> குருத்து: இளையராஜாவும் கண்ணதாசனும்!

June 19, 2021

இளையராஜாவும் கண்ணதாசனும்!


இளையராஜா அன்னக்கிளியின் முலம் அறிமுகமாகி, பிரபலமாகி, அவருடைய வளர்ச்சி ஏறுமுகமாகி கொண்டே போகிறது.


இதில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விக்கு வாய்ப்புகள் குறைந்துகொண்டே போகின்றன. ஒரு காரணம் இளையராஜா என்றாலும், அவர் காலத்திய நாயகர்களான எம்.ஜி.ஆர் அரசியலுக்கு வந்ததால் நடிப்பதை நிறுத்திவிடுகிறார். சிவாஜிக்கு படங்கள் குறைகின்றன. இதில் முக்கிய விசயம் எம்.எஸ்.வி படம் தயாரித்து நஷ்டமாகி கடும் பொருளாதார சிக்கலில் சிக்கியுள்ளார்.

எம்.எஸ்.வி கவிஞர் கண்ணதாசனிடம் தனது பொருளாதார பிரச்சனைகளை உரிமையுடன் புலம்புகிறார். எம்.எஸ்.வியை கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள் என அவருடைய குடும்பத்தாரிடம் அக்கறையுடன் பேசுகிறார்.

கவிஞர் கண்ணதாசன் சரியான புரிதல் இல்லாமல் இளையராஜா மீது கோபம் கொள்கிறார். சில பத்திரிக்கைகளில் தாக்கியும் எழுதுகிறார். யாருக்கு புரிந்ததோ இல்லையோ இளையராஜாவிற்கு புரிந்துவிடுகிறது.

ஒருமுறை கண்ணதாசனின் மகனான என்னை இளையராஜா எதைச்சையாய் பார்க்கும் பொழுது இது குறித்து கேட்கிறார். அப்பாவிடம் இது குறித்து கேட்கிறேன் என அவருக்கு ஆறுதலாய் சொன்னேன். அதே போலவே ஒருமுறை கேட்டேன். ஏதும் சொல்லவில்லை. அதற்கு பிறகு அப்பா இளையராஜாவை புரிந்துகொண்டு திட்டுவதை நிறுத்திக்கொண்டார். கண்ணதாசனின் திரையிசை கடைசி பாடலான ”கண்ணே கலைமானே” இளையராஜாவிற்கு தான் எழுதினார்.

இளையராஜாவின் இசையில் கண்ணதாசன் பாடல்கள் குறைவு. ஏன் என்றால், அப்பொழுது இளையராஜா மிகவும் பிசி. மற்ற பாடலாசிரியர்கள் என்றால், டியூனை கேசட்டில் பதிவு செய்து அனுப்பினால் போதும். பாடலை எழுதி தந்துவிடுவார்கள். கண்ணதாசன் என்றால் அவர் நேரடியாக வரவேண்டும். இந்த நடைமுறை பிரச்சனையில் தான் பாடல்கள் குறைந்தன. மற்றபடி இன்றைக்கு வரைக்கும் கவிஞர் கண்ணதாசனின் மீது மிகுந்த மரியாதையுடன் தான் பேசிவருகிறார்.

இளையராஜாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

- கவியரசு கண்ணதாசனின் மகனின் நினைவு அலைகளில் இருந்து…..

0 பின்னூட்டங்கள்: