> குருத்து: Yeh Kaali Kaali Ankhein (2022) "அந்த கருப்பு கண்கள்” இந்தி Web Series

January 31, 2022

Yeh Kaali Kaali Ankhein (2022) "அந்த கருப்பு கண்கள்” இந்தி Web Series

 


உத்திரபிரதேசம் லக்னோ தான் கதைக்களம். கொலைகளுக்கு அஞ்சாத, கேடுகெட்ட ”பவர் புல்” அரசியல்வாதியிடம் நாயகனின் அப்பா கணக்காளராக இருக்கிறார். அரசியல்வாதியின் மகளும் அரசியல்வாதியின் உதவியில் நாயகனும், ஒரே பள்ளியில் படிக்கிறார்கள். நாயகிக்கு நாயகன் மீது கொள்ளைப் பிரியம். ஆனால், நாயகனுக்கு நாயகியை பிடிக்கவில்லை. பிறகு நாயகி உயர் படிப்பிற்கு வெளியூர் போய்விடுகிறாள். 
 
நாயகன் படித்து பொறியாளராகிவிடுகிறார். கல்லூரியிலேயே ஒரு பெண்ணை காதலிக்கிறார். ’கந்தர்வ திருமணம்’ கூட செய்துகொள்கிறார். வெளியூரில் வேலை கிடைத்துவிடும். போய் குடும்பமாய் செட்டிலாகிவிடலாம் என ஒரு கனவோடு இருக்கிறார். ஆனால், நாயகி அவனை காதலிக்கிறாள். மறுத்தால், குடும்பத்திற்கு ஏகப்பட்ட தொந்தரவு தருகிறார். நாயகனின் காதலியை கொலை செய்ய துரத்துகிறார்கள்.
 
வேறு வழியில்லாமல் நாயகன் நாயகியை திருமணம் செய்துகொள்கிறார். அந்த கொலைகார கூட்டத்திலிருந்து விடுபட அவர் அரசியல்வாதி ரேஞ்சுக்கு இறங்கி செய்யும் செயல்கள் தான் ஒவ்வொரு அத்தியாயத்திலும் விறுவிறுப்பாக கொண்டு சென்றிருக்கிறார்கள்.
 
****
 
“என்கிட்ட எது உன்னை ஹெவியை லைக் பண்ண வைச்சது? ஏன் இப்படி என்னை லவ் டார்ச்சர் பண்ற? என வடிவேல் ஒரு படத்தில் சொல்வாரே! அது தான் மொத்தக் கதையின் ஒன்லைன். சமீபத்தில் ”கலாட்டா கல்யாணம்” படத்தில் தனுசை தூக்கிக்கொண்டு போய் கல்யாணம் செய்வார்களே அந்த காட்சியும் உத்திரபிரதேசம் என்பதால் நினைவுக்கு வந்து போனது.
இடையிடையே கொஞ்சம் தொய்வு இருந்தாலும், மொத்தத்தில் ஒவ்வொரு அத்தியாயத்திலும், திருப்பங்கள் வைத்து, கொஞ்சம் புத்திசாலித்தனத்துடன் ஒரு நல்ல திரில்லராக கொண்டு சென்றிருக்கிறார்கள். அடுத்த தொடருக்கான வாய்ப்புகளுடன் முதல் தொடரை முடித்திருக்கிறார்கள்.
 
தில்லுக்கு துட்டு முதல் பாகத்தின் நாயகி அஞ்சல் சிங் தான் அரசியல்வாதியின் பெண்ணாக வருகிறார். Tahir Raj Bhasin சிக்கிக்கொண்ட நாயகனாக முழுவதுமே இறுக்கமாகவே வருகிறார். மெகந்தி சர்க்கஸ் நாயகி ஸ்வேதா தான் நாயகியின் காதலியாக வருகிறார். மற்றவர்களும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
 
நெட்பிளிக்சில் ஒவ்வொரு அத்தியாயமும் 35 நிமிடங்கள் என எட்டு அத்தியாயங்கள் காண கிடைக்கிறது. தமிழ் டப்பிங்கிலும் கிடைக்கிறது. வாய்ப்பு இருக்கிறவர்கள் பாருங்கள்.

0 பின்னூட்டங்கள்: