நடத்தும் பொழுது கொடுங்கள்என பவ்யமாய் சொல்கிறார்.

 

கரூரில் ஒரு பெட்டிக்கடைகாரர்எங்கிட்ட பத்து ரூபாய் நாணயங்கள் மட்டும் ஐயாயிரம் சேர்ந்திருச்சு சார். இதை வாடிக்கையாளர்கள் கிட்டயும் கொடுக்க முடியல! வங்கியிலும் கொடுக்க முடியல! நான் இப்ப என்ன செய்யிறது? என புலம்புகிறார்.

குமுளியிலிருந்து வந்துகொண்டிருந்த அந்த பேருந்தில், நடத்துனரிடம் பேச்சுக்கொடுத்தேன். ”இந்த பத்து ரூபாய் பிரச்சனை பெரிசா இருக்கே? எப்படி சமாளிக்கிறீங்க?” திண்டுக்கல் துவங்கி திருச்சி வரைக்கும் இந்த பத்து ரூபாய் பிரச்சனை இருக்கு! குமுளியிலிருந்து திண்டுக்கல் வரை பிரச்சனை இல்லை. அங்கேயும் இருந்தது. கலெக்டர் நேரடியாக வந்து, இப்படி வாங்க மறுக்கிறது சட்ட விரோதம். அதனால் வாங்குங்க!” என சொல்லிட்டு போனார். அதனால் பிரச்சனை இல்லை என்றார்.

இந்த பத்து ரூபாய் நாணய பிரச்சனை எந்தெந்த ஊரில் இருக்கிறது என தேடினால், கோயமுத்தூர், திண்டுக்கல், மதுரை, வேலூர், கரூர், திருப்பூர், சென்னையில் கூட சில குறிப்பிட்ட பகுதிகளில் என தமிழகத்தின் பல பகுதிகளிலும் இந்த பிரச்சனை இருக்கிறது.

இது தமிழக பிரச்சனை என யோசித்துக்கொண்டிருக்கும் பொழுது, உத்திரப்பிரதேச உயர்நீதிமன்றம் தொடர்ச்சியான நடந்த பிரச்சனையில் ஒரு கட்டத்தில் கோபப்பட்டு, “இனி பத்து ரூபாய் நாணயத்தை வாங்க முடியாது என தெரிவித்தால், வழக்கு போடலாம்என அறிவித்திருக்கிறது. ஆர்பிஐ யாராவது பத்து ரூபாய் நாணயம் செல்லாது என்றால், 044-25399222 இந்த எண்ணுக்கு பேசுங்கள் அறிவித்தது. (கூப்பிட்டால் எடுத்து பேசுவார்களா? என்பது சந்தேகம் தான்.)

இந்த பிரச்சனை எப்பொழுது துவங்கியது? எப்பொழுது அதிகமாகியது? என தேடிப்பார்த்தால், ஐநூறு, ஆயிரம் ரூபாய் செல்லாது என ஒரு இரவில் நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் தோன்றி மோடி அறிவித்த பொழுது, நாடே அதிர்ந்தது. முக்கியமான வேலகளை எல்லாம் விட்டுவிட்டு, மக்கள் சோறு, தண்ணீரை மறந்து, நொந்து போய் வங்கிகளின் நீண்ட வரிசையில் நின்றுக்கொண்டிருந்தார்கள். என்னைப் போல பணமே இல்லாதவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. வேடிக்கை பார்த்த எனக்கே ரத்தக்கண்ணீர் வந்தது. அதில் எழுந்த பல பிரச்சனைகளால் சிலர் செத்தும் போனார்கள். கள்ளப்பணத்தை பிடிக்க தான் இந்த அறிவிப்பு என்றார். ஆனால், வெளியில் இருந்தகள்ளப்பணம்”, ”நல்ல பணம்என மொத்தப் பணமும் வங்கிக்குபாதுகாப்பாகவந்து, பிரதமர் முகத்தில் கரியைப் பூசியது. மக்களவைக்கு சில மாதங்கள் தலை காட்டாமல் தவிர்த்தார். அதற்கு பிறகும் அந்த மனுசன் கலங்கவேயில்லை. என்ன? தொலைக்காட்சியில் வந்து பேசுவதை நிறுத்திக்கொண்டார். கொஞ்சம் பாதுகாப்பாகமங்கி பாத்என வானொலியில் மட்டும் பேச ஆரம்பித்துவிட்டார்.

இப்படி மோடி ஐநூறு, ஆயிரம் ரூபாய் செல்லாது என அறிவித்த சமயத்தில், நீண்ட வரிசையில் கடுப்பில் நின்று கொண்டிருந்த யாரோ சிலர் பத்து ரூபாய் நாணயமும் செல்லாது என வாட்சப்பில் தட்டிவிட்டிருக்கிறார்கள். ”மக்களால்தேர்ந்தெடுத்த மோடி மட்டும் தான் செல்லாது என அறிவிப்பாரா? மக்களுக்கு அந்த உரிமை இல்லையா? என்ற லாஜிக்கலான கேள்வியும் இங்கு எழுகிறது. மக்கள் அறிவித்து அமுல்படுத்தியதை மோடி மாற்ற முயன்றாலும் முடியவில்லை என்பதைத் தான் மேலே சொன்ன பல நிகழ்வுகள் நிரூபிக்கின்றன.  தேடிப்பார்த்தால் பத்திரிக்கைகளிலும், தொலைக்காட்சி சானல்களிலும் இந்த பிரச்சனையை பலமுறை எழுதியும், சொல்லியும் இருக்கிறார்கள்.

மக்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் இந்த பிரச்சனைக்கு தீர்வு தான் என்ன?  அரசு நாணயங்களை வெளியிடுகிறது. அரசு செல்லாது என அறிவித்துவிட்டது என்ற பயபீதியில் பத்து ரூபாய் நாணயங்களை நாட்டின் பல பகுதிகளில் வியாபாரிகளும், மக்களும் வாங்க மறுக்கிறார்கள்.  தினந்தோறும் இதனால் மக்கள் மத்தியில் தகராறுகள் எழுந்தவண்ணம் இருக்கின்றன.  இந்த பிரச்சனையை சரி செய்யவேண்டிய அரசு வேடிக்கைப் பார்ப்பது கண்டிக்கத்தக்கது. ஆகையால் நிலைமையை சரி செய்யவேண்டும். சரி செய்யமுடியவில்லையா? மோடி 500, 1000 ரூபாய்களை செல்லாது என சொன்னதை மக்கள் விதியே என நொந்து போய் கேட்டார்கள். மக்களின்தீர்ப்புக்குமோடி கட்டுப்பட்டு, பத்து ரூபாய் நாணயங்களை திரும்ப பெறவேண்டும். அதற்கு பதிலாக, ஐந்து ரூபாய் நாணயங்களையும், இருபது ரூபாய் நாணயங்களையும் அதிக அளவில் விடவேண்டும்.

 

வேலூரில் பங்க் ஊழியர்கள் தகராறு

https://www.youtube.com/watch?v=lX4KMhTz63I

 

புதுச்சேரி வில்லியனூர் வங்கி காணொளி

https://www.youtube.com/watch?v=tCjAzoRJnUg

0 பின்னூட்டங்கள்: