முப்பது வருடமாகிறது
இன்னும் கனவில் வந்து
சொல்லிக்கொண்டே இருக்கிறாள்
“உடம்பைப் பார்த்துக்கொள்
ஏன் இப்படி இளைத்துவிட்டாய்?”
பைத்தியக்காரி
இந்த உடம்பைத் தவிர
உன் கண்ணுக்கு என்னிடம்
எதுவுமே தெரியாதா?
நீ தந்த உடல் என்பதற்காக
அத்தனை கரிசனம்
அதனிடம் உனக்கு
இருமலில் விம்மித் தணியும்
என் மார்பையே தடவிக்கொண்டு
ஏன் கண்ணீருடன் அமர்ந்திருக்கிறாய்
என் நெஞ்சில் எரியும் கனல்
உன் குளிர்ந்த கரங்களை எட்டுகிறதா?
- மனுஷ்ய புத்திரன்
சுற்றிலும் வீடுகளற்ற தனித்திருக்கும் அந்த வீட்டில், அம்மாவும் மகளும் குடியிருக்கிறார்கள். மகளால் நடக்கமுடியாது. வேறு சில உடல்ரீதியான பிரச்சனைகளுக்காகவும், தொடர்ந்து மூன்று வேளைகளிலும் மாத்திரைகள் எடுத்துக்கொள்கிறாள்.
கல்லூரி செல்லும் பருவத்தில், திடீரென ஒருநாள் அம்மா வாங்கி வந்த மருத்தை எடுத்துப் பார்க்கும் பொழுது, அம்மாவின் பெயர் எழுதப்பட்டிருக்கிறது. உள்ளே உள்ள மருந்து அவள் தொடர்ந்து எடுத்துக்கொள்ளும் மாத்திரைகள். இது தொடர்பாக தேடும் பொழுது, வீட்டில் உள்ள கணிப்பொறியில் இணையம் துண்டிக்கப்பட்டிருக்கிறது. அம்மாவிடமே கேட்கும் பொழுது, சமாளிக்கும் விதத்தில் பதில் சொல்கிறாள் அம்மாவின் நடவடிக்கைகள் சந்தேகம் கொள்ள வைக்கின்றன.
தொடர்ச்சியான தேடலில். நடக்கும் நிகழ்வுகளை உணர்வுபூர்வமாகவும், திரில்லராகவும் சொல்லியிருக்கிறார்கள்.
****
துவக்கத்தில் நோய்வாய்ப்பட்ட நிலையில் நாயகிக்கு குழந்தை பிறக்கிறது. அந்த அம்மாவின் கணவர் என்ன ஆனார்? இறந்து போனாரா? விவாகரத்து ஆனதா? குழந்தை இருந்துவிட்டு போகட்டும். அந்த ஊரில் இன்னொரு திருமணம் எளிது தானே! ஏன் செய்யவில்லை. முதல் திருமணத்திலேயே போதுமான மன சிக்கல்களை எதிர்கொண்டாரா? இனி வாழும் வரைக்கும் இந்த ஒரு ஜீவன் தன் வாழ்வில் போதுமென்று நினைத்தாரா? அந்த ஜீவனையும் அதன் இயல்புக்கு வளர விடாமல், தன்னுடனேயே இருக்கவேண்டும் என ஏன் நினைத்தார்? இது ஒரு தனி மனுஷியின் உளச் சிக்கல் தானா? இதற்கும் சமூகத்திற்கும் தொடர்பு இல்லையா? என "மம்மி" படத்தில் வரும் வண்டுகள் போல கேள்விகள் வந்துகொண்டே இருக்கின்றன.
ஒரு சைக்காலஜிக்கல் பிரச்சனை. ஒரு கேஸ் ஸ்டடி போல படத்தை தந்திருக்கிறார்கள். படத்தின் இறுதியில் எதனால் அப்படி நடந்துகொண்டார் என அந்த தாயை கொஞ்சாவது பேச வைத்திருக்கவேண்டும். ”வாலி” படத்தில் வாய் பேசமுடியாத அஜித் பேசுவது போலவாவது!
Sarah Paulson, Kiera Allen அம்மாவும், மகளுமாக சிறப்பாக செய்திருக்கிறார்கள். இதில் மகளாக வருபவர் இயல்பிலேயே மாற்றுத் திறனாளி என்கிறார்கள்.
நெட் பிளிக்சில் இருக்கிறது. பாருங்கள்.
0 பின்னூட்டங்கள்:
Post a Comment