நாயகன் முக்கிய பொறுப்பில் உள்ள போலீஸ் அதிகாரி. ஒரு வழக்கறிஞரை திருமணம் செய்கிறார். ஒரு வழக்கில் தான் சொன்ன விவரங்களை பயன்படுத்தி, குற்றவாளியைத் தப்பிக்க வைத்தார் என பிரச்சனை எழுகிறது. இருவரும் பிரிந்துவிடுகிறார்கள். அதற்கு பிறகு வேலையில் முன்பை போல கவனம் இல்லாமல் இருக்கிறார்.
அவருடைய அலுவலகத்திற்கு ஒரு கடிதம் வருகிறது. நாயகனின் தீவிர ரசிகர் என்றும், குடும்ப பிரச்சனையில் பழைய உற்சாகம் இல்லாமல் இப்பொழுது இருப்பதால், அவரை மீண்டும் சுறுசுறுப்பாக வேலை செய்ய வைக்க தான் சில கொலைகள் செய்யப் போவதாகவும் தெரிவிக்கிறார். சொன்னபடி, எந்த நாள், எந்த பகுதி என சொல்லி கொலைகள் நடைபெறுகிறது.
இந்த வழக்கில் இருந்தும் ஒதுங்கி நிற்க பார்க்கிறார். அவருடைய திறமையை அறிந்த மேலாதிகாரி அவரையே விசாரிக்க சொல்கிறார். அவரும் மும்முரமாய் விசாரிக்க ஆரம்பிக்கிறார். வழக்கம் போல சிலர் மீது நமக்கு சந்தேகம் வருகிறது. பிறகு அந்த ”சீரியல்” கில்லர் என்பதை திரில்லாக சொல்லி முடித்திருக்கிறார்கள்.
***
நாயகனின் திறமையை காட்டுவதற்காக முதல் 20 நிமிடங்கள் எடுத்துக்கொள்கிறார்கள். பிறகு தான் பிரதான கதை ஆரம்பிக்கிறது. சுவாரசியமான திரில்லராக சொல்ல முயன்றிருக்கிறார்கள். நாயகனின் குடும்பத்தில் பிரச்சனை. மனைவி பிரிந்துவிட்டார் என்பதற்காக அவ்வளவு உயர் பதவியில் இருந்து கொண்டு பத்து வருடங்களாக முனைப்பு காட்டாமலே வேலையில் நீடிக்க முடிவது ஆச்சர்யம். செஸ் விளையாட்டின் பெருமையை ஆங்காங்கே தூவியிருக்கிறார்கள்.
நாயகனாக மோகன்லால் நன்றாக பொருந்தியிருக்கிறார். துணைவியராக பிரியாமணி என மற்றவர்களும் சிறப்பாக செய்திருக்கிறார்கள். கேரளா படங்களுக்கு ஒரு இயல்பு உண்டு. அதில் ஒரு அழகு உண்டு. தமிழ்படங்களும், தெலுங்கு படங்களும் கேரள படங்களில் செய்த மோசமான தாக்கத்தை நன்றாக உணரமுடிகிறது. இந்தப் படத்தில் அந்த தாக்கம் குறைவாக இருக்கிறது. மோகன்லால் நடித்த “புலிமுருகன்” என ஒரு படம். பார்க்க பார்க்க கலங்கி போய்விட்டேன். முழுக்க ”சந்திரமுகியாக” மாறியிருந்த படம். வசூலில் உச்சந்தொட்டது இன்னும் துயரம்.
திரில்லர் ரசிகர்கள் பாருங்கள். இங்கிலீஷ் சப் டைட்டில்களுடன் நெட் பிளிக்சில் இருக்கிறது.
0 பின்னூட்டங்கள்:
Post a Comment