> குருத்து: Mirage (2018) ஸ்பானிஷ் டைம் டிராவல் திரில்லர்

June 19, 2021

Mirage (2018) ஸ்பானிஷ் டைம் டிராவல் திரில்லர்


கதை. நாயகி தன் கணவனுடன், தனது செல்ல குட்டிப் பெண்ணுடன் அந்த வீட்டில் புதிதாய் குடி வந்திருக்கிறார். அவள் மருத்துவமனையில் பணிபுரிகிறாள். அந்த வீட்டில் முப்பதாண்டுகளுக்கு முன்பான ஒரு தொலைக்காட்சி பெட்டியை காண்கிறாள். அங்கு ஒரு கேமராவும் இருக்கிறது. அதை பார்க்கும் பொழுது அந்த வீட்டில் முன்பு குடியிருந்த ஒரு சிறுவனைப் பற்றிய சொந்த பதிவுகளாக இருக்கின்றன. அந்த பையன் 1989ல் பக்கத்து வீட்டில் ஒரு கொலை நடந்த சத்தத்தை கேட்டு போய் பார்த்து, அவன் கார் விபத்தில் அடிபட்டு இறந்துபோகிறான் என பழைய கதையை சொல்கிறார்கள்.


அவள் வசிக்கும் பகுதி முழுவதுமே இடி, மின்னலுமாக ஒரே களேபரமாக இருக்கிறது. இதே போல தான் 1989லும் இருந்ததாக தொலைக்காட்சியில் விவரிக்கிறார்கள். இரவில் திடீரென சத்தம் கேட்கிறது. நாயகி போய்ப் பார்த்தால், 1989ல் ஒளிப்பரப்பான நிகழ்ச்சிகள் அந்த தொலைக்காட்சியில் தெரிகின்றன. திடீரென 1989ல் அந்த பையன் தொலைக்காட்சியில் வருகிறான். அவனும் இவளும் பேசிக்கொள்கிறார்கள். பக்கத்துவீட்டில் கொலை நடக்கும் சத்தம் கேட்கிறது. நாயகி பதட்டத்தில் ”அங்கு போகாதே! போனால் நீ செத்துவிடுவாய்!” என எச்சரிக்கிறாள். அந்த பையன் பிழைத்துக்கொள்கிறான்.

ஆனால், அந்த நிமிடத்திலிருந்து இவள் வாழ்க்கை வேறாகிவிடுகிறது. மருத்துவமனையில் முக்கிய மருத்துவராக இருக்கிறாள். திருமணம் ஆகவில்லை. ஆகையால் அந்த குட்டி பொண்ணைப் பற்றிய சுவடே இல்லை. பதட்டமாகிறாள். தன் பெண்ணை மீண்டும் பெறவேண்டும். என்ன செய்ய என தேட ஆரம்பிக்கிறாள்.

இதெல்லாம் துவக்க சில நிமிடங்கள் தான். பிறகு பழைய வாழ்க்கையை அவள் அடைந்தாளா? அந்த பையன் காப்பாற்றபட்டனா? என்பதை விறுவிறுப்பாக சொல்லியிருக்கிறார்கள்.

******

டைம் டிராவல் படங்களில் குழப்பம் இல்லாமல் சொன்ன படங்கள் மிகவும் குறைவு. அதில் இந்தப் படமும் ஒன்று. அதனாலேயே எனக்கு மிகவும் பிடித்துப்போனது.

நாயகி அந்த தலைகீழ் மாற்றத்திற்கு பிறகு, முன்பை விட ஒரு நல்ல வாழ்க்கையைத் தான் அவள் பெற்றிருப்பாள். ஆனால், அவளின் குட்டிப்பெண்ணை இழப்பது அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அம்மா சென்டிமெண்ட்.

முகநூலில் டைம் மெசின் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என சமீபத்தில் கூட ஒரு மருத்துவர் கேட்டிருந்தார். இந்த மாதிரி படம் பார்க்கலைன்னா சட்டுன்னு சொல்லிரலாம். ஒருவேளை நாம் போய் மாத்தி (!) இப்ப வாழுகிற வாழ்க்கையை விட இன்னும் மோசமாக போயிருமோன்னு ஒரு பயமே தொத்திக்கிடுது! 🙂

புகழ்பெற்ற Invisible Guest எடுத்த இயக்குநர் தான் இந்தப்படத்தின் இயக்குநரும்! படத்தின் நாயகி நம்மூர் டாப்சியை நினைவுப்படுத்தினார். நல்ல நடிப்பு.

படம் நெட்பிளிக்சின் வெளியீடு. ஆகையால் கிடைக்கும். பாருங்கள்.

0 பின்னூட்டங்கள்: