கதை. நாயகன் ஒரு பெரும் பணக்காரர். மனைவியை பிரிந்து ஒரு பெரிய வீட்டில் தனியாக வாழ்கிறார். குழந்தைகளும் இல்லை. அவருடைய பிறந்தநாளன்று அவருடைய தம்பி, தான் ஒரு விளையாட்டை முன்பு விளையாடியதாகவும், ”நீயும் விளையாடு! உன் வாழ்க்கையையும் மாற்றும்” என ஒரு நிறுவனத்தின் கார்டை கொடுத்துவிட்டு சொல்கிறார்.
தனக்கு நிறைய வேலைகள் இருந்தாலும், விளையாட்டை தெரிந்துகொள்ள போகிறார். அவர் உடல்நிலையை சோதித்து, அறிவுத்திறனையும் பல்வேறு கேள்விகள் கேட்டு தெரிந்துகொள்கின்றனர். என்ன மாதிரி விளையாட்டு என்றெல்லாம் சொல்லப்படவில்லை. உங்களுக்கு பிடிக்கும் என சொல்லி அனுப்பிவிடுகின்றனர்.
ஒருநாள் வேலை முடிந்து வீட்டுக்கு வருகிறார். வாசலில் ஒரு பொம்மை இருக்கிறது. எடுத்துக்கொண்டு வீட்டுக்குள் போனால், விளையாட்டு துவங்குகிறது. அடுத்தடுத்து நடக்கும் நிகழ்வுகள் துவக்கத்தில் அவருக்கு கோபம், ஆச்சர்யம் ஏற்படுத்தினாலும், பிறகு மிகுந்த சிக்கலாகிறது. மன உளைச்சல் ஆகிறார். அவருடைய வங்கி கணக்கில் இருந்து மொத்தப் பணத்தையும் எடுத்துக்கொள்கின்றனர். அவரை கொல்லப்பார்க்கிறார்கள்.
பிறகு என்ன ஆனது என்பதை மீதி பாதி படத்தில் பரபர காட்சிகளுடன் சொல்லி முடிக்கின்றனர்.
*****
இயக்குநர் திரு விஷாலை வைத்து ’சமர்’ என ஒரு படம் எடுத்திருப்பார். Game படத்திலாவது அவருக்கு விளையாட்டு என சொல்லி துவங்கப்படும். சமரில் எதவும் சொல்லாமலேயே நாயகனின் வாழ்க்கையில் விளையாடுவார்கள். சுத்தலில் விடுவார்கள்.
இப்படிப்பட்ட விளையாட்டு கற்பனையா? அல்லது உண்மையில் வெளிநாடுகளில் இருக்கிறதா என தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லுங்கள். அப்படி இருந்தால் அபத்தம் என்பேன்.
முற்றும் துறந்த முனிவரிடம், ஒரு செல்வந்தன் ”இத்தனை பணம் இருந்தும், எனக்கு நிம்மதியே இல்லை” தன் செல்வங்களை எல்லாம் மூட்டைக் கட்டி காலடியில் வைத்தனாம். மொத்தப் பணத்தையும் எடுத்துக்கொண்டு முனிவர் ஓட ஆரம்பித்தாராம். அடடா! முற்றும் துறந்தவர் என நினைத்தோம். சரியான பிராடா இருப்பார் போலிருக்கே! மொத்த பணமும் போச்சேன்னு பின்னாடியே தலை தெறிக்க ஓடினானாம். ஒரு கட்டத்தில் முனிவர் ஓடுவதை நிப்பாட்டி, பின்னாடி ஓடிவந்தவனிடம் அந்த மூட்டையை கொடுத்தாராம். ”இப்ப நிம்மதியா இருக்கா?” என கேட்டாராம். அந்த கதையை நினைவுப்படுத்தியது இந்தப்படம்.
படம் பொம்மையை கையில் எடுத்த பிறகு, இறுதிவரை விறுவிறுவென செல்கிறது. புகழ்பெற்ற Seven படத்திற்கு பிறகு David Fincher இயக்கிய படம். படத்தின் நாயகனாக வரும் மைக்கேல் டக்ளஸ் அருமையாக செய்திருப்பார்.
பாருங்கள்.
0 பின்னூட்டங்கள்:
Post a Comment