> குருத்து: Encanto (2021) டிஸ்னியின் வண்ணமயமான அனிமேசன் படம்

January 26, 2022

Encanto (2021) டிஸ்னியின் வண்ணமயமான அனிமேசன் படம்



ஒரு நெருக்கடியில் அந்த ஊரில் உள்ள நாயகியின் குடும்பத்திற்கு எப்பொழுதும் எரிந்துகொண்டிருக்கும், ஒரு மந்திர மெழுகுவர்த்தி கிடைக்கிறது. ஒவ்வொரு குழந்தை பிறந்ததும், குறிப்பிட்ட வயதில், அந்த குழந்தைக்கு அந்த மெழுகுவர்த்தி வாயிலாக ஒரு சிறப்பான மந்திர சக்தி கிடைக்கிறது. அந்த மந்திர சக்தி மூலம் அந்த ஊரில் உள்ள மக்களுக்கு உதவிகள் செய்கிறார்கள். ஆகையால், அந்த ஊரே அவர்களை மரியாதையாக பார்க்கிறது.


ஆனால், நாயகியான அந்த பெண்ணுக்கு மட்டும், அவளுக்குரிய வயதில் எந்த மந்திர சக்தியும் கிடைக்கவில்லை. இது அவளுக்கும், அந்த குடும்பத்திற்கும் பெரும் ஏமாற்றமாக இருக்கிறது. இருப்பினும் அதை வெளிக்காட்டாமல் இருக்கிறார்கள். அந்த வீட்டில் உள்ள நாயகியின் பாட்டி அதை அவ்வப்பொழுது வெளிக்காட்டுகிறார்.

இந்த சமயத்தில் அவர்கள் இருக்கும் வீட்டில் கீறல் விழுந்து மறைகிறது. வீடு ஒரு அபாயத்தில் இருக்கிறது என புரிந்துகொண்டாலும், அதை மக்களிடம் வெளிக்காட்டாமல் இருக்கிறார்கள். தன் குடும்பத்தை நேசிக்கும் நாயகி அந்த அபாயம் என்ன என்பதை கண்டறிந்து பிரச்சனையை தீர்க்க முயல்கிறாள்.

அவள் முயற்சியில் வெற்றி பெற்றாளா என்பதை ஆட்டமும், பாடல்களுமாய் சொல்லியிருக்கிறார்கள்.
****

ஒரு குடும்பத்தில் திறமை இல்லாதவர்களாக இருந்தாலும், குடும்பத்தை நேசிப்பவராக இருந்தால், அவரை மதிங்கப்பா! அலட்சியப்படுத்தாதீங்கப்பா! என்பதை சொல்கிறார்கள். வீட்டிற்கு என்ன அபாயம்? என எதிர்காலத்தை கணித்து சொன்னவன் அந்த வீட்டிற்குள்ளேயே தலைமறைவாய் சுற்றுகிறான். பாசமுள்ள குடும்ப உறுப்பினர்களின் முக்கியத்துவத்தையும், குடும்பத்தின் முக்கியத்துவத்தையும் அழுத்தமாக சொல்லியிருக்கிறார்கள்.

படம் பார்த்ததும், நமக்கு என்ன கேள்வி வருகிறது என்றால்..? குடும்ப உறுப்பினர்களின் நிலை சம காலத்தில் எப்படி இருக்கிறது வாழ்வாதாரத்திற்காக ஒரிசா, பீகாரிலிருந்து தமிழ்நாடு உட்பட வேறு மாநிலங்களுக்கு மக்கள் நகர்கிறார்கள். கொரானா லாக்டவுனில் தான். உலகம் முழுவதும் இந்தியர்களும், குறிப்பாக தமிழர்களும் எத்தனை நாடுகளில் தங்கள் குடும்பங்களை, சொந்தங்களை விட்டுவிட்டு யாருமற்ற அனாதைப் போல பணி செய்கிறார்கள் நன்றாக உணரமுடிந்தது. இது இந்தியர்களுக்கு மட்டுமல்ல! வளரும், பின்தங்கிய எல்லா நாட்டு மக்களுக்குமே உள்ள பிரச்சனை. வாழ்வதாரத்திற்காக, நாடுகளில் நடக்கும் உள்நாட்டு போர் காரணமாக என பல்வேறு காரணங்களுக்காக தன் சொந்த நாட்டை, வீட்டை விட்டு இடம் பெயர்ந்து வாழ்கிறார்கள்.

ஏன் ஓடவேண்டும்? அந்தந்த நாடுகளிலேயே, அவரவர் ஊரிலேயே ஏன் வாழ முடியவில்லை? உதாரணத்திற்கு தமிழ்நாட்டில் சென்னை மட்டும் ”மிகுந்த” வளர்ச்சியில் இருக்கிறது. ஒரு மனிதனுக்கு கிடைக்கும் சத்துக்கள் உடல் முழுவதும் பரவவேண்டும். வலது கையின் ஓரத்திலோ, கழுத்திலோ மட்டும் சத்துக்கள் ஒன்று சேர்ந்தால், அதற்கு பெயர் வளர்ச்சி இல்லை. கட்டி என்போம். அதை உடனடியாக அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்போம். அது போல தான் சென்னை இருக்கிறது. இதை பரவலாக்கி பாருங்கள். வளர்ந்த நாடுகளுக்கு நாம் ஏன் போகவேண்டும்?

ஆக, சமூக நிலைமை இப்படி சிக்கலாக இருக்கும் வரை, குடும்பத்தை விட்டு வேறு மாநிலம், வேறு தூர தேசத்து நாடுகளுக்கு ஓடும் நிலைமை தான் தொடரும். இதில் நம்மிடமே வந்து குடும்பத்தின் மகத்துவத்தை போதிப்பது தான் நகைமுரண். ஏன் ஓடுகிறோம்? என ஆய்ந்து படம் எடுத்தால், நமக்கும் நம் பிரச்சனை புரியும். நாட்டின் பிரச்சனையும் புரியும். அதிலிருந்து விடுபட நாமும் யோசிப்போம். செயல்படுவோம்.
நீண்ட நாள்களுக்கு பிறகு ஒரு வண்ணமயமான அனிமேசன் படம். கொலம்பியா நாட்டின் பின்னணியில் படம் எடுக்கப்பட்டிருக்கிறது. Hot Starல் இங்கிலீஷ் சப் டைட்டிலுடன் கிடைக்கிறது. பாருங்கள்.

0 பின்னூட்டங்கள்: