> குருத்து: Tracks - 2013 (ஆஸ்திரேலியா)

June 11, 2021

Tracks - 2013 (ஆஸ்திரேலியா)




2700 கிமீ பாலைவனம் வழியாகவும் தனியாக பயணித்த ஒரு பெண்ணின் உண்மைக் கதை

கதை 1970களில் நடக்கிறது. நாயகியின் அம்மா சிறுவயதில் இறந்துபோகிறார். அத்தையுடன் வளர்கிறார். அப்பா ஒரு ஊர்சுற்றி. அப்பாவின் வழியாக வந்த ஒரு ஆசை. ஆஸ்திரேலியாவின் குறுக்கே 2700 கிமீ தனியாக நடந்து செல்லவேண்டும் என்பது தனிப்பட்ட பெரும் விருப்பமாக இருக்கிறது. இப்படி சென்று சாதனை செய்து எங்கும் பதியவேண்டும் என்ற எண்ணமுமில்லை.


தனது பொருட்களை எடுத்து செல்ல மூன்று ஒட்டகங்கள் வேண்டும். அதை பராமரிப்பதற்கு ஒட்டகத்தின் இயல்புகளை கற்றுக்கொள்ளவேண்டும். பொருட்கள் வாங்க பணம் வேண்டும். ஆகையால் ஒட்டகம் வைத்திருப்பவரிடம் வேலை செய்கிறார். ஆனால் அவன் ஏமாற்றிவிடுகிறான். பிறகு வேறொருவரிடம் வேலை செய்து கொஞ்சம் சம்பாதிக்கிறார். பத்திரிக்கையிடம் ஸ்பான்சர் கேட்கலாம் என நண்பர்கள் ஆலோசனை சொல்கிறார்கள். தன்னுடைய பயணம் வெளியே தெரியவேண்டாம் எனவும் நினைக்கிறாள். பிறகு வேறு வழியில்லாமல், வேண்டா வெறுப்பாக பிரபல பத்திரிக்கையிடம் ஸ்பான்சர் வாங்கி பயணம் துவங்குகிறாள்.

மொத்தப் பயணம் (1700 மைல்) 2700 கிமீ. (கன்னியாகுமரி துவங்கி தில்லி வரைக்குமான தூரம்) அதில் ஒரு பகுதி நீண்ட பாலைவனமாக இருக்கிறது. இந்த பயணம் ஒரு தற்கொலை பயணம் என்று தான் சந்திப்பவர்கள் சொல்கிறார்கள். ஒருமுறை வழிகாட்டும் கருவியை தொலைத்துவிடுகிறார். தன்னுடன் வந்த செல்ல நாய்க்கு நேரும் சோகம், ஒருமுறை ஒட்டகங்களையே தொலைத்துவிடுகிறார். இப்படி போகும் வழியில் பல சோதனைகள். அதையெல்லாம் மீறி அவள் அடைய நினைத்த எல்லையை அடைந்தாரா என்பதை சொல்லியிருக்கிறார்கள்.

இப்பொழுது 70 வயதில் இருக்கிறார். Robyn Davidson ”ஒட்டகப் பெண்” (Camel Lady) என உலகம் அறியப்படுகிறவராக இருக்கிறார். அந்த பயணத்திற்காக அவருடைய உழைப்பு கடுமையானதாக இருந்திருக்கிறது. ஒட்டகங்களைப் பற்றி, பாலைவனம் பற்றியும் நிறைய கற்றிருக்கிறார். ஸ்பான்சர் கொடுத்த பத்திரிக்கை அவருடைய பயணத்தைப் பற்றி எழுதியிருக்கிறது. போய் வந்த பிறகு, அவருடைய வாழ்க்கை பல புத்தகங்களை எழுதுபவராகவும், ஊர் ஊராக சுற்றுபவராகவும் மாற்றி இருக்கிறது.

ஏன் இந்த பயணம்? கொஞ்சம் யோசித்தால், உயிரை பணயம் வைத்து, ஏன் பயணிக்கவேண்டும்? அவரே ஒரு பேட்டியில் சொல்வது போல, ”70களின் காலகட்டம் இளைஞர்களுக்கு புதிய சவால்களை ஏற்கவேண்டும் என்ற வேட்கை இருந்திருக்கிறது. அதில் ரிஸ்க்கும் இருப்பதை புரிந்திருக்கிறார்கள்.”

அவர் எழுதிய புத்தகத்தை வைத்து படமாக்கியிருக்கிறார்கள். சிறப்பாக எடுத்திருக்கிறார்கள். நாயகி தான் படம் முழுக்க வலம் வருகிறார். நன்றாகவும் பொருந்தியிருக்கிறார். படத்தை பெரிய எதிர்பார்ப்போடு பார்க்காதீர்கள். உண்மைக் கதை என்பதால் அதன் இயல்புகளோடு இருக்கிறது.

இந்தப் படத்தைப் பற்றி தேடும் பொழுது, யாரும் தமிழில் எழுதவில்லை என்பது ஆச்சர்யமாக இருந்தது. தமிழில் இல்லை. ஆங்கில சப் டைட்டில்களுடன் பார்த்தேன்.

0 பின்னூட்டங்கள்: